Donnerstag, 31. Mai 2012

பகுதி 9







9. (1).  வாழ நினைத்தால் வாழலாம்


நாளை மறுநாள் பதிவுத்திருமணம்.

தம்பி கணேசன், குடும்பத்துடன் விடிய வருவதாக அறிவித்து இருந்தான்.

எல்லா ஆயத்தங்களும் செய்தாகிவிட்டன. முதலாளிக்கு, ஒரு சம்பிரதாயத்துக்குத் திருமணம் பற்றிக்கூறி அவரையும் அழைத்தால் நல்லது என்று சதா நினைத்தான். இவ்வளவு காலமும் சம்பளம்  தந்தவர் அல்லவா?
'உப்பிட்டவரை உள்ளளவும் நினை!' என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

சதாவின் மிதியுந்து தொழிற்சாலை அலுவலக வாசலில் போய் நின்றது. அவர் உள்ளே இருக்க வேண்டும். கதவு மணியை அழுத்தினான். கதவு திறந்தது. உள்ளே சென்று முதலாளியைப் பார்த்து, விடயத்தைக் கூறினான்.

முதலாளி கைகுலுக்கி வாழ்த்தினார்.

சதா திருந்தி, குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது கண்டு, மனந்திறந்து பாராட்டினார்.

அன்றொருநாள் வரும்படி அழைத்துவிட்டு, மறந்து போய், தான் இலண்டன் போனதற்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டார்.

'எவ்வளவு பெரிய மனிதர், கோடீஸ்வரர்... என்னிடம் மன்னிப்புக் கேட்கிறாரே!' என்று அவர் உயர்ந்த உள்ளத்தை எண்ணி வியந்தான்.

'ஒன்றுமே இல்லை என்கிறாய்... அப்போ கல்யாணம் செய்து குடும்பமானால், இருக்க வீடில்லாமல், வருமானத்துக்குத் தொழிலில்லாமல் என்ன செய்யப் போகிறாய்?'
ஜேர்மன்மொழியிற் கேட்டார் முதலாளி.

'எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!' என்ற சதா,
'இவற்றைத் தேடிப் பெற்றபின்தான் திருமணம் என்ற நினைப்போடு இருந்தேன், ஆனால் பூங்கோதையின் கஸ்டங்களால் உடனே திருமணம் செய்ய வேண்டியுள்ளது' என்றான்.

'உனக்கு உதவி செய்ய எனக்கு நல்ல விருப்பம், நீ விரும்பினால் என்னுடைய தொழிற்சாலையில் வேலை செய்யலாம்!'

முதலாளியின் வார்த்தைகள் அவனுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தன. தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விட்ட போதே, அவன் மனதில் திரும்பவும் வேலை கிடைக்கலாம் என்ற ஒரு கற்பனை முளைத்திருந்தது. இப்போ முதலாளி தன் வாயாற் சொன்னதும் அவனுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறந்தது.

'இன்னொரு விடயம்!' என்று முதலாளி அவனைப் பார்த்தார்.

இனிமேல் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று நிபந்தனை  விதிக்கப் போகிறார் போலும்.... என்று அவர் சொல்லப் போவதை அவதானித்தான்.

'என்ரை சகோதரனின் கார்க்கொம்பனி தீப்பிடித்தது உனக்குத் தெரியும்தானே.... அதுக்குப் பிறகு அது மூடியே இருக்கு! அதோடை  அவர் சுகயீனமுற்றதால், அதை இனி நடத்துவதற்கு அவரால் முடியாது. விற்பதற்குரிய பொறுப்பை என்னிடம் தந்துள்ளார்;. உனக்கு விருப்பமென்றால் சொல்லு!' என்று நிறுத்தினார்.

சதாவுக்குத் தன் காதுகளையே நம்பமுடியாமல், மகிழ்ச்சிப் பரபரப்பில் நின்றான். தன்னையறியாமலே 'விருப்பம்! நல்ல விருப்பம்!' என்று பதில் சொல்லிவிட்டான்.

அது ஒரு சிறிய தொழிற்சாலை, மோட்டார்வாகனங்களின் ரயர் மாற்றும் வேலைகள், திருத்தும் வேலைகள், வாகனங்களின் உதிரிப்பாகங்கள் விற்கும் கடை, பாவித்த சிற்றுந்துகள் விற்பது போன்றவை அடங்கியது. அதனுடன் இணைந்தாற்போல ஒரு வீடும் இருந்தது. சிறியளவிற் தீப்பிடித்ததால் தொழிற்சாலையின்  ஒரு பகுதியில் திருத்தும் வேலைகள் செய்ய வேண்டும்.

இது அவனது நீண்டகாலக்கற்பனை, ஆனால் இதை வாங்கப் பணத்துக்கு எங்கே போவது...? அவனிடம் கைச்செலவுக்கே பணம் இல்லாமல் இருக்கிறது.

'முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?' ஆனால்  கொஞ்சமும் யோசிக்காமல் 'எனக்கும் விருப்பந்தான்' என்று பதில் சொல்லிவிட்டான்.

முதலாளிக்கு அவன் நிலைமை நன்கு தெரியும், தெரிந்து  கொண்;டும் அவனிடம் கேட்பதால் அதற்கான வழி அவர் மனதுக்குள் இல்லாமலில்லை.

'உனக்கு வேண்டிய உதவிகளை நான் செய்வேன், பணம் வங்கியில் கடன் எடுக்கலாம், என்ன சொல்கிறாய்...?' என்றார்.

அவன் 'ஓம்' சொல்லிவிட்டான்.

'நாளை காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு வா! வக்கீலிடமும் வங்கிக்கும் போய்; ஆவன செய்யலாம்... வீடு, தொழிற்சாலை எல்லாத் திறப்புகளையும் இப்பவே தருகிறேன், நீ போய் எல்லாவற்றையும் பார்! பிடித்துக் கொண்டால் நாளைக்கே செய்யக்கூடிய முழு அலுவல்களும் செய்யலாம்!' என்றார்.



9. (2).  வாழ நினைத்தால் வாழலாம்

திறப்புக்கோர்வையுடன் சதா மிதியுந்திலேறி, நவம் வீட்டை நோக்கி விரைந்தான்.
'வெறுங்கை முழம் போடுமா?'

அவன் இருக்கும் வீட்டை நாளைக்கே விட வேண்டும், எழும்பச் சொல்லிய கடைசி நாள்!

நவமும் மனைவியும் தங்கள் வீட்டில் வந்து இருக்கலாமென்று முழுமனதுடன் அழைத்திருக்கிறார்கள்.

சதா.... இவன் எவ்வளவு ஆற்றல் படைத்தவன்! அடங்கி, ஒடுங்கி, ஒன்றுமில்லாமல், கூனிக் குறுகி இன்னொருவரிடம்... அன்பானவர்கள்தான்.... என்றாலும்... திருமணமான அன்றே கடமைப்படுவதா?

ஊரிலே இருக்கும்போதே கார், மோட்டார்சைக்கிள், கராச்... என்று விலாசத்துடன் இருந்தவன். அவனுக்கென்று ஒரு தனிமதிப்பு எப்போதும் இருக்கும்.

பஞ்சி, அலுப்பு என்றில்லாமல் யார், எப்போ சிற்றுந்து திருத்தவென்று வந்தாலும் அவர்கள் அவசரம் தெரிந்து, இராப்பகலாக வேலை செய்து, திருத்திக் கொடுப்பான்.

அவனின் திறமையை அறிந்து பல இடங்களில் இருந்தெல்லாம் வாகனங்கள் திருத்த வருவார்கள். அப்படி வந்த சந்திப்பில் கணேசனின் மனைவி சிவகாமியின் அக்கா சந்திரா தகப்பனுடன் சிற்றுந்து திருத்த வந்திருந்தாள்.

அது ஒரு சந்திப்பு, பார்வையிலே காதல் பிறந்தது. சிவகாமி நல்லவள்.... அவளைவிட நல்லவள் சந்திரா... மிக நல்லவள். அக்காவையும் தங்கையையும் அண்ணனும் தம்பியும் திருமணம் செய்வதென்று பெரியோர்களே நிச்சயம் செய்துவிட்டார்கள்.

மகிழ்ச்சி... பெருமகிழ்ச்சி!

ஒருநாள் சந்திரா கோவிலிலிருந்து தனியாக வந்து கொண்டிருந்தாள்.
இராணுவக்காடையர்கள் அவளை வழி மறித்து, அநியாயம்... கொடுமையிலும் கொடுமை நடந்தது. துள்ளிவிளையாடி, ஓடியாடி மகிழ்ந்து கொண்டிருந்த மான்குட்டியை, இறைச்சிக்கடைக்காரன் அடித்து வீழ்த்தி, முறித்து, வெட்டி அதன் எல்லாவற்றையும் விழுங்கிவிடுவது போல, சந்திரா என்ற அழகிய இளங்குருத்தின் கதை முடிந்தது.

கோரம்... கோரம்... இனப்போருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏன் இந்த அநியாயம்?

வேதனை தாங்க முடியாமல் உறவுகள் துடிதுடித்தன. சதா பைத்தியம் பிடித்தவன் போலானான். கராச்சை விற்றுவிட்டு, ஜேர்மனிக்கு வந்துவிட்டான்.

வெளிநாடு வந்து அவன் செய்த ஒரேயொரு நல்ல காரியம் கணேசனைப் பிரான்சுக்குக் கூப்பிட்டு விட்டது மட்டுந்தான்.

சந்திராவின் நினைவுகளும் அந்த ஜீரணிக்க முடியாத சோக நிகழ்வும் அவன் மனதில் அடங்கி, கொஞ்சங் கொஞ்சமாக ஒரு மூலைக்குட் போய் முடங்கிக் கொண்டாலும், அவனைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கையற்ற, உற்சாகமில்லாத, பொறுப்பற்ற, விரக்தியான வாழ்வு தொடர்ந்தது.

இனி ஒன்றும் வேண்டாம் என்ற முடிவுடன் வாழ்ந்து வந்தான். இதன்போது குடி கொண்ட குடிப்பழக்கம்.... அதுவே வாழ்வின் முழு அம்சமும் என்றாகிவிட, அவன் வாழ்வு இருளிலே மூழ்கிக் கிடந்தது.
இப்போ அந்த இருளில் ஒரு வெளிச்சம் முளை விடுகிறது.

திறப்புக்கோர்வையுடன் மிதியுந்திற் போகும் அவனுக்கு, ஊரில் கார்க்கராச்சின் திறப்புக்கோர்வையுடன் மோட்டார்சைக்கிளில் எடுப்பாகச் சென்ற நினைவுகள் வந்தன. அப்படி இருந்தவன், இப்படி இன்று இறங்கி, மற்றவரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு வீழ்ந்துவிட்டானே!

வாழ்க்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும், இந்த நம்பிக்கை தான் வாழ்வில் ஒளி தருவது, வாழ்வை ஒளி மயமாக்குவது, புகழையும் உயர்வையும் மதிப்பையும் பெற்றுத் தருவது... இந்த நம்பிக்கை இல்லையென்றால் எல்லாமே போய்விடும்!

வாழ்க்கையிலே எத்தனையோ சோதனைகள் வரும், அடுத்தடுத்து தோல்விகள் வரும். இவற்றை முழுநம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். எல்லாமே முடிந்துவிட்டது என்று மனம் சோர்ந்து நம்பிக்கை இழக்கக்கூடாது.

ஒருவனிடம் நம்பிக்கை இருக்குமட்டுö அவனை வீழ்த்தமுடியாது. விதி என்ன ஆட்டம் ஆடினாலும் மதியிலே உறுதியும் நம்பிக்கையும் இருந்தால் நிமிர்ந்து நிற்கமுடியும், தோல்விகளைத் தகர்த்தி வெற்றியைப் படைக்க முடியும். வாழ்விலே வெற்றி படைப்பதென்பது இலேசான காரியமில்லைத்தான்.

'சாண் ஏற முழம் சறுக்குவதுமுண்டு.' வாழ்க்கை சீராக, ஒழுங்காக, நிம்மதியாக இருப்பது ஒரு சிலருக்கு மட்டுந்தான் வந்து அமையும். பலருக்கு அது போராட்டந்தான். அந்தப் பலரிலே ஒருவன் சதா.




9. (3).  வாழ நினைத்தால் வாழலாம்

நவம் வீட்டுக்கு வந்து மிதியுந்தை நிறுத்தினான். சதாவின் 
வருகையால் நவம் வீட்டில் சந்தோசக்காற்று வீசியது. என்றும் போலப் பிரமாதமான வரவேற்பு, இனிமையான உபசாரம், எல்லாமே மிகுதியாகவேயிருந்தது.

சதா ஒன்றுமில்லாதவன்... அவனை ஒரு மனிதன் என்று மதிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். இதுதான் மனிதனின் உயர்வான, நாகரீகம் மிக்க பண்பாகும்.

அவன் கையிலே இப்ப தான் ஒரு திறப்புக் கிடைத்திருக்கிறது. என்றாலும் அது திருமணத்துக்கு முதலே கிடைத்து, அவன் தன்மானத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கிறது. அவனைச் சொந்தக்காலில் நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது.

சதா முதலாளியைச் சந்தித்ததிலிருந்து முழு விபரங்களையும்; கூறி முடித்தான்.

நம்பமுடியாத ஒன்று! ஆச்சரியம் கொட்ட, அவனைப் பார்த்து வியப்புடன் நின்றார்கள்.

சந்தோசம் அங்கு கரைபுரண்டோடியது.

கடவுள் மனிதரைச் சோதிப்பார், அழஅழச் சோதிப்பார், தன்னை நம்பியவர்களை அவர் கைவிடமாட்டார். யாரோ ஒருவரின் உருவில் வந்து, இக்கட்டான கட்டத்தில் யாராலும் செய்ய முடியாத அரிய உதவிகளைச் செய்து காப்பாற்றுவார். அதுதான் கடவுளின் தனித்தன்மை.
சதா விடை பெற்றான்.

மறுநாள், அது சதாவுக்கென்றே விடியும் நாள். மறுவாழ்வு மலர்வது போன்று எல்லோரும்போல குடும்பம், வேலை, சமூகம் என்று வாழத் தொடங்கும் நாள்.... ஊரிலே வாழ்ந்தது போல, கௌரவம் மிளிர, தன் ஆற்றலை வெளிப்படுத்தி ஆர்வமாக, ஆசையாக, மனநிறைவுடன் தொழில் தொடங்குவதற்கு அடியெடுத்து வைக்கும் நாள்....!

அவன் மனதில் புத்துணர்ச்சிகள் பிறக்க, பல்வேறு சிந்தனை களுடன் மிதியுந்திற் போய்க் கொண்டிருந்தான் சதா. அமைதியான நேரம், வாகனப்போக்குவரத்துக்; குறைவாக இருந்தவேளை....

சிற்றுந்து ஒன்று வந்து திடீர் பிறேக்குடன் நிற்க, அதிலிருந்து பாய்ந்து வந்த நால்வர், அவனைச் சலவைத்தொழிலாளி உடுப்புத் தோய்ப்பதுபோல, அடித்துத் துவைத்து, வீதியோரத்திற் போட்டு, அவன் மிதியுந்தையும் அடித்து, நெளித்துத் தூரத்தில் எறிந்துவிட்டு, மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.

சதா தட்டுத் தடுமாறி எழுந்தான். எல்லாம் ஒரு கண் மூடி விழிக்க முன் நடந்துவிட்டது. உடலெங்கும் இரத்தத்தழும்புகள், நடக்கமாட்டாமல் நடந்து, திறப்புக்கோர்வையைத் தேடினான். மிதியுந்து விழுந்து கிடந்த இடத்துக்குச் சென்று பார்த்தான். திறப்பைக் காணவில்லை. மிதியுந்து, பன்ஸர் நெரித்துச் சென்றது போல நசிந்து, உடைந்து, நெளிந்து கிடந்தது. அதற்கு மேல் அவனுக்குக் கண்கள் இருள் நிறைந்து கொண்டு வந்தது மட்டும்தான் ஞாபகம்.....




9. (4).  வாழ நினைத்தால் வாழலாம்

கண்களைத் திறந்தபோது, நவமும் நீதனும் பக்கத்தில் நின்றனர். தான் படுத்திருப்பது வைத்தியசாலை என்பது தெரிந்தது.

நவம் என்ன நடந்தது? என்று விசாரித்தான்.

'காரிலே நான்கு பேர் வந்தாங்கள்.... இறங்கினதுதான் தெரியும், வாங்கு வாங்கென்று வாங்கிப்போட்டு, வந்த வேகத்திலேயே போயிட்டாங்கள். தமிழாக்கள்தான், யாரென்று தெரியாது!' சதா சுருக்கமாகச் சொன்னான்.

'பூங்கோதை எல்லாரும் வந்து இவ்வுளவு நேரமும் நின்றுவிட்டு, இப்பதான் போகினம்!' கூறிய நவம்,
'திட்டம் போட்டுத்தான் செய்திருக்கிறாங்கள். வடிவாக யோசிச்சுப் பாருங்கோ, ஒருத்தனைக்கூட அடையாளம் காணவில்லையோ?' கோபமும் கவலையும் குரலிற் தொனிக்கக் கேட்டான்.

'இல்லை' என்ற அர்த்தத்திற் தலையாட்டிய சதா,
'திறப்பு!' என்று துடித்தெழுந்தான்.

'என்ன திறப்பு?' கேட்டான் நீதன்.

'கொம்பனித்திறப்புக்கோர்வை, கையிலை வைத்திருந்தனான். அந்த நாய் பிடுங்கி எறிஞ்சவன்!' கட்டிலை விட்டெழுந்து நின்றான் சதா.

'இப்ப என்ன செய்யப் போறீங்கள்? நாளைக்குப் பார்க்கலாம், படுங்கோ!'

'இல்லை மச்சான், முதலாளி நம்பித் தந்தது, தேடி எடுத்துத் தானாக வேணும். வேறை யாருடையாவது கையிற் பட்டால் போச்சு...!' அவன் வெளியே செல்லத் துடித்தான்.

'நாங்கள் போய்ப் பார்த்துக்கொண்டு வாறம், நீங்கள் இருங்கோ!'

'இல்லை, நானும் வாறன்!'

'இந்தக் காயங்களோடை வெளியிலை போக விடமாட்டினம், நீங்கள் பொறுமையாக இருங்கோ!'

'எனக்கு ஒன்றுமில்லை, நான் டொக்டரோடை கதைக்கிறன்,' என்று சதா அறையை விட்டு வெளியே சென்று, அங்கு கடமையிலிருந்த வைத்தியரிடம் தன் நிலைமையைக் கூறினான்.

வைத்தியர் அவன் மருத்துவக்கோர்வைகளைப் பார்த்தார். பாரதூரமாக ஏதும் இருக்கவில்லை. வெளிக்காயங்கள் மட்டும்தான். இரு நாட்கள் வைத்தியசாலையில் இருந்தால் நல்லது என்பது அவர் கருத்து.

சதாவின் விருப்பத்தின் பெயரில் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குப் போக அனுமதி கிடைத்தது.

நவத்தின் சிற்றுந்தில் அடி விழுந்த இடத்துக்கு விரைந்தார்கள்.

வீட்டுக்குச் சென்று ரோச் லைற் எடுத்து வந்து தேடுதல் நடந்தது. சுகந்தி, மயூரன், தமிழினி எல்லோரும் கூட வந்து தேடினார்கள்.... நீண்டநேரம் தேடினார்கள்.
அது சாலையின் ஓரம், நிறைய மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தது. அந்த இருளில் இயன்றவரை தேடி, அலுத்து வீட்டுக்குத் திரும்பினர்.

அன்றிரவு நவம் வீட்டிலேயே சதா தங்கியிருந்தான். அவனை வீட்டுக்குப்போக அவர்கள் விடவில்லை. என்னதான் உறவோ  அவர்களுக்கு இப்படியொரு பாசம்.



9. (5).  வாழ நினைத்தால் வாழலாம்


பொழுது விடிந்ததும் விடியாததுமாக வீட்டுமணி ஒலித்தது. சுகந்தி எழுந்து அரைத்தூக்கத்தில் கதவைத் திறந்தாள்.

சதாவின் தம்பி கணேசன் நின்றான்.

'வாங்கோ!' என்று வரவேற்றாள் சுகந்தி.

'சிவகாமியும் பிள்ளைகளும் வானுக்குள் இருக்கினம், அண்ணை வீட்டிலை இல்லை, எங்கே போயிருப்பாரென்று தெரியவில்லை! அதுதான் உங்களிடம் கேட்கலாமென்று வந்தனான், நித்திரையைக் குழப்பிப் போட்டன், கோவிக்காதேங்கோ!'

'அதொன்றுமில்லை, நாங்கள் எழும்பத்தானே வேணும்... அண்ணை இங்கைதான் படுத்திருந்தவர்... பொறுங்கோ எழுப்பி விடுகிறன்! அவையையும் கூட்டிக்கொண்டு உள்ளுக்கு வாங்கோ!' என்று கூறிவிட்டு, சுகந்தி சதா படுத்திருந்த அறையை நோக்கிச் சென்றாள்.

சதாவின் படுக்கை வெறுமையாக இருந்தது, ஆள் அங்கில்லை. அதற்குள் நவமும் எழுந்து வந்தான்.

'சதாவைக் காணவில்லை என்றதும் வீடே விழித்துக் கொண்டது.

பூங்கோதை பதறித் துடித்தாள்.

அடிபட்ட காயங்கள் முழுதாகக் குணமாகவில்லை, எங்கே போயிருப்பார்? ஒருவேளை நோ தாங்கமுடியாமல், வைத்திய சாலைக்குப் போயிட்டாரோ? இல்லாட்டி விரக்தியில் மீண்டும் பியர் குடித்து எங்கேயாவது விழுந்து போய்.....!' அவள் மனம் பயத்தில் பல்வேறு விதமாக எண்ணிக் கலங்கியது.

கணேசன் மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு உள்ளே வந்தான். அவர்களுக்கும் விடயம் தெரிய வந்தது. முதல்நாள் சதாவுக்கு அடி விழுந்ததிலிருந்து முழுவிபரங்களையும் நவமும் சுகந்தியும் கூறினர்.

'என்ரை அண்ணையிலை தொட்டவனைச் சும்மா விடமாட்டன்!' கணேசன் ஆத்திரம் உடலெங்கும் பரவக் கோபத்துடன் தன் வாகனத்தை நோக்கி ஓடினான்.

நவம் அவனைப் பிடித்துத் தடுத்துச் சமாதானம் கூறினான்.

'பொறுமையாக இருங்கோ!
'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம்' என்று சொல்வார்கள். நாங்கள் இருக்கிறம்... யாரென்று தேடிப் பிடித்து, பொலிஸிலே கொடுத்து, முறையான தண்டனை வாங்கிக் கொடுப்போம், இப்போ அண்ணையைத் தேடுவம், வாரும் கணேசன்!' என்று நவம் கணேசனைக் கூட்டிக்கொண்டு சிற்றுந்தில் ஏறி, அதை இயக்கினான்.

அப்போ ரக்சி ஒன்று வந்து வீட்டுவாசலில் நின்றது.
சதா அதிலிருந்து இறங்கினான்.

ரக்சியைப் போகவிட்டு, திறப்புக்கோர்வையுடன் அவன் வருவது கண்டு, எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி ஒளிவிட்டது.

'சொல்லிப்போட்டுப் போயிருக்கலாமே! நாங்கள் உங்களைக் காணாமல் என்ன ஏதென்று பயந்துவிட்டோம்.' செல்லமாகக் குறைப்பட்டாள் தமிழினி.

'அண்ணை! இப்பிடி ஒருத்தன் அடிச்சிருக்கிறான், தம்பி என்று நான் பேருக்கு இருக்கிறன், யாரென்று தெரிந்தால் தும்பு தும்பாக்கிப் போடுவன்!' கணேசனின் வார்த்தைகளில் கோபம் தெறித்;தது.

'ஒருத்தன் அடிக்கேல்லையடா தம்பி.... நாலுபேரடா... நான் திருப்பி அடிக்கேல்லை, வேணுமென்று தான் அடி வாங்கினான்... அடிவாங்கினவன்தான் அடிச்சிருக்கிறான்... நானும் நண்பர்களும் ஆறு மாதங்களுக்கு முன்பு  இதேமாதிரி அவனைத் தெருவிலை உருட்டியுருட்டி அடிச்சனாங்கள், பதிலுக்குப் பதில் தந்திருக்கிறான். இதைப் பெருப்பிக்க வேண்டாம் என்றுதான் நான் பொறுமையாக விட்டனான்.

வாழ்க்கையில் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு, எவ்வளவோ கடமைகள் இருக்கு, வேண்டாம்... இந்த வெட்டுக் குத்து!' என்றவன்,
மணிக்கூட்டைப் பார்த்துவிட்டு,
'நான் எட்டுமணிக்குக் கார்க்கொம்பனிக்குப் போகவேண்டும். முதலாளி வருவார், போக வேண்டும்' என்றான்.

சுகந்தி தேநீர் தயாரித்துக்கொண்டு வந்து கொடுத்தாள். சதா அவசரமாகத் தேநீரை அருந்திவிட்டு, கணேசனை அழைத்துக் கொண்டு கார்க்கொம்பனிக்குச் சென்றான்.

கார்க்கொம்பனி பிரதானவீதியில் அமைந்திருந்தது. திடீரென்று விற்கும் முடிவுக்கு வந்ததால், வேறு முதலாளிகள்  கேட்டு வாங்கும் சங்கடநிலை இல்லாமல், காதும் காதும் வைத்தாற்போல் இலகுவாக சதாவுக்குச் சொந்தமாகும் வாய்ப்புக் கிடைத்தது.

திறப்புக்கோர்வையிலிருந்த திறப்புகளைத் தெரிந்து, கதவுகளைத் திறந்து அண்ணனும் தம்பியும் உள்ளே சென்று அவதானித்தார்கள்;.

வசதிக்கேற்ப முக்கியமாகத் திருத்த வேண்டிய சிலவற்றைத் திருத்தி, அழகுபடுத்திவிட்டு தொழிற்சாலையைத் திறந்து வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

அப்போ முதலாளியும் தனது சிற்றுந்திலிருந்து இறங்கி உள்ளே வந்தார்.

முதலாளிக்கு சதா வணக்கம் கூறிக் கைகொடுத்தான் தம்பியையும் அறிமுகப்படுத்தினான். அவனும் கைகொடுத்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டு, வக்கீலிடம் போகப் புறப்பட்டனர்.

முன்னால் முதலாளி செல்ல, பின்னால் கணேசனும் சதாவும் தங்கள் வானிலே போனார்கள். அங்கே நவம், சுகந்தி, தமிழினி மூவரும் காத்துக்கொண்டு நின்றனர்.

முதலாளி, முதலிலேயே எழுத்துப்பதிவுகளுக்குரிய ஆயத்தங்களைச் செய்வதற்கு வக்கீலிடம் அறிவித்திருந்தபடியால், அவர் அதற்குத் தயாராக இருந்தார்.

கையொப்பங்கள் வைக்கப்பட்டன.

பணம் வங்கியிலிருந்து முதலாளியின் வங்கிக்கணக்குக்கு மாற்றுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.

இன்று சதா கார்க்கொம்பனியுடன்கூடிய ஒரு வீட்டுக்கு அதிபதி.

இயங்காத கொம்பனிதான், என்றாலும் அது இயங்கப்போகிறது. எப்படி....?

வங்கி, முதலாளியின் கடனை அடைப்பதற்குரிய பணத்தை, சதாவுக்குக் கடன் கொடுக்க முன்வந்தது. தொழில் செய்வதற்கு முதலீடு கொடுக்க மறுத்துவிட்டது.

கணேசன் முதலீடு எவ்வளவோ, அவ்வளவையும் தான் தருவதாகச் சொன்னான்.

நவம் இரண்டு கட்டு, காசு சதாவுக்குக் கொடுத்தான்.

'இது என்ன...?' சதா வாங்க மறுத்தான்.

'ஐம்பது உங்கடை தம்பி ஏற்கனவே உங்களிடம் கொடுக்கும்படி தந்தது, இது எங்களுடையது. இந்த ஒரு இலட்சத்தையும் வங்கியிலே போடுங்கோ! தொழில் தொடங்குவதற்குப் போதியளவு கடன் வழங்குவார்கள்!'

'நான் இருக்கிறேன் அண்ணை! இனிமேல் ஒன்றுக்கும் யோசிக்காதை!' என்றான் தம்பி.

'மச்சான்;! நாங்களும் கூடவே இருக்கிறம், யோசிக்காதேங்கோ!' என்றான் நவம்.

'மாமா! கொம்பியூட்டர் வேலை என்னவென்றாலும் நான் செய்து  தருவேன்.' தமிழினி உறுதி கூறினாள்.

சதா சாவிக்கொத்துடன் நிமிர்ந்து நின்றான். நமக்கு உதவ நாலு பேர் இருக்கிறார்கள் என்று அறியும்போது, எங்கள் பலம் நூறுமடங்காக விரிகிறது என்ற உண்மையைச் சதா உணர்ந்தான்.

'உறவும் நட்பும் நம்பிக்கையும் உள்ளவரை, ஊர் அறிந்த செல்வந்தன் நீ. உன்னை யாரும் வெல்ல முடியாது!' என்று சதா தோளை நிமிர்த்தினான்.

இந்த உலகத்திலே வாழ்கின்ற ஒவ்வொரு உயிரும் இருக்கின்ற ஒவ்வொரு பொருளும் உலகின் இயக்கத்துக்கு இன்றியமை யாதது. சதா இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு கடமையும் இல்லை என அவன் நினைத்தான். அவன் கடமை என்ன என்பது இப்போதான் புரிந்தது.

பதிவுத்திருமணம் வேண்டியவர்களுடன் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பூங்கோதையின் கண்சத்திரசிகிட்சைக்குப்பின் அம்மன்கோவிலில் தாலிகட்டும் மண்டபம் எடுத்துக் கொண்டாட்டமும் என்று சதா நவத்துக்கும் கணேசனுக்கும் கூறிக் கொண்டிருந்தான்.

சத்திரசிகிட்சை நடந்து, பூங்கோதை இழந்த பார்வையை மீண்டும் பெற்றாள், இது கடவுள் செயலே.

கடவுள் மிகவும் நல்லவர், அருள் புரிய விரைந்து வருவார். சோதனைக்காலம் என்றால் அவர் சிறிது தாமதிக்கலாம். ஆனால் நிச்சயம் வந்து காத்தருள்வார்.

'நீ நல்லதை நினைத்து, நல்லதைச் செய்து வாழும்போது உன் கண்களிற் கண்ணீர் வழிகிறது என்றால், அதற்கு நீ காரணமல்ல.'

'தொடக்கமும் முடிவும் வாழ்க்கையின் நியதி, ஒன்று நிச்சயம் என்றால் மற்றதும் நிச்சயம்தான்.'



'வாழ்வது சில நாட்கள்.... அன்புடனும் நட்புடனும் கை கோர்த்து, கை கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்திடுவோம்!'

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.


வாழ நினைத்தால் வாழலாம். வாழ்க!                        
வணக்கம்
                                                                                                                                                                                                                                     

                                                                                                                                                -njhlu;e;J> பகுதி-1,பகுதி-2,பகுதி-3 ஆகிய மூன்றிலும்ஒட்டாத உறவுகள்' கதை உள்ளது.

thrpf;f. 
Älterer post என்பதில் கிளிக் பண்ணுக .



Keine Kommentare: