Samstag, 7. Mai 2011

பகுதி-11







யசோ வழியை வழியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று கோகுலன் வீட்டுக்கு வரவுமில்லை, தொலைபேசி எடுக்கவும் இல்லை.

இது வழக்கத்துக்கு மாறு என்பதால், அவளின் நெஞ்சு படபடத்தது. ஜானகி வேலைக்குப் போயிருந்தாள். சிறுவர்கள் வழக்கம்போல பள்ளிக்கூடம் போயிருந்தார்கள்.

கோகுலனுக்கு ரெலிபோன் எடுக்கும் முடிவோடு எழுந்து செல்ல, தொலைபேசிமணியொலித்தது.

அவனாகத்தான் இருக்குமென்று நினைத்து, நெஞ்சம் இன்ப இடி இடிக்க, றிஸீவரை எடுத்தாள்.

எதிர்பார்த்த குரல் ஒலிக்கவில்லை.

'பிள்ளை யசோ!' என்றார் தாமோதரன்.

'தாமோதரமண்ணை சொல்லுங்கோ!' என்று சமாளிக்க முடியாமற் தடுமாறிப் போனாள்.

'என்ன.. டிஸ்ரேப் பண்ணிப்போட்டனே..? வருத்தம் சுகமே? சும்மா எடுத்தனான்“ என்றார்.

'பறவாயில்லை, இருக்கிறன்.'

'யசோ! கோகுலன் இஞ்சை வந்தவன், கேட்டா கோவிப்பாய்.
நான் வேணுமெண்டு சொல்லேல்லை.... வாய் வழுக்கி கண்ணன்ரை பெயரை உச்சரிச்சுப் போட்டன், கோகுலன் பிறகு விடுத்துவிடுத்துக் கேட்டும் சொல்லேல்லை.'
                       
'என்ன அண்ணை நீங்கள்.... இது சாதாரண விசயமே? குடும்பங்க ளுக்கிடையிலை பிரச்சனையெல்லே வெடிக்கப்போகுது!'

'இல்லை யசோ! நான் நடந்தது ஒண்டும் விபரமாச் சொல்லேல்லை. கண்ணன் செய்திட்டான், இனி யசோவுக்கு ஒரு இடத்திலை பாக்கலாமெண்டு வஞ்சகமில்லாமல்  சொல்லிட்டன், வேறை ஒண்டுமே சொல்லேல்லை.'

'அவ்வளவும் காணும்தானே குண்டு வெடிக்கிறதுக்கு...' என்றவள்,
'சரி அண்ணை, நான் பிறகு எடுக்கிறன்.' என்று றிஸீவரை வைத்துவிட்டாள்.

கோகுலனின் நம்பர்களை தொலைபேசியில் அழுத்தினாள்., என்கேச் அடித்தது. திரும்பவும் முயற்சி செய்து, அதுவும் அப்படியேயிருக்க, றிஸீவரை வைத்துவிட்டு, உடுப்பைச் சரிப்படுத்தி முகத்தையும் கண்ணாடியில் பார்த்து, தலைமுடியையும் ஒழுங்கு படுத்திக்கொண்டு கோகுலனின் அறைக்கு விரைந்தாள்.

கதவு பூட்டிக் கிடந்தது. பலதடவை தட்டியும் திறக்கவில்லை.
ஏமாற்றம் முகத்தில் இருளாகப் படியத் திரும்பிச் சோர்வுடன் நடந்தாள்.

அப்போ, கதவு திறக்கும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தவள், அங்கே கதவைத் திறந்தபடி கோகுலன் நிற்பதைக் கண்டாள். அவனை அப்படி ஒரு கோலத்தில் இதுவரை அவள் பார்க்கவில்லை. கிளறிக்கிடந்த தலைமுடியும், வியர்த்து எண்ணெய் படிந்த முகமும், திறந்த சேட்டும் அவன் நன்றாகக் குடித்திருக்கிறான் என்பதை எடுத்துக்;காட்டின.

'என்ன...?'என்றாள் யசோ.

'ஒண்டுமில்லை!'

'ஏன் குடிச்சனீங்கள்?'

'நான் குடிச்சா அதைக் கேட்க நீர் ஆர்?'

'நானோ... உங்கடை மனிசி!'

'ம்' என்று அலுப்புக் கொட்டினான்.

'உங்களுக்கு என்ன பிரச்சனை...? குடிக்கமாட்டன் எண்டு அண்டைக்குச் சத்தியம் செய்து போட்டு, இண்டைக்குத் திரும்பவும் போத்திலை உடைச்சு வைச்சிட்டு இருந்தா...?
என்ன பேசாமலிருக்கிறீங்கள்;...?
என்னைப் பற்றி ஏதும் அறிய வேணும்  எண்டால் என்னைக் கேட்கலாம்தானே!'

'முழுப்பூசனிக்காயைச் சோற்றுக்கள் மறைச்சு வைச்சிருக்கிறீர்!' என்ற கோகுலனின் வார்த்தைகள் அடைச்ச குரலில் வெளிவந்தன.

'நான் ஒண்டும் ஒழிக்கேல்லை, என்னைப்பற்;றி உங்களுக்குத் தெரியும்தானே...!'

'உங்களைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? உங்கடை வாயாலை ஏதாவது சொன்னனீங்களோ? யாரோ சொல்லித்தானே எல்லாம் அறியவேண்டிக்கிடக்கு!'

வசனங்களை முறித்து முறித்து தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்தினான் கோகுலன்.

'யாருக்கும் சொல்லமாட்டீங்கள் என்றால்... இதாலை வேறை எந்தப் பிரச்சனையும் வராது என்று சத்தியம் செய்யுங்கோ, சொல்லுறன்!'

'சத்தியம் செய்ய வேணும்...
என்னை உமக்குத் தெரியாது, நம்ப மாட்டீர்...
சத்தியம் பண்ணினால்தான் சொல்லுவீரோ?'

'சத்தியம் செய்தே நீங்கள் குடிக்கிறீங்கள்... அப்ப என்னெண்டு உங்களை நம்புறது...?'

'எல்லாருந்தானேப்பா குடிக்கிறாங்கள்! நான் மட்டும் ஏதோ பெரிசா குடிச்சு அழிக்கிறனாக்கும்!'

'ஒரு விசேடத்;துக்கு பார்ட்டீ ஒண்டிலை  நாகரிகத்துக்காக  கொஞ்சம் நண்பர்களோடு சேர்ந்த குடிப்பதை இந்த நாடுகளிலை தவிர்க்க முடியாதெண்டாலும், நீங்கள் சின்னன்பொன்னன் பிரச்சனைக்கெல்லாம் பியரையும், பிரண்டியையும் ஊத்திக் குளிக்கிறீங்கள். மற்றவையின்ரை மனம் எரிந்து கதறுவது உங்களுக்குத் தெரியாது.' யசோவின் கண்களில் நீர் தழும்பித் துளித்தது.

'இப்ப என்ன நடந்து போச்சு! நான் என்ன புதுசாக் குடிக்கிறன்... ஊரிலையும் குடிச்சவன், ஊர்மாறி சிற்றிக்கு வந்தும் குடிச்சவன். நீங்கள் வந்த பிறகு உங்கடை விருப்பத்துக்குக் குடிக்காமலிருந்;தது உண்மைதான்... என்னை ஏன் தடுக்கிறீங்கள்?'

'அக்கா சொல்லி அலுத்துப்போய் விட்டிட்டா! இனி நானும் சொல்லி, கத்தி, அழுது எல்லாம் பாத்திட்டு விட்டிடுவன் எண்டு மட்டும் நினைக்காதேங்கோ! என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியாது... செத்துப்போயிடுவன்.'
கோகுலனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளைத் தன்னோடு சேர்த்து, அணைத்து அவள் தன்மீது வைத்திருக்கும் எல்லை மீறிய அன்பைப் புரிந்து கொண்டவனாய்...
'நீர் ஏன் இவ்வளவுதூரம்... வருத்தம் சரியாக மாறேல்லை, ஏன் யசோ, உம்மைக் கண்ணன் ஏமாத்திட்டான் எண்டதை அறிய ……..  என்னாலை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு சொல்லுச் சொல்லி யிருந்தால் இண்டைக்கு நீர் அவன் மனைவியாக இருக்கலாமே!'

'அந்தக்கதை வேண்டாம்.... அது முடிஞ்சு போச்சு.. எனக்கு அப்படி ஒரு ஆசையுமில்லை.'

'அப்ப என்ன ஆசை இருக்கு..? சொல்லும்'

'ஜானகியக்கா முதலே எனக்குச் சொன்னது மாதிரி, நான் ஒரு வேலைக்குப் படிக்கப் போறன்!'

'படிச்சிட்டு....!'

'வேலை செய்யப்போறன்.'

'வேலை கிடைச்சபிறகு...?'

'அதுக்குப் பிறகு யோசிப்பம்.'

'அதுக்குப்பிறகு நான் சொல்லுறதைச் செய்வீரோ...?'

'என்ன சொல்லப்போறீங்கள்? சொல்லுங்கோ முடிஞ்சாப் பாப்பம்!'

'இப்ப சொல்லமாட்டன்.'

'இரகசியமோ...?'

'அப்பிடித்தான் வையுமன்.'


                            ----------

புத்தகம் – பக்கம் -105


ஒருநாள்....
குசனைக் காணவில்லை.
யசோ எங்கும் தேடிப் பார்த்துவிட்டாள். கோகுலனுக்கு ரெலிபோன் எடுத்துச் சொல்ல, அவனும் வந்து தேடினான்.
லவன், குசனோடு கூடப்படிக்கும், சேர்ந்து விளையாடும் பிள்ளைகள் வீடுகள் எல்லாம் விசாரித்துப் பார்த்தான்.

'பாடசாலையால் வந்து சாப்பிட்டிட்டு, விளையாடப் போறன் எண்டு போனவன், பொழுதுபட்டுப்போச்சு... எங்கை போய் நிக்கிறான்?' என்று யசோ கண்ணீரைக் கொட்டினாள்.

'உங்கை எங்கையாவது தானே நிப்பான், நான் போய்ப் பாத்துக் கொண்டு வாறன்... நீர் அழாதையும்.'

'இஞ்சை, ஒருக்கா வாசு வீட்டுக்கு ரெலிபோன் எடுத்துப் பாருங்கோ!'

'அங்கை போறவனே...?' என்று கேட்ட கோகுலன், அவர்களின் தொலைபேசி எண்களை அழுத்தினான்.

'குசன் வந்தவனே அக்கா...?'

'இல்லை...!'

'விளையாடப் போனவன், காணேல்லை.'

'பிள்ளையைக் கவனமா எல்லே பார்க்க வேணும். பிள்ளை கடத்து றவங்கள் உலாவுறாங்கள். அண்டைக்கும் ஜேர்மன்காரப்பிள்ளை.... பன்னிரெண்டுவயது... காணேல்லையெண்டு தேடினவை... பிறகு...!'

'சரி, அப்ப நான் பிறகு எடுக்கிறன்.... றிஸீவரை வைத்தவன்,
'எந்தநேரம் என்ன கதைக்கிறதெண்டு தெரியாததுகள் எல்லாம் வெளிநாட்டுக்கு வந்திருக்குதுகள்... அசல் விசர்க்கேஸ்!'

'என்னவாம்;;.;..?' என்றாள் யசோ விளங்காதவளாய்.

'சிக்.... இந்த மனிசிக்கு எடுத்தநேரம் ஏடுக்காமல் விட்டிருக்கலாம்.'

'ஏன் என்ன சொன்னவை?'

'பிள்ளைபிடிகாரர் உலாவுறாங்களாம், அதாம்இதாம் எண்டு பெரிசா உளறுது!'

'எனக்குப் பயமாக்கிடக்கு! அக்கா வந்து இக்கணம் துடிதுடிக்கப் போறா! ஐயோ, கோகுலன் என்ன செய்ய? பொலிசுக்கு ரெலிபோன் எடுத்துச் சொல்லுவமா...?'

'பொறும் யசோ! முதல் அக்காவுக்குச் சொல்லிப்போட்டு...' என்றவன், மீண்டும் ரெலிபோன் எடுத்து நம்பர்களை அழுத்திவிட்டு,
'அக்கா!' என்றழைத்தான்.

'கோகுலன்! சொல்லு, என்ன விசேசம்....?'

'குசன் விளையாடப்போனவன், இன்னும் வீட்டை வரேல்லை. தேடிப்பார்த்தும் காணேல்லை.
என்ன செய்யிறது... பொலிசுக்கு எடுத்துச் சொல்லவோ?'

'மிகயேல், டானியல் இவங்கடை வீடுகளிலெலாம் பாத்தனீங்களே? அநேகமா போய் நிக்கிறவன்.' என்று பதற்றத்துடன் பதில் சொன்ன ஜானகி,
'நான் லீவு போட்டிட்டு வாறன்.' என்று றிஸீவரை வைத்தாள்.

'அக்கா வாறாவாம்!' என்று யசோவைப் பார்த்துச் சொல்லிவிட்டு, வேறும் தெரிந்தவர்களுக்கு ரெலிபோன் எடுத்து விசாரித்தான்.
தொலைபேசியை வைக்க, அதன் மணி ஒலித்தது. எடுத்து,
'ஹலோ!' என்றான் கோகுலன்.

'தாமோதரன் கதைக்கிறன்;... டேய் கோகுலன்! என்ன குசனைக் காணேல்லையாம். வாசன்ரை மனிசி எடுத்துச் சொன்னவ!'

'ஓமண்ணை! எங்கை போய் நிக்கிறானோ தெரியாது. வழக்கமா நேரத்தோடை வீட்டை வந்திடுவான்.'
'லவன் எங்கை....? அவனுக்கும் தெரியாதே?'

'அவன் இஞ்சை நிக்கிறான். வீட்டுவேலை செய்து கொண்டிருந்தவன்...... குசனைக் காணேல்லையெண்டு அவனும் உங்கை தேடிப்போட்டு வந்திருக்கிறான்.'
'உதுவழிய எங்கையாலும் தான் நிப்பன், அவசரப்படாதேங்கோ!'

'இங்கை யசோ அழுதுகொண்டிருக்கிறா... அக்கா வேலைக்குப் பாதியிலை லீவுக்குச் சொல்லிப் போட்டு வந்து கொண்டிருக்கிறா! என்ன செய்யிறதென்டு தெரியேல்லை.'

'நான் வாறன்.... பயப்பிடாதேங்கோ! பெடியங்களைத் தெரியாதே... விளையாட்டுக் கண்ட இடத்திலை மிலாந்திக்கொண்டு நிக்கிறது வழக்கம்தானே! பாத்திட்டுப் பொலிசுக்குப் போகலாம் பொறுங்கோ'

தொலைபேசி வைக்கப்பட்டது. சில நிமிடத்தில் மீண்டும் அடித்தது. கோகுலன் எடுத்தான்.
'ஹலோ!'

'ஓ! நான் தாமோதரன் .... டேய் கோகுலன்! ரவுணுக்கை கேர்மஸ் நடக்குது... அங்கை போய் பாத்தனீங்களே?'

'இல்லையண்ணை, நோர்மலாப் போகமாட்டான்... தூரந்தானே!'

'போய் ஒருக்காப் பார்! பெடியளைச் சொல்லேலாது. ஆரோடையன் அள்ளுப்பட்டு போய் நிக்குங்கள்.!' என்று விட்டு ரெலிபோனை வைத்தார்.

'தாமோதரன் அண்ணைதான் எடுத்தவர்... கேமர்ஸ் நடக்குதெல்லே.. அங்கை போயிருப்பானெண்டு சொல்லுறார்... நான் போய்ப் பார்த்திட்டு வாறன்... நீர் அழாதையும்.  அக்கா வந்திடுவா, தாமோதரன் அண்ணையும் வாறன் எண்டு சொல்லியிருக்கிறார்.' என்று ஜக்கட்டை எடுத்துக் கொழுவிக்கொண்டு வெளியே போனவன், திரும்பிவந்து, 'வேணிக்கு எடுத்துச் சொல்லும், வேறு ஆராவது சொல்லித் தெரிஞ்சால், நாங்கள் எடுத்துச் சொல்லேல்லை எண்டு நீட்டுவாள்.'

'நான் சொல்லுறன், நீங்கள் கவனமாப் போட்டு வாங்கோ!' என்று கோகுலனைப் போகவிட்டு, மனக்குழப்பத்துடன் அங்குமிங்கும் நடந்தாள் யசோ.

சிறிதுநேரம் செல்ல ஜானகி வீட்டுக்கு வந்தாள். லவனைப் பார்த்து,
'உனக்குச் சொன்னனான், குசன் எங்கை போனாலும் கவனிக்கச்சொல்லி... ' என்று அவனைக் கண்டித்தாள்.

'நான் வெளியிலை போகேல்லை, வீட்டுவேலையெல்லே செய்து கொண்டிருந்தனான்.'
'அப்ப அவனையும் வீட்டிலை மறிச்சு வைச்சிருக்கிறது.'

'அவனை ஏன் ஏசுகிறீங்கள்? நான் சொல்லிமறிச்சிருக்கலாம். வழக்கம்போல பக்கத்திலை எங்கையாவது தான் விளையாடப் போறானெண்டு நானும் பேசாமலிருந்து விட்டன்.' என்று தன்னில் தவறைத் தாங்க முயற்சி செய்தாள் யசோ.

'இல்லை யசோ! இவன் வளந்திட்டான், தம்பியார் எங்கை போறான் வாறான் எண்டு பார்க்கலாம்தானே!'

'அக்கா! தாமோதரமண்ணை எடுத்துக் கதைச்சவர், ரவுணுக்கை கேர்மஸ் நடக்குதாம்.... அங்கை போயிருப்பானோ தெரியாது, போய்ப் பாருங்கோ! எண்டு சொன்னவர். கோகுலன் அதுதான் போயிருக்கிறார்.

அப்போ வேணியும், கண்ணனும் உள்ளே வந்தார்கள்.
'குசன் இன்னும் வரேல்லையே..?' என்றாள் வேணி.

'இப்பிடி ஒருநாளும் நிக்கிறேல்லை!' என்று பதில் சொன்னாள் யசோ.

'வேலையைவிட்;டிட்டு, வீட்டிலையிருந்து பிள்ளையளைப் பாக்கிறதுக்கு வேலை வேலையெண்டு அலைஞ்சு என்னத்தைக் கண்டனீங்கள்? எத்தினை நாளைக்கெண்டு பிறத்தியாரை நம்பிறது...?' என்று தமக்கை ஜானகியைப் பார்த்து, மறைமுகமாக யசோவில் கவனக் குறைவு இருக்குமெண்டு குற்றம் சாட்டினாள்.

'இஞ்சை நாங்கள் ஒரு பிறத்தியாரையும் நம்பியிருக்கேல்லை. நானும், யசோவும், கோகுலனும் ஒருத்தர்மாறி ஒருத்தர் வீட்டிலை இருப்பம், அவன் என்ன ஆறுமாதக் குழந்தையே.... இடுப்பிலை தூக்கிக்கொண்டு திரிய...?' என்றாள் ஜானகி.

'கதைக்கப் பேசத் தெரியாட்டிப் பேசாமலிரு!' என்று வேணியை அடக்கப் பார்த்தான் கண்ணன்.

'என்ன பிரச்சனை...?' என்று கேட்டபடி தாமோதரனும், அவர் மனைவி நீலாவும் வந்தனர்.

'சும்மா கதைக்கிறம், பிள்ளையைக் காணேல்லையெண்டதும், ஒருத்தரையொருத்தர் குற்றம் சாட்டேலுமே..? இவள் வேணி சும்மா அதையும், இதையும் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.' என்றாள் ஜானகி. யசோவின் மனம் புண்படக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.

'ஏன் பிள்ளை...? அவன் குழந்தைப்பெடியன், விளையாட்டிலை அங்கை இங்கை போயிருப்பான்... வருவான்தானே! இதுக்குப் போய்த் தேவையில்லாமல் மற்றவையைக் குறை சொல்லுறதே?'

'ஏன் நான் தேவையில்லாமல் குறை சொல்லுறன்? பரதன் அக்காவைக் கலியாணம் கட்டக் கேட்டவன், அக்கா மாட்டன் எண்டிட்டா.... அதாலை...'

'வேணி!' என்று அதட்டி, அவள் வாயையடைக்க, கண்ணன் முயன்றும், அவள் சொல்ல வந்ததைத் தடுக்க முடியவில்லை.

'அக்கா மாட்டனெண்டதாலை வேணுமெண்டு பிள்ளையைக் கடத்திக் கொண்டு போய் வைச்சிருக்கலாம்தானே!'

ஜானகிக்குக் கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது.

'என்ன கதைக்கிறாய்...? கதைக்கப் பேசத் தெரியாட்டி, வாயை மூடிக்கொண்டிரு! தேவையில்லாத பிரச்சனையை விலைக்கு வாங்கிறாய்.' என்று ஜானகி கோபமாக முறைத்தபடி வேணியைக் கண்டித்தாள்.

'இப்பிடிக் கதைக்காதை வேணி... பரதன் காதிலை விழுந்தால், அவன் எவ்வளவு கவலைப்படுவான், என்ன கதை கதைக்கிறாய், அவன் ஏன் உங்கடை பிள்ளையைக் கடத்த வேணும்?' என்று காரமாகவே அதட்டினார் தாமோதரன்.

அப்போ கோகுலன் ரவுண் எல்லாம் தேடிவிட்டு, களைத்துப் போய் வீட்டுக்கு வந்தான்.

எல்லோரும் ஆவலோடு அவனைப் பார்த்தார்கள். அவன் கையை விரித்தான்.

'சரியான சனம், அதுக்குள்ளை நிண்டாலும் தெரியாது, நான் மூலை மூலையாப் பாத்திட்டன். மகேந்திரன், ஜெகன் எல்லாம் கேர்மஸிலை நிக்கினம், விசாரித்தனான், அவை ஒருத்தரும் காணேல்லையாம்.'

'என்ரை பிள்ளை எங்கை போட்டான்....?' ஜானகி அழத் தொடங்கி விட்டாள்.

நேரம் போகப்போக பயம் விசுவரூபமாக வளர்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரும் கவலை முட்ட உட்கார்ந்திருந்தார்கள்.

'பொலிசுக்கு எடுத்துச் சொல்லுங்கோ! அவங்களும் தேடுவாங்கள்... கோகுலன் சொல்லு...!'' என்றார் தாமோதரன்.

யசோவும், ஜானகியும் விக்கிவிக்கி அழுது கொண்டிருந்தார்கள்.

'கோகுலன், என்ன யோசிக்கிறாய்...?' கேட்டார் தாமோதரன்.
'பொலிசுக்குச் சொல்லவோ... பேந்து பாத்துச் சொல்லவோ எண்டு யோசிக்கிறன்!'

'பத்து மணியாகுது. சொல்லுறதிலை எந்தப் பிரச்சனையும் வரப் போறேல்லை, நாங்கள் எத்தினை மணித்தியாலங்களாத் தேடிக் கொண்டிருக்கிறம்.... பொலிஸ் எங்களுக்காகத் தானே இருக்கு, இப்பிடியான பிரச்சனைகளுக்கு உதவத்தானே அவை இருக்கினம்.' என்று அவசரப்படுத்தினார் தாமோதரன்.

அப்போ தொலைபேசிமணி அடித்துது.

'நான் பரதன் இஞ்சை ஆஸ்பத்திரியிலையிருந்து கதைக்கிறன்.'

'சொல்லுங்கோ பரதனண்ணை என்ன ஆஸ்பத்திரியிலை நிக்கிறீங்களோ...?'

'ஓ! குசனை இஞ்சை கொண்டு வந்து மருந்து கட்டுப்படுது!'

'என்ன நடந்தது...?' பதறினான் கோகுலன்.

'ஒண்டுமில்லை, எல்லாம் சுகம்,  அறிவு வந்திட்டுது, இப்ப உடனை விடமாட்டினம் எண்டுதான் நினைக்கிறன். நாளைக்கு விட்டிடுவினம்.'

'நாங்கள் வாறம்! எத்தினையாம் வார்ட்...? ஓ...ஓ! எங்கை கண்டனீங்கள்? ஓ! அந்த பவுஸ்ரெல.... பெரிய கிடங்கு வெட்டி வைச்சிருக்கிறாங்கள்.... அதுக்கையோ... ஐயோ! அங்கை நீங்கள் எங்கை போனனீங்கள்? ஓ... நன்றி பரதனண்ணை... நன்றி, கடவுள் மாதிரி நீங்கள் வந்திருக்கிறீங்கள்!'

'புகழாதையும், உங்களை மாதிரி நானும் தேடிக்கொண்டு திரிஞ்சனான். ஒரு ஊகத்திலை அந்த றோட்டுவேலை நடக்கும் இடத்துக்குப் போய்ப் பாத்தனான். அது ஒரு பயங்கரமான இடம். ஏன் அப்பிடிச் செய்து வைச்சிருக்கிறாங்களோ தெரியாது. சரி! அப்ப வாங்கோ, வந்து கதைக்கலாம்.'

'ஓ! வைக்கிறன்.' என்று முகம் சிரிக்க ரிஸீவரை வைத்தான்.
'குசன் கொஸ்பிற்றல்லை இருக்கிறான்... றோட்டுவேலை செய்யிற கிடங்குக்கை விழுந்து பாதிமயக்கத்திலை கிடந்திருக்கிறான்... பரதனண்ணை  ஊரெல்லாம் தேடித் திரிஞ்சு போட்டு, அங்கையும் போய்த் தேடியிருக்கிறார், கண்டிட்டு அம்புலன்சுக்கு அடிச்சு ஆஸ்பத்திரியிலை சேர்த்;திட்டு, இஞ்சை அடிச்சவர்;.'

ஜானகிக்கு அழுகை மேலும் பொங்கிக் குமுறியது. எழுந்துபோய் 'ராமின் படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

யசோ அவளின் கண்ணீரைத் துடைத்து,
'அக்கா! அழாதேங்கோ, கும்பிட்ட தெய்வம் எங்களைத் தவிக்க விடாது, வாங்கோ, போட்டு வருவம்...' என்று அழைத்தாள்.

அப்போ தாமோதரன், 'நீங்கள் போய்ப் பாருங்கோ! இந்த நேரத்திலை நாங்கள் வந்தால் சரியில்லை.... விடியப் போறம்.' என்று சொல்லி வீட்டுக்குப் போக எழுந்தார்.

அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் செல்ல, கோகுலன், ஜானகி, யசோ, லவன் எல்லோரும் வைத்தியசாலைக்குச் சென்றார்கள்.

குசனின் உடலில் பல இடங்களில் உரசலும், காயங்களும் கட்டுக்கள் போடப்பட்டிருந்தன.

'பயப்படும்படி ஒண்டுமில்லை, எக்ஸ்றே எடுத்து எல்லாம் ஓ.கே. நாளைக்கு வீட்டுக்கு விடலாமெண்டு டொக்டர் சொன்னவர்.' என்றான் பரதன்.

'ஜானகி, பரதனை அணுகி,
'உங்கடை கால்லை விழுந்து வணங்கவேணும் போலக் கிடக்கு.. கடவுள் மாதிரி வந்து என்ரை பிள்ளையைக் காப்பாற்றி இருக்கிறீங்கள்... தாங்ஸ் பரதன்.' என்றாள்.

'இப்பிடி ஏன் பெரியவார்த்தையள் சொல்லி, என்னை அளவுக்கு அதிகமாப் புகழுறீங்கள்? நான் அப்பிடியொண்டும் அதிசயமாச் செய்யேல்லை, நீங்கள் தேடினமாதிரி நானும் தேடினனான்... தாமோதரனண்ணை தான் எனக்கும் சொன்னவர், தெரிஞ்சதும் உங்கடை வீட்டை வந்து ஆறுதல் சொல்ல நினைச்சன்... பிறகு தேடிப்பாத்திட்டு வரலாமெண்டு இருந்தன்...!' என்றான் பரதன்.
                         ----------

புத்தகம் – பக்கம் -111

ஒருநாள்,
கண்ணன் வீட்டிலே காலை ஏழு மணிபோல தொலைபேசிமணி அடித்தது.

நித்திரையில் இருந்த வேணி, அந்த அலறலுக்குத் திடுக்கிட்டு விழித்து, அரைத்தூக்கத்தில், 'ஹலோ!' என்றாள்.

'அண்ணி! நான் யாழ்ப்பாணத்திலையிருந்து சுந்தரம் கதைக்கிறன், சுகமா இருக்கிறீங்களே?'

'சுகமா இருக்கிறம்! பொறும், அண்ணையிட்டைக் குடுக்கிறன்.'

'கதையுங்கோவன் அண்ணி....' என்ற சுந்தரத்தின் வார்த்தைகளைக் கேட்க வேணி அங்கில்லை, அவள் றிஸீவரைக் கீழே வைத்துவிட்டு, கண்ணனை எழுப்பிவிட்டாள்.

'நான்  அண்ணை கதைக்கிறன்... என்ன சுந்தரம்...சும்மா எடுத்தனியே?'

'அண்ணை! மெயின்றோட்டிலை இருந்த மில் விற்கப்போயினம், மலிவா எடுக்கலாம், வேண்டட்டே..? எனக்கும் இப்ப வேலையில்லை, அத்தானும் இங்கை சும்மா இருக்கிறார், வாங்கினா எல்லாருக்கும் நல்லது....'

'நம்பரைத்தாவன்! நான் எடுக்கிறன்.'

'பிரச்சனையில்லை, விபரத்தைக் கடிதத்திலை எழுதுறன், இரண்டு லட்சம் ரூபா, நாங்கள் ஒண்டரை கேட்டிருக்கிறம், என்ன செய்யிறது?' என்று கண்ணனிடம் ஆவலுடன் விடயத்தைக் கூறினான் சுந்தரம்.

'ஓம் எண்டு சொல்லு! நான் இரண்டு லட்சம் அனுப்புறன்!'

'சரியண்ணை, அனுப்புங்கோ! ஓமெண்டு சொல்லுறம், அத்தான்ரை எக்கவுண்டுக்கு அனுப்புங்கோ!'

கண்ணன் தொலைபேசியை வைத்துவிட்டு பாத்றூம் போய்வந்து, Üண்டும் படுக்கையில் சரிந்தான், பஞ்சி அலுப்பு இன்னும் கொஞ்சம் தூங்கச் சொன்னது.

படுத்திருந்தபடி,
'மில் ஒண்டு மலிவா வந்;திருக்காம், தம்பி வேண்டப்போறானாம்.' என்று வேணியைப் பார்த்தான்.

'வேண்டட்டன், அதுக்கேன் விடியக்காத்தாலை ரெலிபோன் எடுப்பான்...?'

'அவன் எவ்வளவு கஸ்டப்பட்டு ரெலிபோன் எடுக்க  வந்திருப்பான் எண்டதை நினைச்சுப்பார்!'

'எல்லாரும்தானே அப்பிடிச் செய்யினம்! இவை மட்டும்தான்
கஸ்டப்படுகினமோ?'

'ஏன் விடியக்காத்தாலை சண்டைக்கு வாறீர்?'

'நான் ஒண்டும் சண்டைக்கு வரேல்லை, பேசாமல் படுங்கோ!'

கண்ணன் பேசாமலிருந்தான், தம்பி சொன்ன விபரங்களை அவளுக்குச் சொல்லவேணும் எண்டு அவனுக்கு ஆவல், அதைக் கேட்கும் ஆர்வம் அவளுக்கில்லை.

அந்த மில்லை அவனுக்கு நன்கு தெரியும், சின்ன வயசிலை அங்கே நெல்லுக்குற்ற, மாவரைக்க என்று சென்றிருக்கிறான். அப்போ அது அவன் கைக்கெட்டாத ஒன்று, அந்த முதலாளி வயதாக, பிள்ளைகளிடம் ஒப்படைத்தார், பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராய் வெளிநாடு செல்ல, மில்லை விற்க வேண்டிய நிலை வந்திருந்தது.

இதுபற்றி வேணி அறிந்திருக்க நியாயமில்லை, அவளைப் பொறுத்த வரை ஒன்றைப் பார்த்தால், அப்படி ஒன்று தனக்கும் வேணுமென்று ஆசை வரும். புதுவீடொன்றைக் கண்டால் அந்தமாதிரி இருக்கு! என்று அந்த வீட்டுக்காரர்மீது பொறாமை எழும்.

நியாயமே இல்லாத பொறாமை, அந்த வீட்டைக் கட்ட, வீட்டுக்குச் சொந்தமானவர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள், இரவு பகலென்று உழைத்து... மூளையைச் செலவழித்து, பல சிரமங்களைச் சந்தித்து... அப்படியொரு அழகான வீடு எழுந்து நிற்கிறது. இதனைச் சிந்தித்துப் பார்க்குமளவுக்கு அவளுக்கு அறிவு இடம் கொடுக்கவில்லை. ஆசை இருக்கிறளவுக்கு ஆர்வமோ முயற்சியோ  அவளிடமில்லை.

எழுந்து வெளிக்கிட்டு வங்கிக்குச் செல்லக் கிளம்பினான் கண்ணன்.

'எங்கை போறீங்கள்....?' கேட்டாள் வேணி.

'பாங்குக்கு...'

'ஏன்?'

'வீட்டுக்குக் காசு அனுப்பப் போறன்!'

'இப்ப உங்களிட்டைக் காசு கிடக்கே? இங்கை எத்தினை தேவையள் இருக்கு,  தம்பி எடுத்த உடனை அவைக்குக் கொட்ட மட்டும் காசு கிடக்கே?'


'ஏன் இப்பிடிக் கத்திறீர்? ஒரு நல்ல காரியத்துக்கு அவன் கேக்கிறான்... நானும் ஓமெண்டுட்டன்... அத்தானுக்கும் வருமானம் இல்லை, நல்ல லாபம் வரும்.'

'இலாபம் வந்தா எங்களுக்குத் தரப்போயினமே? என்ரை காசிலை ஒரு சதமும் எடுக்க வேண்டாம், நான் தரமாட்டன்.'

'ஏன் வேணி தடை சொல்லுறாய்? மாதாமாதம் காசு அனுப்பிறது தானே, இப்பிடி ஒண்டை வாங்கிக் கொடுத்தா, முதலும் முதலாய் இருக்கும், அவையளுக்கும் வேலையாகுது!'

'ஆர் மாதம்மாதம் காசு அனுப்பிறதெண்டது?'

'நான்தான்... ஏன்?'

'நீங்கள் என்னண்டு அனுப்பப் போறீங்கள்? நானும் ஒருத்தி வீட்டிலை இருக்கிறன்.. ஒரு ஆமான வீடில்லை, ………..
காரைப் பாருங்கோ!.............
இப்பிடி ஒரு சின்னக்காரை ஆர் வைச்சிருக்கிறாங்கள்? பென்சும், அவ்டியுமெண்டு பளபளக்கத் திரியுது சனம்.'

'அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்....? என்ரை வீட்டை நான் தானே பாக்கவேணும்.'

'இப்ப உங்கடை வீடு இது.... கலியாணம் கட்ட முந்தி உங்கடை பிரச்சனையளைப் பாத்தீங்கள்;... அதைப் பற்றிக் கேட்டனானே... இனிமேல் ஒருடமும், ஒரு காசும் அனுப்பேலாது. அப்பிடியெண்டா எங்கடை அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருக்கும் அனுப்ப வேணும்.'

கண்ணன் ஜக்கற்றைக் கழற்றி எறிந்துவிட்டு, ஹோலில் கிடந்த சோபாவில் தொப்பென்று விழுந்தான்.

'என்ன இருந்திட்டீங்கள்..?'

'ஏன் இருக்கவும் கூடாதே...? அடக்கம் ஒடுக்கமா, சொல்லுறதைக் கேட்டு நடக்கிறதுதான் மனைவிக்கு அழகு.  எதுக்கெடுத்தாலும்
பறநாகம் மாதிரிப் படமெடுத்துக்கொண்டு நிக்கிறாய்!'

'எனக்கு உங்களைப் பிடிக்கேல்லை, மதிப்பா கோட்சூட் போட்டுக் கொண்டு, கௌரவமா வேலை செய்யிற ஒருத்தன்தான் எனக்கு மாப்பிள்ளையா வரவேணுமெண்டு கனவு கண்டவள் நான்...'

'அப்பிடியெண்டா ஏன் என்னைக் கட்டினனீ? கழுத்தை நீட்டிப் போட்டு, இப்ப ஏன் என்ரை கழுத்தை அறுக்கிறாய்? ஜேர்மனியிலை படிக்கச் சந்தர்ப்பம் வரேல்லை, கிடைச்ச வேலையைச் செய்து கொண்டிருக்கிறன், போதுமான சம்பளம் தாறாங்கள், பெரும்பாலும் இப்பிடித்தான் எல்லாரும்....!'

'அப்பிடிச்சொல்லாதேங்கோ! கடை வச்சிருக்கிறாங்கள், றேடியோ நடத்துறாங்கள், ஏஜென்ஸி செய்யிறாங்கள், டொல்மேச்சராய் இருக்கிறாங்கள்... இப்பிடி எங்கடையாக்கள் எத்தினை செய்யினம்... விபரமுள்ளவங்கள் விலாசமா இருக்கிறாங்கள்.'

'அப்பிடியெண்டா அவங்கள்ளை ஒருத்தனைப் போய்க்கட்டு!' என்று சொல்ல வாய்வந்தது. முன்பென்றால் கழுத்திலே பிடித்து வெளியே தள்ளியிருப்பான். ஆனால் இது அவனுக்கு இரண்டாவது முறை. முதல் யசோவை வருத்தமென்ற காரணத்தை வைத்து, ஆராயாமல் கலைத்துவிட்டவன், காலங்கடந்தபின்தான், தான் செய்தது தவறு என்று தெரிந்துகொண்டவன். வேணிக்கும், யசோவுக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்.... இவளைக் கண்டபின்தான், யசோவின் அன்பு, அடக்கம், பணிவு என்ற பண்புகள் அவன் மனதில் தெரியத் தொடங்கின.

யசோவிடம் அளவுக்கதிகமாகவே இருந்த இந்தப் பண்புகளை வேணியிடம் தேடினான் கண்ணன். மருந்துக்கும் அவை இவளிடம் கிடைக்காமல் காய்ந்தான்.

அன்போடு கையை நீட்டினால், அவன் நினைவைப் புரிந்துகொண்டு, என்ன அவசரம் இருந்தாலும், அவன் கைகளுக்குள் அடங்கி, அவனுக்குள் அந்தக்கணம் ஐக்கியமாகிவிடுவாள் யசோ. கேட்காமலே அவன் தேவைகளைப் புரிந்துகொண்டு, பம்பரமாகச் சுழன்று வந்தவள் அவள்.

யசோவுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருந்ததாக அவனறியான். இவன் நினைப்புக்கள்தான் அவள் ஆசைகளாய் இருந்தன.

இப்போ அவள் அவனிடம் இல்லை, மனைவி என்ற உரிமையுடன், பத்திரகாளி ஒன்றுடன் வாழ்க்கை நடத்தவேண்டியிருக்கிறதே என்று தனக்குள் நொந்து பெருமூச்சுவிட்டான்.


அன்று ஜானகிவீட்டுக்குச் சென்றான் கண்ணன். ஜானகியிடம் நடந்ததைச் சொன்னான், யசோவும் கேட்டுக்கொண்டிருந்தாள். அவனது கண்கள் கலங்கி, சோகத்தின் கொந்தளிப்பு வெளிப்பட்டது.

'நாங்கள் கணவன், மனைவியாக இருக்கேல்லை..... கீரியும், பாம்புமாகத்தான் இருக்கிறம்.'

'அவள் சின்னப்பிள்ளை, கொஞ்சம் விட்டுப்பிடியுங்கோ! நான் அவளோடை கதைக்கிறன்.' என்று ஆறுதல் பகர்ந்தாள் ஜானகி.

'எதுக்கெடுத்தாலும் திருப்பிக்கதைக்கிறாள்!' வார்த்தைகளில் வறட்சி ஒலிக்கக் கூறினான் கண்ணன்.

'அவள் செல்லமாக வளர்ந்ததாலை அடக்கமில்லாமல் இருக்கிறாள். என்னோடையே எடுத்தெறிஞ்சுதான் கதைக்கிறவள், அக்கா எண்டு மதிக்கிறேல்லை.'

'தம்பி காசு அனுப்பச்சொல்லிக் கேட்டவன், மில் ஒண்டு சந்திச்சிருக்காம், வாங்கப் போறானாம், நானும் சரியெண்டு காசு அனுப்பிறதாச் சொல்லிப்போட்டன். வேணி ஒற்றைக்காலிலை நிண்டு மறிக்கிறாள். வீட்டுக்கு ஒருசதக்காசும் அனுப்பவிடமாட்டன் என்கிறாள். ஆம்பிளைப்பிள்ளையெண்டு நான் இருக்கிறன், தாய் தகப்பன், சகோதரங்களுக்கு உதவி செய்யத்தானே வேணும். அது அவளுக்கு விளங்குதில்லை. அவளோடை கதைக்க முடியாதக்கா!' என்று தன் மனக்குமைச்சல்களை வெளிக்கொட்டினான்.

'அவளுக்குக் கன்னத்திலை இரண்டு அறை அறையாதேங்கோவன். பொல்லாத வாய்க்காரியா இருக்கிறாள். நான் வாறன், அவவுக்கு வாழ்க்கையெண்டா என்னெண்டு தெரியேல்லை, நீங்கள் போங்கோ! கவலைப்படாதேங்கோ! சமாளிச்சுப்போங்கோ!' என்றாள் ஜானகி.


'நான் எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டன், படிச்சமாப்பிள்ளைதான் வேணுமெண்டு கனவு கண்டவளாம், மதிப்பான வேலை செய்யேல்லையாம் எண்டு பெரிய கதை அளக்கிறாள். அவளுக்கு என்னைப் பிடிக்கேல்லை, வாயாலை நேரையே சொல்லுறாள். நான் என்ன செய்ய? தான் படிச்சவளாம், நான் படிக்கேல்லையாம் எண்டு வாயிலை வந்தபடி கொட்டுறாள்.'

Keine Kommentare: