'ராமும், பரதனும் ஜேர்மனிக்கு வந்தகாலத்திலிருந்தே நண்பர்கள். 'ராம் ஜானகியைத் திருமணம் புரிந்த பின்பும் நீண்டகாலமா நெருங்கிப் பழகி வந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து, பரதன் ஈஸ்வரியை மணம் புரிந்தான். இதன்பின் ஈஸ்வரியின் போட்டி மனப்பான்மையின் குறுக்கீட்டால் குடும்பமாகப் பழக முடியாத நிலையேற்பட்டது.
ஒருநாள் வீட்டுக்கு வந்துபோய், நல்லவன் போல் நடித்த சந்திரன் கூட ஈஸ்வரி ஓடிவிட்டாள்.
பிள்ளைகள் இருவர், அவர்களையும் கூட்டிக்கொண்டு போனது மட்டுமன்றி, வங்கிச் சேமிப்பில் இருந்த பணத்தையும் தான் எடுத்துக்கொண்டாள்.
இதனால் பரதன் ஒன்றுமில்லாமல் வெறுவிலியாக நின்றான். அப்போ 'ராமும், ஜானகியும் அவனுக்கு ஆறுதல் சொல்லி உதவி புரிந்திருந்தார்கள்.
தங்கள் வீட்டில் வந்து இருக்கும்படி அவனைக் கேட்டபோது,
'அன்புக்கும் ஒரு எல்லை இருக்கு! என்னைக் கட்டாயப்படுத்தா தேங்கோ!' என்று, சிறியவீடு ஒன்று எடுத்து, அதில் தனிச்சீவியம் நடத்தி வந்தான் பரதன்.
அப்பப்போ நேரம் இருக்கும் போது வானொலிக்கோ,
பத்திரிகைக்கோ கவிதை எழுதுவான். புரட்சியெண்ணம் படைத்தவன், தமிழீன முன்னேற்றத்துக்கு இயன்றளவு உழைப்பவன், நல்ல குணம் கொண்டவன், அநேகருக்கும் அவனைப் பிடிக்கும்.
வாழ்க்கையென்றால் இப்பிடித்தான்... சிலநேரம் எல்லாமே இருக்கிற மாதிரி இருக்கும், சிலவேளை ஒண்டுமே இல்லாத மாதிரி இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூச்சியம்தான் மிஞ்சும்.
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் தனித்து விடப் படுகிறான்.
பத்துச் சகோதரங்களுடன் பிறந்திருக்கலாம்... ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்றிருக்கலாம்.... நல்ல மனைவி, நிறைந்த சுற்றம் என்று ஏராளமான உறவுகள் இருந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் பணம் தேடவென்று அந்நியதேசம் செல்வதாலோ...
நோய் கண்டு வைத்தியசாலையில் சில காலம் இருப்பதாலோ...
குடும்பத்தை இழந்தோ....
ஏதோ ஒரு நிலையில் தனித்து விடப்படுகிறான் மனிதன்.
இந்த நிலையில் அவனுக்கு இவ்வுலகம் பூதகரமாகத் தோன்றும். வாழ்க்கையே வெறுப்பாக, பயங்கரமாகக் கண்முன்னெ விரிந்து நிற்கும். அந்தப் பயங்கரமான சூழ்நிலையில்தான் பரதனும் படாதபாடு பட்டான்.
'ராம், ஜானகி, கோகுலன், நண்பர்கள் என்று சிலரும் அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தார்கள்.
பிள்ளைகளைப் பிரிந்த சோகம் அவனை நன்றாக வாட்டியெடுத்து விட்டது. நாளாக ஆகப் பல திசைகளிலும் மனதைச் செலுத்தி, ஒருவாறு தன்னை வாழ்க்கையில் நிலை நிறுத்திக்கொண்டான்.
ஓடிப்போன ஒருத்திக்காகத் தன்னை அழிப்பது அறிவீனம் என்ற ஒரு உண்மையை அவன் மீண்டும் மீண்டும் மனத்திடை கொணர்ந்து, நெஞ்சில் பீறிட்ட கவலையை அடக்க முனைந்தான்.
அவன் மனந்தேறி புதுவேலையும் எடுத்து, தனது எழுத்தாற்றலை தமிழீன முன்னேற்றத்துக்குப் பயன்படும் வகையில் பணிபுரிந்து கொண்டிருந்தான்.
ஜானகி, பிள்ளைகள், கோகுலன் யாவரும் கண்ணன் வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சென்று வந்த பிறகு, அவனைப் பற்றி விமர்சித்திருந்தார்கள்.
'வீட்டை அழகாக வைத்திருந்தாராம், அவர்களை விழுந்து விழுந்து உபசரித்தாராம்.. லவனுக்கும் குசனுக்கும் பக்கத்திலிருந்த சாப்பாட்டுக்கடயில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாராம்.' என்று யசோவுக்கு வியந்துரைத்தார்கள்.
அவள் நாகரிகத்துக்காக சிரிக்க முயன்றபடி, ஓரிரு வார்த்தைகள் சொன்னாள்.
கண்ணனைப் பற்றி ஏற்கனவே தன் நண்பன் ஒருவன் மூலம் கோகுலன் விசாரித்திருந்தான்.
'கண்ணன் இலட்சியவாதி, பிரயாசை கொண்டவன், ஒழுக்கத்திலும் பிழை பிடிக்க முடியாது. எப்பாலும் இருந்திட்டு பியர் குடிப்பான். இது வெளிநாட்டில் சாதாரணம்தானே!' இப்படிக் கூறியிருந்தான் அந்த நண்பன்.
யசோ என்ன சொல்வதென்று தெரியாமற் தடுமாறினாள். உள்ளதைச் சொல்லிவிட்டால் கல்யாணம் நின்று விடும். உண்மையைக்கூறி ஒரு கல்யாணத்தைத் தடுப்பது பண்பான செயலாகுமா...?' என்று மனம் குழம்பி நின்றாள்.
ஐானகி ஒருநாளும் இல்லாதவாறு மகிழ்ச்சியுடன் இருந்தாள். இந்தவேளை வாயைக் கொடுத்து, உண்மையைக் கக்கிவிட்டால் அவள் மகிழ்ச்சி காற்றோடு பறந்து விடும் என்று நினைத்துச் சொல்லுவதில்லை என்ற திடமான முடிவுக்கு வந்தாள் யசோ.
மறுநாள் லவன், குசன் இருவரையும் பாடசாலைக்கு அனுப்பியபின், வைத்தியசாலைக்குப் போகத் தயாரானாள்.
கதவு திறக்;கும் ஒலி கேட்டது.
'ஆர் இந்த வெள்ளெண்ண...? அக்கா, இல்லாட்டி கோகுலன்... வேறு யாராயும் இருக்க முடியாது.' என்று நினைத்தவளாய் வாயிலே கிளிப், தலையிலே சீப்பு கௌவிய நிலையில் எட்டிப் பார்த்தாள்.
படியிலே காலடியோசை.
மேலே ஏறிவருவது கண்ணன் என்று கண்டதும் யசோவின் முகம் காய்ந்து இறுகியது. இதயமற்ற மிருகம் ஒன்று நடந்து வருவது போல அவள் கண்கள்; வெறுப்பைக் கக்கின.
'இவள் எப்பிடி இங்கை....?' சோசல்காம்பில் இருந்தவளுக்கு, முன்பின்; தெரியாத ஐானகி வீட்டில் என்ன வேலையென்று நினைத்தவாறு இடிந்துபோய் நின்றான் கண்ணன்.
'வாங்கோ!' என்று ஒற்றைச்சொல்லில் சம்பிரதாயத்துக்கு வரவேற்றவள், ஹோலுக்குள் சோபாவைக் காட்டி,
'இருங்கோ!' என்றாள்.
'கோகுலன்தான் கூட்டிக்கொண்டு வந்தவர், பக்கத்துக்கடைக்குப் போட்டு வருவதாகச் சொல்லிக் கதவைத் திறந்து விட்டுட்டுப் போனவர்.' என்று அவள் கேட்காமலே, தான் அங்கு வந்த விபரத்தை எடுத்துச் சொன்னான்.
'எனக்கு பஸ்க்கு நேரமாகுது, வெளிக்கிடவேணும்!' என்று வார்த்தைகளில் அவசரம் தொனிக்கக் கூறியவளாய், தன் அறைக்கு விரைந்தாள்.
ஊசிக்கு மேல் உட்கார்ந்திருப்பவன் போல் இருந்தான் கண்ணன்.
'இவள் வாயைத் திறந்து உண்மையைக் கொட்டிவிட்டால், எல்லாமே உழுத்துப்போயிடும். இருக்கிற வயிற்றெரிச்சலில் குசினிக்குள் இருக்கிற இறைச்சி வெட்டுற கத்தியைத் தூக்கி வந்து ஏத்தினாலும் ஏத்திப் போடுவாள்.
வெளியிலை போய் நின்று கோகுலன் வர, அவசரவேலையிருக்கு, இப்பதான் நினைவுக்கு வந்தது என்று சாக்குப்போக்குச் சொல்லி விட்டு, இப்போதைக்கு தப்புவம்! பிறகு ஆறுதலாக வருவம்!' என்று நினைத்து எழுந்திருக்க முயல,
'மனிசி வாறாவாம்! கேள்விப்;பட்டன்' என்று கூறிக்கொண்டு, யசோ கைப்பையுடன் வெளியே புறப்பட ஆயத்தமாக வந்தாள்.
வருத்தக்காரியானாலும் வடிவாக இருக்கிறாளே என்று அவன் மனத்தினுள் எறும்பு கடிப்பது போன்று எரிவு தெரிந்தது.
பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான். இவளால் ஒன்றும் செய்யமுடியாது. சும்மா செல்லாக்காசு மாதிரி ஒரு மினுமினுப்பு, அவ்வளவுதான் என்;று தன்னைச் சமாதானம் செய்துகொண்டான்.
'பயமா இருக்கா...?' கேட்டாள் யசோ.
'என்னைப் பார்த்து இப்பிடி ஒரு கேள்வி கேட்க இவளுக்கு என்ன தைரியம்..!'என்று கண்ணனின் மனம் முறுகியது.
'எல்லாம் காலந்தான்.' என்று நினைத்துக்கொண்டான்.
'நீர் நினைத்தால் இந்தக் கல்யாணத்தை நிறுத்தலாம்.'
'நான் ஏன் அப்படி நினைக்கிறேன்...!'
'என்னில் உமக்குக் கோபம் இருக்கும்தானே!'
'ஏன்...?'
'கலியாணம் செய்யிறன் எண்டிட்டு மாட்டன் எண்டிட்டன்.'
'அதனாலென்ன..... சொல்லுறதையெல்லாம் செய்ய, நீங்கள் என்ன அரிச்சந்திரனா...?'
கண்ணன் மௌனமாக நின்றான்.
'அண்டைக்கு இவள் என்னுடையவளாக இருந்தபோது, எனக்குப் பயந்தவளாக என் காலில் வீழ்ந்து கிடந்தாள். இண்டைக்கு நேருக்கு நேர் நிமிர்ந்து நிற்கிறாள்.' என்று அநாவசியமான எண்ணங்கள் அவனுள் உதித்து மண்டையை இடித்தது.
'நீங்கள் உங்கள் விருப்பப்படி நல்லாயிருங்கோ! என்னைக் கண்டு பயப்பிடவேண்டாம்.'
'அப்ப உண்மையைச் சொல்லி இந்தக் கல்யாணத்தை நிற்பாட்ட மாட்டியோ....?'
பிச்சைக்காரன் பிச்சை போடு! என்று கையேந்துவது போலிருந்தது அவன் செயல்.
தலையை அசைத்து மறுப்புத் தெரிவித்த யசோ,
'என் வாயால் ஒருநாளும் இவையளுக்கோ இல்லாட்டி உங்களுக்கு மனைவியாக வருகிறவுக்கோ நடந்ததைச் சொல்லமாட்டன். இன்னொருவரின் மகிழ்ச்சியைக் கெடுத்து, எனக்கோ என் பரம்பரைக்கோ பழக்கமில்லை. நீங்கள் சந்தோசமாக இருங்கோ!'
'அப்ப நீர்...?'
நான் சந்தோசமாக இருக்கிறன்.'
'இல்லை.... கலியாணம்?'
'தெரியாது...!'
'நீரும் ஒரு நல்ல மாப்பிளையாப் பார்த்துக் கலியாணம் செய்யும்!'
'அவசியம் ஏற்படேக்கை பாப்பம்!'
'நான் உம்மை ஏமாத்திப்போட்டன், இல்லையோ...?'
'இல்லை, நான்தான் ஏமாந்திட்டன்.'
'எனக்குக் கன இலட்சியங்கள்.'
'எனக்கும்தான!;'
'இல்லை, என் நண்பர்கள் நல்லாயிருக்கிறார்கள். அவர்களுக்கீடாக நானும் இருக்க வேணும்.'
'என்னைமாதிரி வருத்தக்கார மனிசியைக் கட்டிக்கொண்டு, அவையோடை போட்டிபோட ஏலாது, அப்பிடித்தானே!'
'கோபிக்காதையும்!'
'நான் கோவிக்கேல்லை!'
'பொய் சொல்லுறீர்...! நான் செய்த வேலைக்கு கடவுள்கூடக் கோவிப்பார்.'
Keine Kommentare:
Kommentar veröffentlichen