Donnerstag, 31. Mai 2012

பகுதி 8







8. (1).  வாழ நினைத்தால் வாழலாம்


வீட்டுரிமையாளர் வீட்டிலில்லை. வாங்கவிருந்த வீட்டுக்குச் சதா அவரைத் தேடிச்சென்றான். பலர் அங்கு நின்று திருத்த வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள். உரிமையாளரைத் தேடிக் கேட்டபோது, அவர் சொன்ன பதில் அவனைக் கொதிப்படைய வைத்தது.

எல்லாப்பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இந்த வீடு என்று முழு நம்பிக்கையுடன் வந்த சதா, ஏமாந்து செய்வதறியாது குழம்பிப் போய் நின்றான்.

வீடு வேறு யாருக்கோ விலைப்பட்டுவிட்டது. எவ்வளவோ திட்டங்கள்... எண்ணற்ற கற்பனைகள்... எல்லாம் இதைக் கேட்டதும் தூளாகிவிட, 'இலவு காத்த கிளி' போல் நின்றான் சதா.

அப்போ, 'சதாமாமா!' என்ற அழைப்புக்கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

நீதன் பள்ளிக்கூடப்பையைத் தோளிற் கொழுவியபடி, மிதியுந்தில் வந்து நின்றான்.

'கனநாளாகக் காணேல்லை, ரெலிபோன் எடுத்துப் பார்த்தனான். சுகமாக இருக்கிறீங்களோ...? நீங்கள் என்ரை தெய்வம்! நீங்கள் தந்த நம்பிக்கையாலை, இப்ப நல்லாப் படிக்கிறன். பாலங்கட்டு வதற்குரிய விசேட படிப்புக்கும் பதிஞ்சிருக்கிறன்!' என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

சதா அவனுக்குக் கை கொடுத்துப் பாராட்டினான்.


'நம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்குக் கட்டாயம் தேவை... இது வாழ்க்கைக்கு உயிர் போன்றது. நம்பிக்கையில்லாதவனால் சந்தோசமாக இருக்கவும் முடியாது, மற்றவர்களைச் சந்தோசப் படுத்தவும்; முடியாது. சபதம் எடுக்கவும் முடியாது, சாதித்து வெற்றியீட்டவும் முடியாது.... எவ்வளவு பெரிய தத்துவத்தை நீங்கள் எனக்கு அறிய வைத்திருக்கிறீங்கள்! நீங்கள் நல்லாய் இருப்பீங்கள் சதாமாமா!' என்று வாழ்த்திவிட்டுச் சென்றான்.

அவன் உற்சாகமாக மிதியுந்தில் விரைந்து செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றவனுக்கு, 'நம்பிக்கையில்லாதவனாற் சந்தோசமாக இருக்கவும் முடியாது, மற்றவர்களைச் சந்தோசப் படுத்தவும் முடியாது....' என்ற நீதனின் வார்த்தைகள் மாறி மாறி ஒலித்தன.

வீடு கை மாறியதாற் செய்வதறியாது, நம்பிக்கை உடைந்து போய் நின்றவனுக்கு, தனது வார்த்தையின் எதிரொலி போல வந்த நீதனின் வார்த்தைகள் அவனை மீண்டும் ஒரு உறுதிப்பாட்டுக்குக் கொண்டு வந்தன.

'விழுந்தவன் படுத்துவிடக்கூடாது... நாய் வந்தாற் கடித்துவிடும், மாடு வந்தால் உழக்கிவிடும், புழுக்கள் தம் இரையாக்கிவிடும்... விழுந்த வேகத்தைவிடப் பன்மடங்கு வேகத்திற் பாய்ந்தெழ வேண்டும்.... ஒரு வீடுதானே போனாற் போகட்டும்!'

சதாவின் மிதியுந்து நகர்ந்தது. சிந்தனைகள் வலை போட்டுப் பின்னின. 'என்ன செய்யலாம்...? வீடு மாறியே ஆகவேண்டும். இன்னும் ஐந்;துநாட்கள் லீவு, அது முடிய வேலை இல்லை... வேலையில்லாத் திண்டாட்டம்... வேலை செய்யும்போது அதன் அருமை விளங்கவில்லை. ஒழுங்காகப் போயிருந்தால் ஒருநாளும் நிற்பாட்டியிருக்க மாட்டாங்கள்... நானே என் தலையிலை மண்ணையள்ளிக் கொட்டின மாதிரி மடைவேலை பார்த்து, இப்ப தெருவிலே நிற்கிறேனே!' என்று தன்னைத்தானே நொந்துகொண்டே சென்றான்.


வெயில் அகோரமாக எறித்தது. விடிந்து இவ்வளவு நேரத்துக்கும் ஒன்றும் சாப்பிடவில்லை, மயக்கம் வருவது போலக் களைப்பாக இருந்தது. வழியிலிருந்த சாப்பாட்டுக்கடையொன்றில் வாங்கிச் சாப்பிடலாமென்று அங்கு செல்ல, அவன் நண்பன் முன்னால் இருந்த கடையொன்றிலிருந்து பியர் ரின்களுடன் வந்தான்.

சதாவைக் கண்டதும் அவனுக்குச் சேர்ந்து குடிக்கத் துணை கிடைத்த மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தது.

'என்னடா கனநாளாகக் காணேல்லை...? இந்தா எடு... அந்த வாங்கிலை போயிருந்து குடிப்பம்!' என்று பியர்ரின்னை நீட்டினான் நண்பன்.

'வேண்டாம் மச்சான்... எனக்கு நிறைய வேலை இருக்கு! பசியிலை தலை வேறை சுற்றுது...' மறுத்த சதா, தன் பிரச்சனைகளை அவனுக்கு விளங்கப்படுத்தினான்.

அவன் விடவில்லை.
'குடிச்சால் கவலை தீரும், நான் போய் நெப்போலியன் ஒன்று வாங்கிக்கொண்டு வாறன்!'

சதா அடியோடு மறுத்துவிட்டான்.

'அவசியம் போகவேணும், இன்னொரு நாளைக்குப் பார்ப்பம்!' அவன் பதிலை எதிர்பார்க்காமலே, அவனிடமிருந்து தப்பி, மிதியுந்தை ஓட்டினான். சிறிது தூரம் செல்ல, முதலாளியின் சிற்றுந்து வீதியின் கரையோரத்தில் நின்றது, முதலாளி மோட்டரின் கதவைத் திறந்து, ஏதோ தேடிக் கொண்டிருந்தார்.

சதா மிதியுந்தை நிறுத்தி, முதலாளிக்கு வணக்கம் சொன்னான். அவருக்கு அவனை நன்கு தெரியும். தொழிற்சாலையில் எந்த இயந்திரம் பழுது என்றாலும் ஏதோ செய்து, எப்பாடுபட்டாலும் இயக்கும் வல்லமை கொண்டவன்.

கைகொடுத்து விட்டு, என்ன பிரச்சனை என்று ஜேர்;மனியமொழியிற் கேட்டான்.

'மோட்டர் இயங்க மறுக்கிறது... காரணம் தெரியவில்லை' என்று அவர் சொல்லிக்கொண்டே, நேரத்தைப் பார்த்தார்.

எங்கோ அவசரமாகப் போகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட சதா, அதைப் பார்த்து என்ன பிழை என்பதைத் தெரிந்து கொண்டு, ஐந்தே நிமிடத்தில் அதைச் சரிப்படுத்தியும் விட்டான்.

பையைத் திறந்து பணம் கொடுக்க முதலாளி முனைந்தார். சதா வாங்க மறுத்துவிட்டான்.

'இப்ப என்ன செய்கிறாய்?' என்று அவர் கேட்டார். அவன் பதில் சொன்னான்.

'எப்ப லீவு முடிகிறது?' என்று வினாவினார்.

'இன்னும் ஒரு கிழமை இருக்கிறது, அதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியாது, வேலையில்லை, வீடுமில்லை.'

தன் பிரச்சனைகளைச் சுருக்கமாகச் சொன்னான்.

நேரத்தை மீண்டும் பார்த்த முதலாளி, தான் இப்ப அவசரமாகப் போகவேண்டும், பின்னேரம் நான்கு மணிக்கு அலுவலகத்துக்கு வரும்படி கூறிவிட்டு, தன் சிற்றுந்தை இயக்கினார். அது முழு மனதுடன் இயங்கியது கண்டு, சந்தோசத்துடன் அவனுக்குக் கை காட்டிவிட்டு விரைந்தார்.


8. (2).  வாழ நினைத்தால் வாழலாம்


சதா, நான்கு மணிக்கு முன்கூட்டியே சென்று, முதலாளி வரவுக்காகக் காத்திருந்தான்.

நேரம் போய்க்கொண்டேயிருந்தது. முதலாளிக்குப் பல சோலிகள்.... முடித்துக் கொண்டு வர நேரமாகும்தானே... கட்டாயம் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தான்.

அலுவலகத்தில் வேலை முடிந்து, எல்லோரும் போய்விட்டார்கள். காவலாளி மட்டும் நின்றான். என்ன விடயம் என்று சதாவிடம் கேட்க, அவன் விடயத்தைச் சொன்னான்.

'முதலாளி கொஞ்சம் முன்பாகத்தான் இலண்டனுக்குப் போயிற்றார்... ஏதோ அவசர வேலையாம்... இரு நாட்கள் கழித்து வந்து பார்!' பதில் சொல்லி, அவனை வெளியே போகவிட்டு, வெளிக்கதவைப் பூட்டினான் காவலாளி.

நெஞ்சில் ஏமாற்றம் கௌவ, மிதியுந்திலேறி, வீட்டை நோக்கிச் செலுத்தினான். எவ்வளவோ நம்பிக்கையுடன், நான்கு மணி எப்போ வருமென்று காத்திருந்தால்..... முதலாளி இப்பிடிச் செய்திட்டாரே!'

மனதில் நம்பிக்கை வளர்வதும் நம்பிக்கையுடன் செயற்படுவதும் அவ்வளவு இலகுவான காரியமில்லை என்பதை உணர்ந்தான் சதா.

வார்த்தைகளால் சுலபமாக நம்பிக்கையோடு இருங்கோ என்று ஆறுதல் சொல்லலாமே தவிர, அப்படி நம்பிக்கையுடன் மனமுடையாமல் வாழ்வது, 'கல்லில் நார் உரிப்பது' போன்று, மிகக் கடினமென்று அவன் மனம் வேதனைபடக் கூறியது.

வீட்டுக்கு வந்து சிறிது நேரத்தில் பூங்கோதை சதாவுடன் தொடர்பு கொண்டாள்.

நாள் முழுக்கத் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகக் குறைப்பட்டாள். சதா நடந்த விடயத்தை அவளுக்குக் கூறி, அவளைச் சமாதானப்படுத்தினான்.

'முதலாளிக்குப் பணத்திமிர்! வேண்டுமென்று செய்தமாதிரிச் செய்திருக்கிறார், பின்னேரம் இலண்டன் போற விடயம் மத்தியானம் தெரியாமலிருக்குமே, சரி அதை விடுங்கோ! ஒருவரை நம்பி ஒருவரில்லை, கவலைப்படாதேங்கோ, நம்பிக்கை வெல்லும்!'  என்றாள்.

சதா மறுமுனையில் வாய்விட்டே சிரித்தான்.

'சைக்கிள் ஓடியோடி கால் தேய்ந்து போச்சு... பசி உயிரைக் கொல்லுது.... வெறும் நம்பிக்கையை மட்டும் வைச்சு ஒன்றும் செய்ய முடியாது!' என்று சோர்வுடன் கூறினான்.

'வீட்டுக்கு வாங்கோ!' என்று ஒரேபிடியாக பூங்கோதை கேட்க, மறுக்க முடியாமற் சம்மதித்தான்.

சதா வீட்டுக்கு வந்த சந்தோசத்தில், பூங்கோதையின் உள்ளம் துள்ளிக் குதித்தது. நீண்ட நாட்கள் அங்கு அவன் போகவில்லை. மாறிமாறிப் பிரச்சனைகள் வந்ததால், மனம் ஒரு நிலை இல்லாமல் குழம்பி, ஓரிடமும் போக மனமில்லாமல் இருந்தான்.

இன்று வீட்டில் இருந்தால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. அந்த நேரம்  பார்த்து, பூங்கோதையும் கேட்க, அவனுக்கும் அங்கு சென்றால் கொஞ்சம் நிம்மதியாயிருக்;கும் என்று நினைத்தான்.

நவம்வீட்டில் என்றும் போல் சதாவுக்கு மிகுந்த வரவேற்பும் உபசாரமும் கிடைத்தது.

               

8. (3).  வாழ நினைத்தால் வாழலாம்


வாழ்க்கையே ஒரு நம்பிக்கைதான்!

நாளைக்கே கல்யாணப்பதிவுக்கந்தோருக்குச் சென்று, திருமணப் பதிவுக்குத் திகதி குறிப்பதென்று சதா முடிவு கூறினான்.

எல்லோருக்கும் அளவிடமுடியாத சந்தோசம், பூங்கோதை கனவா... நனவா... என்ற மகிழ்ச்சிப் பரபரப்பிற் தடுமாறினாள்.

'என்னிடம் ஒன்றுமேயில்லை... வெறுவிலி... என்னை நம்பிப் பூங்கோதையைத் தருகிறீங்கள்...!' சதாவின் கண்கள் கலங்கின.

'கவலைப்படாதேங்கோ மச்சான்! பணம் வரும், போகும்... உங்கடை மனசுக்கு நீங்கள் நல்லாயிருப்பீங்கள், வேலையொன்று கிடைக்காமலா போகப்போகுது....? அதோடை இரும்பைத் தங்கமாக்க வல்ல மகாவீரன் நீங்கள்!' என்று நவம் விட்டுக் கொடுக்காமல் உயர்வுபடக் கூறினான்.

பதிவுத்திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. பூங்கோதையின் கண் மீண்டும்  சத்திரசிகிட்சை செய்து பார்வை வருவதற்கு வாய்ப்பிருக்கா? இருந்தால் அது பெரிய வரப்பிரசாதம் என்று நினைத்தான்.

தங்கள் வீட்டிலே போதிய இடம் இருப்பதால் சதாவும் பூங்கோதையும் அங்கேயே இருக்கலாம் என்று நவமும் மனைவியும் அன்போடு கேட்டுக் கொண்டனர்.

திருமணம் செய்யும்போது வேலை தான் இல்லை, இருக்க ஒரு வீடாவது வேண்டாமா? பொம்பிளை வீட்டில் போய்த் தங்குவது அழகா? வேலை, வீடு, கையிலே காசு எல்லாம் வந்ததும்தான் திருமணம் என்று தீர்மானமாக இருந்திருந்தான். ஆனால், நாட்கள் போனதே தவிர, எந்தச் சாதகமான சூழ்நிலையும் வரவில்லைநீந்தப் பழக வேண்டும் என்றால், தண்ணீருக்குள் குதித்துத்தானாக வேண்டும்வேறு வழியில்லை.

பூங்கோதையின் கண்... அது குணமாக வேண்டும். இதுக்காக எதுவும் செய்ய அவன் துணிந்துவிட்டான்.

எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
என்ற வள்ளுவர் வாக்குக்கு இசைய, நம்பிக்கை மட்டும் இருந்தாற் போதாது துணிவோடு, செயற்படவேண்டும். செயல் இருந்தாற்றான் வெற்றியைக் காண முடியும்.

சதா காரியத்திற் கால் வைத்துவிட்டான். இடையில் நின்று தயங்குவது குற்றம் என்று அவன் மனம் கூற, எது வந்தாலும் வரட்டும், அவன் முடிவு எடுத்துவிட்டான்.


Keine Kommentare: