Dienstag, 10. Mai 2011

பகுதி-8








யசோ, வெளிநாட்டலுவலகம் போய் படம் கொடுத்து, பாஸ்போர்ட் எடுக்க வேண்டும்... போகத்தான் வேண்டுமா என்று தயங்கினாள். இந்தியா போவது... வைத்தியம் செய்வது நடக்கக்கூடியதொன்றா..?

கோகுலனும், ஐானகியும் அளவுக்கு மீறிய அன்பால், இவ்வளவு பெரிய உதவியைச் செய்ய முன்வந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது சரியெனப்படவில்லை.

'ஐானகியோ கணவனை இழந்தவள்... காசு அவளிடமிருந்தாலும் அதைப் பயன்படுத்துவது, நொண்டிக் குதிரையிலே சவாரி விடுவது போலாகும்.

கோகுலனுக்கோ தங்கை வந்து கொண்டிருக்கிறாள். யானை வர முன்னே மணியோசை ரெலிபோனில் அதிர்ந்துவிட்டது. சீதனப் பழுவும், கலியாணச்செலவும் அவன் தலையில்....' என்று மனதுக்குள் குழம்பிய யசோ, ஒரே பிடிவாதமாக மறுப்பது என்று முடிவெடுத்திருந்தாள். அதையும் மிஞ்சினால் திரும்பவும் சோசல் வீட்டுக்குப் போய்விடுவது என்ற தீர்மானத்துடன் இருந்தாள்.

                      


ஐானகி வேலைக்குப் போகும்போது யசோவிடம்,
'இண்டைக்கு அவுஸ்லன்டஅம்ருக்குப் போகவேணும், கோகுலன் வருவான், பெஸ்ற் ஒப் லக்' என்று வாழ்த்திவிட்டுப் போனாள்.

கோகுலனும் சொன்ன நேரத்துக்கு வந்து நின்றான்.
யசோ வெளிக்கிடாமல், தலைகூடச் சரிப்படுத்தாமல் காப்பெற்றுக்கு கூவர் பிடித்துக்கொண்டு நின்றாள்.

கோகுலன் வந்ததைக் கண்டதும், கூவர் பிடிப்பதை நிறுத்திவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'அவுஸ்லன்டஅம்ருக்கெல்லே போக வேணும்...! மறந்திட்டீரே..?
கெதியா வெளிக்கிடும்....!' என்றான்.

'வேண்டாம்!' என்று மெதுவாகச் சொன்னாள்.

'யசோ என்ன சொல்லுறீர்...? பாஸ்போர்ட் எல்லே எடுக்க வேணும், சாட்டுச் சொல்லாமல் டக்கெண்டு வாரும்.'

'கோகுலன் பிளீஸ்! சொல்லுறதைக் கேளுங்கோ! நான் இந்தியா வுக்குப்; போகேல்லை.'

'உமக்கென்ன விசரே....?'

'விசர்தான்... கடவுளால் முடிந்தால் இங்கை வைச்சே என்னைக் காப்பாற்றலாம் தானே.... வேண்டாம் என்னாலை முடியாது. உங்களைக் கஸ்டப்படுத்தி நான் குணமாக வேண்டுமெண்டில்லை.'

'நீர் ஆரையும் கஸ்டப்படுத்தேல்லை! இப்ப வாரும்!'

'கோகுலன், என்னை வற்புறுத்தாதேங்கோ!'

'ஏன் யசோ...? எல்லாம் றெடி பண்ணியாச்சு, பாஸ்போர்ட் எடுத்தக் கொண்டு, நாளைக்கு எம்பஸிக்குப் போய் விசா எடுத்துதும், ரிக்கற் எடுக்கிறதுதானே, வாங்கோ! நல்ல விசயம் மாட்டனெண்டு சொல்லாதேங்கோ!'

'விளையாட்டுபிள்ளை மாதிரி நிக்கிறீங்கள்...! உங்கடை தங்கச்சி நாளைக்கோ, நாளையிண்டைக்கோ வந்து இறங்கப்போகிறா. சீதனக்காசை இப்ப வை! எண்டால் என்ன செய்வீங்கள்....?'


                      

'அதுக்கோ யோசிக்கிறீர்...? சீட்டுக்கிடக்கு, சேவிங்கிலையும் கிடக்கு, பத்தாட்டி ஒரு ரெலிபோனிலை எடுப்பன். அதைவிட்டிட்டு வாரும் போவம் நேரமாகுது!'

யசோ மறுப்புடன் தலையாட்டினாள்.

'தயவு செய்து கோகுலன் என்னை வற்புறுத்தாதேங்கோ, எனக்கு விருப்பமில்லை, உங்களுக்கு எவ்வளவோ கடமைகள்..... அதுக்குள்ளை சொந்தச்சகோதரத்தைவிட அன்பு காட்டி, இவ்வளவு உதவிகள் செய்ததே காணும்.!'
பக்கம் – 65
கோகுலனுக்குச் சினம் வந்தது. கிட்ட வந்த அவள் கையைப் பிடித்தான்.
'இப்ப உமக்கு நான் தாலி கட்டியிட்டன் எண்டு வையும், என்ன செய்வீர்...? போடி! போய்க் குணப்படுத்திக்கொண்டு வாடி! என்று நான் அனுப்பினால் என்ன செய்வீர்...? மாட்டன் என்பீரா...?' கையை இறுகப் பிடித்த அவன் மூச்சு சூடாக அவள் முகத்தில் தொட்டது.

அப்போ லவன் ஓடி வந்தான்.
'இரண்டு மார்க் கொண்டு போக வேணும்!' என்று வந்தவன், அங்கு அவர்கள் நெருங்கி நின்ற நிலையையும் கண்டு கொண்டான்.
இதை இருவரும் எதிர்பார்க்கவுமில்லை.

'வாங்கோ போவம்!' என்று கோகுலன் மீண்டும் கேட்டான். யசோ மறுக்கவில்லை.
உடைமாற்றி, தேவையான பத்திரங்களுடன் அவன் பின்னால் நடந்தாள்.

காரில் போய்க்கொண்டிருக்கும்போது யசோ மௌனத்தைக் கலைத்தாள்.

'லவன் இக்கணம் ஐானகியக்காவுக்கு ஏதாவது உளறிவிடப் போறான்.' என்றாள்.

'ம்...ம்... அவன் சொல்லமாட்டான்.' என்ற கோகுலன்,
'இப்ப ஓம் எண்டு வந்தனீர் முதலே வந்திருக்கலாம்தானே!' என்று கேட்டான்.

'நான் உயிரோடை இருக்கவேணுமெண்டு நீங்கள் உரிமையோடை கேட்டீங்கள்... வேறை வார்த்தைகள் உங்களுக்கும் அந்த நேரத்திலை வாயிலை வரேல்லை.... தாலி கட்டியிட்டன் எண்டு  வையும் என்று சொன்னீங்கள், அந்தச்சொல்லுக்கு மதிப்புக் கொடுக்காமல் இருக்கமுடியவில்லை.' என்றாள்.
'நான் அப்பிடிக் கேட்டது கோவமா...?'

தலையசைத்து மறுத்த யசோ,
'நீங்கள் நல்லாயிருப்பீங்கள்!' என்று  கலங்கிய அவள்,
'எதுக்கு இவ்வளவு அன்பு காட்டுறீங்கள்.... என்னாலை தாங்கிக் கொள்ளமுடியவில்லை.' என்று அழுதாள்.

'சீ...!' வலதுகையால் அவள் கரத்தைப்பற்றி,
'உமக்கு வருத்தம் குணமாகவேணும், உம்மை ஏமாத்தியவனின் கண்முன்னால் நீர் வாழ்ந்து காட்டவேணும், அதோடை....'

வெளிநாட்டலுவலகத்துக்கு வந்துவிட்டதால், சொல்லவந்ததைப் பாதியிலே நிறுத்திவிட்டு, காரைத் தரிப்பிடத்தில் நிறுத்துவதில் கவனத்தைச் செலுத்தினான்.

இருவரும் இறங்கி அலுவலகத்தைநோக்கி நடந்தனர்.

'அதோடை எண்டு ஏதோ சொல்ல வந்திட்டு விட்டிட்டீங்கள்!

'ம்... ஒண்டுமில்லை....' என்று சொல்ல வந்ததைத் தொண்டைக் குள்ளே விழுங்கிக் கொண்டான் கோகுலன்.

யசோவும் வற்புறுத்தவில்லை. அலுவலகத்தில் என்ன கதைக்க வேணுமென்று தயார் பண்ணுவதில் அவள் மனம் இறங்கியது.

தயாராக இருந்த பாஸ்போர்ட்டில் படத்தையொட்டி, எழுதவேண்டிய குறிப்புக்களையும், கையொப்பமும் இட்டபின், பாஸ்போர்ட்டைக் கொடுத்து, யசோ விரைவில் குணமாகித் திரும்பவும் ஜேர்மனிக்கு வர வாழ்த்துக்களையும் தெரிவித்தார் அந்த அதிகாரி.

மறுநாள்,
இந்தியா எம்பஸியில் விசா எடுக்கப்போக, அங்கே பாஸ்போர்ட்டை வாங்கிவைத்துவிட்டு, விரைவில் அனுப்புவதாகக் கூறிவிட்டார்கள்.
உடனே தராதது சற்று ஏமாற்றமாக இருந்தது. சரி மற்ற ஆயித்தங் களைச் செய்வோமென்று, யசோவின் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
                           
அதற்குள் கோகுலனின் தங்கை வந்து இறங்கிவிட்டாள். கோகுல னின் முகச்சாயல் அவளிடமும் இருந்தது. சுமாரான வடிவு..., அமோகமான அலங்காரம்.., நாகரிகமோகம் அவளிடம் தெரிந்தது.


திருமணமாகுமட்டும் hனகி வீட்டில்  வேணி தங்குவது என்பது ஐானகியினதும், கோகுலனதும் முடிவு. கண்ணனுக்கும் இதில் சம்மதம்.
வந்து சில நாட்கள்வரை இந்த முடிவுக்கு வேணி பணிந்திருந்தாள்.

பதிவுத்திருமணத்துக்குரிய படிவங்களைச் சேகரித்து, அதற்கான அலுவலகத்தில் விண்ணப்பித்தாகிவிட்டது. சில நாட்களில் அங்கிருந்து அனுமதி கிடைத்ததும், பதிவுத்திருமணத்துக்கான நாள் குறிக்க வேண்டும்.

சமயசடங்குகளுடன் கூடிய திருமணத்தை.... தெரிந்தவர்களுக்குச் சொல்லி, அடுத்த சிலமாதங்களுக்குள் நல்ல முகூர்த்தம் பார்த்து செய்வதாகத் தீர்மானித்திருந்தார்கள்.

கண்ணன் தினமும் வந்து போனான், அவனுடன் வேணி வெளியே போவதும், அவன் வீட்டுக்குப்போய்த்  தங்கி இரவு வருவதும், நாளாக சில இரவுகள் அவன் வீட்டில் தங்குவதும் என்று தொடர்ந்தது.

திருமணத்தை விரைவாக நடத்துவதே புத்தியென்று ஐானகி கோகுலனை எச்சரித்தாள்.

இந்தியா விசா கிடைத்ததும், யசோவின் பயணத்துக்காகப் பணம் விசாரித்து வைத்திருந்தான் கோகுலன்.

வேணியின் கல்யாணத்துக்கு சீட்டுக் கட்டிக்கொண்டு வந்தான்.


                     -----------




ஒருநாள்....,
வைத்தியசாலைக்குக் கூட்டிக்கொண்டு போகவாறன் என்றுவிட்டுப் போன கோகுலன் இன்னும் வரவில்லையே என்று அவனுக்குத்  தொலைபேசி எடுத்தாள் யசோ.
முதல்தடவை தொலைபேசிமணியடித்து ஓய்ந்தது.
கோகுலன் வெளிக்கிட்டிருக்கிறார்போலும் என்ற நினைப்புடன், தான் தயாரானாள்.

நேரம் போனது, என்ன இவ்வளவு நேரம்.....? நெஞ்சு கடகடத்தது. மீண்டும் தொலைபேசிஎண்களை அழுத்தினாள். நீண்டநேரம் ஒலித்த பின், தொலைபேசியை எடுத்தான் கோகுலன். அவன் குரல் அடைத்திருந்தது.

'வரேல்லையா...? நான் ஹொஸ்பிற்றலுக்குப் போகவேணும், பார்த்துக்கொண்டிருக்கிறன்.

சில வினாடிகள் மௌனத்தின்பின்,
'சொறி! எனக்குச் சுகமில்லை, எழும்ப முடியேல்லை, இண்டைக்கு மட்டும்; ரைக்ஸியிலை போம்!' என்று போனை வைத்தான்.

யசோவுக்குச் சுரீர் என்றது.

அவசரமாக வீட்டைவிட்டு இறங்கி, அகப்பட்ட பஸ்ஸில் ஏறி ஆஸ்பத்திரிக்குப்போய் சிகிட்சையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்ப முனைந்தவளுக்கு கோகுலனின் எண்ணம் வந்தது.

பஸ் ஏறி அவனுடைய வீட்டுக்குப் போனாள். வீட்டுமணியை அழுத்தி, நீண்டநேரத்தின்பின் கதவு திறந்தது. அங்கே ஒரே சிகரெட்புகை, விஸ்கிப்போத்தல் காலியாகத் தரையில் வீழ்ந்து கிடந்தது.

'நீர் ஏன் இங்கை வந்தனீர்...?' என்ற கோகுலனின் குரலில் விருப்பமின்மை தெரிந்தது.

'என்ன இது....! ஏன் இப்பிடி...?' எரிந்தாள் யசோ.

'நாளைக்குப் பேசலாம், நீர் வீட்டை போம்!'
யசோ அங்கிருந்த சோபா ஒன்றில் முள்மீது இருப்பதுபோல உட்கார்ந்;தாள்.

'இண்டைக்கு என்னாலை உமக்குப் பதில் சொல்ல முடியாது, பிளீஸ் போயிடும்!'

யசோ எழுந்து அவன் அண்மையில் சென்று அவன் கைகளைப் பற்றி.... நீர் அண்டைக்குச் சொன்னது மாதிரி நீங்கள் என் கழுத்திலை தாலிகட்டியிருந்தால், எனக்கு நீங்கள் பதில்  சொல்லித்தான் ஆகவேணும்!'

'இப்ப சொல்லுங்கோ! என்ன பிரச்சனை...?'

'ஒரு பிரச்சனையும் இல்லை... மனசு சரியில்லை.'

                     

'ஏன்! தங்கச்சி ஏதாவது சொன்னவவா...? இல்லாட்டி கண்ணன் ஏதாவது சொன்னவரா...?'

'இல்லை...'

'அப்ப என்ன...? சொல்லுங்கோவன்!'

'என்னத்தைச் சொல்ல...?'

'ஏன் குடிக்கிறீங்கள்....?'

'நான் குடிக்கேல்லை... சரியா.!'

'ஏன் குடிச்சீங்கள் எண்டு கேக்கிறன்...!'

'நான் குடிக்கக்கூடாதா? எனக்கு அந்தச் சுதந்திரம் கிடையாதா?'

'குடிக்கலாம், சுதந்திரமாக் குடிக்கலாம். அது மாதிரித்தான் மற்றவைக்கும் சுதந்திரம் இருக்கு... வைத்தியம் செய்வம், செய்யாமலும் விடுவம்.' என்றவள் வந்த வழியே திரும்ப நடந்தாள்.

கதவைத்திறந்து வெளியே போக முனைந்தவளைக் கைப்பற்றி, மீண்டும் உள்ளே இழுத்துக் கதவைச் சாத்தினான்.

'சீட்டு முறிஞ்சுபோச்சு!'

'என்ன...!' என்று மின்னல் தலையில் இறங்கியதுபோல், அதிர்ச்சி உடம்பில் பாயக் கேட்டாள் யசோ.

'அம்பதாயிரம்;...! சீட்டுப் பிடிச்சவன் ஓடிட்டான்.'

'ஓடியிட்டானெண்டு சாதாரணமாச் சொல்லுறீங்கள்...!'

'வேறை எப்பிடிச் சொல்லுறது?'

யசோ பதில் சொல்லவில்லை. தலையைத் தொங்கவிட்டபடி, அவனருகே சோபாவில் உட்கார்ந்தாள்.

சில நிமிட மௌனத்தின் பின்,
தொலைபேசியை எடுத்து ஏதோ நம்பர்களை அழுத்தினான் கோகுலன்.
'மாதவன்அண்ணை! கொஞ்சக்காசு வேணும்!'

                      

'எவ்வளவு?' என்று கேட்க, 'முப்பது' என்றான்.

'தாறன், அஞ்சுமணிக்குப் பிறகு வா!'

'அவசரம்... மறந்து போகாதேங்கோ!'

'ஓம்...ஓம்...!' தொலைபேசித்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

'நீர் வீட்டைபோம்! நான் கொஞ்சம் படுத்திட்டுப் பின்னேரம் வாறன். அக்காவுக்கோ, வேணிக்கோ சொல்லிப் போடாதையும்.

'என்னத்தை... சீட்டு முறிஞ்சதையோ?'

'சீ.... அது தெரியவரும்தானே! நான் குடிச்சதெண்டு சொல்லாதையும்.'

'நான் சொல்லேல்லை, இரவைக்குச் சமைக்கிறன், கட்டாயம் வாங்கோ!' என்று வலியுறுத்திவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள் யசோ.

வீட்டுக்கு வந்து சமையல் செய்துகொண்டிருக்க தொலைபேசிமணி அலறியது. றிஸீவரை எடுத்து,
'ஹலோ!' என்றாள்.

'தாமோதரமண்ணை கதைக்கிறன், யசோ! எப்பிடிச் சுகமா இருக்கிறீரே...? நேற்றுத்தான் திரும்பி வந்தனாங்கள்.'

'நான் சுகமா இருக்கிறன், ஒரு விசயம்... கண்ணனுக்கு மனிசி வந்திட்டா, பொம்பிளை ஆர் தெரியுமே?'

'ஆர்...!' எடியே நீலா...!' என்று மனைவியை அழைத்து,
'கண்ணனுக்கு மனிசி வந்திட்டாவாம், யசோ சொல்லுறா...' என்று சொல்ல, தொலைபேசியைப் பறித்து அவர் மனைவி நீலா யசோ வுடன் கதைத்தாள்.

'என்னடி யசோ...! கண்ணனுக்கு மனிசி வந்திருக்கோ...?'

'ஓமக்கா! கோகுலன்ரை தங்கச்சி.... ஆள் வந்திட்டா, கலியாணத் துக்கு ஏற்பாடுகள் நடக்குது.'

'உனக்கும்  கண்ணனுக்;கும் கலியாணம் நிச்சயித்திருந்தது தெரியுமே....?'

                      

'இல்லை'

'நீ சொல்லாதையன்.'

மனைவியிடம் தொலைபேசியை வாங்கி தாமோதரம் கதைத்தார்.

'யசோ! ஐானகிக்கு விசயத்தைச் சொல்லு! உடனை கலியாணம் நிக்கும். அவருக்கு ஒரு கல்யாணம் தேவைதான், நீ சொல்லுறியோ, இல்லாட்டி நான் சொல்லட்டோ...?'

'வேண்டாம், எங்கையெண்டாலும் நல்லாயிருக்கட்டும்.'

'என்ன யசோ நீர் பேய்க்கதை கதைக்கிறீர்? பட்டப்பகல் கொள்ளை அடிச்சது மாதிரி அவன் உம்மை ஏமாத்தியிருக்கிறான். அவனைப் போய் நல்லாயிருக்கட்டும் என்கிறீர்!'

'எனக்கு வருத்தமெண்டு தெரிஞ்சபிறகுதானே அவர் மாட்டன் எண்டவர்... வருத்தக்காரியோடை சந்தோசமா இருக்கேலாது என்று நினைச்சு, வேறை கலியாணம் செய்யிறார்.. செய்யட்டன்.'

'இப்பிடி ஏன் விட்டுக்குடுக்கிறீர்? கலியாணத்ததைக் குழப்பினால் தான் அவனுக்கு அறிவு வரும.'

'அப்பிடி ஒரு அவசியம் எனக்கில்லை. நீங்களும் சொல்லா தேங்கோ! எனக்காக என்ன....' என்று தாமோதரத்தின் வாயைப் பூட்டினாள் யசோ.

'நாங்கள் சொல்லாட்டிப்போலை இது தெரியாமலே விடப்போகுது? ஊர்வாயை மூடமுடியுமே...?'

'அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்யமுடியாது. அப்பிடித் தெரிய வந்தால் அதை அவை சந்திக்கட்டும்.' என்ற யசோ, தான் இந்தியா போக இருக்கிற விடயத்தையும் கூறி, ஒரு நாளைக்கு வீட்டுக்கு வருவதாகவும் சொல்லி தொலைபேசி உரையாடலை முடித்தாள்.

லவன், குசன் இருவருக்கும் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டாள் யசோ.

ஐானகி வேலையால் வீட்டுக்கு வந்தாள்.


                         

'











பக்கம் – 72                                              23.072012


ராசனைக் காணேல்லையாம், சனமெல்லாம் குத்தி முறியுதுகள். ஊரெல்லாம் கடன், சீட்டுக்காசுகளையும் எடுத்துக்கொண்டு ஆள் குடும்பத்தோடை மாறியிட்டுது.' என்று சொன்னாள் ஐானகி.

'பாவம் கோகுலன், இந்தமாதம் சீட்டு எடுக்கவெண்டு இருந்தவர்' என்று இரக்கப்பட்டாள் யசோ.

'நான் சொன்னனான், கேக்கேல்லை, இனி என்ன செய்யிறது? சீட்டுக்காசைவிட இருபதினாயிரத்துக்கு மேலை வட்டிக்குக் குடுத்து வைச்சிருந்தவன், இப்ப வட்டியுமில்லை, முதலுமில்லை. என்ன செய்யிறதோ தெரியாது.' என்ற ஐானகியின் குரலில் துக்கம் சொட்டியது.

யசோ கண்கலங்கி நின்றாள்.
'இராப்பகலா உழைச்சகாசு..... இப்பிடி அநியாயமாப்போச்சு.' என்றாள்.

'நீ கவலைப்படாதை! அவனாலை இதைமாதிரி எவளவோ சம்பாதிக்க முடியும்... அவனைக் கவலைப்படாமல் பாக்கவேணும். இல்லாட்டி குடிக்கத் தொடங்கிவிடுவான்.' என்ற ஐானகி, தொலைபேசி எடுக்கப் போக, யசோ தடுத்தாள்.

'வேண்டாம்! நான் கொஞ்சம் முந்தியாத்தான் கதைச்சனான். பஞ்சி யாக்கிடக்காம், கொஞ்சநேரம் படுத்திட்டுப் பிறகு வாறன் எண்டு சொன்னவர்.' என்றாள்.

'நீ வந்த பிறகு அவன் குடிப்பது குறைவு.'

'நல்லபிள்ளை!' என்றாள் யசோ.

'நான் குளிச்சிட்டு வாறன்' என்று ஐானகி, உடுப்புக்களை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி நடந்தாள்.

இரவு,
கோகுலன் வந்திருந்தான்.
நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.
பத்துமணியாகியும், வேணியும், கண்ணனும் வீடு திரும்பவில்லைபார்த்துக்கொண்டிருந்துவிட்டு, கோகுலன் கண்ணன் வீட்டுக்கு ரெலிபோன் எடுத்தான்.
'சமைக்கிறம் வாங்கோ!' என்றான் கோகுலன்.

'நாங்கள் இங்கை சமைச்சிட்டம்.' என்றாள் வேணி.
'சாப்பிட்டு வாங்கோ!' என்றான் கோகுலன்.



'நாளைக்கு வாறம்!' என்றாள் வேணி.

தொலைபேசியைக் கையால் பொத்தியவாறு ஐானகியைப் பார்த்து,
'அங்கை படுக்கப்போயினமாம்... நாளைக்கு வருகினமாம்!' என்று சொன்னான் கோகுலன்.

'அக்கா ஏசுறா! சமைச்சுச் சாப்பிட்டு நில்! நான் வாறன் கூப்பிட!' என்றான் கோகுலன்.

'நான் உங்கை வந்து என்ன செய்ய...?'

'சரி!' என்று கோபத்துடன் றிசீவரை வைத்தான் அவன்.

யசோ அமைதியாக இருந்தாள்.

ஐானகி எரிந்து விழுந்தாள்.

'கலியாணம் கட்டமுந்தி கதைக்கவிட்டதே பிழை, இங்கை வந்து என்ன செய்யிறது எண்டு திருப்பிக் கேக்கிறா அவ நாச்சியார், ஊர் சிரிக்கப்போகுது.'

'நான் போய்க் கூட்டிக்கொண்டு வாறன்!' என்று எழுந்தான் கோகுலன்.

'வேண்டாம்! பிறகு அந்தாள் என்ன நினைக்குமோ தெரியாது, எங்கடைபிள்ளையெல்லோ நினைக்கவேணும்.' என்று தடுத்தாள் ஐானகி.

யசோவுக்கு கண்ணன் வீட்டில் தங்கிய முதல்நாள், கண்முன்னே பளிச்சிட்டது. காதல் வார்த்ததைகளைக் கொட்டு கொட்டென்று கொட்டியதும், நடந்துகொண்ட விதமும்... சீ... மறந்துவிட்டான். ஆனால் யசோவால் அவ்வளவு சீக்கிரம் எப்படி மறக்கமுடியும்?

தலையிடிக்குது.... என்று சாட்டுச் சொல்லிவிட்டு, எழுந்து போக முயற்சித்தாள்.
'எனக்கும்தான்' என்றாள் ஐானகி.

'எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கு! இதுக்கு ஒரேயொரு மருந்து விஸ்;கி...!' என்றவன், யசோவைப் பார்த்துவிட்டு, 'இல்லை' என்ற அர்த்தத்தில் தலையாட்டினான்.


Keine Kommentare: