மறுநாள்
வேணி வீட்டுக்கு வந்தாள்.
'எங்கை
அத்தான்...?' என்று கேட்டான் கோகுலன்.
'றேடியோ
பூட்டுறதுக்கு ஏதோ வேண்டப்போறாராம்.'
'சற்றலைற்
பூட்டவோ....?'
'ஏதோ சொன்னவர், எனக்கு விளங்கேல்லை, எல்லா
வீட்டிலும் தமிழ்றேடியோ இருக்கு! நீங்கள் ஏன் வேண்டேல்லை
எண்டு கேட்டன், உதெல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை,
இப்ப உனக்கு வேணுமெண்டா பூட்டிவிடுறன்
எண்டவர்.'
'நல்ல விசயம்தான், ஆனா நீ வந்ததும்,
வராததுமா ஏன் அத்தானிட்டை இதையெல்லாம்
கேட்டனீ?'
'அத்தானிட்டைக்
கேட்காமல் உன்னட்டைக் கேட்கட்டோ? நீ எனக்கு வாங்கித்தாறியோ...?
நீ வேறை ஆருக்கேனெல்லோ வாங்கிக்
குடுப்பாய்...!'
'என்ன பிரச்சனை?' என்று கேட்டுக்கொண்டு ஐானகி
வந்தாள்.
'ஒண்டுமில்லை'
என்றான் கோகுலன்.
'என்ன ஒண்டுமில்லை ஜேர்மனிக்கு வந்து ஒருமாதமாகுது, அண்ணையெண்டு
இருக்கிறாய் என்ன வேண்டித் தந்தனீ....?'
'இல்லை,
ஒண்டும் வேண்டித்தரேல்லை, உனக்கு ஏதும் வேணுமெண்டால்
ஒரு துண்டிலை எழுதிவை! நான் நாளைக்கு வாங்கித்தாறன்!'
என்றவன் விரைவாக வீட்டைவிட்டு வெளியேறினான்.
யசோ எல்லாவற்றையும் கேட்டபடி சமையலறைக்குள்;
ஆகவேண்டியதைக்
கவனித்துக்கொண்டிருந்தாள்.
ஐானகி வேணியைக் கோபத்துடன் முறைத்தபடி,
'அண்ணையெண்டு
இருக்கிறாய், என்ன வேண்டித் தந்தனீ...
எண்டு கேட்டமாதிரிக் கிடக்கு!' என்றாள்.
'ஓ! கேட்டனான். ஏதோ இரண்டு சட்டையளை
வாங்கித் தந்திட்டு, அவர் தன்ரைபாடு...'
'ஒண்டும்
தெரியாதது போலைக் கதைக்காதை! நீ
இண்டைக்கு ஜேர்மனிக்கு வந்ததே அவனாலைதான். கொழும்பிலை
ஆறு மாதத்துக்கு மேலை நிண்டது ஆற்றை
காசிலை? நீ உழைச்சதா.. இல்லாட்டி
உங்கடை அப்பா உழைச்சதா...?'
'மற்றவங்கள்
செய்யாததையே இவர் செய்து போட்டார்...?
அக்கா தங்கைகளுக்கெண்டு எத்தினை இலட்சங்களை அள்ளி
இறைக்கிறாங்கள்!'
'நீ வந்த ராசி, உனக்கெண்டு
கட்டின சீட்டும், குடுத்து வைச்ச காசும் அழிஞ்சுபோச்சு!
தங்கச்சிக்கெண்டு சேர்த்து வைச்சிருந்தான். ஏமாந்து போனான். அவன்
இருக்கிற வேதனை தெரியாமல் வாயிலை
வந்தபடி கதைக்காதை!'
'சீதனம்
தர மனமில்லாட்டி இல்லையெண்டு சொல்லுறது.'
'வேணி!
என்ன கதைக்கிறாய்!'
'என்ன கதைக்கிறது..? வெறும் பொம்பிளையாத் தள்ளிவிட
நினைக்கிறீங்கள்... அத்தான் தங்கமான மனிசன்,
கட்டின சீலையோடை போனாலும் ஏற்கக்கூடிய ஆள்.' என்று கண்கலங்கி
அழுதாள் வேணி.
'அழு! நல்லா அழு! உதுக்கு
நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.'
'உங்களுக்கென்ன
வசதியா இருந்துகொண்டு சொல்லுறீங்கள், சொல்லுங்கோ! நான் அவர் வீட்டை
போறன்...
வரேல்லை,
போகேல்லையெண்டு மட்டும் ரெலிபோன் எடுத்து
வைச்சு இரைய வேண்டாம். பேசின
சீதனத்தைத் தர றெடி எண்டால்
ரெலிபோன் அடியுங்கோ! வாறன்.' என்றுவிட்டு வேணி
வெளியே கிளம்பி விட்டாள்.
தேநீரோடு
உள்ளே வந்த யசோ,
'நில்லுங்கோ!
ரீ குடிச்சிட்டுப் போங்கோ!' என்று அமைதியொழுகக் கேட்டாள்.
'இப்ப ரீ குடிக்கேல்லை எண்டதுதான்
குறை!' என்று வாயைச் சுழித்துக்கொண்டு
வெளியேறினாள் வேணி.
யசோவின்
முகம் வாடிச் சுருங்கிவிட்டது.
'இவள் இப்பிடித்தான், ஒற்றைறோட்டு, வளர்ந்திட்டாள்... திருந்தி இருப்பாள் எண்டு
நினைச்சா, முந்தினதைவிட மோசமாக் கிடக்கு!
'இவ்வளவு
செய்யிறராரே அண்ணை எண்டு சந்தோசப்படுகிறதை
விட்டிட்டு.... இதென்ன இப்பிடி...?' திகைப்புடன்
சொன்ன யசோ,
'கோகுலன்
பாவம், இப்ப கவலையோடை எங்கை
போனார்? கன்டிக்கு ஒருக்கா எடுத்துப் பாருங்கோ
அக்கா!' என்றாள்.
ஐானகி தொலைபேசியை எடுத்து கோகுலனின் கைத்தொலைபேசி
நம்பர்களை அழுத்தினாள்.
'ஹலோ!'
என்று குரல் கொடுத்தான் கோகுலன்.
'எங்கை
நிக்கிறாய்?'
'சிவன்
வீட்டிலை! என்னவாம் வேணி? நிண்டா ஊரைக்
கூட்டிப் போடுவாள் போலக்கிடந்தது, அதுதான் வந்திட்டன்.'
'அவள் கொதிச்சடிச்சுக்கொண்டு போட்டாள், சீதனம் றெடியெண்டா மட்டும்
ரெலிபோன் எடுக்கட்டாம்.'
'றெடி இல்லாட்டி என்ன செய்யட்டாம்?'
'தன்னைத்
தேட வேண்டாமெண்டு சொல்லாமற் சொல்லியிருக் கிறாள், வேறை என்னத்தை
நான் சொல்ல...!'
'வந்து
இரண்டு, மூண்டு நாள் நல்லாயிருந்தாள்.
என்ன சனியன் பிடிச்சமாதிரி.. எப்ப
பாத்தாலும் மூஞ்சையை நீட்டியபடி நிக்கிறாள். நான் என்ன செய்யிறது...?'
'வந்தண்டே
கலியாணம், புதுவீடு, சீதனம்... எல்லாம் கிடைக்கும் எண்டு
கனவு கண்டுகொண்டு வந்திருக்கிறாள் போலைக் கிடக்கு!'
'சரி! கிடக்கட்டும், பசிக்குது... என்ன கிடக்கு?'
'இங்கை
சமைச்சபடி கிடக்கு, வா! யசோவும் இன்னும்
சாப்பிடேல்லை.' என்றாள்.
'வாறன்,
சாப்பிட்டிட்டு, மாதவனிட்டைப் போய் காசு வேண்ட
வேணும்.'
'என்ன காசு...?'
'வாறன்,
வந்து சொல்லுறன்.' தொலைபேசித்தொடர்பு துண்டிக்கப் பட்டது.
இரவு பிள்ளைகள் சாப்பிட்டுப் படுக்கப் போய் விட்டார்கள். கோகுலன்
அப்பதான் வீட்டுக்கு வந்தான். அவன் மாதவனிடம் காசு
வாங்கப் போனதால் நேரமாகிவிட்டது.
'எங்கை
போனனி....? எவ்வளவு நேரமெண்டு பாத்துக்
கொண்டிருக்கிறது?'
'மாதவனுக்குப்
பிறகு நேரமில்லை எண்டதாலை உடனை வரச் சொன்னார்,
அதுதான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிப்போட்டு போகலாமெண்டால் ரெலிபோன் ஒரே என்கேச்.'
'என்கேச்...!
சீ... நாங்கள் ஒருத்தரோடும் கதைக்கேல்லை!'
என்றாள் யசோ.
'அப்ப வடிவா வைக்கேல்லையாக்கும்!'
ஐானகி எழுந்து போய் தொலைபேசியைப்
பார்த்தாள். சற்று அரங்கியிருந்தது. சரியாக
வைத்துவிட்டு, 'வடிவா வைபடேல்லை' என்றவள்,
'வாங்கோ சாப்பிடுவோம்!' என்று சமையலறைக்குச் சென்றாள்.
அவள் பின்னே யசோவும், கோகுலனும்
சென்றனர்.
சாப்பிட்டுக்
கொண்டிருக்கும்போது கண்ணனும், வேணியும் வந்தனர்.
எதிர்பார்க்கவில்லை.
'வாங்கோ!'
என்று ஐானகி வரவேற்றாள்.
யசோ சாப்பிட்ட கோப்பையை வைத்துவிட்டு,
'வாங்கோ
சாப்பாடு போடுறன்!' என்று எழுந்தாள்.
'வேண்டாம்,
நீங்கள் சாப்பிடுங்கோ!' என்று வேணி மறுத்தாள்.
'ஏன் சாப்பிடுமன்....!' என்ற கண்ணன், 'பசிக்குது
எண்டு சொல்லிக் கொண்டு வந்தவ, நீங்கள்
சாப்பாட்டைப் போடுங்கோ!' என்றான்.
யசோ சாப்பாடு போட, ஐானகியும் எழுந்து
உதவி செய்தாள்.
எல்லோரும்
சாப்பிட்டனர்.
'சற்றலைற்
வாங்கிப் போட்டீங்களோ...?' கண்ணனைப் பார்த்துக் கேட்டான் கோகுலன்.
'வாங்கியாச்சு,
செற் பண்ணுப்படாதாம்.'
'என்ரை
பிறன்ட் ஒருவன் செய்வான், நாளைக்குக்
கூட்டிக்கொண்டு வாறன்!'
'வயர் ஏதோ மாறிக் குடுத்திட்டடன்
போலக் கிடக்கு...'
சாப்பிட்டபடியே,
கைத்தொலைபேசியை எடுத்து, நண்பனின் தொலைபேசி எண்களை அழுத்திவிட்டு,
'டேய்!
என்ன செய்யிறாய்? றேடியோ ஒண்டு பூட்டமுடியாமல்
நிக்கிறம் வாறியே? இப்ப அக்கா
வீட்டிலை நிக்கிறன். ஓ...வா! சேர்ந்து
போவம்!' என்றவன், உரையாடலை முடித்துக்கொண்டு சாப்பாட்டைத் தொடர்ந்தான்.
'நாளைக்கு
வேலைக்கு வரப்போறீரே?' யசோவைக் கேட்டான் கோகுலன்.
'ஓ!' என்றாள். என்னவேலை என்று கூடக் கேட்கவில்லை,
வேலை என்றதும்; பதில் பட்டென்று வந்துவிட்டது.
'முதலாளியிட்டை
அண்டைக்குச் சொல்லி வைத்தனான். நாளைக்கு
வரச் சொல்லிச் சொன்னவர். நாலு மணித்தியாலம்... சிலவேளை
இரண்டு மணித்தியாலம்... வேலையைப் பொறுத்தது.
யசோ சம்மதித்தாள். சந்தோசம் கண்களில் பூக்க, கோகுலனுக்கு
இதயத்தால் நன்றி சொன்னாள்.
----------
றெஸ்ரோறன்ரில்
வெங்காயம், தக்காளி, சலாற் என்பன வெட்டுவதும்,
சமையலுக்கு வேண்டிய ஒழுங்குகள் செய்வதும்
அவளது வேலை.
யசோவுக்கு
நேரம் போவதே தெரியாமலிருக்கும். மூளையைப்
போட்டு உடைக்காமல், கவலைகளை ஒரு ஓரத்தில்
ஒதுக்கிவிட்டு, உலகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்
கிடைத்தது.
யசோ வேலையால் வீட்டுக்கு வந்து சமையலில் ஈடுபட்டிருக்க,
வீட்டுமணியொலித்தது.
தபாற்காரர்.
பெரிய எம்பலப்பில் பாஸ்போர்ட். இந்தியா எம்பசியிலிருந்து வந்திருந்தது.
கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டாள்.
விசா அடிக்கப்பட்டிருந்தது.
சில நாட்கள் இந்த நினைப்பே
அவளுக்கில்லை. இப்ப என்ன செய்யிறது...?
பாஸ்போர்ட்
வந்த விடயத்தை யாருக்கும் சொல்லாமல் இருப்பது என்று தீர்மானித்தாள்.
மாதவனிடம்
வட்டிக்குக் கடன் வாங்கி, வங்கியிலும்
எடுத்து வேணியின் சீதனத்தைக் கொடுத்தான் கோகுலன்.
கல்யாணத்தேதி
வைத்தாகிவிட்டது, பிள்ளையார் கோவிலில் கல்யாணம், சாப்பாடு, எல்லா ஒழுங்குகளும்
நடந்தன.
நகை, உடுப்பு வாங்குவது, பலகாரங்கள்
செய்வது என்று ஒரே வேலையும்,
ஓட்டமுமாய் காரியங்கள் நடந்தன.
அந்த நெருக்கடியிலும் கோகுலன்
யசோவிடம்,
'ஏன் இன்னும் பாஸ்போர்ட் வரவில்லை...?'
என்று கேட்டான்.
'நாளெடுக்கும்தானே...
இப்ப என்ன அவசரம்?' என்று
மறைக்க முயன்றாள் அவள்.
'ஒருக்கா
எம்பஸிக்கு எடுத்துக் கேட்டிட்டு, நேரை போவம்!' என்றான்
கோகுலன்.
'வேண்டாம்!
வேண்டாம்! இரண்டு நாள் பாத்திட்டு
எடுப்பம்.' என்று தடுத்தாள் யசோ.
கோகுலன்
கேட்கவில்லை. தொலைபேசியை எடுத்து நம்பர்களை அழுத்தினான்.
யசோ விரைந்து வந்து தடுத்தவாறே,
'பாஸ்போர்ட்
வந்திட்டுது' என்றாள்.
'வந்திட்டுதோ...!
எங்கை?'
'வந்திட்டுது,
அதை ஏன் இப்ப? நாளைக்குக்
கலியாணவீடு முடியட்டும்.' என்றாள்.
'நான் என்ரை கண்ணாலை பாத்தால்தான்
நம்புவன், பாஸ்போர்ட்டைக் காட்டும்.' என்றான்.
'நீங்கள்
பிடிச்சா உடும்புப்பிடி!' என்;றவள், எழுந்து
சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வந்தாள்.
வாங்கிப்
பார்த்துவிட்டு,
'வந்து
எத்தினை நாளாகுது? உடனை சொல்லியிருக்கலாமெல்லே!'
என்று கேட்டான்.
'கலியாணம்
நடக்கட்டும், அதுக்குப் பிறகு சொல்லலாமெண்டு இருந்தன்.'
'கலியாணம்
நடக்கும்தானே! முதலிலை உம்முடைய வருத்தத்தை
மாற்ற யோசிக்கவேணும்!'
'கோகுலன்!
குழந்தை மாதிரி கதைக்காதேங்கோ!'
'என்ன குழந்தை மாதிரி...!'
'இந்தியா
போறதெண்டா விளையாட்டே..? நீங்கள் படும் கஸ்டம்
எனக்குத் தெரியும். பிளீஸ் வேண்டாம்!'
'ஒரு கஸ்டமுமில்லை, நீர் நாளைக்கு இந்தியாவுக்குப்
போறீர்! ஆயித்தப்படுத்தும்!' என்று கோகுலன் உறுதியாகக்
கூறிவிட்டு அவசரமாக வெளியேறினான்.
'நான் போகேல்லை... கோகுலன்! இஞ்சை நில்லுங்கோ....! சொல்லுறதைக்
கேளுங்கோ!' என்று யசோ எவ்வளவோ
தடுத்தும், அவன் கேட்கவில்லை. சோபாவில்
உட்கார்ந்து பிரடி சார்வுப் பகுதியில் பொறுக்க அண்ணார்ந்து பார்த்தபடி,
கையையும் கட்டிக் கொண்டு யோசனையுடன்
இருந்தாள் யசோ.
ஐானகி குளித்துவிட்டு, தலையிலே துவாய் முறுக்கியபடி
கிடக்க, புதுமலர் போல வந்தாள்.
அவளைக்
கண்டு, தலையை நிமிர்த்தி உட்கார்ந்தபடி,
'கோகுலன்
எனக்கு ரிக்கற் எடுக்கப் போகிறார்!'
என்றாள்.
'பாஸ்போர்ட்..!'
என்று ஆச்சரியம் முகத்தில் விரியக் கேட்டாள் ஐானகி.
'பாஸ்போர்ட்
விசா அடிச்சு வந்திட்டுது, நான்
சொல்லேல்லை. இப்ப எம்பஸிக்கு ரெலிபோன்
எடுக்கப்போறன் எண்டு சொன்னார். அதுதான்
பாஸ்போர்ட் வந்திட்டுது எண்டு சொன்னனான். அதைப்
பாத்திட்டு நாளைக்கு நீர் இந்தியாவுக்குப் போறீர்
எண்டு, நான் மறிக்க மறிக்கக்
கேளாத மாதிரிப் போட்டார்.
'நீர் என்ன யசோ.... குழந்தை
மாதிரி? எப்ப விசா வரும்
எண்டு நாங்கள் பாத்துக்கொண்டிருக்கிறம்... வந்த விசாவைச்
சொல்லாமல் என்ன நீர்....?'
'நீங்கள்
கோகுலனைவிட மோசமாக் கிடக்கு! நாளைக்கு
உங்கடை தங்கச்சிக்குக் கலியாணம், நிலைமை தெரியாமல் கதைக்கிறீங்கள்!'
'கலியாணத்துக்கும்,
இதுக்கும் என்ன...? முதலிலை நீ குணமாக
வேணும். இந்தியா போறதெண்டுதானே பிளான்
போட்டிருந்தது.'
'அதுக்குக்
காசெல்லே வேணும்!'
'காசில்லாமலே
கோகுலன் ரிக்கற் எடுக்கப் போறான்?'
'கலியாணவீட்டுக்குச்
செலவழிக்க வேண்டிய காசு கையில்
வைச்சிருக்கிறார், அதை எனக்குத் தந்திட்டு
பிறகு தங்கச்சியாருக்கு என்ன சொல்லப்போறார்?'
'அதை நான் பாத்துக்கொள்ளுறன், நீ
இந்தியாவுக்குப் போய் வருத்தத்தை மாத்திக்கொண்டு
வா!'
'அக்கா!
நான் சொல்லுறதைக் கேளுங்கோ!'
'நீ ஒண்டும் சொல்ல வேண்டாம்.
ஒரு மனதோடை போய் நோயைக்
குணப்படுத்திக்கொண்டு வா!'
கோகுலன்
திரும்பி வந்தான்.
'ரிக்கற்
விசாரிக்கச் சொல்லியிருக்கிறன். நாளைக்கிடையில் தெரியும்;, இல்லாட்டி எயர்போர்ட்டிலை போய்ப் பாக்கிறது?' என்றான்.
'சூட்கேஸை
றெடி பண்ணிவை!' என்றாள் ஐானகி.
----------
வேணியைக்
கூட்டிக்கொண்டு கண்ணன் வந்தான்.
'கலியாணவீடு
எண்ட அமளியே இல்லை!' என்றாள்
வேணி.
'அமளிதுமளியிலை
ஒண்டுமில்லை. ஆகவேண்டியது சரியா நடந்;தா
சரிதானே!' என்றான் கோகுலன்.
'வீடியோவுக்குச்
சொன்னனீங்களே!'
'ஓ! அதெல்லாம் எப்பவோ சொல்லிப்போட்டன். கொஞ்சம்
முந்தியாவும் ஆளைச் சந்திச்சனான், எல்லாம்
ஓ.கே.'
'ஹோல்லை
செய்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.'
'அது என்ரை பிழையில்லை, அத்தானிட்டை
அதைக் கேள்!'
'என்ன?'
என்று வேணியைப் பார்த்துக் கேட்டான் கண்ணன்.
'ஹோல்லை
செய்ய விட்டிருக்கலாம்தானே! ஏன் மாட்டன் எண்டனீங்கள்?'
'கோயில்
எண்டால் நல்லதுதானே!' என்றான் கண்ணன் சுருக்கமாக.
'ஹோல் எடுத்து, எல்லாருக்கும் சொல்லி, வடிவாச் செய்திருக்க
லாம், வாழ்க்கையிலே ஒரேயொருக்கா வாறதைச் சிறப்பாச் செய்யலாம்தானே!'
'பிள்ளையின்ரை
முதல் பேத்டேயை நீ நினைக்கிறமாதிரி ஹோல் எடுத்து
வடிவாச் செய்யன். விடிஞ்சாக் கலியாணம்... அப்பிடிச் செய்திருக்கலாம், இப்பிடிச் செய்திருக்கலாம் எண்டு மனசைக் குழப்பாமல்,
சந்தோசமா இரு!' என்றாள் ஐhனகி.
'எட்டு
மணிக்கு வீடியோ எடுக்க வரச்சொல்லியிருக்கு!
உங்கடை வீட்டைதான் முதல் வருவினம். குளிக்க
வாக்கிறதை எடுத்திட்டு, பிறகு இஞ்சை வருவினம்.'
என்றான் கோகுலன்.
'அங்கை
வீடியோ எடுக்க வேணுமே...?' என்று
மனமில்லாமல் கேட்டான்
கண்ணன்.
'எடுக்கத்தானே
வேணும்' என்றாள் வேணி.
'நாங்கள்
குளிக்கவாக்க வருவம்... அப்ப எடுக்கிறது பிரச்சனை
யில்லை.' என்றான் கோகுலன்.
அப்ப கோகுலனின் நண்பர்கள் வந்தார்கள்.
அவர்களுக்கு
ஐானகி தேநீர் தயார்படுத்தினாள். யசோ
அரை குறையிலிருந்த சமையல்வேலைகளைக் கவனித்தாள்.
ஏற்கனவே
வாங்கி வைத்திருந்த வெற்றிக்கொடி, பலூன்போன்ற அலங்காரப்பொருட்களைக் காட்டி, சோடிப்பதுபற்றி நண்பர்களுடன்
ஆலோசித்தான் கோகுலன்.
ஆணியடித்தல்,
நூல்கட்டல், வெற்றிக்கொடிகட்டல், பலூன்ஊதுதல் என்று இளைஞர்கள் தங்களுக்குள் பகிடிகள்,
கிண்டல்களுடன் வேலைகளைச் செய்யத் தொடங்கினர்.
சில தெரிந்தவர்கள், திருமணத்துக்கு வேண்டிய உதவி ஒத்தாசை
செய்யவும், பம்பலுக்கு புதினமறிய என்று சிலரும் வந்திருந்தார்கள்.
எல்லாருக்கும்
எதாவது சாப்பாடு செய்யவேண்டும்;; என்று பெண்கள் சமையல்
அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள்.
கண்ணனும்,
வேறுசிலரும் சோபாவில் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சிறுவர்களுக்கு
ஒரேகொண்டாட்டம் ஓடியாடி
விளையாடிக்கொண்டும் அடிபட்டு அழுதுகொண்டும்; இருந்தார்கள்.
நேரமாக,
வந்தவர்கள் வீடுகளுக்குத் திரும்ப, கண்ணனும் சிறிது நேரம் இருந்துவிட்டு,
விடிய எழும்பவேணும் என்பதால் வீட்டுக்குச் சென்றான்.
யசோ படுக்கும்போது மூன்று மணியாகிவிட்டது. திருமண
அழைப்பிதழ் ஒன்று அவள் கண்களில்பட,
கண்ணன், யசோ என்று சேர
இருந்தது... காலத்தால் யசோ தள்ளப்பட்டு, வேணி
வந்து அமரப்போகிறாள் என்று மனம் நினைக்க,
மறுபக்கம் திரும்பிப் படுத்தாள். சிறிது நேரம் போல
இருந்தது. ஏழுமணியாகிவிட்டது.
ஐானகி அவசரமாக யசோவை எழுப்பினாள்.
'ஹொஸ்பிற்றல்லை
இருந்து ரெலிபோன்!' யசோ,
போர்வையைச் சட்டென்று தள்ளிக்கொண்டு, ஹோலிலிருந்த ரெலிபோனையடைந்து கதைத்தாள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen