Donnerstag, 31. Mai 2012

பகுதி 7






7. (1) „வாழ நினைத்தால் வாழலாம்“



சதாவின் மனதில் ஒருநாளுமில்லாத சந்தோச அலை பாய்ந்து கொண்டிருந்தது. முகச்சவரம் எடுத்து, தலைமுடி வெட்டிப் பார்ப்பதற்கு அழகாயிருந்தான். முற்றத்திற் பற்றைகள் வளர்ந்து காடாக இருந்தால் வீட்டின் அழகு கெடுவது போல இருந்த அவன் முகம், இன்று உதயசூரியன் போல ஒளி வீசியது.

'அகத்தின் அழகு முகத்திற் தெரியும்' என்பார்கள். இதுவும் சதாவின் விடயத்தில் உண்மையாக இருந்தது. அவனின் உள்ளத்தில் ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டு, பேராறாய்ப் பொங்கிப் பாய்ந்தது.

திருமணம் செய்யமுன் தான் ஒரு முழுமனிதனாக வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும், மதிப்பும் மரியாதையும் மனிதனுக்குத்தான் என்றாலும் கையிலிருக்கும் பணத்தைப் பார்த்துத்தான் அது கிடைக்கிறது என்பதைத் தெரிந்தவன் என்பதால், முதலில் வருமானந்தரும் ஒரு தொழில், இருக்க ஒரு வீடு, அடுத்தது கல்யாணம் என்ற முடிவுடன் செயற்பட்டான்.

வங்கி கடன் வழங்க இணங்கிவிட்டது. இனி எந்தத் தடையும் இல்லை. பார்த்து வைத்த வீட்டை வாங்குவதும் அதில் மிதியுந்துக்கடை ஒன்று போடுவதென்றும்; அவன் தீர்மானித்திருந்தான்.

வீடு பெரிது, அதில் வசித்துக்கொண்டே கடையும் நடத்த வசதியான அமைப்புக் கொண்டது. பழைய மிதியுந்துகள் வாங்கித் திருத்தி விற்பது, உதிரிப்பாகங்கள் விற்பது, மிதியுந்து, புல்லுவெட்டும்; இயந்திரங்கள் போன்றன திருத்துவது... என்று அவன் மனதிற் திட்டங்கள் வளர்ந்துகொண்டே போயின.

என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்ந்தவன் சதா. பொறுப்பு உணராமல் வாழ்ந்தவன், இவ்வளவும்தான் வாழ்க்கை என்று ஒரு சிறிய வட்டத்திலே சுற்றிக் கொண்டிருந்தவன். வேலைக்குப் போவது, அடிக்கடி லீவு எடுப்பது, நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, எதிலும் ஒழுங்கில்லாமல் போன போக்கில்; நடப்பது என்று திசைமாறி அலைந்த அவன், நேர்வழிக்குத் திரும்பியிருந்தான்.

சிறுவிளக்கானாலும் பேரிருள் விரட்டும் என்பது போல, பூங்கோதையின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் கொடுத்த ஒளியில் நயினாதீவுச் சப்பரம் போல ஒளிவெள்ளம் பாய நிமிர்ந்து நின்றான்.

பூங்கோதையின் கண்வைத்தியத்துக்கும் கண்வைத்தியரைச் சந்தித்து முழுமையாகச் சோதித்து, குணப்படுத்தமுடியுமா என்று அறிய ஒழுங்கு செய்திருந்தான். வைத்தியக்காப்புறுதி முதலில் மறுத்துவிட்டது.

இலங்கையில் நடந்த விபத்தென்று பல சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக் கழித்தார்கள். எல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது என்று முன்பு பூங்கோதைக்குச் செய்த வைத்தியச்சோதனைக்கான படிவங்களையும் காட்டி மறுத்தார்கள். தான் பூங்கோதையைத் திருமணம் செய்யப் போவதையும் தனது காப்புறுதி அட்டையையும் காட்டினான்.

திருமணம் செய்து மனைவிக்கும் காப்புறுதி; செய்த பின் வைத்தியம் செய்யலாம் என்று சம்மதித்தார்கள். இதன்பின் சதா துரிதகதியில் இயங்கத் தொடங்கியிருந்தான்.

வீட்டுப்பத்திரம் கைக்கு வந்ததும் தனியார் தொழிலுக்குப் பதிவு செய்தல், வீடுமாறுவது, கல்யாணம், கல்யாணப்பதிவு, கண்வைத்தியம்.... என்று ஒரே துடிப்புடன் இருந்தவன்... வங்கியின் சாதகமான பதில் கிடைத்ததும் வாங்க இருந்த வீட்டின் உரிமையாளரைப் பார்க்கச் சென்றான்.



7. (2) „வாழ நினைத்தால் வாழலாம்“


துவாரகா திருந்தத் தயாராகிவிட்டாள். ஆனால், திருந்தவிட மாட்டேன் என்று குமரன் முட்டுக்கட்டையாக நின்றான். வேறுவழி தெரியவில்லை, தமிழினிக்கு இதுபற்றித் விபரித்தாள். சதாதான் இதற்கும் தகுந்த ஆள் என்று, தமிழினி அவனிடம் குமரனின் சேட்டைகள் பற்றித் தெரிவித்திருந்தாள்.

துவாரகா பாடசாலையால் வந்துகொண்டிருந்தாள். பேருந்தில் இருந்து  இறங்கி, ஒரு கிலோ மீற்றருக்குமேல் தனியாக நடந்து செல்லவேண்டும். அன்று அவள் நடந்து செல்லும்போது, அருகே குமரனின் சிற்றுந்து வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி,
'வா, நான் கூட்டிக்கொண்டு போய் விடுகிறேன்!' என்றான்.

'கொஞ்சத்தூரம்தானே, நடந்து போகிறேன்!' பதில் கூறிக் கொண்டே, அவள் நடக்க முற்பட்டாள்.

'ஐஸ்கிறீம் சாப்பிடுவம்!' குமரன் ஒரே பிடியாக நின்றான்.

'என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம்!' அவள் அடியோடு மறுத்தாள்.

'கொஞ்சநேரம் கதைத்துக்கொண்டு இருக்கலாம், 'பார்க்' வரைக்கும் போட்டு வருவம்!'

குமரனும் பல யுத்திகளைக் கையாண்டு, துவாரகாவைச் சிற்றுந்தில் ஏற்றப் பிராயத்தனப்பட்டான்.

பழைய துவாரகா என்றால், குமரன் அழைத்ததும் எந்த மறுப்பும் இல்லாமல், அவனுடன் சென்றிருப்பாள். அப்போ குழந்தைத்தனம் கொண்ட ஜேர்மனியப்பெண்ணுக்குரிய பழக்கங்கள் மட்டுந்தான் அவளுக்குத் தெரிந்திருந்தது.

தற்போது துவாரகாவுக்குக் கொஞ்சங்கொஞ்சமாகத் தமிழ்ப் பண்பாடுகள் மனதில் இடங்கொள்ள, குழந்தைத்தனமும் விளையாட்டுக்குணங்களும் மறைந்தன. தன்னை வழி நடத்தும் அறிவு அவளுக்கு விரைவாகவே வளர்ந்து, அவளை நேர்வழியில் நெறிப்படுத்தியது.

'பத்தாயிரம் ஈரோ ஒன்றும் நீ தர வேண்டாம், வா!'

'வீட்டிலே அம்மா தேடுவா... என்னைப் போகவிடு!'

குமரன் அவள் கைகளைப் பிடித்து வலிந்தழைத்தான். அவள் விடுவித்துக்கொள்ள முனைய, புத்தகப்பையைப் பறித்துக் கொண்டு போனான்.

புத்தகப்பையை சிற்றுந்துக்குள் வைத்துக்கொண்டே,
'வா....! வா!' என்று வீராப்பாக அவளை அழைக்க, அங்கே எதிர்பாராத வகையில் சதாவின் மிதியுந்து வந்து சுழன்று நின்றது.

'மாமா! இவன் என்ரை புத்;தகப்பையைப் பறித்துக்கொண்டு.... என்னை வரச்சொல்லிக் கஸ்டப்படுத்துகிறான்.'

குமரனுக்குப் பயம் தொட்டது, பிரச்சனை பெரிதாகமுதல் மாறி விடலாமென்;று சிற்றுந்திலேறி ஓட நினைத்தான். அவனைக் கழுத்திலே பிடித்து வெளியே இழுத்து நாலு சாத்து..... எப்படியென்று சொல்ல முடியாதளவுக்கு... பட பட...டக் டக்.... இப்படியொரு வேகம்... கண்மூடி விழிக்க முதல் சிற்றுந்தின் திறப்பும் கை மாறி, அதற்குள்ளிருந்த புத்தகப்பையும் துவாரகா வின் கைக்கு வந்தது.

'நீ போ!' என்று துவாரகாவுக்குச் சொல்ல, அவள் கண்களைத் துடைத்தபடி, வீட்டை நோக்கி ஓடினாள்.

'உனக்கென்ன வேணும்?' சதா பற்களை நரும்பியபடி கேட்டான்.

'திறப்பைத் தாங்கோ, நான் போறன்!'

'அந்தப் பிள்ளையிட்டை பத்தாயிரம் ஈரோ கேட்டு மிரட்டுறியாமே! நான் தரட்டா?'

'வேண்டாம், நான் போறன்... திறப்பு...!' குமரன் தடுமாறினான்.

'பள்ளிக்கூடத்தாலை வந்த பிள்ளையை மறித்து, சேட்டை விட்டதுக்குப் பொலிஸிலை என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமோ?' சதாவுக்கு இரத்தம் கொதித்தது. அவனுடைய ஒரு கை குமரனின் கழுத்தைச் சுற்றி இன்னமும் பிடித்திருந்தது.

'நான் ஒன்றுமே செய்யேல்லை, அவள்தான் கூட வர இருந்தவள், உங்களைக் கண்டவுடன் கதையை மாற்றிப் போட்டாள்.' என்று பொய்யாய் உளற, சதாவுக்கு வந்த கோபத்துக்குக் குமரனின் நிலை தலைகீழாகியிருக்கும். அவன் நல்லகாலம் ஒரு ஜேர்மன்காரன் விரைந்து வந்து, சதாவைத் தடுத்து, சமாதானப்படுத்தினான்.

குமரனின் சேட்டைத்தனத்தைத் தூர நின்று பார்த்ததால் அவனைக் காவற்துறையினரிடம் கொடுப்பதற்காகத் தகவல் சொல்லக் கைத்தொலைபேசியை எடுத்தான்.

குமரன் காலில் விழாத குறையாக, 'அண்;ணை! பொலிசுக்கு வேண்டாம்!' என்று கெஞ்சினான்.

'நீயும் ஒரு தமிழன்... நானும் ஒரு தமிழன், இதனாலை மன்னித்து விடுகிறன்! இனிமேல் இப்பிடி ஏதும் என்று அறிந்தனோ.... நீ தொலைஞ்சாய்... ஓடு!' என்று திறப்பை முகத்தில் விட்டெறிந்தான்.

தொலைபேசி எடுக்க நின்ற ஜேர்மன்காரரிடம், 'தெரிந்தவர்கள், ஏதோ தங்களுக்குள் சின்னப் பிரச்சனை, அதுதான் இழுபறிப் பட்டவர்கள்!' என்று சமாளித்து, அவரைப் போகவிட்டான்.

குமரனும் சிற்றுந்தை எடுத்துக்கொண்டு, 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்று பறந்தான்.

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்;;
கருமமே கட்டளைக் கல்' என்ற குறள் சதாவின் நினைவுக்கு வந்தது.

ஒருவர் செய்யும் செயல்கள்தான், அவர் சிறுமையையோ பெருமையையோ நிர்ணயிக்கிறது என்பதில் எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது என்பதை வியந்தவாறு, மிதியுந்தில் ஏறி விரைந்தான்.


7. (3) „வாழ நினைத்தால் வாழலாம்“

அது ஒரு சனிக்கிழமை, மாலை நேரம்......

நவம் வீட்டுக்கு நீதனும் தாயும் தகப்பனும் திடீரென்று வந்து நின்றனர்.

பிரச்சனை பெருகப்போகிறது என்று சுகந்தி பயந்தாள்.

தொலைபேசியில் போட்ட சண்டை போதாதென்று நேரில் வந்து நிற்கிறார்கள்.

நவமும் அமைதியானவன். சண்டை, சச்சரவுக்குப் போகாதவன், என்றாலும் வீடு தேடி வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது....! பொலிஸ், வக்கீல்... வழக்கு என்று அவன் தயாரில்லை. வளர்ந்த பிள்ளைகள் வீட்டிலே இருக்கும்போது, மானம் மரியாதையுடன் இருப்பதுதானே கௌரவம்.... அடுத்தவர் மதிப்பார்... சுகந்தி பயக்கலக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.

வீட்டுமணி ஒலித்த சத்தத்துக்கு நவமும் வந்துவிட்டான்.
'டேய்! முருகேசு வா...! வா...!' என்று நீதனின் தந்தையைச் சிரிப்பொலியோடு வரவேற்று, மற்ற இருவரையும் கூடவே வரவேற்றான்.

'மன்னிச்சுக்கொள்ளும் சுகந்தி....... நான் தெரியாமல் உம்மோடு கனக்கக் கதைச்சுப்போட்டன்...' என்று நீதனின் தாய் லாலா வந்த காரணத்தைக் கூறிக்கொண்டே உள்ளே வந்தாள்.

'வாங்கோ இருங்கோ!' என்று நவமும் மனைவியும் அவர்களை உபசரித்தார்கள்.

'நான் இவளுக்குச் சொன்னனான், வேண்டாம் தேவையில்லாமல் ஒருத்தர் மீது பழி சுமத்தாதை! சும்மா இரு! என்று பேசிப் போட்டு, கடைக்குப் போட்டன்.

பிறகு சொல்லுறாள், அவையை இரண்டு வார்த்தைகள் காரமாகக் கேட்டாற்தான் மனம் ஆறும் என்று ரெலிபோன் எடுத்தனான். கதைக்கக் கதைக்க என்னை அறியாமலே கொஞ்சம் சூடாகக் கதைச்சுப் போட்டன் என்று சொன்னதும் ஓங்கி ஒன்று கன்னத்திலே போட்டிட்டன், கேளுங்கோ, இல்லையோ என்று....!' முருகேசு விளக்கம் கொடுத்தான்.

'கேட்டதும் எனக்குக் கவலையாகத்தான் இருந்தது. உனக்குத் தெரியும்தானே தேவையில்லாமல் நான் சண்டை சச்சரவுக்குப் போகமாட்டேன்... விசாரணை.... அது, இது... ஒன்றும் எனக்குப் பிடிக்காது, அதுதான் சுகந்தி நடந்தைச் சொன்னதும்... விடு! விசயத்தைப் பெருப்பிக்காதே என்று அதை விட்டிட்டன்.'

'நீ பொறுமைசாலி நவம், இன்றைக்கும் அப்பிடித்தான்.... பிள்ளையளை ஒழுங்காக வளர்த்துப் படிப்பித்துக்கொண்டு, மதிப்பாக இருக்கிறாய், எங்களுக்குப் பிள்ளைகளால் ஒரே கவலை.......!'

'என்ன செய்கிறது? இந்த நாட்டுக்கலாச்சாரங்கள் அப்பிடி, வாழுகிற பிள்ளை வாழும், கெடுகிற பிள்ளை கெடும். எல்லா வசதியும் கிடக்கு, என்னவும் செய்யலாம். கோழி குஞ்சுகளை வளர்க்கிறமாதிரி, எங்கடை அன்பு அணைப்புக்குள் பிள்ளைகளை வைத்திருந்தால், ஓரளவு ஒழுங்காக சொல்வழி கேட்டு நடப்பினம் என்றது என் நம்பிக்கை.

பணத்திலே மனதை முழுக்கச் செலுத்தினால், பிள்ளைகளோடு கதைச்சுப்பேச, அதுகளின்ரை பிரச்சனைகளை அறிய, ஆலோசனைகளைச் சொல்ல நேரம் இருக்காது..... எரிஞ்சுதான் விழச்சொல்லும்... பிள்ளையளும் தங்களுக்கு எது சரியென்று தெரியுதோ அந்தப் பாதையில் போகத் தொடங்கிவிடுவினம்...... கண்ணுக்குள் எண்ணையை விட்டதுபோல, விழிப்பாக இருக்க வேணும்.'

நவம் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டான், ஏனென்றால் பிள்ளைகள் அவனுக்கு உயிர். எந்தப்பிள்ளையென்றாலும் திசைமாறிச் சென்று, வாழ்க்கையை அழிப்பதையோ அந்நிய கலாச்சாரத்தில் வீழ்ந்து, தமிழ்க்கலாச்சாரத்தைக் குழப்பிக் கலக்கிக் கேவலப்படுவதையோ அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதனால் அப்பப்போ சந்தர்ப்பம் வரும் போது, தன் உறுதியான மனக்கருத்தைப் பலருக்கும் ஆலோசனையாகக் கூறுவான்.

அப்போ நீதன் குறுக்கிட்டான்.

'மாமா! என்னாலைதானே எல்லாம், சதாமாமாவின்ரை ரெலிபோன் நம்பர் என்ரை பொக்கற்றுக்குள்ளை இருந்தது. இது பற்றி அம்மாவிடம் சொல்லியிருக்க வேணும். நான் சொல்லேல்லை, அம்மாவுக்கு என்னாலை பெரிய கவலை, சதா மாமாவும் குடிக்கிறதாலை அவருடைய நம்பர்; என்னுடைய பொக்கற்றுக்குள்ளை இருந்ததும் தவறாக நினைத்திட்டா.' என்ற நீதன், சதாவைச் சந்தித்ததுபற்றியும் அவன் தன்னைத் திருத்தி வழிப்படுத்தக் கூறிய ஆலோசனைகள் பற்றியும் கூறினான்.

சதாவின் பெயர் அடிபட்டதும் பூங்கோதை சற்று உன்னிப்பாகவே கவனித்தாள்.

தான் அரைகுறையாக விடவிருந்த கட்டிடக்கலைத் தொழில்நுட்பப் படிப்பை சதாமாமாவைச் சந்தித்ததால்.... அவர் கூறிய நம்பிக்கை வார்த்தைகளால்.... இன்று ஒழங்கான பாதைக்கு வந்து தொடர்ந்து படிக்கிறேன். சதாமாமா எனக்கு அறிவுக்கண் திறந்த கடவுள் என்று கூறினான்.

'தன்னாலை பாலம் கட்ட முடியுமாம்.... நீண்டவீதிப்பாலத்தைப் பார்த்துச் சொல்லுறான்.... இவன் சும்மா உளறுறான் என்று பேசாமல் இருந்திட்டன். பிறகு பார்த்தால் படிக்கிற மேசை, அறை எங்கும் பாலங்களின்ரை வரைபடங்களும் புத்தகங்களும்... எந்த நேரமும் ஏதோ படிச்சுக்கொண்டே இருக்கிறான். இதுவும் கூடாதுதானே!' என்று நீதனின் தாய் சொல்ல,
'அம்மாவுக்கு விசர்... ஒன்றும் செய்ய விடமாட்டா!' குறைப்பட்டான் நீதன்.

அப்போ நவம் கூறினான்,
'இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கு அறிவு அதிகம், நிறையத் திறமைகள் இருக்கு. இவர்கள் வானத்துக்கே பாலங்கட்டும் வல்லமை படைத்தவர்கள்.... விடுங்கோ படிக்கட்டும்விழுந்தவன் எழுந்தால் அவனுக்கு வேகம்கூட.... பறந்து செல்லத் துடிப்பான். அடக்க வேண்டாம்!' என்று அறிவுரை பகர்ந்தான்.

'பிள்ளை படிக்கிறது சந்தோசம், ஆனால் பாலங்கட்டுவன் என்று உளறிக்கொண்டு திரிஞ்சால் பைத்தியம் என்றெல்லே சொல்லப் போகினம்! நேற்றுவரை அவன் நின்ற நிலை, பழகிய சகவாசங்கள் அப்பிடித்தானே! கேட்டாற் சொல்லுறான், எல்லாம் நம்பிக்கை அம்மா, என்னால் முடியும் செய்து காட்டுறன்! என்று..'

'எடடா சபதம்!' சதாமாமா சொன்னார்.

'எடுத்தேன் சபதம்! கட்டுவேன் பாலம்! ஒன்றல்ல... நூறு! இங்கேயல்ல, தமிழ்மண்ணில்! நல்ல வீதிகள் போட்டு, பலமான பாலங்கள் கட்டி, மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவேன்... இது சபதம்!'

அவன் வார்த்தைகளிலிருந்த உணர்ச்சிவேகம், கேட்டவர் உடலில் மயிர்க்கூச்சை ஏற்படுத்தியது.

'இப்படி ஒன்று, நூறு, ஆயிரம் என்று இளைஞர்கள் சீறி எழுந்தால், இழந்து, அழிந்து, பின்தங்கிப்போய் நிற்கும் எங்கள் தமிழ்மண்ணைக் கட்டியெழுப்ப அந்நியரை எதிர்பார்க்க வேண்டியதில்லையே...!' கண்களில் நீர்படர, உணர்ச்சியுடன் நவம் கூறினான்.

நேரம் போனதே தெரியவில்லை, கதைத்துக் கொண்டிருந்தார்கள். இரவுச்சாப்பாடும் சாப்பிட்ட பின் விடைபெற்றுச் சென்றார்கள்.

அவர்கள் வந்ததால் பூங்கோதையின் மனதுக்குள்ளிருந்த பல சந்தேகங்களுக்குத் தீர்வு கிடைத்தது. சதா வீட்டுக்கு அவள் தொலைபேசி எடுத்தபோது, அங்கிருந்த ஜேர்மன்பெண் நீதனின் சிநேகிதி என்பது தெரிய வந்தது. அநாவசியமாக அவர்மீது சந்தேகப்பட்டுவிட்டேனே என்று கவலைப்பட்டாள். சதாவின் உயர்ந்த குணங்கள் அவள் நெஞ்சிற் தெரிந்தன.

'தானே இப்பதான் திருந்துவதற்கு முயற்சி செய்கிறார்.... அதற்கள் இன்னொருவரைத் திருத்தி, சபதமும் எடுக்க வைத்துவிட்டார்... ஆள் பொல்லாத சூரனாக இருக்கிறார்.' என்று பெருமிதப்பட்டு மகிழ்ந்தாள்.








Keine Kommentare: