Donnerstag, 31. Mai 2012

பகுதி 3








3. (1). வாழ நினைத்தால் வாழலாம்



'படிக்கிற வயதிலை ஏன் இப்பிடி...?' என்று நெஞ்சில் வேதனைக் குரல் எழ, அவர்களைக் கடந்தபோது,
'மாமா ஒரு பியர்!' குரல் வந்த திசையைப் பார்த்தான்.


பதினாறு, பதினேழு வயதிருக்கும் ஒரு தமிழ் வாலிபன் அவனை நோக்கி வந்தான்.

வேதனை.... வேதனை..... சொல்லமுடியாதளவு வேதனை சதாவின் நெஞ்சில் ஈட்டிபோற் குத்தியது.

'என்ன தம்பி.... நீ இங்கை.... இவங்களோடை நிற்கிறாய்! பள்ளிக்கூடம் போகேல்லையோ?'

'இண்டைக்குப் போகேல்லை....' ஒரு பியர்ப்போத்தலை சதாவிடம் நீட்டிக்கொண்டே பதில் சொன்னான் வாலிபன்.

'உமக்கு என்னைத் தெரியுமோ?'

'! அண்டைக்கு எங்கடை வீட்டுக்கு வந்து சற்றலைற் ரிவி செற் பண்ணிட்டு, பியர் குடிச்சிட்டுப் போனீங்கள்!'

சதா யோசித்தான்.... அவனுக்கு நினைவிலே வரவில்லை இப்படி எத்தனையோ வீடுகளுக்கு தொலைக்காட்சி, வீடியோ, சற்றலைட் என்று திருத்தப் போயிருக்கிறான். பணம் வாங்குவது இல்லை. ஒரு உதவியாகச் செய்வது அவன் வழக்கம்.

சதா பியரை வேண்டாமென்று மறுத்துவிட்டான். சற்று சிறிது தூரம் தள்ளி அவனை அழைத்துச் சென்றான்.

'உனக்கு என்ன பெயர்?'

'நீதன்'

'நல்ல பெயர், ஆனால் நீ செய்யிறது முழுக்க முழுக்க நல்லாயில்லை. உன்னை நீ அழிக்கிறாய்!'

'நான் மட்டுமா... நீங்களும்தான் குடிக்கிறீங்கள்.... இந்த உலகமே குடிக்குள் அடங்குது...' என்று ஜேர்மன்மொழியும் தமிழும் கலந்து கூறிக்கொண்டே, பியரைக் குடித்தான்.

'உன் அப்பா, அம்மா கண்டால் எவ்வளவு கவலைப்படுவினம்?'

'எனக்கு விருப்பமாகக் கிடக்குது, செய்யிறன்... இந்த நாட்டிலை எல்லாரும் சுதந்திரமாக இருக்கலாம், யாரும் கட்டுப்படுத்த இயலாது!'

'நீ யாருக்காகவும் திருந்த வேண்டாம், உனக்காகத் திருந்து! இவர்களை விட்டிட்டு வெளியே வா! எவ்வளவு நல்லவர்கள்... ஆற்றலுள்ளவர்கள்... புதிய பாதையில் சாதனை படைப்பவர்கள்... அவர்களைச் சந்திக்கலாம், அவர்களை நண்பர்களாக்கு! நீயும் உயர்வாய்! எங்கள் தமிழ்மண்ணும் உயரும்!'

'நீங்கள் சொல்லுறதிலை பாதி எனக்கு விளங்கேல்லை, எண்டாலும் சொல்லுறன் இவங்கள்தான் என்ரை பிறன்ட்ஸ், இதுதான் என்ரை வாழ்க்கை... என்னாலை திருந்த முடியாது.' என்று பதில் கூறிவிட்டு, அவன் மீண்டும் தன் நண்பர்களை நோக்கி நடந்தான்.

'நீதன்! நம்பிக்கை என்றால் என்னென்று தெரியுமா?'

'தெரியாது!'

'துணிவு என்றால்....?'

'தெரியாது!'

'இது இரணடுமே உன்னிடம் இல்லை... அதுதான், இப்பிடி நீ இருக்கிறாய்.'

'உங்களிட்டை இருக்கா....?'

இந்தக் கேள்வியை சதா எதிர்பார்க்கவில்லை, 'இருக்கிறது' என்ற அர்த்தம்படத் தலையாட்டினான் அவன்.

தன்னை உதாரணங்காட்டி நீதனுக்குப் பல புத்திமதிகளைக் கூறினான்.

ஜேர்மனியில் தமிழ்மாணவர்களின் பெரும் முன்னேற்றங்கள் பலவற்றை எடுத்து விளக்கினான்.

கல்வித்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் கலைத்துறையிலும் அவர்கள் ஆற்றிவரும் அளப்பெரும் சாதனைகளை எடுத்துரைத்தான்.

நீதனின் முகத்தில் ஒரு மாறுதல் தெரிந்தது. சாதாவின் வார்த்தைகள் அவன் சிந்தனைகளைக் கிளறி விட்டதற்கு அடையாளமாக, அவன் உதட்டில் இதுவரையிருந்த போலிச் சிரிப்பு அடங்கிப்போய்விட, என்ன செய்யலாமென்ற துடிப்பு அவனது விழிகளில்  மின்னியது.

'உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு!'

'அங்கை பார்.... அந்தப் பாலம் கட்டுவதை! இதை மாதிரிப் பாலங்கள் நீ எங்கடை நாட்டிலை கட்டுவிக்கலாம.;........!'

'நான்.....!' என்ற கேள்வியுடன் நீதன் சதாவைப் பார்த்தான்.

கொஞ்சம் முன்பென்றால் போலியாகச் சிரித்து, பகிடி என்று கேலி செய்திருப்பான்.

'உன்னால் முடியும்!' என்று சதா உறுதி தொனிக்க, நீதனுக்கு உற்சாகமூட்டினான்.

'நான் கட்டிட வேலைக்குப் படிக்கிறேன் என்று அண்டைக்கு உங்களுக்குச் சொன்னனான். ஒழுங்காகப் பள்ளிகூடம் போறதில்லை... இப்பிடித்தான் என்ரை பொழுது போகுது.'

'அப்ப என்ன செய்யப் போறாய்?'

'நாளைக்குத் தொடக்கம் பள்ளிக்கூடம் போகிறேன்.'

'நிச்சயமா.....?'

'நீதன்!' என்று அழைத்து, அவனைத் தன்னோடு அணைத்துத் தட்டிக் கொடுத்தான்.

'இப்பிடியொரு பெரிய பாலத்தைக் கட்டுவன் என்று எப்படி உறுதியாகச் சொல்லுறீங்கள்?'

'தூங்கிக் கொண்டிருக்கிறவனாலை கனவுதான் காணமுடியும். நீ விழித்துவிட்டாய்! புலிபோலச் சீறிப் பாய உன்னாலை முடியும்!'

'உங்கடை ரெலிபோன் நம்பரைத் தாங்கோ!'

சதா ஒரு கடதாசியில் தொலைபேசி எண்களை எழுதிக் கொடுத்துவிட்டு, மிதியுந்தை மிதித்தான். அவனுக்குள் இதுவரை தூங்கிக்கொண்டிருந்த உணர்வுகள் விழித்து எழுவதை அவனால் உணரமுடிந்தது.

3. (2).  வாழ நினைத்தால் வாழலாம்

'குரு வீடு.

'இங்கை என்ன நடக்குது? புத்தகங்களை எடுத்துப் படியுங்கோவன்!'

வெளியே சென்றுவிட்டு வந்த குரு, நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் தன் பிள்ளைகளைப் பார்த்து வயிற்றெரிச் சலுடன் கோபம் தொனிக்கக் கூறினான்.

'பார்க்கத் தெரியேல்லையோ? விளையாடிக்கொண்டிருக்கிறம்!' என்றான் இளையவனான மகேந்திரா. அவன் புல்லாங்குழலைக் கையில் வைத்து மேசையில் மேளந்தட்டிக் கொண்டிருந்தான்.

'உதின்ரை விலை என்ன தெரியுமோ? என்னுடைய ஒரு நாள் சம்பளமடா! ஊரிலை எண்டால் பூவரசம் இலையியை ஊதி செய்து பீ...பீ... என்று கொண்டு திரிஞ்சிருப்பாய்.... இப்படியொரு புல்லாங்குழலைக் கையாலை கூடத் தொட்டுப் பார்க்க உனக்குச் சந்தர்ப்பங் கிடைக்காது' என்றான் குரு.

மற்ற இருவருக்கும் மறைமுகமாகச் சுடும்படி இருந்தது குருவின் வார்த்தைகள். மூத்த மகன் உருத்திராவுடனோ, மகள் துவாரகாவுடனோ கதைக்க முடியாது.

ஏதாவது புத்திமதி சொன்னால் 'விறுக்' என்று கதவைச் சாத்தி விட்டுத் தங்கள் அறைக்குச் சென்று விடுவார்கள்.

'வந்ததும் வராததுமாய் ஏன் பிள்ளையளோடை பாய்கிறீகள்?' குருவின் மனைவி நிலா கேட்டுக்கொண்டே வந்தாள்.

'எடி இராசாத்தி, நான் ஒன்றும் பிள்ளையளோடை பாயேல்லை! இந்தப் புல்லாங்குழலை மேலையிலை அடிச்சுக் கொண்டிருக்கிறான் மகன், ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று அப்பா நான் கேட்கக்கூடாதோ?'

'நீங்கள் என்ன அப்படியே கேட்டனீங்கள்? புல்லாங்குழலைத் தொடக்கூட அவனுக்கு அருகதை கிடையாது என்று என்ரை காதிலை கேட்டுது, வாங்கிக் கொடுக்க, உங்களுக்கு வக்கில்லாமல் இருக்கலாம், ஆனால் எங்கடை அப்பாவிடம் ஒரு சொல்லுச் சொன்னாப் போதும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து கொட்டுவார்.'

'ஓம்.... ஓம்.... பத்தவயதுப் பேரனுக்கு ஒரு புல்லாங்குழல் வாங்குவதற்கு மூட்டைக்கணக்காகத்தான் கொண்டு வருவார்.'

'உங்களுக்கு எப்ப பார்த்தாலும் எங்கடை அப்பாவைக் குற்றஞ் சொல்லாமல் இருக்கமுடியாது. எனக்கும் கதைக்கத் தெரியும், உங்கடை அப்பா செய்த கூத்துகளை அவிட்டு விடட்டோ?'

'கொஞ்சம் பொறு நிலா! இப்ப என்னத்துக்கு யாரிகட்டிக் கொண்டு வாறாய்;? பார் மூன்றையும், எங்களை வேடிக்கையாகப் பார்க்குதுகள்!'

'மூன்று என்ன ஆடுகளோ, மாடுகளோ? பெற்ற பிள்ளைகள்... கதைக்கிறதை வடிவாகக் கதையுங்கோ! இல்லாட்டி வாயை மூடிக் கொண்டிருங்கோ!'

'ஓம், ஓம்! ஆம்பிளை நான் வாயை மூடிக்கொண்டிருக்கிறன், நீ கதை! நல்லாக் கதைச்சுக்கொண்டேயிரு! உன்ரை வளர்ப்பு, பிள்ளைகளை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்குது! நடக்கட்டும், நல்லா நடக்கட்டும்!'

'! எல்லாத்துக்கும் நான் ஒருத்தி இருக்கிறன், சொல்லுங்கோ, பிள்ளைகள் படிக்காததுக்கும் நான்தான் காரணம், அதுகள் சொல்வழி கேட்காததுக்கும் நான்தான் காரணம்!'

'நிலா! ஏனப்பா இப்பிடிக் கோவிச்சு எரிஞ்சு விழுகிறாய்? பிள்ளையள் படிச்சு, ஒழுங்காக வளரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறன். ஒவ்வொரு தாய், தகப்பனுக்கும் உள்ள நியாயமான ஆசை இதுதான், அது எங்கடை வீட்டிலை மட்டும் ஏன் சரிப்பட்டுவராதாம்?'

'எல்லாம் உங்களாலைதான், எடுத்ததுக்கும் பிள்ளையளைக் குறை சொல்லுவீங்கள், அதுகள் உங்கடை சொல்லுக்கு மதிப்புக் கொடுக்காமல் விட்டிட்டுதுகள்!'

'இஞ்சை நிலா! நான் வாய் திறக்காமல் இருக்கிறன், சரியோ! இதுகளை ஒழுங்காக இருந்து படிக்கச் சொல்லு! எல்லாரையும் போல நாங்களும் மதிப்பா, கௌரவமாக இருக்கலாம்!
பிள்ளையள்! எனக்கு உங்களிலை ஒரு கோபமுமில்லை, அப்பா உங்களிலை சரியான அன்பு வைச்சிருக்கிறன்! அந்த அக்கறையிலை நீங்கள் நல்லா இருக்கவேணும் என்றுதான் படி!படி! என்று சொல்லுறன். நீங்கள் படித்து உயர்ந்தால்தான் எதிர்காலத்திலை நல்லாக இருக்க முடியும். இல்லாட்டிக் கஸ்டம்.' குரு மனவேதனையுடன் சொல்லி முடித்தான்.

அவனின் வார்த்தைகளைக் கேட்க அங்கு யாருமே இருக்கவில்லை.




3. (3).  வாழ நினைத்தால் வாழலாம்


வீட்டுக்காரன் வீட்டைவிட்டுப் போகுமாறு இறுதி அறிவிப்புக் கொடுத்தாகிவிட்டது. வேறு வழியில்லை, ஏதோ ஒரு வீடு தேடி மாறித்தானாக வேண்டுமென்ற கட்டாயத்தில் கண்களை அங்குமிங்கும் ஓட்டியவாறு சதா மிதியுந்தில் சென்று கொண்டிருந்தான்.

அப்போ மிதியுந்து ஒன்று விர் என்று வந்து அவனுக்குப் பக்கத்தில் நின்றது. 'என்ன மாமா இங்கை நிற்கிறீங்கள்?' என்று ஒரு இனிய குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் சதா.

நவத்தின் மகள் தமிழினி. ஒருநாள் அறிமுகம் என்றாலும் மறக்காமல் தன்னை அடையாளம் கண்டு கொண்டாளேயென்று மனதுக்குள் ஆச்சரியப்பட்டான்.

'பக்கத்திலைதானே எங்கடை வீடு... வாங்கோ! மாமி நீங்கள் வரவில்லையென்று கவலையோடை இருக்கிறா.... வாங்கோ! இண்டைக்குக் கட்டாயம் வந்துதானாக வேண்டும்.'

சதா மறுத்தான்.
'வீடு மாற வேணும், அதுதான் தேடிக்கொண்டிருக்கிறன்... பிறகு ஒருநாளைக்கு வாறன்!'

'வீடு தேடுறது இப்பிடியே மாமா வீட்டை வாங்கோ, நான் இன்ரநெற்றிலை பார்த்து வீடு எடுத்துத்தாறன்!'

'இன்ரநெற்றிலை எப்பிடியம்மா வீடு எடுக்கிறது?'

'எடுக்கலாம் மாமா, நான் தேடித்தாறன், நீங்கள் வாங்கோ!'

ஒரேபிடியாக தமிழினி அழைக்க, மறுக்கமாட்டாதவனாய் அவளுடன் செல்ல இசைந்தான்.

'யார் வந்திருக்கிறது பாருங்கோ!' என்று வீட்டுக்கதவைத் திறந்து கொண்டே மகிழ்ச்சியுடன் கூவினாள் தமிழினி.

'வாங்கோ! வாங்கோ! வாங்கோ!' என்று வீடே குதூகலம் பொங்கி வழிய, எல்லோரும் சதாவை ஆவலுடன் வரவேற்றனர்.

பூங்கோதையின் காதில் தமிழினி, 'மாமா வந்திருக்கிறார்' என்று இரகசியமாகக் கூறிவிட்டு ஓடினாள்.

'எந்த மாமா?' என்று அவள் அங்கலாய்த்தாள்.

'எங்கடை சதாமாமா!' என்று மயூரன சற்றுச் சத்தமாகவே கூறிவிட்டுப் போனான்.

பூங்கோதையால் நம்ப முடியவில்லை.

'இவர் எப்படி இங்கை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கி விட்டவர்..... தொலைபேசயிற்கூட வேண்டா வெறுப்பாகக் கதைத்தவர் என்ன சொல்ல வந்திருக்கிறார்? மாட்டேன்.... கலியாணம் வேண்டாம் என்று ஒரே சொல்லாகச் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாரோ!' அவள் மனம் அமைதியிழந்து தவித்தது.

நவம், மச்சான் என்ற உறவுமுறையுடன் மனம் விட்டுக் கதைத்தான். சுகந்தியும் பிள்ளைகளும் அவனுடன் நன்றாகக் கதைத்தார்கள்.

தேநீர் உபசரிப்பும் பிரமாதமாக இருந்தது.

'வேலையில்லை, வீடில்லை, இந்த இலட்சணத்திலை நான் என்னென்று கலியாணம் செய்யிறது என்றுதான் யோசிக்கிறன்?' என்றான் சதா.

'இதெல்லாம் ஒரு பிரச்சனையே மச்சான்? நான் என்ரை பக்ரறியிலை வேலை எடுத்துத்தாறன், வீடு நல்ல வடிவா எடுக்கலாம்.... அதைவிட எங்கடை வீட்டிலையே இருக்கலாம்!'

'மேல்வீடு சும்மாதானே கிடக்கு, பிள்ளையளின்ரை விளையாட்டுச் சாமான்கள்தான் வைச்சிருக்கிறம், எடுத்துவிட்டால் இண்டைக்கே வந்திருக்கலாம்.' கூறினாள் சுகந்தி.

'மாமா வாங்கோ! எங்கடை வீட்டிலை வந்திருங்கோ!' என்று கடைக்குட்டி மயூரன ஒரே பிடியாக நின்றான்.

அதற்குள் தமிழினி இன்ரநெற்றில் எடுத்த விபரங்களுடன் வந்து, 'எந்த வீடு வேணும்?' என்று கேட்டாள்.

'அவர் எங்கடை வீட்டிலேயே இருக்கலாம்!' நவம் கூறினான்.

'! ஜா!' என்று குதூகலித்த அவள், 'அப்ப இது வேண்டாம்' என்று வீசப் போனாள்

'இங்கைதாம்மா குஞ்சு.... என்ன இருக்கென்று பார்ப்பம்!' என்று சதா அந்த வீடுகளின் விபரங்களை வாங்கிப் பார்த்தான்.

'நல்ல வீடுகளெல்லாம் இருக்குது, வீட்டை போய் ரெலிபோன் எடுத்துக் கதைக்கிறன்!'

'விரும்பினால் இங்கை இருந்தே கதைக்கலாம்!'

'வேண்டாம்... நான் வீட்டை போய்ப் பார்த்துவிட்டு எடுக்கிறன்!' என்றான் சதா.

'ஓகே, அது உங்கடை விருப்பம்!'

சதா பூங்கோதையிடம் சென்று, 'போட்டு வாறேன்!' என்று கூறி, 'சுரேன் எங்கே?' என்று அவள் மகனை விசாரித்தான்.

'நித்திரையால் எழும்பி விளையாடிக் கொண்டிருக்கிறான்!' பூங்கோதை முகமலர்வுடன் கூறினாள்.

சதா அவனை அன்போடு தூக்க உள்ளே போனான்.

சுரேன், தாடிமீசையுடன் சதா வருவதைக் கண்டு பயந்து, 'ஐயோ  பூதம்! ஐயோ பூதம்!' என்று ஓடினான்.

பூங்கோதை அவனைத் தடுத்தாள். அவன் பயத்தில் அலுமாரி ஒன்றின் பின் சென்று ஒழிந்து கொண்டான்.

பூங்கோதைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.... சங்கடம் முகத்தில் பரவ, சதாவைப் பார்த்தாள்.

'பிள்ளை பயந்திட்டான்.... கோவிக்காதேங்கோ!' என்று கூறிவிட்டு விடைபெற்றான் சதா.

அவன் போனபின், மகனை அழைத்து அவனுடைய பயத்தைப் போக்க முயன்றாள் பூங்கோதை.

'அவர் உனக்கு அப்பா மாதிரி..... மிகவும் நல்லவர்.'

'அப்ப ஏன் இப்பிடி தாடி மீசையெல்லாம்......? பார்க்கப் பூதம் மாதிரி இருக்கே!'

'பூதமும் மண்ணாங்கட்டியும்.... கின்டர்காடின் போய் இதொன்றும்;
சொல்லக்கூடாது... என்ன!'

'நான் சொல்லமாட்டன் அம்மா!'

'என்ரை பொன்குஞ்சு, இனிமேல் அவர் வந்தாற் பயப்பிடக் கூடாது.... என்ன! அவர் உனக்கு இனிப்பு, உடுப்பு, விiளாயாட்டுச் சாமான் எல்லாம் வாங்கித் தருவார்.'

'உங்களுக்கும் வாங்கித் தருவாரா?' என்ற மகனை மார்போடு அணைத்துக் கொஞ்சிக் கொண்டாள்.

அரசாங்கஅதிகாரிகளின் விசாரணைகள், அவள் மனதிற் பெரும் பயத்தைக் கொடுத்தது.

பார்வைக்குறைபாடு கொண்ட அவளால் பிள்ளையைக் கவனமாக வளர்க்க முடியாது, இதனால் தங்கள் பராமரிப்பில் விடும்படி பல அறிவுறுத்தல்கள் வந்துவிட்டன. அண்ணன் குடும்பம் பக்கத்தில் இருப்பதால் அவர்கள் உதவி செய்வார்கள் என்ற காரணத்தைக் காட்டினாலும் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறிவிட்டார்கள். இதனால் பிள்ளையைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற நடுக்கத்தில்  அவளிருந்தாள்.

கலியாணம் செய்தால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி  வைக்கலாம். ஆனால் கல்யாணம் என்றால் நினைத்தவுடன்; நடக்கக்கூடியதொன்றா?

Keine Kommentare: