Montag, 16. Mai 2011

பகுதி 2



எழம்பி வீட்டை போங்கோ! இனிமேல் கமலாக்கா இல்லாமல்  இஞ்சை வரவேண்டாம். போங்கோ...! போங்கோ! சொந்தம் எண்டு பார்த்தால்... தண்ணியைப் போட்டிட்டு வரம்புக்கு மீறிக் கதைக்கிறீங்கள்! நாங்கள் என்ன பள்ளிப்பிள்ளையளே காதல் கதை கதைக்க? பெத்த பிள்ளையள் தோள் உயரத்துக்கு வளர்ந்திட்டுதுகள்... கமலாக்காவுக்குச் சொன்னா தும்புக்கட்டையாலைதான் தருவா! போங்கோ! வீட்டை போய்ப் படுங்கோ!'

'நீ பயப்பிடுகிறாய், தேவையில்லாமல் பயப்பிடாதை!'

'நான் ஒரு பொம்பிளை, வாழ்விழந்தும், சமூகத்திலை மரியாதையா, கௌரவமா வாழ்ந்துகொண்டிருக்கிறன். மாமியின்ரை பிள்ளை எண்டதாலை உங்களை வீட்டுக்கை வரவிட்டன். இனிமேல் அந்த வரவேற்பும் உங்களுக்குக் கிடையாது. கோகுலன் அறிஞ்சால் சொந்தம் பந்தம் எண்டும் பார்க்க மாட்டான், அடிதடியெண்டு வெளிக்கிட்டிடுவான். போங்கோ! உங்கடை மரியாதையைக் காப்பாத்திக்கொள்ளுங்கோ!'

'உன்ரை தம்பி பெரிய திறமே? பியரையும் ஊத்திக்கொண்டு, ஜேர்மன்காரப்பெட்டையளையும் கூட்டிக்கொண்டு திரியிறான்.'

'நீங்களும் வேணுமெண்டாக் கூட்டிக்கொண்டு திரியுங்கோ! போங்கோ! தயவுசெய்து போங்கோ! பிள்ளையள் எழும்பப் போகுதுகள்.'

'போறன்இ கத்தாதை! ஆனால் யோசி! கொஞ்சம் யோசி!' என்று விட்டு வெளியேறினான் இராகுலன்.

அவன் போனபிறகுஇ சோபாவிலிருந்தபடி பொலு பொலுவென்று கண்ணீர் வடித்தாள் ஜானகி.

பிறகு தொலைபேசியை எடுத்துஇ தாமோதரன் வீட்டு நம்பர்களை யோசனையுடன் அழுத்தினாள்.

'நான் ஜானகி.'

'என்ன குரல் அடைச்சுப் போயிருக்கு!' மறுமுனையில் நீலா.

'தடிமனுக்கெண்டு நினைக்கிறன்; அண்ணை நிக்கிறாரே?'

'ஓ! இப்பதான் கடையாலை வந்து சாப்பிடுறார்இ கதைக்கப் போறியோ?'

'இல்லைஇ அந்தப்பிள்ளை ஒண்டு காம்பிலை இருக்கெண்டு அண்ணை சொன்னவர்... ஞாபகமிருக்கேயக்கா..?'

'ஓ! யசோ... இருக்கிறாள் பாவம்இ அவனொருத்தன் கலியாணம் செய்யிறன் எண்டு கூப்பிட்டுப்போட்டுஇ ஏமாத்திப்போட்டான். அவளும் வருத்தத்தோடை காம்பிலை சரியாக் கஸ்டப்படுகிறாள்.'

'அந்த விசயமாத்தான் அண்ணையோடை ஒருக்காக் கதைக்கவேணும்.'

'இஞ்சேப்பா! ஜானகி கதைக்கப் போறாவாம்.'

தொலைபேசியை வாங்கிஇ

'சொல்லு பிள்ளை!' என்றார் தாமோதரன்.

'நாளைக்கு ஒருக்கா  உங்களுக்கு நேரம் வருமே? அந்தப்பிள்ளையைப் போய்ப்பாப்பம். நல்ல பிள்ளையெண்டா சோசலிலை கதைச்சு... அவவின்ரை வருத்தத்தைக் காட்டிஇ எங்கடை வீட்டிலை பதியக் கேக்கலாம்.'

'அதுக்கென்னஇ போய்க் கதைப்பம்! உனக்குப் பிடிச்சாக் கூட்டிக்கொண்டு போ! ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கும்.'

தாமேதரமும் நீலாவும் அடிக்கடி வந்து வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார்கள். ஒருநாள் ஜானகியைக் கூட்டி வந்து அவளை யசோவுடன் விட்டுவிட்டு சிறிதுநேரத்தில் வருவதாகக் கூறிச் சென்றார்கள்.

தேனீர் வழங்கி உபசரித்தபடி,

“வந்து கனகாலமோ...?” கேட்டாள் யசோ.

“ம்” என்று தலையாட்டியவள்,

“எங்கடை வீட்டை வாருமன்?” என்றாள் தேனீர் அருந்தியபடியே.

“ஒரு நாளைக்கு வாறன்.”

“ஒரு நாளைக்கு இல்லை, இண்டைக்கே வரலாம். எங்கடை வீட்டிலை நிறைய இடங்கிடக்கு, அங்கை வந்திருக்கலாம்.” என்றாள் ஜானகி. 

யசோ ஆச்சரியம் படர, ஜானகியைப் பார்த்தாள். அந்தப் பெயருக்கே பொருத்தமானவளாக இருந்தாள் அவள். ஜானகி தேனீரைப் பருகியபடி அந்த அறையையும், யசோவையும் மாறிமாறிப் பார்த்து மனதுக்குள் சிந்தனையை வளர்த்துக்கொண்டிருந்தாள்.

வந்து கொஞ்சநேரமில்லை, “எங்களோடை இருக்கலாம் வீட்டுக்கு வாவன்” என்று கேட்டவளை முழுதாகத் தெரியாததால் விழித்தாள் யசோ.

நீங்கள் எங்கை இருக்கிறீங்கள்.... இந்த அறையைப் பாக்கிறீங்கள் தானே.... சோசல்வீடு... ஏதோ நாலு சுவர் இருக்கெண்டு இருக்கிறன்.... நீங்கள் வரச் சொல்லுறீங்கள்.... எனக்குப் பிரச்சனை இல்லை, சோசலிலை கேட்கவேணும்தானே!'

'நானும் இந்த சிற்றியிலை தான் இருக்கிறன், நீர் எங்களோடை வந்திருக்கலாம், எந்தப்பிரச்சனையும் வராது.'

'வீட்டுச்சொந்தக்காரர் ஓம் எண்டு சொல்லுவினமோ...? உங்கடை அவர் என்ன சொல்லுறாரோ...? என்னாலை உங்களுக்கேன் வீண் சிரமம்? அதோடை கிட்னி வருத்தம் வேறை.... அடிக்கடி டொக்டரிட்;;டை.... ஹொஸ்பிற்றலுக்கு எண்டு போகவேணும்.'

யசோவின் நிலைமை பற்றி தாமோதரம் ஜானகிக்கு ஏற்கனவே எடுத்துக் கூறியிருந்தார். இதனால் யசோ சொல்ல, தெரியும் என்ற வகையில் தலையை அசைத்த ஜானகி,

'இதொண்டும் பெரிய வருத்தமில்லை, மனத்தைரியமாயிரும்.' என்றாள்.

அதற்கு யசோ, 'சிலநேரங்களில் சோதனைக்கு மேல் சோதனை வரும், மனங்கலங்கி என்ன செய்யிறதெண்;டு தெரியாமல் போயிடும்.' என்றாள் கண்கள் தழும்ப.

ஜானகி யசோவின் அருகே எழுந்து சென்று, அவள் கண்களைத் துடைத்து,

'நீ சொல்லுறது உண்மைதான். சோதனைகள் சிலநேரம் சில மனிதர்களைத் துவைத்து எடுத்துவிடும்.' என்று அவளை அணைத்தாள்.

'அக்கா! ஜேர்மனிக்கு வரும்வரை நான் வாழ்க்கையைப்பற்றி எதுவுமே யோசிக்கேல்லை, இஞ்சை வந்த சிலநாளிலை அது எத்தினை சுமையானது எண்டு விளங்குது.'

'யோசிக்காதையும், நல்ல மனிசரை கடவுள் அதிகம் சோதிக்கிறார். நீர் எங்கடை வீட்டிலை வந்திருந்தா, நான் வேலைக்குப் போகலாம். பிள்ளையளை நீர் பாத்தா எனக்குப் பெரிய உதவியா இருக்கும். சம்பளம் தாறன்.'

'சம்பளம் வேண்டாம், உங்களுக்கு உதவியா இருக்கும் எண்டா வாறன்.'

'இவளவு நாளும் ஒரு ஜேர்மன்காரப்பிள்ளை லவனையும், குசனையும் பாத்து வந்தவ, இப்ப யூனிவெசிற்றி கிடைச்சுப் போறா. நான் லீவு எடுத்து நின்று பிள்ளையளைப் பாக்கிறன். நீர் வந்தா நான் வேலைக்குப் போகலாம்.'

'இரண்டு பிள்ளையளோ...?'

'ஓ! மூத்தவன் லவன், இளையவன் குசன்.'

'நல்ல பெயர் வைச்சிருக்கிறீங்கள்!'

'அவருக்கு விருப்பமான பெயர்கள்.'

'இராமாயணத்தை நினைவுபடுத்துது.'

'தேவையானதை எடுத்துக்கொண்டு வாரும்!' என்று ஜானகி சொல்ல தாமோதரமும் உள்ளே வந்தார்.

'தங்கச்சி! ஜானகி எல்லாம் சொல்லியிருப்பா எண்டு நினைக்கிறன். நல்லபிள்ளை, எனக்குத் தெரியும், கூடப்போயிரு, உனக்கும் பாதுகாப்பு, அவைக்கும் பெரிய உதவியாயிருக்கும். போ! கொண்ணைக்கு நான் ரெலிபோன் எடுத்துச் சொல்லுறன்.' என்று அவர் யசோவுக்கு உற்சாகமூட்டினார்.

அனைவரும் காரிலேறிச் சென்றனர்.

யசோவுக்கு புது அனுபவமாக இருந்தது. அவளைப் பொறுத்த வரைஅந்தச் சோசல் வீட்டைவிட்டுப் போனாலே போதும் என்றிருந்தது.

தாமோதரம் வீட்டில் ஜானகி காரை நிறுத்திவிட்டு, அவர்கள் காரில் வந்திருந்தாள்.

'வாங்கோ ரீ குடிச்சிட்டுப்போகலாம்!' என்று நீலா கேட்டபோதும்,  'இன்னொரு நாளைக்கு வாறம், பிள்ளையளைத் தம்பியோடை விட்டிட்டு வந்தனான், கோவிக்காதேங்கோ' என்று ஜானகி சொல்ல, 'பிரச்சனையில்லை, நேரம் கிடைக்கேக்கை வாங்கோ! என்று அவர்களுக்கு விடைகொடுத்தார் தாமோதரம்.

ஜானகி காரைச்செலுத்த, அவளின் பக்கத்திலே உட்கார்ந்திருந்தாள் யசோ. இன்றையநாள் ஒரு வித்தியாசமான நாளாக இருப்பதை மனதுக்குள் இரசித்தவாறு இருந்த அவளுக்கு, ஜானகியைப் பார்க்க, அவளும் ஒரு பெண்தானே, எவ்வளவு சுறுசுறுப்பாகவும், திறமைசாலியாகவும் இருக்கிறாளே என்று பெருமிதப்பட்டபடி, தன் கவலைகளை ஓரந்தள்ளிவிட்டு, வாழ்க்கையிலே எத்தனையோ விடயங்கள் இருக்கு என்பதை உணரத்தொடங்கினாள்.

காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் இருவரும் நுழைந்தார்கள்.

Keine Kommentare: