Dienstag, 17. Mai 2011

பகுதி 1 விடியலில் மலரும் பூக்கள்




            விடியலில் மலரும் பூக்கள்  
             
                                             

யசோவுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. கழுவிக்கிடந்த பாத்திரங்களைத் துடைத்து அலுமாரிக்குள் வைத்துவிட்டு, மத்தியானச் சமையல் செய்ய இருந்தவள், தஞ்சக்கேடாக இருக்க கோலுக்குள் சென்று சோபாவில் இருக்கலாமென்று நடக்க முற்பட, மயக்கம் வந்து விழுந்துவிட்டாள்.
எவ்வளவு நேரம் கழிந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை அரைமயக்கத்தில் கண் விழித்ததும், முன்  வீட்டு ஜேர்மன்காரப்பெண்மணி அனாவிடம் போய் வீட்டு மணியை அடித்தது அவள் நினைவுக்கு வந்தது. தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் முன்னால் கண்ணன் சினம் நிறைந்த சிடுசிடுப்பு முகத்துடன் நிற்பதையும்  கண்டாள்.

'என்னப்பா நல்லாத்தானே இருந்தனீர் !'

'தலை சுத்தி மயங்கி விழுந்திட்டன்....... முழிச்சு அனாவுக்குச் சொன்னது தான் தெரியும்.. பிறகு என்ன நடந்ததெண்டு தெரியாது.......'

'உமக்கு விசர்! விரதம்கிரதம் எண்டு இருந்திருப்பீர்... எடுத்ததுக்கெல்லாம் டொக்டரிட்டைப் போறதேயப்பா? அவள் ஜேர்மன்காரி ஏதோ சீரியஸ் எண்டு நினைச்சு ரெலிபோன் எடுத்து….  பாரும் இப்ப ஆஸ்பத்திரியிலை மறிச்சுப் போட்டாங்கள். இனி இவங்கள் தங்கடை உழைப்புக்காகத் தேவையில்லாத வைத்தியங்கள்  எல்லாம் செய்து இழுத்தடிப்பாங்கள்...'

யசோ பதில் சொல்ல முடியாமல் வாயடைத்தப் போனாள்.

'சும்மா எல்லாத்தையும் பெரிசு படுத்திறது, இனிப் பாரும் உமக்கு டொச்சும் விளங்காது, எடுத்ததுக்கெல்லாம் டொல்மேச்சர் வேணும்!' முணுமுணுத்தான் கண்ணன்.
யசோவின் கண்கள் கலங்கின.

'பக்றியிலும் லீவு எடுக்கமுடியாதுஓவற்றைம் வாற நேரத்திலை வேலைக்குப்போகாமல் நிக்கேலுமே? நான் வேலையாலை வந்து, வாறன். நீர் சமாளியும்.' என்று அவன் சொல்ல, நர்ஸ்; உள்ளே வந்தாள்கண்ணனுக்கு வணக்கம் சொல்லி, கை கொடுத்தபடி,
யசோவின் கணவனா என்று ஜேர்மன் மொழியில் கேட்டாள்.
அவனது பதில் யசோவுக்கு முகத்தில் அறைந்தது போலிருந்தது. எனக்குத் தெரிந்த பெண் என்று அவன் ஜேர்மன்மொழியில் கூறியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
மனைவி என்று சொல்லாவிட்டாலும்  கலியாணம் செய்ய நாள் குறித்தாகிவிட்டது. அதைக் குறிப்பிட்டிருக்கலாம்தானே. இதுகூடச் சொல்லியா கொடுக்க வேணும்...? என்று வேதனைப்பட்டாள்.
டொல்மேச்சர் ஒருவர் வேணும் என்று தாதி கேட்டதற்கு நாளைக்குக் கூட்டிக்கொண்டு வருவதாகக் கண்ணன் கூறியது அவளுக்கு அரைகுறையாக விளங்கியது.

கண்ணன் வீட்டுக்குப் போய்விட்டான். அனாதை போல யசோ ஆஸ்பத்திரிக்கட்டிலில் படுத்திருந்தாள்.
கையில் ஊசி மூலம் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. தூக்கம் வரவில்லை. துக்கம்தான் தொண்டையை அடைத்து நின்றது. அம்மா! என்று நெஞ்சுவெடிக்கக் கதறி அழ வேண்டும் போலிருந்ததுஅடக்கிக் கொண்டு கண்ணீரை மட்டும் கொட்டினாள்.

எவ்வளவு சந்தோசம்  ஜேர்மனிக்கு வரும்போது இருந்தது. அம்மா அப்பாவைப் பிரிந்து செல்கிறேன்;, உறவுகளை விட்டு வெகுதூரம் போகிறேன், பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு  பிறதேசம் பயணமாகிறேன் என்று மனதில் ஒரு தயக்கம் இருந்தாலும் ஒருநாள் திரும்பி வரலாம்தானே என்று சமாதானம் சொல்லக்கூடியதாக இருந்தது.

அண்ணா வீட்டுக்குத்தானே போகிறேன்;, அங்கே அண்ணி, பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கலாம். கல்யாணம் நடந்தாலும்  என்ன பக்கத்திலேதானே இருக்கப்போகிறோம் என்ற துணிவுடன் வந்த அவளுக்கு, ஜேர்மனியில் அடியெடுத்து வைத்த சில நாட்களில்    எல்லாம்; தலைகீழாக இருப்பதைக் கண்டாள்.

வெளிநாடுதானே... அண்ணா குடும்பம்  அந்த மாதிரி... வீடு வசதி என்று இருப்பார்கள்தனக்கு நிழலாகத் துணை செய்வார்கள் என்று அவள் நெஞ்சிலிருந்த கற்பனைகள்அண்ணா குடும்பம் இருக்க விசா  இல்லாமல் தட்டுத் தடுமாறுவது கண்டு,   கலைந்து காற்றோடு போக அண்ணாவுக்கு இரங்கும்  நிலைக்கு அவள் இறங்கி வந்தாள்.

திருமணத்தின் பின் கணவனுடன் சேர்ந்து வாழ்வது என்ற பண்பாட்டை  வேறு வழியின்றி சற்று விட்டுக் கொடுத்து, நிச்சயம் செய்த கண்ணன் வீட்டில் தான் இருக்க ஒப்புக்கொண்டாள். ஏற்கனவே அண்ணன் வரதராஜன் குடும்பமாக  கனடா போவதற்குச் செய்த ஒழுங்கைக் குழப்ப அவள் மனம்  இடந்தரவில்லை.
பாவம் அண்ணை, அண்ணி, பிள்ளைகள் ... விசா முடியும்வேளை... பலதடவைகள் மூன்றுமாதம், ஒருமாதம் என்று கொடுத்து இப்போ மறுக்கும் நிலையும, பிடித்தனுப்பும் நிலைமைகளும் இருப்பதை அறிந்த அவள்,

'என்னைப்பற்றி யோசிக்காதேங்கோகண்ணனுடன் நான் இருக்கிறன். நீலாஅன்ரி எல்லாம் இருக்கிறா தானே போட்டுவாங்கோ.' என்று அவர்கள் தயக்க த்தைப்போக்கிப் பயணம் அனுப்பி வைத்தாள்.

போகப்போகத் தனிமை மேலும் விரிந்தது. கண்ணனுக்கு ஆட்களுடன் பழகுவது பிடிக்காதுநண்பர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வேலை தான்  அவனுக்;கெல்லாம். கதை கேட்டாலும் ஏதோ யோசித்தபடி ஒருசொல்லில் பதில் சொல்வான். தான் ஒருத்தி வீட்டுக்குள் இருப்பதைப்பற்றி ஒரு நினைப்புக்கூட இல்லாமலிருப்பது  போலிருக்கும்.
சாப்பாடு, படுக்கை, வேலைஎப்பாலும் வீடியோவில் தமிழ்ப்படங்கள் .... அவன் பொழுது போய்விடும். ஆனால் யசோ என்ன செய்வாள்......? உணர்வுகளைக்  கட்டிப்போட்டுவிட்டு வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு ஊமையாக இருந்தாள்.

கடைகள் பார்க்கலாம்ஓய்வு நேரங்களில் கிட்ட இருக்கும் பார்க்குக்குப் போகலாம்  நீலா அன்ரிவீட்டுக்குப் போய்வரலாமென்று யசோவின்  மனம் துடிக்கும்கண்ணனுக்கு ஒன்றுக்கும் மனம் வராது. பொறுக்காமல்  சிலசமயம் வாய்விட்டு அவள் கேட்டால்  சினம் தெறிக்கச் சீறியெழுவான். யசோ மௌனமாகிவிடுவாள்.

வாழ்க்கையென்றால் பலமாதிரியும் இருக்கும், எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டுமென்று தன்னைத் தயார்படுத்திக்கொண்டாள்.
சிலநாட்களாக ஒரே தலையிடி  தண்ணீர் விடாய், உடம்பும் சோர்வாக இருந்தது. டாக்டரிடம் போவோம் என்று கண்ணனிடம் கேட்க, அவன் நளினமாகச் சிரித்துக்கொண்டு கிண்டல் செய்தான்.

 'எடுத்ததுக்கும் டொக்டரிட்டைப் போறதே? படுத்திட்டு எழும்பும், எல்லாம் மாறிப் போயிடும்.'   என்று சொல்லிவிட்டான்.
 யசோ எல்லாவற்றையும் எண்ணிக் கண்ணீர்விட்டபடி, தன்னை அறியாமலே தூங்கிவிட்டாள்
மறுநாள் கண்ணன் தனக்குத் தெரிந்த குலம்  என்ற மொழிபெயர்ப்பாளருடன் வந்திருந்தான்.

டாக்டர் அவள் நோய்க்கான காரணங்களையும், மேற்கொண்டு என்ன செய்யவேண்டுமென்ற குறிப்புக்களையும் கூற, குலம்  யசோவுக்கும், கண்ணனுக்கும் தமிழில் மொழி பெயர்த்தான்.
யசோவின் சிறுநீரகங்கள் சரியாக இயங்கவில்லை, புதிய சிறுநீரகம் பொருத்தப்பட வேண்டும், அதுவரை அவளுடைய இரத்தம்  செயற்கை முறையில் சுத்திகரிக்கப்படவேண்டும். வாரத்தில் மூன்று முறையாவது இந்தச் சிகிட்சை செய்தாக வேண்டும்  என்று டாக்டர் தெரிவித்து  அவளை வீட்டுக்குச் செல்ல அனுமதித்தார். வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக வந்து போகவேண்டிய திகதி அட்டவணையை தாதி குறித்துக் கொடுத்தாள்.
வீட்டுக்கு வந்து சிலநாட்கள் ஆகிவிட்டன. ஒருநாள் யசோவிடம்,
'நீர் கொஞ்சநாளைக்கு பழைய றூமிலை போயிரும். இங்கை வீட்டுக்காரனோடை பிரச்சனையாகக் கிடக்கு!' என்றான்.
அவள் அதிர்ச்சியில் மூச்சடைத்து நின்றாள்.

 'கொஞ்சநாளைக்குத்தானே, நான் அடிக்கடிவருவன்!'

'அங்கை சோசல் வீட்டிலை, யூக்கோஸ்லாவியாச் சனங்கள்,  அங்கோலாப்பெடியள், என்னண்டு நான் தனியப் போறது...?' அழாக்குறையாக நா தழுதழுக்கக் கேட்டாள். கண்கள் கலங்கிக் கண்ணீர் முட்டியது.

'வேறை என்ன செய்யிறது? புதுவீடு எடுக்கும்வரை அங்கை இரும்!'

'என்ன நீங்கள்?'
கெஞ்சும் குரலில் வார்த்தைகள் தடக்க,
'அங்கை பாத்றூம் பிரச்சனையெல்லே...? வருத்தம் எண்டதாலை அடிக்கடி போகவேணும். பொதுபாத்றூம் மாறிமாறி ஆராவது போய்க் கொண்டிருப்பினம். அதோட ரெலிபோனும் இல்லை,
சிறுநீரகம் மாற்றுறதுக்கு கிடைச்சதும் டொக்டர் ரெலிபோன் எடுப்பார், உடனே போகவேணுமெல்லே!'

'இங்கை எடுக்கட்டன்,  நான் உம்மை வந்து கூட்டிக் கொண்டு போறன்.'

'நீங்கள் வேலைக்குப் போனால்...?'

'திருப்பிக் கதைச்சுக்கொண்டுநிக்கிறீர்...!' அதட்டினான் கண்ணன்.

'இஞ்சை இருக்கேலாது தெரியுமோ...? போய் அங்கை கொஞ்சநாளைக்குச் சமாளியும்!'

துக்கம் அலையாக நெஞ்சுக்குள் இடிக்க நாவடைத்துப் போய் நின்றாள் யசோ

'வீட்டுக்காரன்  வரப்போறான,;  அதுக்குள்ளை உடுப்புகளை எடும்! போவம்!'

'இண்டைக்கோ...! குளிக்கேல்லை நவராத்திரி விரதம்... சமைக்கேல்லை!  வடை சுடுகிறதுக்கு  உழுந்து நனையப்  போட்டனான். சுண்டல்,  அவல் எல்லாம் செய்யலாமெண்டு நினைச்சனான்.!'

'உதுகளைக் கொண்டு போய்க் குப்பைக்கை போடும். ஜேர்மன்காரனுக்கு விரதம் எண்டா விளங்குமே....? வாரும், குளிக்கிறஎண்டாக் குளிச்சிட்டு வெளிக்கிடும்.' ஒரே பிடியில் நின்றான் கண்ணன்.

வேறுவழியில்லாமல் யசோ குளித்து விட்டு தன் சூட்கேசுக்குள்  உடுப்புகளையும்   வைத்துக்கொண்டு          அவனோடு வெளிக்கிட்டாள்.

சோசல்றூமில் அவளை விட்டுவிட்டு கண்ணன் உடனே கிளம்பிவிட்டான்.
உள்ளே வந்து அறை என்ன நிலைமையில்  இருக்கு..,  சமைக்க, படுக்க வசதிகள் இருக்கா என்றுகூடப் பார்க்காமல,;  பாரம் குறைந்தது நிம்மதி என்றது போல கூட்டிக்கொண்டு வந்து, தள்ளிவிட்டுப்  போவது மாதிரி கண்ணன் போய்விட்டான்;.

ஐப்பசிமாதம் என்றாலும் குளிர் கொஞ்சம்  அதிகமாகவே தன் வலிமையைக் காட்டியது. கீற்றர் வேலை செய்யவில்லை. உடுப்புக்களைக்கூடக் கழற்ற மனமில்லாமல் கட்டிலில் ஏறிப் போர்வையால்  முகம்வரை மூடிக் கொண்டு படுத்துக் கிடந்தாள்.
அண்ணன் இருந்திருந்தால் இப்படியொருநிலை வந்திராது என்று நினைக்க யசோவின் கண்கள் கண்ணீரைக் கொட்டின.

அடுத்து இயற்கைவளம் சூழ்ந்த ஈழம் அவள் மனதைத் தட்டியது. எப்போ இந்த நாட்டுப்பிரச்சனை தீரும்.... அகதிக் கோலத்தைக் கலைத்துவிட்டு, வீட்டுக்கு ஓடலாமென்ற ஆசை கனவாகக் கோலம் போட்டது!

அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி.... எவ்வளவு சந்தோசமான உலகம் அது. வீட்டுக்கு முன்னால் மல்லிகைப் பந்தல்... அதன் நிழலில் கெந்தி விளையாடிய நாட்கள்தான் எவ்வளவு இனிமை....


யசோ தொலைபேசிக்கூட்டுக்கு நடந்து, கண்ணனின் தொலைபேசி எண்களை அழுத்தினாள்.

மறுமுனையில் 'ஹலோ' என்று குரல் வந்தது.

'நான் யசோ' என்றாள் வாடிய குரலில்.

'என்ன...?'

'ஏன் வரேல்லை?'

'இப்பதான் வேலையாலை வந்தனான், சாப்பிட்டுக் கொஞ்சநேரம் படுத்திட்டு, இரவும் வேலைக்குப் போகவேணும். ஏதும் அவசரம் என்றால் தாமோதரமண்ணைக்கு எடும். நாளைக்கு வாறன்.'

'விடியக் கொஸ்பிற்றலுக்குப் போகவெல்லே வேணும்.'

'எனக்கு நேரமில்லை, தாமோதரமண்ணையைக் கேளும். அவர் கூட்டிக்கொண்டு போவர். நான் பின்னேரமா வாறன்.'

யசோவுக்கு அழுகைதான் வந்தது.

'ஹலோ...! என்ன கதையுமன்.'

'ஒண்டுமில்லை' என்றாள் அழுகையின் நடுவே.

'ஏன் அழுகிறீர்?'

'நான் அழேல்லை..'  என்று யசோ சமாளிக்க, ரெலிபோன் காசு முடிவதற்குரிய ஒலி அடித்தது.

'காசு முடியுது.'

'சரி வை! நாளைக்கு வாறன்.' என்றான் கண்ணன்.

தொலைபேசி 'கூ' என்று தொடர்பு முடிந்தது.

கொஞ்சநேரம் யோசித்துக்கொண்டு நின்றவளுக்கு, தன்னிலைமையை யாருடனாவது கதைக்கவேணும் போல அவள் மனம் துடித்தது. தாமோதரமண்ணை வீட்டுக்கு எடுத்து அவரோடும், நீலாஅன்ரியோடும் கதைத்தால் சற்று மனம் ஆறும்
என்று நினைத்தவளாய், மீண்டும் தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தினாள்.

'ஹலோ!' என்று மறுமுனையில் நீலாஅன்ரியின் குரல் இதமாக ஒலித்தது.

'யசோ கதைக்கிறன்....'

'என்ன யசோ சுகமாக இருக்கிறீங்களே...?ஆக்களைக் காணக் கிடைக்கேல்லை..... நவராத்திரிவிரதம் எல்லாம் எப்பிடி? பலகாரம் செய்தனியோ...?' என்று நீலாஅன்ரி கலகலப்பாகக் கேள்விகளை இரயில்பெட்டி போலக்  கொழுவிக்கொண்டே போக,

'அன்ரி..!' என்று நா தழுதழுக்கக் குறுக்ட்டாள் யசோ.

'என்னடி யசோ...?' என்று செல்லமாகக் கேட்ட நீலா, மறுமுனையில் யசோ விக்கிவிக்கி அழுவதைக் கேட்டுத் திடுக்கிட்ட வளாய் ,
'யசோ...! யசோ....!' என்று கலக்கத்துடன் அழைத்தவள், குளியலறையில் நின்ற தாமோதரனை,
'இஞ்சையப்பா..... ஓடி வாங்கோ!' என்று அழைக்க அவரும் ஓடி வர தொலைபேசியை அவரிடம் கொடுத்து,
'யசோ அழுகிறாள்... என்னண்டு கேளுங்கோ!' என்று பதறினாள்.

'தங்கச்சி...! என்ன பிள்ளை... ஏதும் பிரச்சனையே...?' என்று கூடப் பிறந்த அண்ணனைவிட இரக்கம் மிகுந்த அணைப்புடன் கேட்டார்.

'நான் இப்ப சோசல் வீட்டிலை இருக்கிறன்.....'

'எங்கை சோசல் வீட்டிலையோ....!? அதிர்ச்சியுடன் கேட்டார் தாமோதரன்.

'அங்கை வீட்டுக்காரர் பிரச்சனையென்று  என்னை இஞ்சை விட்டிருகிறார்.'

'நல்ல கதையாக் கிடக்கு! வாறமாதம் கலியாணம் நடக்கப்போகுது, அதென்னண்டு அவன் உன்னைத் தனியா விடுவான்?'

'வீடு மாறுமட்டும் இருக்கட்டாம், வீட்டுக்காரர் பிரச்சனை குடுப்பார்     என்று  இவர் பயப்பிடுகிறார், அதோடை அண்ணை.... நான் ஆஸ்பத்திரியிலை இருந்தனான், எனக்குச் சுகமில்லை.....'

                      

'என்னப்பா நீங்கள்....! ஒரு ரெலிபோன் எடுத்துச் சொல்லக் கூடாதே....? அந்தரம்...அவசரத்துக்கு உதவாமல்  சிநேகிதம் எண்டு என்ன பேருக்கே நாங்கள் இருக்கிறம்...?' என்று கோபம் குரலில் தொனிக்கக் கூறியவர்,
'நாங்கள் கொஞ்சநேரத்திலை வாறம்..... அந்த பழைய சோசல்வீடு தானே...?'

'ஓ! நீங்கள் அண்ணையோடு வந்தனீங்கள் அந்த வீடுதான்.'

'சரி... நாங்கள் வாறம்.' என்று சொல்லி  தொலைபேசியை வைத்தார்.

தாமோதரன் அந்த நகரத்தில் வசிக்கும் பழைய தமிழாக்களில் ஒருவர். எல்லோருடனும் சகசமாகப் பழகும் நல்லமனம் படைத்தவர். அவர் மனைவி நீலாவும் அவரின் குணத்துக்குப் பொருத்தமாக அமைந்திருந்தாள். இருவரும் பலசரக்குக் கடை ஒன்று நடாத்தி வந்தார்கள்.

சொன்னபடி சிறிது நேரத்தில் தாமோதரனும், நீலாவும் வந்து யசோவைப் பார்த்தார்கள். அவள் நிலையைக் காண அவர்களுக்கு கவலை பீறிட்டுப் பாய்ந்தது. மெலிந்து மிகவும் வாடிய நிலையில், பலரக வெளிநாட்டவருடன் அந்தக் கட்டிடத்தின் ஒரு அறையில், தனிமையில், குளிரில் வாடிக்கொண்டிருந்த யசோவை அணைத்து நீலா கண்ணீர் வடித்தாள். அவர்கள் அன்பு அவளுக்கும் பெரும் ஆறுதலளித்தது. தங்களுடன் வந்திருக்கும்படி அவர்கள் வலிந்து அழைத்தும், அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

மறுநாள், தாமோதரமும், நீலாவும் அவளை வைத்தியசாலைக்குச் கூட்டிச்சென்று சிகிட்சை முடியும்வரை ஐந்துமணி நேரத்துக்கு மேல் அங்கே நின்று, யசோவை வீட்டுக்குக் கூட்டிவந்து விட்டபின் கண்ணனிடம் தாமோதரம் போய், என்ன நடந்தது என்று விசாரித்தார்.

'வீட்டுக்காரனோடை பிரச்சனையாப்போச்சு..... அவவுக்கு பதிவு அங்கைதான், கொஞ்சநாளைக்கு அங்கை இருக்கட்டும்.' என்றான்.

'இண்டைக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டுபோகக்கூட நேரமில்லை எண்டிட்டியாம்... என்னடாப்பா...! அந்தப்பிள்ளைக்கு  உன்னை விட்டா வேறை ஆர் இருக்கினம்? தமையன் உன்னை நம்பித்தானே அவளை உன்னோடை விட்டிட்டுப் போனவன்.'


                      

'அது சரி அண்ணை! ஆனா.... ' அவன் வசனத்தை முடிக்காமல் இழுத்தான்.

'சொல்லு...சொல்லு ஏன் மறைக்கிறாய்?' என்று தாமோதரம் அவசரப்படுத்தினார்.

'அவவுக்கு கிட்னி ரெண்டும் எடுக்கவேணுமாம்......'

'தெரியும், யசோ சொன்னவள். பாவம் இந்த வயதிலை இப்பிடி ஒரு வருத்தம்..... வேறை கிடனி மாத்தலாமெண்டு டொக்டர் சொல்லியிருக்கிறாராம்.'

'அது லேசான அலுவலில்லை, சிலபேர் ஐஞ்சாறு வருசங்களாக் கூட, பொருத்தமான கிட்னி கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கினம்....'

'அதுசரி கண்ணன், வருத்தங்கள் மனிசருக்கு வாறது... மாறுறது..... எல்லாம் சகஜம்தானே! அதுகளைப் பெரிசுபடுத்தப் பாக்கிறாய்;.'

'அண்ணை! நான் டொக்டரிட்டை இதுபற்றி விசாரிச்சுப் பாத்தனான்,  விஞ்ஞானம் முன்னேறிய இந்தக்காலத்திலை இதெல்லாம் சாதாரண வருத்தம் என்றுதான் அவர் சொல்லுறார். கலியாணம் செய்யலாம், பிள்ளை பெறலாம் என்றுகூடச் சொல்லுறார், ஆனால்...?'

'சொல்லு.... மனதுக்கை ஒண்டையும் வைச்சிருக்காதை!

'கோவிக்காதேங்கோ...! இதிலை கன பிரச்சனை கிடக்கு!'

'என்ன பிரச்சனை...?'

'எனக்குக் கன இலட்சியங்கள் கிடக்கு, கலியாணத்தைப் பற்றி நான் இப்ப யோசிக்கேல்லை!'

'என்ன கதைக்கிறாய்? இலட்சியம் எண்டுறாய்.... கலியாணத்தைப் பற்றி யோசிக்கேல்லை எண்டுறாய்... உனக்கென்ன விசரே....? பொம்பிளை வேணுமெண்டு கூப்பிட்டு, கலியாணத்துக்கு நாளும் குறிச்சாச்சு, ஒண்டாகவும், இருந்திட்டீங்கள்;.... கதைக்கிறதை யோசித்துக் கதைக்க வேணும்.'

'என்ரை இலட்சியங்களை நான் அடையவேணுமெண்டால் இந்தக் கலியாணம் நடக்காது.'

                       

'ஏன்டாப்பா இப்பிடிச் சொல்லுறாய்...!?

'வருத்தக்காரியைக் கலியாணம் கட்டிக்கொண்டு நான் என்ன செய்யமுடியும்? அதோடை நான் ஒரு பிஸியான ஆள் எண்டு உங்களுக்குத் தெரியும், என்னோடை வந்தவங்களெல்லாம் குடும்பம், பிள்ளை, குட்டி எண்டு எப்பிடி முன்னேறியிட்டாங்கள்.'

'அதுகளை நீயும் நேரத்தோடை செய்திருக்கலாம்தானே! ஏன் இப்ப வயிறெரியிறாய்...?'

'நான் ஒண்டும் வயிறெரியேல்லை, யசோவைக் கலியாணம் கட்டினா என்னாலை சந்தோசமா இருக்கமுடியாது.'

'ஏன் இப்பிடிச் சொல்லுறாய்? இப்ப உனக்கும், யசோவுக்கும் கலியாணம் நிச்சயம் பண்ணிக்கிடக்கு, ஏன் கலியாணம் முடிஞ்சிட்டு தெண்டு வையன், என்ன செய்வாய்...? நீ வருத்தக்காரி ஓடு! எண்டு கலைக்கப் போறியே...?'

'நானும் மனிசன்தான், கட்டியவளை ஓடு எண்டு கலைக்க மாட்டன், அதுதான் கடவுள் கலியாணத்துக்கு முதலே வருத்தத்தை வெளிப்படுத்தி என்னைக் காப்பாத்திட்டார்.'

கண்ணனுடைய கதைக்கு  ஓங்கி ஒரு அறை அவன் கன்னத்தில்  போடவேணும் போலிருந்தது தாமோதரனுக்கு. கஸ்டப்பட்டுப் பொறுமையை வரவழைத்து தன்னை அடக்கிக்கொண்டு முள்ளிலே சேலையைப் போட்டால் பக்குவமாக எடுக்கும் உணர்வுடன்,
'அப்ப அந்தப்பிள்ளையின்ரை கெதி...? உன்னைக் கட்டவெண்டு வந்தது ஊர் முழுக்கத் தெரிஞ்ச விசயம், இப்ப நீ இப்பிடிச் சொன்னா என்ன விளையாடுறியே...!'

'என்னண்ணை! இதென்ன ஊருலகத்திலை நடக்காததே? இது களைப் பாத்தா வாழேலாது. யசோ நல்லாயிருக்கவேணும். ஜேர்மனியிலை எல்லா வசதியும் இருக்கு.'

'என்னாலை நீ சொல்லுறதை ஏற்றுக்கொள்ள முடியாது...? கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப்பார்! உனக்கே தெரியும் நீ சொல்லுறது நியாயமில்லையெண்டு....'

'நியாயம், அநியாயம் பாத்தா வாழமுடியாது, யசோவுக்காகப் பரிதாபப்படுகிறன், பாவம்தான். ஆனா அவளுக்காக என்ரை                       

                     

வாழ்க்கையை விட்டுக்குடுக்க நான் தியாகியில்லை... என்னாலை முடியாது.'

'கலியாணம்; செய்யிறன் எண்டு கூப்பிட்டு இப்பிடி நடுத்தெருவிலை விட்டா பெத்ததாய் தேப்பன்ரை மனம் என்ன பாடுபடும்? கொஞ்சம்  தயவுபண்ணி ஒரு நல்ல முடிவுக்கு வா!'

'என்ரை முடிவு இதுதான், நீங்க யசோவுக்குச் சொல்லுங்கோ வேறை ஆரையும் செய்யச்சொல்லி.....'

'ஒரு மனிசத்தன்மை இல்லாமல் பேசுறாயடா! வெளிநாட்டுக்கு வந்தாப்போலை பண்பாடு, கலாச்சாரங்களை வெட்டி எறியிறதே...? உன்னையெல்லாம் தமிழன் எண்டு சொல்ல வெட்கமாக்கிடக்கு. ஒருத்தருமில்லையெண்டு நினைச்சபடி செய்ய நீ நினைக்கிறாய். அண்ணன், தம்பி இருந்தா இப்பிடியெல்லாம் செய்வியே?' என்று கசப்புடன்  கூறிவிட்டு தாமோதரம் வெளியேறினார்.

'யசோவுக்குக் கஸ்ரகாலம் என்றுதான் சொல்லவேணும்.
கல்யாணமும் குழம்பி, ஒழுங்கான வீடுமின்றி, மனநிலையும் மோசமாகி, உதவிக்கு ஒரு உறவினர்கூட இல்லாமல், நோய்க்கு வைத்தியம் செய்யப் போக்குவரத்து வசதிகளுமற்று அனாதையாக நின்றாள்.

கண்ணனுக்கு, தொலைபேசி எடுத்தும் அவனைச் சந்திக்க முடிய வில்லை. அவன் போக்கு விளங்காமல் தெரிந்தவர்கள் மூலம் கண்ணனை வரும்படி சொல்லிவிட்டும் பலனளிக்கவில்லை.

சிலநாட்கள் கழித்து, தாமோதரம் கண்ணனைச் சந்தித்துக் கதைத்து, விபரத்தைப் பக்குவமாகச் சொன்னபோது யசோ பதறிப் போனாள்.

எத்தனை நாளுக்கென்று அழுகையுடன் இருப்பது...? தனக்குத் தானே தைரியத்தை வரவழைக்க முயன்றாள். சோகம் முட்டிச் சோர்ந்து போகும் நேரமெல்லாம் மனம் தளராமலிருக்க, ஊரில் தன்னைவிட துன்பத்துக்குள் வாழும் மனிதர்களின் அவலங்களை நினைப்பாள்.

துன்பங்களைக் கண்டு துவண்டுவிட்டால் எழுந்து நிற்க முடியாது, துணிந்தவனுக்குத்தான் வாழ்க்கை.... எது வந்தாலும்  எதிர்த்து முகம் கொடுத்தால்தான் ஜெயிக்கமுடியும் என்று மனந்தளரும்                     
வேளையெல்லாம் தனக்குத்தானே தைரியமூட்டியவளாய் வழமையாகச்   செய்ய வேண்டியவற்றைக் கவனித்துக்கொண்டு,
வைத்தியசாலைக்குப்போய் சிகிட்சையும் பெற்றுக்கொண்டு வந்தாள்.

சோசல் வீட்டில் பொதுத்தொலைபேசியில் யசோவுக்கு அழைப்பு
வந்திருப்பதை அங்கு வசிக்கும் ஒரு ஆபிரிக்க இளைஞன் வந்து சொல்ல, அவள் அவசரமாகத் தொலைபேசி இருக்கும் இடத்துக்கு விரைந்தாள்.

கண்ணனாகத்தான் இருக்குமென்ற மன அங்கலாய்ப்புடன், தொலைபேசியைக் கையிலெடுத்து,
'ஹலோ!' என்றாள்.

மறுமுனையில் நீலாஅன்ரி சுகம் விசாரித்துவிட்டு, நவராத்திரி விழாவையொட்டி அங்கு வாழும் தமிழ்மக்கள் பலரும் ஒன்றுகூடி நடாத்தும், 'வாணிவிழா' பற்றிக்கூறி, அவளையும் வரும்படி அழைக்க, அவளும் மறுக்காமல் சம்மதித்தாள்.

அவளை வெளிக்கிட்டு நிற்கும்படியும், தாம் வந்து கூட்டிப் போவதாயும் கூறினா நீலா.

தாமோதரம் வீட்டுக்கும், யசோ இருக்கும் இடத்துக்கும் சாதாரணமாக அரைமணி நேரம் காரில் பிரயாணம் செய்ய வேண்டும்.

யசோ தன்னிடமிருந்த நல்ல சேலையொன்றைக் கட்டி, வெளிக்கிட்டு நிற்க, தாமோதரமும், மனைவியும் காரில் வந்து ஏற்றிக்கொண்டு விழா நடைபெறும் இடத்துக்குச் சென்றார்கள்.

விழா நடைபெறும் இடத்துக்குக் குறைந்தது ஒருமணிநேரம் கார் ஓடியாக வேணும். பல கதைகளையும் கதைத்தவாறு இருக்க, நேரம்போனது தெரியவில்லை. இடம் தாமோதரத்துக்கு தெரிந்திருந்ததால் தேடவேண்டிய தேவை இருக்கவில்லை.

யசோவுக்கு எல்லாமே புதுமையாக நம்ப முடியாத விதத்தில்; அமைந்திருந்தது.

பூசகர் சிறப்பாகப் பூஜை நடாத்தி வைக்க, பெண்பிள்ளைகள் இருவர் தங்கள் இனிமையான குரலில்  சகலாகலாவல்லிமாலை இசைக்க, மிக அருமையாக அந்த நவராத்திரி வைபவம் நடைபெற்றது.

                    

இசை, நடனம், பேச்சு, கவிதை என்று சிறுவர்களும், பெரியோர்களும் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்திவிட, யசோ ஜேர்மனியில் இப்பிடி ஒரு தமிழ் மழையா...? என்று உணர்ச்சி துளிக்க உட்கார்ந்து இரசித்துக் கொண்டிருந்தாள்.

சின்னஞ்சிறுவர்களின் தமிழாற்றலைக் கண்டு அசந்து நின்ற அவள், இடைவேளைக்கு நீலாவிடம் விசாரித்தபோது, அம்மாணவர்கள் தமிழ்கற்று வருவது பற்றியும், இதற்காக ஜேர்மன்பூராகவும் கல்வியமைப்புகள் இயங்கி வருவதாயும் தெரிந்து கொண்டாள்.

தன்னைப்போன்ற பெண்கள் ஆசிரியர்களாக அங்கு சிறுவர்களுக்குக் கலைநிகழ்ச்சிகளைப் பயிற்றுவித்து வழங்கு வதையும் கண்டு களித்தவள், வீட்டுக்குத் திரும்பும் வழியில் தாமோதரத்துக்கும், நீலாவுக்கும் மனப்பூர்வமாக நன்றி சொன்னாள். 


                   ----------

ஜானகி வீட்டுக்கு அவள் அத்தான் இராகுலன் வந்தான். மனைவி, தங்கை கமலத்தின் பிரசவம் பார்க்க பிரான்சுக்குப் போயிருந்தாள்.
இராகுலன் அற்ககோல் அளவுக்கு மீறியே எடுக்கும் பழக்கம் கொண்டவன். மொளமொளவென்று வயிறு சேட்டுக்குள் தள்ளிக் கொண்டு நிற்கும். நடுத்தலையிலே வழுக்கை விழுந்து பளபளத்தது. எப்போதும் போல கிளீன் சேவ் செய்திருந்தான்.

பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுத்துப் படுக்கவிட்டாள் ஜானகி.

'சாப்பிட்டு வீட்டை போங்கோவன், அக்கா ரெலிபோன் எடுத்துப் பாத்திட்டு, காணேல்லை எண்டு கவலைப்படப்போறா!' என்று அவனை மறைமுகமாக, 'போயிடு!' என்ற அர்த்தத்தில் கூறினாள் ஜானகி. அவளுக்குக் கொஞ்சம் பயமாகவம் இருந்தது.

கோகுலனும் வீட்டில் இல்லை, லீவில் இலண்டன் போயிருந்தான்.

'நான் அப்போதை எடுத்துக் கதைச்சனான், அவள் இனி எடுக்க மாட்டாள்.' என்றான் இராகுலன்.
'சாப்பாடு போடுறன்!'

'கொஞ்சம் பொறு! வா, கொஞ்சநேரம் கதைச்சுக்கொண்டு இருப்பம்!'

மறுக்க முடியாதவளாய், வந்து எதிரேயிருந்த சோபாவில் இருந்து, ரிவியைப் போட்டாள்.

'இப்பவும் நீ நல்ல வடிவா இருக்கிறாய்!' என்றான் இராகுலன்.

ஜானகி கேட்காதவள் மாதிரி இருந்தாள். அவனை எப்படி வீட்டை விட்டு அகற்றவது என்று அவள் மூளை அவசரப்பட்டது.

'என்ன கேளாதது மாதிரி இருக்கிறாய்?' என்ற எழுந்துபோய் ஜானகிக்குப் பக்கத்தில் இருந்து,
'முறைக்கு நான் தானே உன்னைச் செய்திருக்கவேணும், எங்கடையள் சீதனத்துக்காக கமலத்தை என்ரை கழுத்திலை கட்டிவிட்டிட்டுதுகள்.'
'வாங்கோ சாப்பிட! எனக்குப் பஞ்சியாக் கிடக்கு, விடிய எழும்ப வேணும்!' என்றாள்.
'எனக்கு உன்னிலை சரியான விருப்பம், வெறியிலை சொல்லேல்லை சாப்பாடு என்ன சாப்பாடு, உன்னோடை நிறையக் கதைக்கவேணும்
இரு! ஏன் பயப்பிடுறாய்? நான்தானே உன்ரை முறை மாப்பிள்ளை.'



'நான் கலியாணம் கட்டி, பிள்ளையளுடன் இருக்கிறன், நீங்களும் மனிசி, பிள்ளையளோடை இருக்கிறீங்கள், ஏன் தேவையில்லாத கதையை... சாப்பிடுங்கோ, பசிக்காட்டி போயிட்டு நாளைக்கு வாங்கோ!' என்றாள் ஜானகி.

'ஏன் கலைக்கிறாய்? அந்தக் காலத்திலை நானும், நீயும் கூடித்திரிந்த நாட்களை நினைத்துப்பார்! உனக்கு என்னிலை நல்ல விருப்பம், இல்லையோ சொல்லு!' என்று கேட்டான் இராகுலன்.

'குழந்தையாயிருக்கேக்கை சொந்தக்காரரிலை அன்ப வைக்கிறது வழக்கம்தான், அதை ஏன் இந்த நேரத்திலை சொல்லிக்கொண்டு நிக்கிறீங்கள்.'

'உன்னிலை எனக்குக் கொள்ளை விருப்பம், அதுதான் சொல்லுறன், உனக்குப் புருசன் செத்துப்போனான், பாவம். ஒண்டும் செய்யேலாது, நீ ஓமெண்டு சொல்லு, நானும், நீயும் சந்தோசமா இருக்கலாம், கமலத்தை கலைச்சுப்போட்டு நான் உன்னை இரண்டாந்தாரமாக் கட்டுறன்.'

Keine Kommentare: