Donnerstag, 31. Mai 2012

பகுதி 6




6. வாழ நினைத்தால் வாழலாம்

'குரு வீடு.


6. (1) வாழ நினைத்தால் வாழலாம்

வங்கியிற் கடன் தருவது பற்றிய கடிதம் வருவதற்குச் சில நாட்கள் காத்திருக்க  வேண்டியிருந்தது. தொலைபேசி மூலம் வங்கிக்கு வரும்படி அழைப்பு வந்தது.


சதா நம்பிக்கையுடன் சென்றான். 'கடன் கொடுத்தால் வீடு வாங்குவது, கடையாக இருக்கும் பகுதியைச் சைக்கிள்கடை போடுவது, இதன்பின் கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட திகதியிலேயே நடக்க வேண்டும், இல்லாவிட்டால் கொடுத்த என் வாக்குப் பிழைத்துப் போயிடும்... பூங்கோதை ஏற்கனவே பல ஏமாற்றங்களினால் மனம் நொந்து போயிருக்கிறாள். இனி அவள் வருத்தப்படாமல் எல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும்' என்று சதா நினைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்தான்.


'எல்லாம் ஓகே... ஆனால் ஒரு சின்னத் தடங்கல்!' என்று மேலிடத்திலிருந்து கிடைக்கப் பெற்ற படிவங்களை வங்கி உத்தியோகத்தர் காட்டினார்.


கமலனுக்கு கடன் எடுக்க சதா கையொப்பமிட்டிருக்கிறான். ஆனால் அவன் இடையிற் கட்டாமல் விட்டுவிட்டான். அவனுக்கு வியாபாரத்தில் வீழ்ச்சி வந்ததால் கடனுக்கு மேற்கடன். வங்கி பல கடிதங்கள் போட்டிருந்தது. ஆனால் அது கட்டி முடிக்கப்படவில்லை. அந்தக்கடன் முழுதாகக் கட்டி முடிந்தபின் மட்டுமே புதியகடன் வழங்கமுடியும் என்று வங்கி அலுவலகர் அறிவித்திருந்தார்.


சதாவின் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடுவதுபோல, அவன் மனக்கண் முன் தெரிந்தது.


'கமலனின் பழைய கடனை எப்படிக் கட்டுவது? கமலன் குடும்பம் இன்னும் கஸ்டத்தில்தான் இருக்கிறது. ஆனாலும் அவன் கடனைக் கட்ட வேண்டுமென்று நினைத்திருந்தால், ஏதோ விதத்தில் கொஞ்சங்கொஞ்சமாகக் கட்டி முடித்திருக்கலாம்.'


கமலன் வீட்டுக்குப் போய் இதுபற்றிக் கதைத்தான் சதா. அவர்கள் கஸ்டத்தைக் கண்ணாற் கண்டதும் அவன் மனம் இளகியது. வற்புறுத்த முடியவில்லை.... மாதம் மாதம் கொஞ்சம் கட்டலாம் என்ற உடன்படிக்கைக்கு மட்டும்தான் வர முடிந்தது.


பணப்பையைத் திறந்து பிள்ளைகள் இருவருக்கும் பணம் கொடுத்து, ஏதாவது வாங்கும்படி கூறிவிட்டு வெளியேறினான்.


'என்ன செய்யலாம்...?' சதா இப்படித் தன் வாழ்நாளில் ஒருநாட்கூட மூளைக்கு வேலை கொடுத்தது கிடையாது.


நவத்துக்குத் தெரிய வந்தால், அவன் நிச்சயம் உதவி செய்வான். அவர்களுக்குத்  தெரியக்கூடாது.... அவர்களுக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குங்கூடக் கடமைப்பட அவன் விரும்பவில்லை.


பரீஸில் வசிக்கும் தம்பி கணேசனின் நினைவு வந்தது. அவன் பெரிய முதலாளி....நான்கு வீடுகள், கடைகள், வாகனங்கள்.... என்று அவன் பெரும் பணக்காரனாக இருக்கிறான்.


கணேசன் சதாவை பரீஸில் வந்து தன்னுடன் இருக்கும்படி.... திருமணம் செய்யும்படி..... ஜேர்மனியில் கடை வாங்கித் தருவதாக அதை நடாத்தும்படி.... எத்தனையோ ஆலோசனைகள் கூறி, உதவிக்கரம் நீட்டியபோதும் அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.


'போடா! என்னை நிம்மதியாக இருக்கவிடடா!' என்று எடுத்தெறிந்து சொல்லி கொண்டான். இதனால் சில வருடங்களாகத் தொடர்பேயில்லை.


தம்பி விலாசமாக இருக்கிறானென்பதை சதா தினமும் வானொலி, பத்திரிகை மூலம் அறிந்து கொண்டேயிருந்தான்.
அண்ணன் எப்படியிருக்கிறான் என்பதை தம்பி ஆட்களை வைத்துத் தெரிந்து கொண்டான். 
சதாவுக்கு பூங்கோதை நிச்சயிக்கப்பட்டது அறிந்து, அண்ணனுக்குத் தெரியாமல் நவம் வீட்டுக்கு வந்து, ஐம்பதினாயிரம் ஈரோவை, வைத்துக் கொள்ளுங்கோ! அண்ணனுக்கும் அண்ணிக்கும் தேவையானதை வாங்கிக் கொடுங்கோ! என்று கூறிவிட்டுப் போயிருக்கிறான். சதாவுக்குத் தெரியாது..... பூங்கோதைக்குக் கூடச் சொல்லவில்லை.   


6. (2) வாழ நினைத்தால் வாழலாம்


சதா நல்ல நித்திரை... நள்ளிரவு... கதவு மணி பலதடவை அடிக்கஎழுந்து அரைத்தூக்கத்தில் கதவைத் திறந்தான்.

கணேசன் நின்றான்.

'மனிசியும் பிள்ளைகளும் வானுக்குள் இருக்கினம்... நீ என்ன சொல்லுறியோ தெரியாது....' என்று தயங்கினான் அவன்.

'மடையா.... போய்க் கூட்டிக்கொண்டு வாடா!'

அவர்கள் எல்லோரும் வந்தார்கள்... பிள்ளைகள் இருவர்நித்திரையாக இருந்தவர்கள் அலுப்புடன் வந்துஅங்கிருந்த பழைய சோபாவில் இருந்தார்கள்.

சதாவின் கண்களிலிருந்து அவனையறியாமலே கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.... அவன் துடைக்கவில்லை.

கணேசனின் மனைவி சிவகாமி மிக அருமையான குணம் கொண்டவள்அமைதியும் எளிமையும் உடையவள்பிள்ளைகளைக் கட்டுப்பாடாயும் ஒழுக்கமாயும் வளர்த்து வருபவள்பணம் இருக்கென்று கர்வமோமிடுக்கோ இன்றி அன்பானவளாய் இருந்தாள்.

சதாவின் கண்களில் நீர் வழிவதைக் கண்டுஅவளுக்கும் அழுகை பொங்கியது.

'அழாதேங்கோ அத்தான்உங்களைப் பார்க்க எங்களுக்கும் அழுகை வருகிறது....' என்று சதாவின் அழுகையை நிறுத்த முயன்றாள்.

கணேசனுக்கு அண்ணன் கண் கலங்குவது பெரும் வேதனையைக் கொடுத்தது.

'இப்ப என்ன நடந்தது... ஏன் அழுகிறீங்கள்வரேல்லைபோகேல்லை என்றால் பாசம் இல்லையென்றில்லைஉங்களுக்குப் பிடிக்காததாலை கொஞ்சம் தள்ளி நின்றோம்... கோபம் இல்லை அண்ணை....!' என்று கணேசன் தமையனைக் கட்டிப்பிடித்தான்.

அவனை நெஞ்சோடு அணைத்த சதா,
'டேய்நான் அழேல்லையடா.... இது ஆனந்தக்கண்ணீர்...!

என்ரை வாழ்க்கையிலேயே இது ஒரு உச்சக்கட்டமான சோதனைக்காலமடா கணேஸ்... புதுவாழ்க்கையைத் தொடங்கலாமென்று எண்ணி வெளிக்கிட்டால் எல்லாக் கதவும் மூடிக்கிடக்கே....!'

'அண்ணைநான் இருக்கிறன் அண்ணை....! கல்யாணத்திலை ஏதும் தடங்கலோ.... எதெண்டாலும் சொல்லுங்கோ!'

'வா... இருஅதைப்பற்றி ஆறுதலாகக் கதைப்பம்தேத்தண்ணி போடுறன்!'

'தேத்தண்ணி போதாதுஎங்களுக்குப் பேய்ப்பசிகொத்துரொட்டி வாங்கிக்கொண்டு வந்தனாங்கள்...!'

'நான் சூடாக்கிறன்!' என்று சிவகாமி முந்தினாள்தேநீரும் தயாரித்தாள்.

பிள்ளைகள் சாப்பாடு வேண்டாம் என்றுவிட்டார்கள்வரும்போதே வழியிற் சாப்பிட்டது பசி எடுக்கவில்லைஅவர்களைப் படுக்கவிட்டுதாங்கள் சாப்பிட்டார்கள்.

கணேசனும் மனைவியும் சதாவிடம் பெரும் முயற்சிப்பட்டுகேள் கேளென்று கேட்டபின்அவன் தன் நெருக்கடியைக் கூறினான்.

'நீ எவ்வளவு பெரிய துணிச்சற்காரன்... வெளிநாட்டுக்கு வந்தாய்அந்த வேலைஇந்த வேலையென்று செய்து கடை வாங்கினாய்நம்பிக்கை... உன்னிலை உனக்கு நம்பிக்கை இருந்ததுவெல்லலாம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது.
நீ...நீ ஒரு கெட்டிக்காரனடா!'

'அண்ணைநீங்கள் என்னைக் கூப்பிட்டதாலைதானே இங்கை வர முடிந்தது... நீங்கள் ஊரிலை ஒரு பெரிய மெக்கானிக்.. எவ்வளவு கெட்டிக்காரன்!'

'என்னடா தம்பி நீ... அண்ணையை விட்டுக்கொடுக்கக்கூடாது என்று கதைக்கிறாய்ஆனால் என்னட்டை என்னடா இருக்குபார்இந்த வீடுகூட ஒரு மாதத்துக்குள்ளை காலி செய்ய வேணும்... வெளியிலை நிற்கிற சைக்கிள்..... அதுதான் இப்ப இருக்கிற என்ரை சொத்து... வேறையொண்டுமில்லை.'

'அத்தான்!' சிவகாமி எழுந்துசதாவின் பக்கத்தில் வந்திருந்து,
'நாங்கள் இல்லையோ...? இவரும் நானும் உங்களுக்காக உயிரையே கொடுப்பம்... உங்களுக்குத் தெரியுமே.... அண்ணைஅண்ணை என்று வார்த்தைக்கு வார்த்தை ஒவ்வொருநாளும் சொல்லுவார்... எங்களிட்டை இருக்கிற சொத்து உங்களுக்குத் தானே!' என்று அழத்தொடங்கிவிட்டாள்.

'அழாதைஎன்னாலையே தாங்க முடியாது...!' என்று சதாவின் மற்றப்பக்கத்தில் கணேசனும் வந்து உட்கார்ந்து,
'அண்ணைஎன்ன செய்ய வேணுமென்று சொல்லுங்கோ!' என்று அவன் நோக்கத்தை அறியத் துடித்தான்.

'எனக்கு இந்தக் கமலனின் கடன்.... அதுதான் இப்ப தடங்கலாக் கிடக்குஅவன் மாதாமாதம் நூறு ஈரோ கட்டுவதாகச் சொல்லுறான்;... ஆனால் வங்கிக்காரன் அந்தக் கடன் இருக்கும் போது புதுக்கடன் தரமாட்டன் என்கிறான்இதுக்கு ஒரு வழி சொல்லுவேறையொன்றும் நான் கேட்கேல்லை.'

'இதுக்குப் போய் வங்கியிலை கடன் எடுத்துக்கொண்டு.... அண்ணைஅவர் தன்ரை கடனை வங்கிக்குக்கட்டி முடிக்கட்டும்நான் நீங்கள் பார்த்த வீட்டை உங்களுக்கு வாங்கித் தாறன்!'

'அத்தான்ஓமெண்டு சொல்லுங்கோஇவர் பரீஸிலை உங்களுக்கு வீடு வாங்கவேணுமென்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்உங்களுக்கு இங்கை வேணுமென்றதாலை வாங்கித் தரலாம்தானேமறுக்காதேங்கோ...!' சிவகாமியும் ஒரே பிடியாக நின்றாள்.

ஆனால்சதா அதற்கு உடன்படவில்லைகமலனின் இருபதினாயிரம் ஈரோ கடனை வங்கியிற் கட்டிஅந்தக் கடனைத் தீர்த்தால் புதுக்கடன் தன்னாலை எடுக்கமுடியும் என்றான்.

கணேசன் சிரித்தான், 'இருபதினாயிரம் ஈரோ.... அண்ணை நீ திருந்தவே மாட்டியோதம்பி நான் உனக்கு வீடு வாங்கித் தந்தால் நீ வாங்க மாட்டியா?'

'வாங்குவனடா.... தாராளமாக வாங்குவன்ஆனால் இப்ப வேண்டாம்;, ஒருவன்  தன்னாலை முடிந்தமட்டும் முயற்சி செய்ய வேண்டும்சோம்பிக் கிடந்துகொண்டு அடுத்தவனிடமிருந்து உதவியை எதிர்பார்த்தால் அது துரோகம்!'

'அத்தான் தத்துவமெல்லாம் கதைக்கிறார்!'

'அதில்லை சிவகாமிஇவ்வளவு நாளும் தடிப்பயல் நான் கோமாவிலை கிடந்தமாதிரித்தானே கிடந்தனான்என்னால்யாருக்குப் பிரயோசனம் இருந்ததுஇல்லையே....! ஒரு மிருகம் மாதிரி.... உலகத்திலை என்ன நடக்கிறதென்று தெரியாமல் இருந்தனான்இவள் பூங்கோதையைச் சந்தித்தேன்.... பாவம் கண் சரியாகத் தெரியாது.... பிள்ளையோடை ஏமாற்றப்பட்டுப் போய் நிற்கிறாள்அவளுக்கும் அவள் பிள்ளைக்கும் நான் துணையாக இருப்பதென்று முடிவெடுத்திட்டன்.

நீ பெரிய பெரிய உதவிகளெல்லாம் எங்கள் இனத்துக்குச் செய்கிறாய்நான் இதைச் செய்கிறன்அவளைப் பாவம் என்று சொல்ல முடியாதுஅவள் ஒரு சக்திப்பிளம்புஅவளிடம் நிறைய விடயங்கள் இருக்குஅவளுக்கு ஒரு வழிகாட்டி... ஒரு துணை... பக்கத்திலிருந்தால்அவளது இலட்சியங்களை அடைவாள்.'

'அண்ணைநீ வித்தியாசமானவன்உன்னை நான் குழப்ப வில்லைநீ கேட்கிறதைத் தாறன்என்ன வேண்டுமானாலும் தர நான் தயார் என்றதை மறந்துவிடாதே!'

'இப்பிடி ஒரு தம்பி எனக்கு இருக்கிறான் என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோசமாக இருக்குவார்த்தைகளாலை அதைச் சொல்லி விபரிக்க என்னாலை முடியேல்லைஎன்று சதா தன் 
உணர்வுக் கொந்தளிப்பை வெளியிட்டான்.


6. 3 „வாழ நினைத்தால் வாழலாம்“

'அண்ணை என்ரை திருமணத்தைத் தள்ளிப் போடுங்கோ!'


பூங்கோதையின் திடீர் மாற்றம் நவத்துக்குக் குழப்பத்தைக் கொடுத்தது.


'என்ன விளையாடுறியே!'


'இல்லை அண்ணை, எனக்குப் பிடிக்கேல்லை. அவர் வீட்டுக்கு ஜேர்மன்காரியள் எல்லாம் வந்து போகினம், எனக்கு உது சரிவராது!'


'உன்னை நான் கட்டாயப்படுத்தேல்லை.. உன்ரை விருப்பம், ஆனால் குடிப்பழக்கத்தை விட, வேறை கூடாத பழக்கம் சதாவிடம் இருக்குமென்று நான் நம்பேல்லை.'


'வேண்டாமண்ணை, ஒருக்கா ஏமாந்தது போதும்! யூகன்ட்அம்ற் அதிகாரிகள் பிள்ளையைக் கொண்டு போகப்போற பிரச்சனைக்கு வேறேதும் வழியிருந்தால் பாருங்கோ!'


'அது நான் பார்க்கிறன், ஆனால் இதுபற்றி நீ வடிவாக யோசிச்சுச் சொல்லு! நாங்கள் உன்னுடைய நன்மைக்குத்தான் பார்த்தனாங்கள்... உனக்கு விருப்பமில்லாட்டி விடுவம்!'


'விடுவம் அண்ணை!'


'சரி, ஆனால் கணேசன்....?' என்று தலையைத் தடவினான்; நவம்.


பூங்கோதைக்குக் கணேசன் பற்றி ஒன்றும் தெரியாது,


சதாவுக்குப் பிடிக்காதென்று நினைத்து, சொல்ல வேண்டாம் என்றதால் நவம் அவளுக்குச்  இதுபற்றிச் சொல்லவில்லை.


'யாரது கணேசன்....?'


'சதாவுக்குத் தெரியக்கூடாது!'


'இரகசியமோ?'


'ம்!'


'யாரென்று சொல்லுங்கோவன்!'


'சதாவின்ரை தம்பி, பரீஸிலை குடும்பமாக இருக்கிறார், பெரிய முதலாளி.'


'இங்கை வந்திட்டுப் போனவரோ.....?'


'இரகசியமாக வந்திட்டுப் போனவர், சதாவுக்குத் தேவைப்படும் போது கொடுக்கச்சொல்லி ஐம்பதினாயிரம் ஈரோ தந்திட்டுப் போனவர்! நல்ல தங்கமான பெடியன், மனைவியும் அப்பிடித் தான்;, மொத்தத்திலை நல்ல குடும்பம். சதாதான் இங்கை இப்பிடி...!'


தங்கையின் மனதில் நம்பிக்கையூட்டும் விதத்தில் தனக்குத் தெரிந்த உண்மையைத் தெரிவித்தான்.


அப்போ தமிழினி,

'யாரப்பா நல்ல குடும்பம்....?' என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.


நவம் மகளுக்குச் சுருக்கமாகத் தெரிவித்தான்.


'கல்யாணம் வேண்டாமா? என்ன மாமி சொல்லுறீங்கள்...?'


தமிழினி திகைப்பூண்டில் மிதித்தவள் போலப் பிரமை பிடித்துப் போய் நின்றாள்.


'எனக்கு அவரைப் பிடிக்கேல்லை!'


'ஏன் பிடிக்கேல்லை...? மாமா நல்லவர்!'


'அப்ப நீ கட்டிக்கொள்! எனக்கு வேண்டாம்.'


'ஓகே, நான் கட்டிறன், என்னப்பா சொல்லுறியள்?'


'உனக்கென்ன பைத்தியமா?' பூங்கோதை கோபத்துடன் கேட்டாள்.


'உங்களுக்குத்தான் பைத்தியம், மாமாவை ஏன் வேண்டாம் என்கிறீங்கள்? அவர் உங்களையே உயிரா நினைச்சுக் கொண்டிருக்கிறார்!'


'நடிப்பு வெறும் நடிப்பு!


'நடிப்புமில்லை, ஒன்றுமில்லை! மாமா உண்மையானவர், அவரோடை விளையாடாதேங்கோ!'


நவம் பேசாமல் நின்றான், மகள் கதைப்பதில் உண்மை இருந்ததால் அவன் குறுக்கிடவில்லை.


'அவரிடம் கூடாத பழக்கங்கள் நிறைய இருக்கு பூங்கோதை சொன்னாள்.


'தப்பு மாமி, அவரிடம் எந்தக்கூடாத பழக்கமும் இல்லை  மாமி, நான் கரன்றி!'


'நீ கரன்றி பண்ணுறியோ, அவரைப்பற்றி உனக்கென்னடி தெரியும்?'


'மாமி நீங்கள் படிச்சனீங்கள், முற்போக்கானனீங்கள், விபரமானனீங்கள்... வாக்குமாறக்கூடாது... சொல் ஒன்று, செயல் இன்னொன்றாக இருக்கக்கூடாது!'


'பிடிக்காட்டி விடலாந்தானேடி மருமகளே!'


'பிடிக்காட்டி எண்டா.... அப்ப அவரை என்ன பைத்தியமாக்கப் போறீங்களா? உங்களுக்காகத் தன்னை மாற்றி... புதுவாழ்வு வாழ, புதுத்திட்டங்களுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் மனிசனை, வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழியை உடைப்பதுபோல அழிக்கப் போறீங்களா...?'


அவள் வார்த்தைகள் பூங்கோதையின் மனதைத் தொட்டன.

நவம் தன் மகளின்  வார்த்தைகளைக்  கேட்டு  உசார்  பெற்றான். 
'மாமி,  சதா  வீட்டுக்கு  ரெலிபோன்  எடுத்திருக்கிறா,  அங்கை  ஒரு  ஜேர்மன்காரி  நின்றிருக்கிறா,  இதுதான்  பிரச்சனை! ' என்றான்  நவம்.


'மாமி... மாமி... என்ன மாமி நீங்கள்? நான்கூடத்தான் அவரோடை கதைக்கிறன், கண்ட இடங்களிற் சேர்ந்து கோப்பி குடிச்சிருக்கிறன், நடந்து போயிருக்கிறன்! கூடாதா...? பழகிய மனிதர்கள் சந்திக்கக்கூடாதா? இதுக்கெல்லாம் சந்தேகப்பட்டு... என்ன மாமி முடிவெடுக்கிறீங்கள்? 
உங்கடை கண் வருத்தத்தைக் குணப்படுத்த எங்கெல்லாம் டொக்டர்கள் தேடி விசாரித்துக் கொண்டிருக்கிறார்.... எவ்வளவு அலைந்து திரிகிறார்... உங்களுக்குத் தெரியுமா? நாலு சுவருக்குள் இருந்து கொண்டு கிணற்றுத் தவளை போலக் கற்பனை பண்ணி ஒரு மனிசனின் வாழ்க்கையோடை விளையாடுறீங்கள்! மாமி...மாமி....!' வெறுப்புப் படத் தலையை அங்குமிங்கும் ஆட்டினாள். 

பூங்கோதை தடுமாறிப் போனாள். எனக்காக, என் கண் வருத்தத்துக்காக டொக்டர்கள் தேடித் திரிகிறாரா? நாங்கள் அலைந்து திரிந்து இனிச்சரிவராது என்று விட்டதை, நம்பிக்கை இழந்து விட்டதை, இவர் சரிவரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறாரா?' நினைத்துப் பார்த்த அவள் நெஞ்சில் பூம்புனல் பொழிந்தது

குடும்பம் என்பது ஒரு கோவில், இதை சதா, நவம் வீட்டிற் கண்டான்.


ஜேர்மனியில் பல குடும்பங்களுடன் அவன் பழகியிருக்கிறான்.


'பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்' என்பது போல, இக்குடும்பங்களும் தாம் போனபோக்கில், வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தன. உழைப்பதும், உழைத்ததைச் செலவழிப்பதும் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பதைத் தவிர, வேறென்ன செய்வது? ஓய்வு நேரமே சிலருக்கு இல்லை. இருக்கிற ஓய்வுநேரங்களையும் திரைப்படங்களும் தொடர் நாடகங்களும் கொண்டாட்டங்களும் விழுங்கிவிடும்.


நவம் வீட்டில் அவன் காண்கின்ற காட்சியே தனியாகும். சிடுசிடுப்பு, கடுகடுப்பு,  அந்தரம் அவசரம் என்ற பதற்றமான, குழப்பமான நிலைக்கே இடமில்லாத சாந்தம் தவழும் இல்லம் அது.


கணவனும் மனைவியும் உரையாடும் விதம்;..... அன்பும் பண்பும் குழைந்து பாலுந்தேனும் கலந்தது போல இனிக்கும். இவர்களைப் பார்க்கும்போது இவர்களின் பெற்றோரின் பண்பு பளிச்சென்று புலப்படும். வளர்ந்தவிதமும் வாழ்ந்த இடத்தின் செழிப்பும் பிரிதிபலிக்கும்.


இந்தக் குடும்பத்தில் தானும் உறவு கொள்ளப் போகிறேன் என்று நினைக்கும்போது, நெஞ்சு ஆனந்தத்தில் ஆழ்ந்து திளைத்தது.


கோபம் என்பது ஏன் வருகிறது? சோம்பேறித்தனம் அதிகம் உள்ளவர்களுக்கு கோபம் 'சுர்' என்று வரும். இந்த வீட்டில் சோம்பேறிகள் யாரும் தெரிந்தோ, தெரியாமலோ அடியெடுத்து வைத்தாற்கூட 'வைன்' கொடுத்த பம்பரம்போலச் சுழலத் தொடங்கிவிடுவார்;கள்.


கணவன் புள்ளியிட்டால் மனைவி கோலமே போட்டுவிடுவாள். மனைவி நூலெடுத்தால், கணவன் சேலையாக்கிக் கொடுப்பான். யாருக்கு யார் துணை...! கணவனுக்கு மனைவி வழிகாட்டி, மனைவிக்குக் கணவன் வழிகாட்டி, இருவரும் கூடி பிள்ளை களுக்கு வழிகாட்ட வேண்டும்.... வழிகாட்டுகிறார்கள்.


சதா அவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுகூட உண்டு. இப்படி தானும் பூங்கோதையுடன் அன்பாக இருப்பானோ என்று சந்தேகம் அவனுக்கு எழுந்து தடுமாற வைக்கும்.


அன்றைய பொழுது அவனுக்கு மிகப் புதுமையாகவும் மனதுக்கு இதமாகவும் நகர்ந்து கொண்டிருந்தது. இடையிடையே சிறுவர்களின் பாட்டும் ஆட்டமும் குதூகலத்தை ஏற்படுத்த, பூங்கோதை தான் பாடிய விடுதலைப்பாடல்கள் சிலவற்றை எழுச்சி பொங்க இசைத்தாள்;..... கூதலோடியது.


கண்களை இழந்தாலும் அவளுக்குள் இருக்கும் விடுதலை வேட்கை வரிக்குவரி விமானத்தைத் தகர்த்தும் குண்டுகளைப் போல வீரஉணர்வு முழங்க ஒலித்தது.


என் கண்ணைக் கொடுத்தாவது இவளுக்குப் பார்வை ஒளி கொடுப்பேன் என்று அந்த இடத்தில் தனக்குள் சதா சபதம் எடுத்தான்.

Keine Kommentare: