Freitag, 6. Mai 2011

பகுதி-12



'


ஜானகி மறுநாள் வேணிவீட்டுக்கு வந்தாள். கண்ணன் வேலைக்குப் போயிருந்தான். வேணி தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஜன்னல் திறந்துவிடாததால், வீட்டுக்குள் ஒரே வெக்கைமணம், ஹோலுக்குள் கழற்றிப் போட்ட உடுப்புக்கள் அங்குமிங்குமாகக் கிடந்தன. படுக்கையறை பார்க்கத் தேவையில்லை, படுமோசமாக இருந்தது.

'இந்த நேரத்திலை படமே பாக்கிறாய்?' கேட்டாள் ஜானகி.

'வேறை என்ன செய்யச் சொல்லுறாய்?'

'வீடு கிடக்கிற கிடைக்கு என்ன செய்யிறதெண்டு கேக்கிறியே?'

'தலையிடிக்குது.... ஒண்டும் செய்ய மனமில்லை.'

'ஜன்னலைத் திறந்து நல்ல காற்றை வீட்டுக்கைவிடு! தலையிடி தன்ரைபாட்டிலை போகும்! வேலைக்குப் போன மனிசன் திரும்பி வரப் போறார், நீ இன்னும் தலை இழுக்காமல்... என்ன கோலம் இது? ஆரும் பார்த்தா எங்களையுமெல்லே குறை சொல்லுவினம்!'

'உங்களை ஒருத்தரும் குறை சொல்ல மாட்டினம், இது என்ரை வீடே... விரும்பினபடி வைச்சிருக்க...? வாடை வீடு, இருக்குமட்டும் இருந்திட்டுப் போறது!'

'அது உன்ரை இஸ்டம்... நான் வந்த விசயம் வேறை.. கண்ணன் நேற்று வீட்டை வந்தவர்....'

'ஏன் வந்தவர்? எனக்குச் சொல்லேல்லை!'

'அவர் சொன்னதை நான்  நம்பேல்லை, இஞ்சை வந்து பார்த்த பிறகுதான், வீடு கிடக்கிறகிடையைப் பாக்க நம்பத்தான் வேண்டிக் கிடக்கு!'

'வீட்டுக்;கதையை ஊர்ஊரா விற்கவும் தொடங்கிட்டார், வரட்டும்!'

'ஏன் மரியாதை இல்லாமல் கதைக்கிறாய்...? அவர் உனக்குத் தாலி கட்டின புருசன்.'
புத்தகம் – பக்கம் -117  
'புருசனோ.. புடலங்காய். தெரிஞ்சிருந்தா கழுத்;தை நீட்டியிருக்க மாட்டன்.'

'இப்பிடிச் சொல்லாதை! கலியாணம் கட்ட முந்தி, இவன் வேண்டாம், அவன் வேண்டாமெண்டு நல்ல கணவனைத் தேடலாம். கட்டினபிறகு, இவன்தான் எல்லாமெண்டு அவனுக்கு அடங்கி வாழக்கற்றுக்கொள்ள வேணும், இல்லாட்டி வாழ்க்கை தொலைந்து போயிடும்!'

'நீயே வாழ்க்கையைத் தொலைச்சுப்போட்டு நிக்கிறாய்! பிறகு எனக்கென்ன வாழ்க்கையைப்பற்றி பாடம் சொல்லிக் குடுக்கிறியோ?'

'எடியே! நான் உன் அக்காவெடி! நான் முந்தி உன்னைமாதிரித்;  தான் துடிப்பா இருந்தன், இப்ப எல்லாம் போச்சுதடி...' கண் கலங்கினாள் ஜானகி.

'உன்ரை வயசுக்கு இன்னொரு கலியாணம் கட்டிச் சந்தோசமா இருக்கலாம்தானே! ஆர் உன்னை இப்பிடி அலையச் சொன்னது?'


'பாவங்களுக்குத் தண்டனைகள்  உண்டு, அதுதான் நான் அனுபவிக்கிறன்.'

'ஏன் அக்கா அழுகிறாய்? எனக்கு இந்தக் கலியாணம் சந்தோசத்தைத் தரேல்லை.'

'ஏன் அப்பிடிச் சொல்லுறாய்?'

'அவர், இன்னும் தம்பி, தமக்கை, தாய், தகப்பன் எண்டு காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஆமான வீடு இல்லை, மற்றவை எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கினம். ஒரு பழங்கிடையன் காரை வைச்சுத்தள்ளிக்கொண்டு திரியிறார். நல்ல வேலையில்லை. கோர்ட் சூட் போட்ட, படிச்ச ஒருவனா எனக்குப் பேசியிருக்கலாந்தானே! அண்ணை சீதனத்துக்குப் பயந்து, இப்பிடியான ஒரு ஆளை எனக்குக் கட்டித்தந்திருக்கிறார்.'

'வேணி!' அதட்டினாள் ஜானகி.

'இப்ப அவர் உன்ரை புருசன், இப்பிடியொரு வாழ்க்கையாவது கிடைச்சிருக்கே எண்டு கடவுளுக்கு நன்றி சொல்லுறதை விட்டிட்டு, என்னடி உளறுறாய்? இப்ப வன்னியிலை இருந்தா எப்பிடி இருக்கும் கொஞ்சம் யோசிச்சுப்பார்!' என்றாள் ஜானகி.

'ஏன்.. எனக்கென்ன தலையெழுத்தே... என்னட்டை வடிவில்லையோ, படிப்பில்லையோ... நீங்களெல்லாம் இருக்கேக்கை நான் ஏன் கஸ்டப்படவேணும்?
'வேணி! இருக்கிறதை எறிஞ்சு போட்டு, பறக்கிறதுக்கு எட்டாதை!'

'இருக்கிறது குப்பை, அதை எறிஞ்சா என்ன? கொட்டினா என்ன? நான் ஒண்டும் குறைஞ்சுபோக மாட்டன்.'
'அப்ப ஏனடி கட்டினனீ...? கட்ட முந்தியெல்லோ மாட்டன் எண்டிருக்க வேணும்.'

'எனக்குத் தெரியுமே? நேற்றும் தம்பியார் எடுத்து, மில் வாங்கப் போறன் எண்டுறார். இவர் பெரிய கொடைவள்ளல் கர்ணன்.. உடனை ஓம்.. இந்தா அனுப்பிறன்! எண்டு பாங்குக்கு ஓடுறார்.'

'அது அவரின்ரை பிரச்சினை, அவர் குடும்பத்தை அவர்தானே பாக்க வேணும். உன்னைப் பட்டினி போட்டு அப்பிடிச் செய்தாத்தான் பிழை.. பெத்து வளர்த்த தாய்தகப்பனை வேறை ஆர் பாக்கிறது?'

'மற்றப் பிள்ளையள் சிலோனிலை இருக்கினம் தானே, அவையும் பாக்கலாம்தானே!'

'ஊரிலை அவரவர் தங்கடை பாட்டையே பாக்கக் காணேல்லை, அங்கை இருந்திட்டு வந்த நீயே, இப்பிடிக் கேட்டா...? பேசாமல் அந்தாளின்ரை சொல்லைக் கேட்டு வாழப்பார்! சும்மா வாய் காட்டாதை!'

'உங்களுக்கு என்ன தெரியும்? இப்பிடிப் பிரச்சனை அவரவருக்கு வரேக்கைதான் தெரியும்.'

'ஏன் எனக்குத் தெரியாதோ?'

'இவ்வளவு நாளும் உழைச்சு என்ன செய்தவர்? வீட்டுக்குத்தானே கொட்டினவர். இப்ப கலியாணம் கட்டியிட்டார், இனி மனிசி பிள்ளையள் எண்டு வாழ வேணுமெண்டா காசு வேணும், சேமிக்கப் பழகவேணும்.'

'எல்லாம் போகப்போகச் சரிவரும், நீ வந்தவுடனேயே நூற்றுக்கு நூறு உன்ரை எண்ணம் போலை நடக்க அவர் ஒண்டும் கொம்பியூட்டரில்லை. கொஞ்சம் கொஞ்சமாத்தான் வழிக்குக் கொண்டு வரலாம்.'

'அது எனக்குச் சரிவராது, வெட்டு ஒண்டு, துண்டு இரண்டு எண்டு நடப்பவள் நான்.'

'இதுக்கு மேலை நான் என்ன சொல்ல? அக்கா எண்ட முறையிலை, என்ரை அறிவுக்குப்பட்டதைச் சொல்லியிருக்கிறன். பார்த்து நடந்துகொள்! கலியாணம் கட்ட முந்தி அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் கூட நிப்பினம், கட்டினபிறகு கணவன், பிள்ளையள்தான் பக்கத்திலை கூட இருப்பினம், கடைசிவரை வரப் போறவையும் அவைதான். இப்ப இருக்கிற வசதிகளைக் கண்டிட்டு நீ துள்ளாதை! இந்த வசதிகளும் எங்களை விட்டிட்டு விலகிப் போகக் கனநேரம் எடுக்காது.' என்ற ஜானகி மணிக்கூட்டைப் பார்த்துவிட்டு, 'எனக்கு நேரமாகுது, நான் போட்டு வாறன்!' என்று விடைபெற்றாள்.
           



ஜானகிவீட்டுக்கு இராகுலனின் மனைவி கமலம் வந்தாள். கதவைத் திறந்துவிட்டவள், வாங்கோ என்று கூட ஒரு வார்த்தை அழைக்க மனமில்லாமல், மினுக்கிக் கொண்டிருந்த உடுப்பைத் தொடர்ந்து மினுக்கினாள்.

'ஜானகி! என்ன பேசாமலிருக்கிறாய்?'

'என்னத்தைப் பேசிறதெண்டு யோசிக்கிறன்.'

'எத்தினை நாள் கழித்து வந்திருக்கிறன், பேசுறதுக்கே கதையில்லை?'

'எனக்கு மனம் சரியில்லை, நீங்கள் போட்டு இன்னொரு நாளைக்கு வாங்கோ!'

'ஏன் கோவிக்கிறாய்?'

'எனக்கு ஒருதரோடும் கோபமில்லை. நானும், பிள்ளையளும்  தனியா இருந்தாலும் நிம்மதியா இருக்கிறம், அதைக் கெடுக்காமல் இருங்கோ! உங்கடை புருசனை இஞ்சை வரவேண்டாமெண்டு சொல்லுங்கோ... நீங்கள் இல்லாதநேரம் இங்கை வந்து, தனியா இருந்த என்னை என்னவெல்லாம் கேட்டவன் எண்டு கேளுங்கோ!'

'அவர்  உன்ரை கொத்தான்.... எனக்குத் தெரியுமே என்ன கேட்டவரெண்டு!'

'கலியாணங்கட்டி, பிள்ளையளும் வளந்திட்டுதுகள்...மனிசர் மாதிரியே நடக்கினம்...?'

'ஏன் ஏதோ பிழையா நடந்தவரே?'

'என்னக்கா சாதாரணமாக் கேக்கிறீங்கள்? உங்களுக்காக விட்டனான், இல்லாட்டி பொலிசுக்குச் சொல்லி, ஜெயிலுக்கு அனுப்பியிருப்பன்.'

'என்ன ஜானகி குழந்தைப்பிள்ளை மாதிரி...? அவர் பியரைக் குடிச்சா என்ன கதைக்கிறதெண்டு தெரியாமல் ஏதேனும் கதைச்சிருப்பார், நீ இதையெல்லாம்; பெரிசுபடுத்துறாய்!'

'குடிச்சாக் குடிச்சிட்டு வீட்டிலை படுக்க வேணும்  கமலமக்கா, அடுத்தவீட்டை போய் இன்னொருத்தன்ரை மனிசியின்ரை புடவையை பிடிக்கக்கூடாது!'


'முறைமச்சான் எண்டிட்டு, பகிடிபகிடியா அப்பிடி இப்பிடியேதும் செய்திருப்பர், இதுக்குப் போய்க் கோவிக்கிறாய்!'

'அக்கா! நீங்களும் ஒரு பொம்பிளை... உங்கடை புருசன் நடந்த விதத்துக்குக் கோவிக்காமல் வேறை என்னக்கா செய்யிறது?'

'வடிவா இருக்கிறாய், ஸ்ரைலாத் திரியிறாய், ஆம்பிளையளுக்குப் பார்க்க ஆசையாயிருக்கு! நாங்கள் பொம்பிளையள்தான் கொஞ்சம் அடக்கமா இருக்கவேணும்.'

'வீட்டிலை இருந்த என்னட்டை வந்து, நடக்கக்கூடாத விதத்திலை அநாகரிகமா நடந்திட்டுப் போயிருக்கிறார். அவருக்கு வக்காளத்து வாங்குறீங்கள், வெளிநாட்டிலை வேலை செய்யிற நான் வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டு மூலைக்குள்ளை இருக்கேலுமே...?'

'அப்பிடி அடக்கமா இருந்தா, ஆரும் வராயினமெண்டு சொல்லுறன்.'

'இஞ்சை ஆரும் வரேல்லை... உங்கடை புருசன்தான் வந்தவர்... எனக்கு ஒரு கதையும் வேண்டாம். நீங்களோ, அவரோ இனிமேல் எங்கடை வீட்டை வரவேண்டாம்.... தயவுசெய்து வரவேண்டாம், என்னை நிம்மதியா இருக்க விடுங்கோ!'

கமலம் எழுந்து கையை விரித்து, முகத்தை நெளித்துவிட்டு வெளியேறினாள்.


                        ----------



லவன் படித்துக்கொண்டிருக்க, அவனிடம் குசன் கவலையுடன் வந்தான்.

'லவன்!'

'என்ன..?'

'அம்மா கலியாணம் செய்தா எவ்வளவு நல்லது..'

'ஏன்டா...?' என்று புத்தகத்தை மூடிவிட்டு, தம்பியாரைப் பார்த்தான்.

'அம்மா கலியாணம் செய்தா, எங்களுக்கொரு புதுப் பப்பா வருவாரெல்லேடா...!'

'அதை அம்மாவைப் போய்க் கேளன்!'

'நீயும் வாடா...!'

'அம்மாவுக்குக் கலியாணம் செய்ய விருப்பமில்லை.'

'ஏனடா? அப்பா ஒருத்தர் இருந்தால் எவ்வளவு நல்லது! டேவிட்.. அவன்ரை அம்மாவும் கலியாணம் செய்து, அவனுக்குப் புதுஅப்பா வந்திட்டார்.' என்று உதாரணம் காட்டினான் குசன்.

'டேவிட்டின் அம்மா ஜேர்மன்காரி, நாங்கள் தமிழர்... எங்கடை ஆக்கள் அப்பா இல்லாட்டி, திரும்பக் கலியாணம் செய்யிறது குறைவு!' என்றான் லவன்.

'பரதன்மாமா மாதிரி ஒரு அப்பா எண்டால், அம்மாவுக்கும் விருப்பமாயிருக்கும்.' என்று மேலும் சொன்னான் குசன்.

'அம்மாவுக்கு அப்பாவைத் தவிர, வேறை ஒருத்தரிலும் விருப்பமே இல்லை.' என்று தாயின் மனக்கிடக்கைகளைத் தம்பியாருக்குக் கூறினான் லவன்.

                     
                        ----------


கோகுலன் கொழும்புக்குச் செல்லத் தயாரானான். அவன் தாயும்;  தகப்பனும் ஏற்கனவே கொழும்பில் தங்கியிருந்தார்கள். ஊரிலே அவனுக்குப் பொம்பிளை பார்த்து கொழும்புக்கு வருகிறா. பார்த்துப்பேசிப் பொருத்தமென்றால் திருமணமும் செய்யும் தீர்மானமும் இருந்தது.

முதல் ஒரு பெண் பார்த்து அவனுக்கு அனுப்பி வைக்கும் தறுவாயில், யாரோ வேண்டாதவர்கள் இல்லாததையும், உள்ளதையும் பெரிதுபடுத்திக் காட்டிக் குத்திவிட்டார்கள்.
இதனால் இரண்டாந்தரம் அதே பிசகு எழக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருந்தான்.
பயணத்துக்கு முதல்நாள் யசோவைச் சந்தித்து விடைபெறச் சென்றான்.

'மாப்பிள்ளை வாங்கோ!' என்றாள் யசோ. அவன் இலங்கை போய் வர இருப்பது, ஏற்கனவே அவளுக்குத் தெரியும். முகத்தில் வாட்டம் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், பூசி மறைக்க முகத்தில் சிரிப்பை விசேடமாக அழைத்திருந்தாள்.

'சிலோனிலிருந்து என்ன வேண்டிக்கொண்டு வாறது...?'

'ஒண்டும் வேண்டாம், நீங்கள் பத்திரமாப் போட்டு வந்தால் அதுவே போதும்!' என்றாள்.
'எதாவது கொண்டு வந்தால், வேண்டாமெண்டு சொல்லுவீங்களா...? சந்தோசப்படமாட்டீங்களா..?'

'நான் ஒரு வருத்தக்காரி, நான் சந்தோசமாக இருந்தாலென்ன இல்லாட்டியென்ன... ஆருக்கு நட்டம்?'

'உங்களை ஆர் வருத்தக்காரி எண்டது? ஏன் இப்பிடிக் கவலையாக் கதைக்கிறீங்கள்?'

'ஒண்டுமில்லை!'

'நான் சிலோனுக்கெல்லே போட்டு வரப்போறன், சிரிச்சுக்கொண்டு வழியனுப்புறதுக்கு, அழுகிறமாதிரி இருக்கிறீங்கள்.'

'நீங்கள் நல்லாயிருக்க வேணும், சந்தோசமாப் போட்டு வாங்கோ! அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியா உங்களிலை உயிரையே வைச்சிருக்கிறன், கவனமாப்போய் பொம்பிளையை உங்களுக்குப் பிடிச்சுக்கொண்டால் கலியாணம் செய்து கொண்டு வாங்கோ! என்ரை வாழ்த்து என்றைக்கும் உங்களுக்கு இருக்கும்!'

'யசோ! கலியாணத்துக்கு நான் அவசரப்படேல்லை, அம்மா ஒற்றைக்காலில் நிக்கிறா. எத்தினைதரம் மாட்டன் எண்டு சொல்லுறது. இது நல்ல இடமெண்டு அப்பாவும் சேர்ந்து மறுப்புத் தெரிவிக்கமுடியாதளவுக்கு ரெலிபோனிலை சொல்லியிட்டினம்.'
 
'கலியாணம் எண்டது இந்த வயதிலைதான் செய்யிறது, மினுமினுப்பா, கம்பீரமா, தலையிலை அடர்ந்த கறுத்தமுடி இருக்கேக்கை, வயிறு தொந்திவிழ முதல் செய்யேக்கை ஒரு அழகு இருக்கு! போய்ச் சந்தோசமாச் செய்திட்டு வாங்கோ!'
'என்ன... இண்டைக்குக் கனக்கக் கதைக்கிறீங்கள்?'

'நீங்கள் வருமட்டும் இங்கை பம்பலில்லை, போறடிக்கும்.'
'இரண்டு கிழமை லீவிலைதானே போறன், டக்கெண்டு வந்திடுவன்.'
'கலியாணம் செய்தால், பிறகு மனிசியைக் கவனிக்கவே நேரம் போதாது, பிறகெங்கை மற்றவையைக் கவனிக்கிறது?'

'ஏன் அப்பிடி நினைக்கிறீங்கள்? என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே!'


'உங்களைப்பற்றி நல்லாத் தெரியும், ஆனா கலியாணம் செய்தா அநேகமான ஆம்பிளையளின்ரை பாதிக்குணங்கள் பதுங்கி ஒழிச்சிடும். மனைவியின் மீது கொண்ட பாசத்தாலோ அல்லது பயத்தாலோ தெரியாது. இதை அநேகமான  இடத்திலை நான் பாத்திருக்கிறன்.'
'கோகுலன் வித்தியாசமானவன்!'

'யசோவும் வித்தியாசமானவள்தான், ஆனால் ஆரையும் கவலைப் படுத்தமாட்டாள்.'

'நீங்கள் சொல்லுறதைப் பாத்தால் நான் யாரையோ கவலைப்படுத்திற மாதிரியெல்லோ கிடக்குது!'

'நான் விசரி, ஏதோ உளறுறன். நீங்களும்  என்னை மாதிரித்தான்  ஆரையும் கவலைப்படுத்தமாட்டீங்கள், ஒண்டுக்கும் யோசிக்காமல் சந்தோசமாப் போட்டு வாங்கோ!'

'அம்மா, அப்பாவைப் பார்க்கத்தானே வேணும், யாழ்ப்பாணம் போகப்போயினமாம். அங்கை போனா பிறகு கஸ்டம்தானே!'

'ஓ! பின்னையென்ன.... போய்ப்  பாத்திட்டு வாங்கோ! யாழ்ப்பாணம் பிறகு போகலாம்தானே, அப்ப நானும் வாறன்.'

'உங்களுக்கும் ஊர் ஆசை வந்திட்டுது!'

'பெற்ற தாய், தந்தை, பிறந்த ஊர், கும்பிட்ட கோவில் இதெல்லாத்தையும் விட்டிட்டு, இங்கை வந்து ஏதோ வாழுறம். அதெல்லாம் உயிரோடை ஒட்டிய பந்தங்கள், மரணம்வரை கண்முன்னே நிற்பவை!'

'என்ன செய்யிறது....? இதுதான் விதி என்றிட்டு இருக்கிறது, வாழ்க்கை வாழவேணுமே! சரி உங்களுக்கு என்ன கொண்டு வாறது...? சொல்லுங்கோவன்.'

'மயூரி அம்மன் கோவிலுக்குப் போகேலுமென்றால் ஒரு அர்ச்சனை செய்யுங்கோ!'
'ஆர் பேருக்கு...?'
'சும்மா ஒரு அர்ச்சனை, அம்மாளுக்குத் தெரியும்.'

'உங்களுக்குக் கலியாணம் சீக்கிரமாக் கைகூட வேணுமெண்டு தானே!' கேட்டான் கோகுலன்.

'இதைவிட வாழ்க்கையிலை வேறை ஆசையளே இல்லையா...?


'ஒரு பெண்ணுக்கு திருமணம் எண்டது வாழ்க்கையிலை முக்கியமான ஒண்டுதானே.'

'எனக்கில்லை....!'

'ஏன்?'

'எனக்கு அதைவிட வேறை பெரிய ஆசைகள் இருக்கலாமெல்லே!'

'இருக்கலாம், அது என்னெண்டு சொன்னால் தானே, நானும் சேர்ந்து அர்ச்சனையின் போது கும்பிட முடியும்.'

'எனக்கு உயிராய் இருப்பவ ஜானகியக்கா, அவ நல்லாயிருக்க வேணும் எண்டதுதான் என்ரை பெரிய ஆசை.'

'அப்ப, நான் நல்லாயிருக்கவேணுமெண்டு கும்பிட மாட்டீங்களா?'

'நீங்கள் நல்லாயிருப்பீங்கள், உங்களைக் கட்டப்போறவ ஒண்டுக்குப் பத்துத் தடவை சுத்திச்சுத்திக் கும்பிடுவா.'

                       ----------

தாமோதரனின் கடைக்குப் போனான் கோகுலன்.

'அண்ணை, எப்பிடிச் சுகமா இருக்கிறீங்களே...?'

'சுகத்துக்கு என்னடாப்பா...? என்ன சிலோனுக்குப் போறியாம்.'

'ஓமண்ணை, அம்மா, அப்பாவைப் பாத்திட்டு வரலாமெண்டு பாக்கிறன்.'

'கலியாணம் கட்டப் போறாய் எண்டு சனம் கதைக்குது!'

'அதுவும் தான்!'

பென்னாம்பெரிய பூசனிக்காயைச் சோத்துக்கை மூடி ஒழிக்கிற மாதிரி ஒழிக்கப் பாக்கிறாய்!'

'சீ...சீ.... வீட்டுக்காரர் தெரியாதே ஒரே ஆக்கினையாக் கிடக்கு!  அக்காவும் ஒற்றைக்காலிலை போய்ச் செய்துகொண்டு வா! எண்டு கலைக்கிறா.'

'சரி...சரி, ஏன் வெட்கப்படுகிறாய்? நல்ல விசயம்தானே. மற்றது இரண்டு, மூண்டு தரம் உனக்கு ரெலிபோன் எடுத்தன், எங்கை போறனி..?'

'அக்கா வீட்டைதான் போயிருப்பன், ஏன் சும்மா எடுத்தனீங்களே?'

'இல்லை, காசு கொஞ்சம் தரலாமெண்டு நினைக்கிறன்.'

'என்ன காசு...?'

'என்ன காசெண்டு கேக்கிறாய்...! நான் உன்னட்டை கடை போடேக்கை வாங்கின காசு, நான் கேட்க கேட்க ஒண்டும் சொல்லுறாயில்லை. பக்கத்துக்கடை விடப்போறாங்களாம்.. விருப்பம் எண்டாச் சொல்லு! பங்காச் செய்வம்!'

'எனக்குப் பிரச்சனையில்லை.'

'அப்ப செய்வமடா!' புடவையும், நகையும் அந்தக் கடைக்கை போடலாம், நல்லா ஓடும்!'

'ஒண்டண்ணை! மாதவன் அண்ணைக்குக் காசு குடுக்க வேணும், மாதம் மாதம் வட்டிக்கே உழைக்கிற சம்பளம் போகுது!'

தாமோதரன் யோசித்தார்.
'சீட்டொண்டு தொடங்குது, சேர்ந்திட்டு இரண்டாவது மூண்டாவதிலை கழிவு போனாலும் பறவாயில்லை, எடுத்துக்குடு!'

'ஐயோ அண்ணை! சீட்டோ... வேண்டாமண்ணை! ஒருக்காப் பட்ட நட்டம் போதுமண்ணை! யசோவோ, அக்காவோ அறிஞ்சால் அடிக்க வருவினம்.'

'எல்லா விசயங்களையும் பொம்பிளையளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது, பிறகு சொல்லலாம்.'

'சரி, அப்பிடித்தானெண்டாலும்... என்னெண்டு சீட்டுக் கட்டுறது? வட்டிக்காசு குடுக்கத்தான் சரி!'

'என்னட்டை நீ தந்த பத்து... அது இப்ப ஏழு வருசம்... வட்டியும், முதலும்; எவ்வளவு எண்டு பார்!

'உங்களிட்டை நான் வட்டி வேண்டுவனே? என்னண்ணை நீங்கள்?'

'நீ கோகுலன் எண்டா, நான் தாமோதரன். உனக்கு நான் இப்ப வட்டியும் தரேல்லை, முதலும் தரேல்லை. உன்ரை முதலை நான் பங்காத்தான் கணக்கிலை வைச்சு, அதுக்கு லாபம் கணக்குப் பார்த்து, பாங்கிலை வைச்சிருக்கிறன். எவ்வளவு தெரியுமே?'

லாச்சியைத் திறந்து, கணக்குத் துண்டை எடுத்துக் கொடுத்துவிட்டு வியாபாரத்;தைக் கவனித்தார்.

கோகுலன் பிரமித்துப் போய் நின்றான்.

'ஒண்டு போட்டு நூறு கொடுப்பான் விவசாயி, நூறை ஆயிரம் ஆக்குவான்; வியாபாரி.'

'அண்ணை! நான் இல்லையெண்டு சொல்லேல்லை, நீங்கள் கஸ்டப் படுகிறீங்கள், உழைக்கிறீங்கள்! சும்மா இருந்த எனக்கேன்?' என்று கேட்டான் கோகுலன்.

'சும்மா இருந்தாலும் முதல் போட்டது நீ! இது ஆதாயம்.'

'அப்ப நீங்கள் கடை போடேக்கை, கொஞ்சம் உதவி செய்  எண்டு கேட்டீங்கள்! தந்தன், அதுக்கு நீங்கள் முதல்... லாபம் எண்டு பெரிசுபடுத்திறீங்கள்.'

'உனக்குத் தெரியும் 'ராமும், நானும் எப்பிடிப் பழகினனாங்கள்  எண்டு.....!'

'அதுசரி...!'

'அப்ப நான் சொல்லுறதைக்  கேள்! உனக்கு காசு வேணுமெண்டா தாறன். இல்லாட்டி இரண்டு பேருமா கடையை எடுத்துச் செய்வம்!'

'பாவக்காய் என்ன விலை...? ஒண்டும் நல்லாயில்லை... அழுகல் பிடிச்சமாதிரிக் கிடக்கு!' என்று சாமான் வாங்க வந்த ஒருவர் கேட்டார்.

'எடுங்கோ! பாத்துப் போடலாம்.' என்று மரக்கறிகள் இருந்த இடத்துக்கு பொலித்தீன்பை ஒன்றை எடுத்துச் சென்று, பாவற்காயை அதற்குள் எடுத்துப்போட்டு,
'வேறை என்ன எடுக்கப் போறீங்கள்?' என்று கேட்டார்.

'அரிசி எடுத்தனான்,  தேங்காய்... புளி... படக்கசற் இது இரண்டும்
ரெலிபோன்கார்ட்டும்.....'

கணக்கைப் பார்த்து, காசை வாங்கி, மிச்சத்தையும் கொடுத்து வழியனுப்பிவிட்டு, கோகுலனைப் பார்த்தார் தாமோதரன்.

'பொம்பிளைப்பிள்ளை ஒண்டை வேலைக்கு வைக்கவேணும், மகள் இடைக்கிடை வந்து உதவி செய்யிறவள். இப்ப படிப்பு... கஸ்டம் எண்டு பஞ்சிப்படுகிறாள்.'

'படிக்கிற பிள்ளையை ஏன் டிஸ்ரப் பண்ணுறீங்கள்...? ஒரு ஆளை வேலைக்கு வையுங்கோவன். நான் றான்ஸ்போர்ட் வேலை ஏதாவது வேணுமெண்டா செய்து தாறன். முந்தியும் சொன்னனான்தானே! கடையிலை நிக்கச் சொல்லி மட்டும் கேட்டிடாதேங்கோ!'

'ஓ! ஓ! நான் கேக்கேல்லை, காரோட்டம் கிழமையிலை இரண்டு, மூண்டு தரம் ஓடவேணும், வேலையோடை சமாளிப்பியே!'

'ஓ, அது செய்யலாம்.'

'மாதவனுக்குக் கடன் காசைப்பற்றி இப்ப ஒண்டும் கதைக்காதை, நான் சீட்டுப் போடுறன். சேருகிற காசைக் குடுப்பம். பிறகு கழிவு கொஞ்சம் இறங்க நீ எடுத்து எனக்குத் தா!'

'சரி, கணக்கு, வழக்கிலை நீங்கள் பிழை விட மாட்டீங்கள். பார்த்துக் கொள்ளுங்கோ!'

'அது நான் பாப்பன், நீ கவனமாகப் போயிட்டு வா!' என்று அன்போடு அவனைத் தடவிவிட்டார் தாமோதரன்.

'ஓமண்ணை, சரி போட்டு வாறன்!' என்று விடை பெற்றான் கோகுலன்.

                          ----------

ஜானகி வேலையால் வந்திருந்தாள். குளித்து, உடுப்பு மாற்றி, சாப்பிட்டபின் சிறிது ஓய்வாக இருக்கவேணும் போலிருந்தது.

யசோ பள்ளிக்கூடம் போயிருந்தாள். முதியோர் பராமரிப்புக்குரிய பயிற்சிக்கு இடம் கிடைத்ததால்  படித்துக்கொண்டிருந்தாள்.  பயிற்சி முடிந்தால், உடனே அண்மையிலுள்ள முதியோர் இல்லத்தில் வேலை எடுக்கலாம். இந்தப் பயிற்சி படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது யசோவுக்குப்  பெரிய சந்தோசம். இதுவும் கடவுள் செயல்தான். அவள் வருத்தமாக வைத்தியசாலையில் இருந்தபோது, அங்கு வந்த நோயாளிகளைப் பார்வையிட்டு  ஆசீர்வதிச்சுச் செல்லும் போதகர் அவளுக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார்.

ஒருசமயம் அவர் அவளைப்பற்றி விசாரித்து, அவள் நிலைமையை அறிந்து, இரக்கப்பட்டு, தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக இந்த முதியோர் பராமரிப்புக்குரிய பயிற்சியும், அதன்பின் அங்கேயே தொடர்ந்து தொழில்புரியும் வாய்ப்பையும் எடுத்துக் கொடுத்திருந்தார்.

இதனால் வீட்டுவேலைகளை ஜானகியும், யசோவும் வசதிப்படி பகிர்ந்து செய்து வந்தார்கள்.

கொஞ்சம் காலாற இருந்து, அன்று வந்திருந்த ஈழநாடு பத்திரிகையை எடுத்து வாசித்தாள் ஜானகி.

வீட்டுமணி ஒலித்தது. யாராக இருக்குமென்ற கேள்விக்குறியுடன் கதவைத் திறந்தாள். இராகுலனும், அவன் மனைவி கமலமும் நின்றார்கள். இராகுலன் முகம் முழுக்கப் பல்லாகச் சிரித்தான். கமலம் கதவைத் தாண்டி உள்ளே வந்தபடி,
'என்ன ரெலிபோனும் எடுக்கிறேல்லை, வீட்டையும் வாறேல்லை... கோவம், கீவமே..?' என்று கேட்டாள். 

விருப்பமில்லாத வேளையிலே வந்த, வேண்டாத விருந்தினர்கள் என்றாலும், வீட்டுக்கு வந்தவர்களை வாசலிலே வைத்துத் திருப்பி விட ஜானகிக்கு மனம் வரவில்லை.

'வாங்கோ! இப்பதான் வேலையாலை வந்தனான்.' என்று உள்ளே அழைத்து, சோபாவில் இருக்கச் சொன்னாள்.

'எங்கை யசோ...?' கேட்டான் இராகுலன்.

கேட்காததுபோல பத்திரிகையிலே கண்ணை வைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று ஒருநாள் இராகுலன் வீட்டுக்கு வந்து, கீழ்த்தரமா நடந்து கொண்டதை அவள் இன்னும் மறக்கவில்லை.

'தண்ணி, வென்னி குடிக்கிறீங்களோ எண்டு ஒரு வார்த்தை கேட்க மாட்டியே....?' கேட்டாள் கமலம்.

'இப்பதானே வந்தனீங்கள், பொறுத்துப்போடலாம் எண்டு இருக்கிறன், போட்டுத்தாறன்.' என்று மனமில்லாதவளாய் சமையலறைக்கு நடந்தாள்.
அவளுக்குப் பின்னால் இருவரும் எழுந்து சமையலறைக்கு வந்துவிட்டனர்.

'வீடெல்லாம் குப்பையாக் கிடக்கு! பொம்பிளையள் வேலைக்குப் போனால் இப்பிடித்தான் ஒண்டையும் பொறுப்பாச் செய்யேலாது.' என்றான் இராகுலன்.

ஜானகி அவனை நிமிர்ந்து பார்த்தாள். பதில் சொல்லவில்லை. 'இவனுக்கெல்லாம் என்ன விளக்கம் சொல்லுறது..? மீசை நரைச்சும் ஆசை நரைக்காமல் பிற பெண்களைப் பார்த்துக்கொண்டு திரியும் பித்துப் பிடிச்ச உனக்கு, என்ரை வீடு குப்பையாக் கிடக்கோ...?' என்று மனதுக்குள் கறுவியபடி, கண்களால் ஒருகணம் அவனைப் பார்த்து சுட்டுவிட்டு,
'காலநேரம் பார்க்காமல் வீடுகளுக்கு விசிற் வந்திடுவியள், உங்கடைவீடு எப்பிடிக் கிடக்கெண்டு அதைப்பற்றி அக்கறைப்பட மாட்டீங்கள். இங்கை வந்து வேலைக்குப் போற பொம்பிளையள் ஒண்டையும் பொறுப்பாச் செய்யேலாதாம்' என்று நினைத்தவளாய், தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டுச் சட்டிபானைகளைக் கழுவினாள்.

இராகுலனும், கமலமும் சாப்பாட்டு மேசைக்கு முன்னிருந்த கதிரைகளில் இருந்தார்கள்.

'கோகுலன் சிலோனுக்குப் போட்டானாம், எங்களுக்குச் சொல்லேல்லை!' என்றாள் கமலம்.

'என்னத்தைச் சொல்லுறது...?'

'கலியாணம் செய்யப் போறானாம், பொம்பிளை கொழும்பிலை வந்து நிக்கிறாவாம்.' என்றான் இராகுலன்.

ஜானகி கேட்காததுபோலக் கழுவிக்கொண்டிருந்தாள்.

பதில் வராதது கண்ட கமலம், புதினம் அறியும் ஆவலுடன்,
'என்ன ஜானகி பொம்பிளை வந்திருக்கிறாவோ..?' என்று சற்று உரத்துக் கேட்டாள்.

'தெரியாது...!' என்றாள் ஜானகி.

'ஏன் மறைக்கிறாய்? ஊரே கதைக்குது, நீ எங்களுக்கு ஒழிக்கிறாய்'

'நான் ஏன் ஒழிக்கிறன்? இது அவன்ரை விசயம்... தன்னோடை பழகிற ஆருக்காவது சொன்னானோ இல்லையோ தெரியாது. நான் ஒருத்தருக்கும் சொல்லேல்லை.'
'உங்கடை தம்பி கலியாணம் செய்யிறது, உங்களுக்குத் தெரியாமலிருக்கே...?' நளினம்படக் கேட்டான் இராகுலன்.

'ஒவ்வொருநாளும் வந்துபோறான், ஏன் சொல்லாமல் விடுகிறான்!' சொன்னாள் கமலம்.

'யசோவைச் செய்யேல்லையோ..?' கேட்டான் இராகுலன்.

கழுவுறதை அப்படியே போட்டுவிட்டு, அதிர்ச்சி முகத்தில் குவிய, இராகுலனை விழித்துப் பார்த்தாள்.

'என்ன ஒண்டும் தெரியாதமாதிரிப் பாக்கிறாய்...! யசோவைக் கோகுலன் கலியாணம் செய்யப்போறான் எண்டுதானே எல்லாரும் நினைச்சுக்கொண்டு இருக்கினம்.' என்றாள் கமலம்.

'என்ன கதைக்கிறீங்கள் கமலமக்கா?' ஜானகியின் முகத்தில் கோபம் கோலம் போட்டது.

'ஏன் கோவிக்கிறாய்...? ஊரிலை சனங்கள்  கதைக்கிறதைக் கேட்டனான். அதுக்கு எரிஞ்சு விழுகிறாய் ஜானகி!'

'சனங்கள் எண்டா ஆரைச் சொல்லுறீங்கள்? எங்களிட்டை ஒருத்தரும் இப்பிடிக் கதைச்சதில்லை.'

'உங்களிட்டை இந்தக்கதையை ஆரோ சொல்லுவினமே? நாங்கள் நெருங்கி உங்களோடை பழகினதாலை சொல்லுறம்.'

'நீங்களும் மற்றவை மாதிரிச் சொல்லாமலே விட்டிருக்கலாம், இனிமேல் இப்பிடி ஆருக்கேன் தயவுசெய்து சொல்லிப் போடாதேங்கோ! உங்கள் இரண்டு பேரையும் கையெடுத்துக் கும்பிடுறன்.' என்றாள் ஜானகி பொறுமை இழந்தவளாய்.

அவசரமாகத் தேநீரைக் கலந்து கொடுத்தாள்.
'கெதியாப் போங்கோ!' என்று அவள் மனம் கத்தியது.

'யசோ நல்ல பிள்ளைதான், ஆனால் வருத்தக்காரி. அவளைக் கட்டிப்போட்டு கோகுலன் என்ன செய்யிறது...? அவன் செய்யிறது தான் சரி!' என்றாள் கமலம்.

'என்ன உளறுறீங்கள்...? எனக்கெண்டா விளங்கேல்லை!'

'யசோவும், கோகுலனும் ஒருத்தரையொருத்தர் விரும்பினவை.. உங்களுக்குத் தெரியாதே?' கேட்டான் இராகுலன் கிண்டலாக.

'அப்பிடி அதுகள் பழகேல்லை.' முறித்துச் சொன்னாள் ஜானகி.

'எங்களுக்கேன் தேவையில்லாத கதை! வாங்கோ போவம், கடைக்குப் போய்ச் சாமான்கள் வாங்கவேணும்.' என்று இராகுலனின் தோளில் இடித்தாள் கமலம்.

'போட்டு வாறம்!' என்று இருவரும் எழுந்தனர்.

ஜானகிக்கு கோபம் மூக்கு முட்ட வந்து விட்டது. அடக்கிக்கொண்டு மௌனமாக நின்றாள்.

'வேலையாலை வந்து நிக்கிறாய், நாங்கள் இன்னொரு நாளைக்கு வாறம் சரியே!' என்று கமலம் ஜானகியை நெருங்கி, நாடியில் தடவிவிட்டாள்.

'சரி, போட்டு வாங்கோ!' என்று அவர்களுக்கு விடை கொடுத்தவள், 'யசோவையும், கோகுலனையும் சேர்த்து ஊர் கதைக்கிறதா?' என்று தனக்குள் குழம்பினாள்.

அப்படியிருந்தாலும், அதில் அவளுக்கு ஆட்சேபனை இருக்கவில்லை. இதுவரை அப்படியொரு எண்ணமும் அவளுக்குத் தோன்றவில்லை.


அவர்கள் ஒழிவு மறைவாகப் பழகியதாக அவளுக்குத் தெரிய வில்லை. கதைப்பது, சேர்ந்துபோவது, ஒருவருக்கொருவர் உதவி புரிவது... இவற்றை வைத்துக்கொண்டு காதல் என்று முடிவு செய்வதா....?

அப்படியிருந்தால் கோகுலன் கலியாணம் செய்யச் சம்மதித்து, கொழும்புக்குப் போகத்  தேவையில்லையே!

அவன் கலியாணம் செய்யப்போவது தெரிந்தும், யசோ எந்த எதிர்ப்போ, கவலையோ காட்டவில்லையே! வழக்கம் போல அவள் கலகலப்பாக, தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கிறாள்.

எங்கடை சனங்களின் கட்டுக்கதை இது! என்று முடிவுக்கு வந்தவளாய், பாதியில் விட்ட வீட்டுவேலையைத் தொடர்ந்தாள்.

Keine Kommentare: