Donnerstag, 5. Mai 2011

பகுதி-13




இரவு எல்லோரும் தூங்கிவிட்டார்கள்.
ரெலிபோன் மணி அடித்தது.
ஜானகி நித்திரைத் தூக்கத்தில் றிஸீவரை எடுத்து, 'ஹலோ!' என்றாள்.
மறுமுனையில் ஒரு முனகல் ஒலி.

'ஹலோ..! ஹலோ!' என்றாள்.
'நீ நல்ல வடிவாய் இருக்கிறாய்.' என்றது அந்தக் குரல்.

'ஆர் நீ...?' என்று கோபமாகக் கேட்டாள் அவள்.

'பேர் சொன்னா என்னோடை வருவியோ...?'

'போடா றாஸ்கல்!' அடித்து வைத்தாள் ரெலிபோனை.

தொலைபேசி மீண்டும் ஒலித்தது.
ஜானகி எடுக்கவில்லை.
பல நிமிடங்கள் போயின.
மீண்டும் ரெலிபோன்மணி ஒலித்தது.

றிஸீவரைத் தூக்கிவைத்து விடுவது என்ற எண்ணத்துடன் கட்டிலை விட்டெழ, 'அக்கா!' என்று யசோ பாதி நித்திரையிலிருந்து எழுந்து வந்தாள்.

'ஆரோ ஒருத்தன் ரெலிபோன் அடிச்சுக்கொண்டே இருக்கிறான்.'

'என்னவாம்...?'

'வெறியோ... விசரோ தெரியாது!'

மீண்டும் அடித்தது.

யசோ எடுத்து, 'ஹலோ!' என்றாள்.

படார் என்று மறுமுனையில் கட்டானது.

'வைச்சிட்டான்!'  என்றாள் யசோ.

'இடைக்கிடை இப்பிடி நடக்குது... ஆனால் இண்டைக்குக் கதைச்சவன், நான் வடிவா இருக்கிறனாம்.. நாய்!' என்று கறுவினாள் ஜானகி.

'வேலை வெட்டியில்லாத ஆரோ வேணுமெண்டு செய்யினம்!'

'நீயும் பாவம், விடிய எழும்பவெல்லே வேணும், போய்ப்படு! இது என்ரை தலைவிதி, இனிப் படுத்தாலென்ன நித்திரை வரப்போதே?'
'யோசிக்காமல் படுங்கோ அக்கா!'

'ஓ! நீயும் படு, போ!'
யசோ தன்னறைக்கு நடந்தாள்.

ஜானகிக்குத் தூக்கம் வரவில்லை.
இது இராகுலனாகத்தான் இருக்குமென்று நினைத்தாள். நீ நல்ல வடிவாய் இருக்கிறாய் எண்டது ரெலிபோனில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது... வேணுமெண்டு வேறை குரலில் கதைச்சிருக்கிறான். அவன் குரல்தான் எண்டு நிச்சயம் செய்தாள்.

                    ----------

பரதன் மத்தியான உணவு அருந்திக்கொண்டிருந்தான். பிற்பகல் இரண்டுமணியாகி இருந்தது. இரவுவேலை, நித்திரையால் எழுந்து, கடையளுக்குப் போய் வந்து, சமைத்து... தனி ஒரு வயிற்றுக்கு ஒரு சோறு.. ஒரு கறி என்று சோகம் கொட்ட.. ஏதோ பசிக்குக் கொஞ்சமேனும் சாப்பிடவேணுமே... சாப்பிட்டான்.

வீட்டுமணியொலித்தது.
சாப்பாட்டை சமையறைக்குள்ளிருந்த குளிர்சாதனப்பெட்டியின் மேல் வைத்துவிட்டு, அவசரமாகக் கையைக் கழுவித்தடைத்துவிட்டு, வீட்டுக்கதவைத் திறந்தான்.

எதிர்பார்க்காத அதிசயம்....!
அவன் சில வினாடிகள் அதிர்ந்துபோய் சிலையாக நின்றுவிட்டான்.

'சுகமாக இருக்கிறீங்களா?'

'ஓ!' என்று பதில் சொன்னவன்,
'வாங்கோ ஜானகி!' என்று மனம் நிறைய வரவேற்றான்.

'மனம் சரியில்லை!' என்றாள் ஜானகி.

'என்ன ஏதும் பிரச்சனையே...?'

'ம்....ம்...' என்று தலையாட்டினாள் ஜானகி.

'சாப்பிடுங்கோவன்!'

'தந்தால் சாப்பிடுவன்!'
இருவரும் சமையற்கூடத்துக்குச் சென்றார்கள்.

பிறிச் மேல் சோறும், கோப்பையும் இருப்பதைக் கண்டு,
'இப்பதான் சாப்பிடுகிறியளோ...?' கேட்டாள் ஜானகி.

'ஓ!'

அலுமாரியைத் திறந்து ஒரு கோப்பையை எடுத்து, சிறிது தண்ணீரால் கழுவிவிட்டு, அதற்குள் சோற்றைப் போட்டான் பரதன்.
கறிச்சட்டியைத்; திறந்தான்.

'தாங்கோ நான் போடுறன்!' என்றாள்.

பரதன் சோற்றுடன் கோப்பையை அவளிடம் கொடுத்தான். 'கறியைக் கொஞ்சம் சூடாக்கினால் நல்லது!'
அடுப்பை அவன் போட, ஜானகி கறிச்சட்டியை அடுப்பில் வைத்தாள்.

'ஈஸ்வரி எப்பிடி இருக்கிறா...?'

'ஈஸ்வரி அவள் கெட்டிக்காரி, இப்ப ஒரு ஜேர்மன்காரனைச் செய்து இருக்கிறாள்.

'அப்ப சந்திரன்...?'

'அவன் விட்டிட்டுப் போயிட்டான்.'

'இவவுக்கு வேணும், நல்லா அலையட்டும், அப்பதான் படிப்பினை வரும்.'

'அவள் நல்லாயிருக்கிறாள்.'

'அவன் விட்டிட்டுப் போட்டானெல்லோ!'

'ஓ! இப்ப ஜேர்மன்காரன் நல்லா வைச்சிருக்கிறான். நல்ல புதுவீடு.. கார், வேலைக்குப் போறாள், என்ரை பிள்ளையள் நல்லா ஜேர்மன் கதைக்கினம்;, தமிழ் மறந்தே போச்சு! என்னோடை இருந்தா எட்டியும் பார்க்க முடியாத வாழ்க்கை அவளுக்குக் கிடைச்சிருக்கு! கடவுள் அவளைத் தண்டிக்கவில்லை, பதிலுக்குத் தூக்கி விட்டிருக்கிறார்.'

ஜானகி அவனைப் பார்த்தாள். அவன் கண்கள் ஈரமாகத் தெரிந்தன.

கறியைக் கிளறி அடுப்பை நிற்பாட்டினான் பரதன்.

'எங்கையெண்டாலும் அவள் நல்லாயிருக்கட்டும், பிள்ளையள் என்னை மறந்து போச்சுதுகள்!' நனைந்திருந்த கண்கள் குளமாகி வழிந்தன.

'கடவுளிலை எனக்கு நல்ல விருப்பம், கடவுளுக்கு என்னிலை விருப்பமேயில்லை. என்னென்னவெல்லாம் நினைச்சிருந்தன்! என்ரை குடும்பமே எனக்கு உலகம் எண்டு நினைச்சன், நான் எட்டாததை என்ரை பிள்ளையளைக்கொண்டு எட்டலாமெண்டு கனவு கண்டன், எல்லாம் கானல்நீராப்போச்சு!'

கறியைப் போட்டு, சோற்றைக் குழைத்த ஜானகி சாப்பிட மனமில்லாதவளாய் இருந்தாள், கண்ணீர் வழிந்தது.

'அழாதேங்கோ ஜானகி!'

'குளறியழ வேண்டும்போலிருக்கு!' என்றாள் ஜானகி.

'நெஞ்சு வெடிச்சுச் சாகவேண்டியவன் நான், இன்னும் உயிரோடை இருக்கிறன்!'

'வேண்டாம் பரதன், அப்பிடிச் சொல்லாதேங்கோ!'

'எப்பிடியெல்லாம் இருந்தனான்,  இண்டைக்கு இப்பிடியாப் போச்சு!' அவனின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

'அழாதேங்கோ பரதன்... பிளீஸ்!'

'கடவுள் சிலநேரம் வெறும் சிலையாகவே இருந்துவிடுவார்... நீங்களெல்லாம் எப்பிடி வாழ வேண்டியனீங்கள்... 'ராமுக்கு ஏன் அந்த அக்ஸிடன்ட் நடக்கவேணும்? நீங்கள் பிள்ளையளோடை தனியாக் கஸ்டப்படவேணும்...ஏன்...? கடவுள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.'

'இது விதி! அழுது தீராது... அனுபவித்துத்தானேயாக வேணும்.'

'உங்களுக்கு அப்பிடி... எனக்கு இப்பிடி...'

'நீங்கள் ஏன் எங்கடை வீட்டுக்கு வாறேல்லை...?'

'நீங்கள் வரவேண்டாமெண்டு சொல்லியிருந்தீங்கள்!'

'நாங்கள் இரண்டு பேருமே துரதிஸ்டசாலியள்.... பாவம் செய்தவர்கள்... என்ன செய்யிறது? இண்டைக்கு என்னையும் மீறித்தான் நான் இங்கை வந்திருக்கிறன். நினைச்சா பயமா இருக்கு! நான் இஞ்சை வந்ததை ஆரும் பார்த்தால்... கனக்க வேண்டாம் கமலமக்கா பார்த்தாப் போதும்... நியூசிலை வந்தது போலை ஊர் முழுக்கப் பிரசித்தமாகிவிடும்.'

'அப்ப நான் உங்கடை வீட்டை வந்தாலும் இதே தானே நடக்கும். கதை கட்டுறவங்கள் அந்த மாதிரிக் கதை கட்டிப் போடுவாங்கள்! ஏன் வீணா அப்பிடி ஒரு தேவையில்லாத அவமானம் உங்களுக்கு?'

'உங்களுக்கு வேறை ஆருமே இல்லையோ..? தனிய இப்பிடிக் கவலையோடை இருப்பதை என்னாலை பார்த்துக் கொண்டிருக்க முடியேல்லை.'

'சமுதாயம் எண்ட ஒண்டிருக்கு ஜானகி! அது எங்களைச் சும்மா விடாது.'

'மனம்விட்டுக் கதைக்கிறதுக்கு எங்களுக்கு உரிமையில்லையா? இதயச்சுமைகளை இறக்கி வைக்க ஒரு மனிசன் இன்னொரு மனிசனைச் சந்திக்கக்கூடாதா?'

'எங்கடை கட்டுப்பாடு, பண்பாடு அப்பிடி... மனச்சுத்தத்தோடு பழகினாலும், அதை மாசுபடுத்த எண்டே சில சனம் இருக்கு!'

'எல்லாத்தையும் பாத்தா வாழமுடியாது. கதைக்கிறவை கதைக்கத் தான் செய்வினம்! அடிதடிக்காரர் வீட்டுக்கதையெண்டா பயத்திலை அடக்கி வைச்சு வாசிப்பினம். அப்பாவிகளின் வீட்டுக்கதையெண்டா பப்ளிக்காகவே பறை தட்டுவினம். இது மனிசஇயல்பு!'

'ஜானகி!' என்றவன் பேசாமலிருந்தான்.

'என்ன...?' என்றாள் அவள்.

'அண்டைக்கு நான் கோகுலனைக் கொண்டு கேட்டது, உங்களைக் கலியாணம் செய்ய விருப்பமெண்டது, உங்களுக்குச் சரியான கோபம் எண்டு அறிஞ்சன், கோவிக்காதேங்கோ! எந்தவிதமான தப்பான எண்ணமும் எனக்கில்லை.'

'நான் கோவிக்கேல்லை, நீங்கள் முறையா, ஒழிவு மறைவில்லாமல், உங்கடை மனசுக்குப் பட்டதை வெளிப்படுத்தினீங்கள், இது உங்கடை உரிமை! பிள்ளையளுக்கு நீங்கள்  வந்தால் பெரிய சந்தோசம்!'

'வாறன்! நெஞ்சு நிறைய உங்கள்  நினைப்பு இருக்கு! என்ரை வாழ்க்கைதான் போச்சே, நீங்கள், உங்கடை பிள்ளையள் நல்லா இருக்கவேணும், அதுக்கு என்னாலை முடிஞ்சதைச் செய்ய நிறைய ஆசை. இண்டைக்கு நேரை உங்களைச் சந்திச்சதாலை, உள்ளதை அப்பிடியே சொல்லியிருக்கிறன். நீங்களும் கோவிக்காமல் கேட்கிறீங்கள். நான் இண்டைக்கு நல்ல சந்தோசமா இருக்கிறன்.' பூரிப்பு பரதனின் முகத்தில் பூத்துச் சிரித்தது.

அதேவித உணர்வுகள் ஜானகி உள்ளத்திலும் எழுந்து, அவள் சோகஇருளைச் சற்று விலக்கி, கீற்றாக ஒரு ஒளிக்கதிர் அவளது நெஞ்சத்தைத் தொட்டது போல, கண்களில் இனம் தெரியாத மலர்ச்சி விரிந்திருந்து.

'எப்ப கோகுலன் வாறார்?' கேட்டான் பரதன்.

'வாற திங்கள்...'

'ரெலிபோன் எடுத்தவரே..?'

'ஓ! எடுப்பான். பொம்பிளை இன்னும் வந்து சேரேல்லை.. அவையின்ரை பதிலைப் பொறுத்து, சிலநேரம் ஒரு கிழமை பிந்தி வாற எண்ணம்..!'

'கோகுலன் வரவிட்டிக்கு ஒருநாளைக்கு நான் உங்கடை வீட்டை வாறன்!'

'ஏன் இண்டைக்கு, நாளைக்கு வந்தால் குறைஞ்சு போயிடுமோ...?'

'குறையாது.. நல்லது எண்டு பாத்தன்!'

'ரெலிபோன் எடுக்கலாம்... இல்லாட்டி அதுக்கும் கோகுலன் வரவேணுமோ...?'

'ஓ.கே!' என்றான் பரதன்.

'போட்டு வாறன்!' அவள் வெளியேற நடந்தாள்.

அவனும் கதவு வரை வந்து,
'தாங்ஸ் ஜானகி!' என்றான்.

அவள் நின்று அவனைப் பார்த்தாள்.
சில வினாடிகள் கழிந்தன. அதற்கு மேலும் அவளால் அடக்க முடியவில்லை. அவனருகே போய் நின்றாள்.

பனியில் நடுங்கும் பசுபோல அவள் சோகத்தில் துவண்டு நின்றாள்.

அவளை ஆதரோவோடு தன் கைகளால் அணைத்து, அவள் கூந்தலையும் தடவிவிட அவன் மனம் உந்தியது. ஆனால் அவன் அப்படிச் செய்யாது, அவளைக் கருணையுடன் பார்த்தான்.

அவளும் பதிலுக்குப் பார்த்தவாறு, இரண்டு கைகளையும் அவனை நோக்கி நீட்ட, அவற்றை  அவன் ஆதரவோடு பற்றியபடி,
'நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கவேணுமெண்டு நினைச்சன்!' என்று சொன்னான்.

'உங்களிலை நிறையப்பேர் அன்பு வைச்சிருக்கினம், நீங்கள் நீண்டகாலம் சந்தோசமாக வாழ்வீங்கள்!' என்று ஆறுதற்படுத்தினாள் ஜானகி.

'வாயாலை சும்மா ஆறுதலுக்குச் சொல்லுறீங்கள். ஆனால் உண்மை உங்களுக்கே தெரியும்.'

'என்ன தெரியும்...?'

'நான் ஒரு அனாதையெண்டு தான்!'

'ஆர் உங்களை அனாதை எண்டது?'

'அப்ப என்ரை இந்த வாழ்க்கைக்கு என்ன பெயர்...?'

'பரதன்! ஏன் வொறீஸாகக் கதைக்கிறீங்கள்? நாங்களெல்லாம் இல்லையோ...?'

'இல்லையெண்டு சொல்லேல்லை, 'ராம் இருந்தால் எனக்குத் தனிமையே வந்திராது. ஆனால் அவன்தான்... இல்லையே... உங்களோடை நான் பழகினால் அதை உலகம் உரசிப் பார்க்கும்... வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைக்கும்!'

'உலகம் நல்லது, உலகத்திலுள்ள மனிசர்கள்... அதுவும் ஒருசிலர் தான் அப்பிடி... நல்லவர்கள்தான் இந்த உலகத்திலை அதிகம்... நிறைய நிறைய இருக்கிறார்கள். அவர்கள் நிறையவே மௌனம் சாதித்துவிடுவார்கள். உள்ளதை உள்ளபடி சொல்லவோ, இல்லாததை இல்லையென்று சொல்லவோ துணிவில்லாமல்,
'எமக்கேன் வீண்வம்பு?' என்று ஒதுங்கி விடுவார்கள்.'

'அவர்கள் இருந்தும், இல்லாததுமாதிரித்தானே! ஒரு சிலர் கதை கட்டி விடுவாரே என்று நாங்கள் நல்ல நண்பர்களாகக்கூடப் பழக முடியாதே!' என்றான் ஏக்கத்துடன்.

'நான் 'ராமிலை உயிரையே வைச்சிருந்தன். கணவன் மனைவிக்கு அடுத்தவர்கள் உதாரணம் காட்டக்கூடியதாக வாழ்ந்தனாங்கள். இண்டைக்கு 'ராம் இல்லை, உடலை விட்டு உயிர் போனதுமாதிரி பிள்ளையளுக்காக என்ரை வாழ்க்கை போகுது, பிள்ளையளின் வாழ்க்கைதான் என்ரை வாழ்க்கை என்றாகிவிட்டது.'

'அதை ஆரும் தவறு எண்டு சொல்லேல்லையே! உங்கடை நிலையிலை நான் இருந்தாலும் இதைத்தான்; செய்திருப்பன்.'

'ஆம்பிளை நீங்கள்... நல்ல பொம்பிளையாப் பார்த்து கலியாணம் செய்யுங்கோ!'

'ஜானகி வந்தால் செய்யலாம். இல்லாட்டி இப்பிடியே இருப்பன். பிள்ளையளையெல்லே அவள் வெறுக்கச் செய்யிறாள். ஏனெண்டே தெரியேல்லை...!'

'இப்பிடியானவைக்கு முன்னாலை நீங்கள் வாழ்ந்து காட்டவேணும். தலை குனியாமல் நிமிர்ந்து நடந்து காட்டுங்கோ! அதைப் பார்த்து அவை தலை குனிவினம்!'

'என்ரை பிள்ளையளை என்னட்டை விட்டாளெண்டால், அதுகளை நான் ராஜாவீட்டுப்பிள்ளைகள் மாதிரி வளர்த்துக் காட்டுவன்.. உங்களைப்போல!'

'என்ரை பிள்ளையள் ராஜாவீட்டுப்பிள்ளையள் மாதிரி வளர்றாங்கள் எண்டுறீங்கள்!'

'நிச்சயமா..!'

'தாங்ஸ்! அவர் இல்லை எண்ட குறையைப் பிள்ளையள் உணரக்கூடாது எண்டு நிறைய முயற்சி எடுத்தன்... அவள் கண்கள் நனைந்தன.'

'என்ரை பிள்ளையள் என்னோடை இருந்தா முதல் வேலையை விட்டிட்டு, பாட்ரைம் வேலை ஒண்டைத் தேடிச் செய்து கொண்டு, வீட்டோடை இருந்து பிள்ளையளைப் படிப்பிச்சு ஆளாக்குவன்.' என்றான் பெருமூச்சுவிட்டபடி.

'அவள் விடாட்டி பறவாயில்லை, என்ரை பிள்ளையளைப் படிப்பிச்சு ஆளாக்கி விடுங்கோவன்!'

'அதுக்கு...!' என்று பரதன் தயங்குவதை அவள் கவனியாதவளாய் கதவைத் திறந்து கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தாள்.                         கண்ணன் வீடு.
தொலைக்காட்சியில் ஏதோ செற்றிங் செய்து கொண்டிருந்தான் கண்ணன்.

வேணி தொலைபேசியில் கதைத்துவிட்டு வந்தாள்.
'எப்பிடி இண்டைக்கு வேலை...?' கண்ணனைப் பார்த்துக் கேட்டாள்.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். ஒருநாளும் அவள்  அப்படி ஆர்வமாகக் கேட்டதில்லை.

'என்ன இண்டைக்கு என்னிலை இவ்வளவு அக்கறை...?'

'உங்களிலை இல்லை, உங்கடை வேலையிலை.'

'நான் வேலையிலை சந்தோசமாயிருந்தாத்தானே, ஒழுங்கா வேலைக்குப் போய், குடும்பத்தின்ரை நிதிப்பிரச்சனையைச் சோல் பண்ணலாம்... அதுதானே!'

'நீங்கள் உழைக்கிறது எந்த மூலைக்குக் காணும்?'

'என்ன...? என்ரை சம்பளம் எந்த மூலைக்குக் காணுமோ! வடிவா பேசீற் பாக்கிறியோ இல்லாட்டிப் போகடிபோக்கிலை கேக்கிறியோ?'

'உண்மையாத்தான், அவனவன் மாதாமாதம் எவ்வளவு சுழையா அள்ளுறாங்கள்... கடை, அந்த பிஸ்னஸ், இந்த பிஸ்னஸ் எண்டு... அதுதான் நான்...'

'என்ன கடை போடப் போறியோ...?'

'இல்லை, வேலைக்குப் போகப்போறன்!'

'வேலைக்குப் போகப் போறியோ.... எங்கை வேலை கிடக்கு? எவ்வளவு சனம் வேலையில்லாமல் கிடக்குதுகள். உனக்கு ஆரோ வேலையே தாறான்...!' என்று நளினமாகச் சிரித்தான் கண்ணன்.

'ஏன் சிரிக்கிறீங்கள்...? ரதி வேலைக்குப் போறாள் தெரியுமே!'

'ஓ!'

'அவளிட்டைச் சொல்லியிருக்கிறன், அநேகமாக் கிடைக்கும்.'

'என்ன...!'

'வேலைதான்.'

'சும்மா விசர்க்கதை கதைக்காமல், வீட்டுவேலையை ஒழுங்காச் செய்து பழகு! பிறகு மற்றதைப் பாப்பம்.'

'வீட்டுவேலையை ஒழுங்கா நான் செய்யாமல், வேறை நீங்களே வெட்டி விழுத்துறீங்கள்..?'

'ஒருவேலை செய்ய ஒன்பது மணித்தியாலம் எடுக்கும். உன்னை ஆரும் வேலைக்கு எடுத்தால் பக்றரியைப் பூட்டிப்போட்டு, அவன் வேலை தேடித் திரிய வேண்டி வந்திடும்.'

'நீங்கள் என்ன பெரிய திறமே...? ஒரு அலுவல் சொந்தமா யோசிச்சுச் செய்திருக்கிறீங்களா...? சும்மா பிளேன் வேண்டுவம், பறக்க விடுவம் என்று கற்பனையில் மிதப்பீங்களேயொழிய, ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறீங்களா..?'

'இவ்வளவு நாளும் இந்தவீட்டு அடுப்பிலை பூனைதான் படுத்து எழும்பினது, இப்ப நீ வந்தபிறகுதான் பானை வைச்சு இறக்கிறம். சும்மா ஏன் கொக்கரிக்கிறாய்.... அலுவலைப் பார்த்திட்டுக் கிட!'

'நீங்கள் என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ! நான் வேலைக்குப் போகத்தான் போறன்!'

'சரி போ!' என்றான் கண்ணன்.

'என்ன சரி போ எண்டுறீங்கள்.'

'ஏன் வேணி பாயிறீர்? ரதி வேலை எடுத்துத் தந்தால் போம்! நான் தடுக்கேல்லை.' என்று அவள் ஆசைக்கு இசைந்தான் அவன்.

                        
                           
                         ----------


தொலைபேசி மணியடித்தது.

நித்திரைத்தூக்கத்தில் றிஸீவரை எடுத்தாள் ஜானகி.

'ஹலோ ஜானகி... ஐ லவ் யூ! என்று ஒலித்தது மறுமுனையில்.

'ஆர் நீ?' என்று அதட்டினாள் ஜானகி.

'என்னைத் தெரியாதோ... நான் உன்ரை கொத்தானடி! கதவைத் திறந்து வை வாறன்!' என்றதும் யார் என்று விளங்கிக்கொண்டாள்.

'இராகுலன்! இனிமேல் சொந்தம் பந்தமெண்டு  பாக்கமாட்டன், பொலிசிலை சொல்லுவன்! வை போனை!'

'குழந்தைப்பிள்ளை மாதிரிக் கதைக்கிறாய், வீட்டுக்கு வாற மகாவிஸ்ணுவை வேண்டாமெண்டு விரட்டுறாய்... கொஞ்சம் மனசு வை! சின்னவயசிலை நானும், நீயும் அப்பா, அம்மா விளையாடேல்லை...!' இரவு குடித்த மதுபானத்தின் உளறல் இன்னும் இராகுலனின் வார்த்தைகளில் பின்னியிருந்தது.

ஜானகி பேச்சை வளர்க்காமல், தொலைபேசியை அடித்து வைத்தவள், கவலை முட்டிக்கொண்டு வர, மீண்டும் படுக்கையில் விழுந்து அழுதாள்.

பக்கத்தில் குசன் படுத்திருந்தான்.

சத்தமாக அழுது அவன் நித்திரையைக் குழப்ப மனமில்லாமல், எழுந்து பாத்றூம் போனாள். நேரம் ஆறுமணி பத்து நிமிடமாகி இருந்தது.

முகத்தைக் கழுவி, சாமியறைக்குப்போய் விளக்கேற்றி, திருநீறும் பூசிவிட்டு, கண்ணீர் வழிந்தோட நின்றாள்.

'இராமா! 'ராமா! எனக்கேன் இந்தச் சோதனை.. பிள்ளையளை வளர்த்து ஆளாக்கிவிடவேணும் எண்டு உயிரோடு இருக்கிறேன். இந்த இராட்சதன் ஏன் என்னோடை வம்புக்கு வாறான்? கடவுளே! நல்ல கணவனைத் தந்து ஆசைகாட்டிவிட்டு பாதியிலே அழித்து விட்டியே.. பிள்ளைகளும், நானும் தவிக்கிற தவிப்பு... ஐயோ கண்ணா...!'

யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு, கண்ணீரை அவசரமாகத் துடைக்கப் போனாள்.

'அக்கா!' என்று அவளை ஆதரவோடு அணைத்து,
'அழாதேங்கோ...! பிளீஸ் அக்கா...! என்ன?' என்று கேட்டாள் யசோ.

'என்னடி யசோ... இவன்ரை ஆக்கினை தாங்கமுடியேல்லை! சின்ன வயசிலை அம்மா அப்பா விளையாடினனாங்களெண்டு தண்ணியைப் போட்டிட்டு விசர்க்கதை கதைக்கிறான்.'

'கமலமக்காவுக்குத் தெரியாதே...? சொல்லுங்கோவன்! இல்லாட்டி கோகுலன் வரட்டும் சொல்லுவம்.'

'வேண்டாம் யசோ! தேவையில்லாத பிரச்சனையள் வரும்.'

'ஓ.கே அக்கா...! நான் ஒண்டு கேக்கிறன் கோவிக்காதேங்கோ.' என்றாள் யசோ ஜானகியின் கையைப் பிடித்தபடி.

'சொல்லு! உன்னோடை நான் ஏன் கோவிக்கிறன்!'

'கோவிக்கக்கூடிய விசயம் எண்டதிலை சொல்லுறன்.'

'சொல்லு, நான் கோவிக்கேல்லை!'

''ராம்அண்ணாவும், நீங்களும் உயிருக்குயிரா வாழ்ந்தனீங்கள்,  அதை மறக்கமுடியாது. நான் நினைக்கிறன்... எனக்கு அவரைத் தெரியாது... நீங்கள்  சொன்னதை வைச்சுப் பார்த்தால் அவர் ஆத்மா உண்மையிலை சந்தோசப்படும், நான் சொல்லுறதை நீங்கள் செய்தால்....' என்றாள் யசோ பீடிகையுடன்.

'என்னடி பெரிசாக் கதையளக்கிறாய்...? 'ராம்... அவர் 'ராமன்தான்... நாங்கள் எத்தினை தரம் சண்டை போட்டிருப்பம், தேவையில்லாமல் எல்லாம் சண்டை போட்டிருப்பம்... ஆனால் ஒருநாள் கூட அதைக் கோபமா வளர்த்துக்கொண்டது கிடையாது. கருத்துக்களை பெரிசா விவாதிப்பம், மோதிக்கொள்வம், பிறகு கொஞ்சநேரத்திலை இரண்டு பேருமே ஒரு முடிவுக்கு வந்திடுவம், போயிட்டார் பாவி..! நான் என்ன பாவம் செய்தேனோ.... கிடந்து  மாயிறன்!'

'இல்லை..... இல்லை ! நீங்கள் ஒரு பாவமும் செய்யேல்லை, சாகிறவைக்குப் பிரச்சனையில்லை. எல்லாத்தையும் அப்பிடியே விட்டபடி அவை போயிடுவினம். இருக்கிறவைதான் பிரச்சனை களைச் சந்திக்க வேணும்... நீங்கள் நல்ல துணிச்சல்காரி... இத்தனை காலமும் சமாளிச்சிட்டீங்கள்! ஆனால் அக்கா... பரதன் தங்கமான மனிசன், தனியா இருக்கிறார்....'

'வேண்டாம்! பிளீஸ் யசோ! இன்னொரு ஆம்பிளைக்கு என்ரை மனசிலை இடமில்லை.'

'சரி, மனசிலை இடம் கொடுக்காட்டியும், வீட்டிலை இடம்  குடுங்கோ!'  

Keine Kommentare: