Dienstag, 3. Mai 2011

பகுதி-15





கண்ணனும் மேலே வந்தான்.
'இவன், இவளையே செய்யலாமே! பிறகேன் வேறை கலியாணம் பேசுவான்?' என்று வேணி, அமைதியாக இருந்தவாறு ஒரு குண்டைத் தூக்கியெறிந்தாள்.

ஜானகி அவளை விழுங்கிவிடுவது போலப் பார்த்தாள். 

'கண்ணன்! இவளைக் கூட்டிக்கொண்டு வீட்டை போங்கோ!' என்றாள்.

கண்ணனுக்கு வார்த்ததைகள் வரவில்லை, யசோவும், கோகுலனும் கலியாணம் செய்யலாம் என்று வேணி சொன்னது அவன் மனதைச் சுண்டி இழுத்தது. ஜானகி வேறு வேணியைக் கூட்டிக்கொண்டு வெளியே போகச் சொல்லிவிட்டாள் செய்வதறியாது நின்றான்.

'ஒரு ஐடியா சொல்லக்கூடாதோ....! உன்ரை சொல்லைக் கேட்கானாம், என்ரை சொல்லைக் கேட்கானாம். அவள் சொன்னாத் தலைகீழாயும் நிப்பான்போலைக் கிடக்கு! உனக்கு விளங்கேல்லை, எனக்கு விளங்கிச்சுச் சொன்னன்.. அதுக்கேன் கோவிக்கிறாய்?' என்றாள் வேணி ஒன்றும் நடவாததுபோல.

'வேண்டாம், இந்தக் கதை! தயவுசெய்து வேண்டாம், எங்களை நிம்மதியா இருக்கவிடு!'

அப்போ, கோகுலனும், யசோவும் வந்தார்கள். யசோ சமையலறைக்குப் போக, அவன் மீண்டும் ஹோலுக்குள் வந்து சோபாவில் இருந்தான்.

'அண்ணை! ஏன் உனக்குக் கோபம் வருகுது...? நீ முந்திமாதிரி இல்லை.' என்று கோகுலனுக்குப் பக்கத்தில் போய் அவன் கையைப் பிடித்தாள்.

'அவனைச் சும்மா இருக்கவிடு!' என்றாள் ஜானகி. பிறகும் ஏதாவது சொல்லி, அவன் மனதை நோகடித்துப் போடுவாளென்ற பயம் அவளுக்கு.

'கதைக்கிறதையும் கதைச்சுப்போட்டு, இப்ப நல்லபிள்ளைமாதிரி கையைப் பிடிக்கிறாய்!' என்று  அவள் கையை விடுவிக்கப் பார்த்தான் கோகுலன்.

அவள் விடவில்லை. மாறாக நெருங்கிச் சென்று, மற்றக்கையால் அவன் கழுத்தைச்சுற்றி, தலையால் அவன் தலையில் செல்லமாக முட்டினாள்.

'நீ என்ரை அண்ணையடா! பகிடி... உன்னோடை எவ்வளவு பகிடி, கிண்டல் விட்டிருப்பன்... இப்ப கல்யாணம் செய்து போட்டன் எண்டால் பிறத்தியே...? கோவிச்சுக்கொண்டு ஓடுறாய் என்ன!' என்று கழுத்தைச் சுற்றிய கையால் முதுகில் ஒரு தட்டுப் போட்டாள்;.

கோகுலனின் கண்கள் குளமாகின.
அவனை இழுத்துத் தன் மடியில் போட்ட வேணி,
'அழாதையடா! அவள்... அந்தப்பொம்பிளை என்ரை கண்ணில் பட்டால், குடுமியை ஒட்ட அரிஞ்சுபோடுவன்! பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிறாவாம்... பழக்கவழக்கம் தெரியாதவள்!' என்று பல்லை உடைத்து விடுவது போல நெரும்பினாள்.

யசோ தூர நின்று பார்த்துவிட்டு,
'சகோதரம், சகோதரம்தான்' என்று மனதுக்குட் சொல்லிக் கொண்டாள்.

'ஆரெண்டா என்ன... எந்த நாட்டுக்காரியெண்டா என்ன உனக்குப் பிடிச்சவளாக் கூட்டிக்கொண்டுவா! நான் உனக்குக் கட்டி வைக்கிறன்! நீ அந்த ரீச்சர்காரிக்கு முன்னுக்கு வாழ்ந்து காட்டு!' என்றாள் வேணி.

அவள் வார்த்தைகள் யசோவின் காதுகளிலும் வீழ்ந்தன.

'யசோ வருத்தக்காரி, இல்லாட்டி அவளையே உனக்குச் செய்து வைக்கலாம். வேறை நல்ல பிள்ளையாப் பாத்துச்சொல்லு!' என்றாள்  வேணி.

இதுவும் யசோவின் காதுகளில் விழுந்தது. கோகுலன் ஏதோ சொன்னான், அது என்ன...? அவளுக்கு விளங்கவில்லை.

'நான் வருத்தக்காரிதான், ஆனால் என்னைப்பற்றி கோகுலன் என்ன சொல்லியிருப்பான்....!' அவள் நெஞ்சு ஆவலாகத் துடித்தது. ஆனால் அவள் காதில் விழவில்லையே... யாரைக் கேட்க....? ஜானகியை...! சீ... கண்ணனிடம்.... ம்... வேணி... சீ வேண்டாம், தேவையில்லை. அவன் என்ன சொன்னான் எண்டது எனக்கு அநாவசியம்.' என்ற முடிவுக்கு வந்தாள்.

தன்னை வருத்தக்காரி என்று வேணி சொல்லும்போது, அவளைப் பார்த்து நெரும்பிக்கொண்டு, கோபமாகக் கையை ஓங்கிய ஜானகியின் முகம் யசோவின்  கண்முன்னே வந்தது.

அது அவள் நெஞ்சை நிமிர வைத்தது.
'கலியாணம் செய்துதான் வாழவேண்டுமெண்டில்லை, ஒரு நல்ல அக்கா அல்லது அண்ணன்  இல்லாட்டி ஒரு நல்ல நட்பு ஜானகி போல இருந்தால் போதும், வாழ்க்கையை வாழலாம்.' என்று மனதுக்குள் எண்ணியவாறு, தன் வேலையில் ஈடுபட்டாள்.

தொலைபேசியடித்தது. ஜானகி எடுத்தாள்.

'தாமோதரமண்ணை! என்று கோகுலனைப் பார்த்து, 'உன்னோடை கதைக்கப் போறாராம்!' என்றாள்.

'அண்ணை! சுகமா இருக்கிறீங்களே?' என்று தானே ஆரம்பித்தான் கோகுலன்.

'டேய்! வந்து இவ்வளவு நேரமாகுது... ஒரு போன் எடுக்கத் தெரியேல்லையே...'

'வாறன், வரத்தான் இருந்தனான். இஞ்சை தங்கச்சி, கண்ணன் எல்லாம் வந்ததிலை நேரம்போட்டுது! கொஞ்சம் பொறுத்து வாறன் அண்ணை!'

'கடை அலுவல் மறக்காதை என்ன!' என்று திடப்படுத்திக்கொண்டு தொலைபேசி உரையாடலை முடித்தார் தாமோதரன்.

'என்னவாம்?' கேட்டாள் வேணி புதினம் அறியும் ஆவல் தொனிக்க.

'அந்தாளோடை பெரிய தொல்லை!' என்று உண்மையை மறைக்க மனமில்லாமல்,
'ஏதோ வரட்டாம்... கடை அலுவலாம். போய்ப் பாத்துக்கொண்டு வாறன்!' என்று விட்டு கோகுலன் புறப்பட எழுந்தான்.

யசோ எட்டிப் பார்த்தாள்.
கோகுலன் அவளை அணுகி,
'கடைக்கதை கதைக்க தாமோதரனண்ணை வரட்டாம், போட்டு வாறன்!' என்றான்.

'போட்டு வாங்கோ! கண்டதையும் சாப்பிட வேண்டாம், இஞ்சை சமைச்சிருக்கிறன், வந்து சாப்பிடவேணும்.'

'சரி, போட்டு வாறன்!'

'இஞ்சைதானே படுப்பீங்கள்... அக்கா சொன்னா!'

'பாப்பம்.'

'ஓமெண்டு சொன்னா கொஞ்சம் மனதுக்குச் சந்தோசமா இருக்குமே!'

'பாப்பம்!' என்று மீண்டும் சொல்லிச் சிரித்துவிட்டு, விரைந்து வெளியேறினான் அவன்.

தாமோதரனின் கடைக்குக் கோகுலன் வந்தான்.
'என்ன மாதிரி சிலோன்.... நீங்களெல்லாம் பெரியாக்கள். ரெலிபோன் எடுத்தாக் குறைஞ்சு போவீங்கள்.' கிண்டலாகக் கேட்டார் தாமோதரன்.
'என்னண்ணை நீங்கள்.... அங்கை போய் ஒரே விசிற்றேஸ், பாக்க வந்த சொந்தக்காரச்சனமெல்லாம் சாப்பிட வரச்சொல்லி ஒரே ஆக்கினை. அம்மாவுக்குக் கொஞ்சம் ஏலாது, டொக்டரிடம் போய் வந்தது ஒருபக்கம்... பொம்பிளை வீட்டுக்காரர் இண்டைக்கு வருவினம், நாளைக்கு வருவினமெண்டு அது பெரும் இழுபாடு! கோவிக்காதேங்கோ அண்ணை!' என்று சமாளித்தான் கோகுலன்.

'அதில்லை கோகுலன், கொஞ்சம் உடுப்பு எடுத்திருக்கலாமெல்லே!'

'கொஞ்சமெண்டு... இரண்டு சூட்கேஸ் கொண்டு வந்தனான்... காருக்குள்ளை இருக்கு, பாருங்கோவன்!'

'போடா! நீயாவது... சூட்கேஸாவது....' என்று நம்ப மறுத்தார் தாமோதரன்.

'உண்மையாத்தான், சாமான் கொண்டு வந்தனான்.'

தாமோதரன் உண்மையை அறிய, கடையைவிட்டு இறங்கி நடந்து, கோகுலனின்; காரையடைந்து எட்டிப் பார்த்தார். கோகுலனும் வந்து காரைத் திறந்தான்.

இரண்டு சூட்கேஸ்கள் இருந்தன.

'நீ பொல்லாத கில்லாடியடா...!' என்று, முகத்திலே சந்தோசம் சொரிய அவன் முதுகில் தடவிவிட்டார்.

'ஓ!' என்று கூறிவிட்டு, தாமோதரனும், கோகுலனும் சூட்கேசுகளைத் தூக்கிக்கொண்டு போய் கடைக்குள் வைத்தார்கள்.

ஆக்கள் நின்றதால், 'பிறகு கதைப்பம்!' என்றவர்,
'மாதவன்ரை கணக்கு என்ன மாதிரி, கதைச்சனியே...?' கேட்டார்.

'நாளைக்குக் கதைக்கிறன்.'

'நான் அலுவல் முடிச்சிட்டன், வாறமாதம் திறப்புவிழா... மாதவனைச் சம்மதிக்க வைக்கிறது உன்னிலை தான் இருக்கு! உன்னை நம்பித் தான் கடை எடுத்திருக்கு, சரியே!' என்றார் தாமோதரன்.

சாமான்களை எடுத்துக்கொண்டு, இருவர் காசைக் கொடுக்க தாமோதரனிடம் வர,
'நீங்கள் பிஸியாக நிக்கிறீங்கள்... நான்  நாளைக்கு வாறன்!' என்று கோகுலன் வீட்டுக்குச் செல்லக் கிளம்பினான்.

தாமோதரன் பொருட்களைப் பார்த்து, விலையைக் கூட்டி காசை வாங்கியவாறு,
'கோகுலன் ஒரு கதை!' என்று அவசரமாகக் கணக்கை முடித்து, அவர்களைப் போகவிட்டு, அவனிடம் வந்து,
'இவன் இராகுலன் கொக்காவோடை சேட்டை விடுகிறான் போலைக் கிடக்கு! உன்ரை சொந்தக்காரன் எண்டதிலை நீயே பாத்துக்கொள்! வேறை ஆருமெண்டால் நானே நாரியைக் கழட்டியிருப்பன்.' என்று ஜானகி அவனுக்கு வெளியிட விரும்பாத இராகுலனின் அட்டகாசத்தை அவிழ்த்துவிட்டார்.

கோகுலனின் முகம் கோபத்தில் சிவந்தது.

'அவனுக்கு என்ன அக்காவோடை பிரச்சனை..! அவன்தானே உந்த மன்றத்துக்குத் தலைவர்.... அது இது எண்டு மதிப்பா இருக்கிறான். இப்பிடி அதுவும் எங்கடை வீட்டிலை வந்து அக்காவோடை தனகியிருக்கிறான் எண்டா... கமலாக்காவுக்குத் தெரியாதோ..?'

'நல்லாத் தெரியும். ஜானகி நேரை சொல்லி, அடுத்தமுறை சொந்தமெண்டும் பார்க்கமாட்டன் பொலிசுக்குப் போவன் எண்டு எச்சரித்து விட்டிருக்கிறாள்!'

'ஏன் அக்கா சொல்லேல்லை...?'

'நீ சண்டைக்குப் போவாயெண்டுதான்! உன்ரை குணம் தெரியும்தானே அவளுக்கு! எனக்குக்கூடச் சொல்லேல்லை. யசோ மனம் பொறுக்கமுடியாமல் சொல்லியிருந்தாள். உனக்குச் சொல்லக் கூடாதாம், தெரிஞ்சமாதிரிக் காட்டிக்கொள்ளாதை!'

'இப்ப போய் அவன்ரை மூஞ்சையை உடைக்கப் போறன்.'

'போ! போய் உடைச்சிட்டு வா! பேய்க்கதை கதைக்கிறாய். ஆளிலை ஒரு கண் வைச்சிரு எண்டதுக்காகச் சொன்னனானே ஒழிய, அவன்ரை மூஞ்சையை உடைக்கச் சொல்லேல்லை.

'அப்ப அந்த றாஸ்கலை சும்மா விடச்சொல்லுறீங்களோ? நான் இல்லாத நேரம் பாத்து இப்பிடி நடந்திருக்கிறான் நாய்! அவனைச் சும்மா விடச் சொல்லுறீங்கள்!'

'சும்மா விடச்சொல்லேல்லை, நேரம் பார்த்துச்  செய்யவேணும், ஆள் ஒரு வண்வே!'

'வண்வே எண்டா எனக்கென்ன.. உடைச்சு நூறாக்கி விட்டிடுவன்... உவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது தாமோதரனண்ணை.'

'அது சரி! பிரச்சனையளைப் பெரிசுபடுத்தி விடாதை. ஏற்கனவே நீ சரியாக் கஸ்டப்படுகிறாய். இனி அடிதடி, பொலிஸ், வழக்கு.... எண்டு இழுபடேலுமே! அதோடை அவனுக்கு நாலு மச்சான்மார் இருக்கிறாங்கள். மன்றம் அதுஇதெண்டு கரிதாஸ் அதுவெளியையும் கொஞ்ச ஜேர்மன்காரர்களை  வைச்சிருக்கிறான். அவன் ஒரு நரி... பொறி போட்டு விழுத்தவேணும்... நான் சொல்லுறதைக் கேள்!'

கோகுலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அருகேயிருந்த சீமெந்துக்கட்டில் இருந்தவிட்டான். தாமோதரன் சொன்ன காரணங்களை அவனும் யோசித்துப் பார்த்தான்.
'எல்லாம் கஸ்டகாலம்....' என்று தலையையாட்டினான்.

'தெரியுதெல்லே... கவனமா யோசிச்சு நட! பிரச்சனையள் வரேக்கை மூளையைக் கூர்மையா வைச்சிருக்க வேணும். இல்லாட்டி நிமிர முடியாது.'

'சரி, நான் வீட்டை போறன்.'

'ஓ!' வீட்டிலை ஜானகிக்கோ, யசோவுக்கோ தெரிஞ்சதாக் காட்டிக் கொள்ளாதை.'



                     ----------


கோகுலனுடன் கதைக்க வேண்டுமென்றிருந்த, பரதன் அவனின் வீட்டுப்பக்கமாகக் காரில் வரும்போது, அவன் கார் நிற்பது கண்டு தன் காரை ஓரமாகப் பாக்பண்ணிவிட்டு, இறங்கி வந்து வீட்டுமணியை அழுத்தினான்.

கோகுலன் வந்து வீட்டுக்கதவைத் திறந்தான்.

உள்ளே யசோ இருந்தாள். பரதன் அவளை அங்கு எதிர்பார்க்க வில்லை. 'ஏன் இப்ப வந்தேன்' என்று அவன் மனம் சங்கடப்பட்டது.

'வாங்கோ பரதனண்ணை!' என்று ஆவலாக கோகுலனும்,
'வாங்கோ அண்ணா!' என்று யசோவும் முகம்மலர அழைத்தபோது, அவன் சங்கடம் சற்றுத் தணிந்தது.

'மாறிமாறி ஒரே பிரச்சினையாக் கிடக்கு!' என்றான் கோகுலன்.

'என்ன பிரச்சனை... சிலோனுக்குப் போனனீர்? கலியாணம் குழம்பினது வரை கேள்விப்பட்டனான்.'

'கலியாணம் குழம்பினதுக்காக நான் கவலைப்படேல்லை, அதுக்குப் பொம்பிளை சொன்ன காரணம்தான் எனக்குக் கவலை.'

'கோகுலன்! கவலைப்படாதை, அவளுக்கு உன்னைத்  தெரியாது. உன்னைப் பற்றி முழுசாகத் தெரிந்து கொள்ளாத ஒருத்தி, மாட்டன் எண்டு சொல்ல வேணுமெண்டதுக்காக நுனி நாக்கிலையிருந்து எறிந்த சொற்களுக்கு நீ கலங்குவது அர்த்தமில்லை.'

'அதொரு பக்கம் கிடக்க, சீட்டு முறிஞ்சு... அது வேறை கடனாளியாக்கிப் போட்டுது!'

'எவ்வளவு காசு வேணுமெண்டு கேக்க என்னாலை முடியாமல் கிடக்கு! ஏனெண்டா நீ ஐந்நூறு மார்க் கேட்டாலும்கூட தாற நிலையிலை நான் இண்டைக்கு இல்லை, கொள்ளையடிச்ச மாதிரி மனிசிக்காரி கிடந்ததையெல்லாம் வழிச்சுக்கொண்டு போனதும் பத்தாதெண்டு பாங்கிலும் கடன் வைச்சிட்டு ஓடியிட்டாள்.' என்று பரதன் சொல்ல,

'ஓமண்ணை! உங்கடை கஸ்டம் எனக்குத் தெரியும்தானே!' என்றான் கோகுலன்.

'உந்தச் சீட்டெல்லாம் அநாவசியம்... தேவையில்லை எண்டு சொல்ல நினைச்சாலும், கையிலை காசில்லாதவைக்கு, ஏஜென்ஸிக்குக் கட்டி ஆளைக் கூப்பிடவோ, அக்கா தங்கச்சிக்கு சீதனம் குடுக்கவோ, அவசரத்துக்குக் கைகுடுக்கத்தான் செய்யும். நல்லா நடக்கிறதும் இருக்கு... இடையிலை முறியிறதும் இருக்கு... உன்னுடைய கஸ்டகாலம்.'

'இதெல்லாம் என்னாலை சமாளிக்க முடிஞ்சிட்டுது, ஆனா இப்ப ஒரு ஆளை வெட்டியிட்டு ஜெயிலுக்குப் போகவேண்டியவன் நான். அதுதான் யசோவும், நானும் கதைச்சுக் கொண்டிருந்தம்.'

'ஆரை வெட்டவேணுமெண்டு யோசிக்கிறீங்கள்....! அப்பிடி என்ன செய்திட்டார் அந்த ஆள்...?'

'இராகுலனைத்தான்...'

'உங்களுக்கு அவர் சொந்த மச்சானெல்லே!'

'ஊத்தையன், சொந்தக்காரன் எண்டு சொல்லவே நாக் கூசுது.'

'என்ன சொல்லுறாய்! அவர்தானே கூட்டம், விழா எண்டு லெவலா  ஏதோ செய்து கொண்டிருக்கிறார். நீ உப்பிடிச் சொல்லுறாய்...!'



'படிச்சவனாயிருக்கலாம்.... பேச்சாளன், அதுஇதெண்டு  திறமை இருக்கலாம். மனசு சுத்தமாக இருக்கவேணும், அவனிட்டை அது இல்லை. அக்கா தானும் தன்பாடுமெண்டு இருக்கிறா. அவவோட சேட்டை விடுகிறான். மனிசிக்காரி கண்டும் காணாமல் இருக்கிறாள். இதுவும் ஒரு குடும்பம், கிலுசு கெட்டதுகள்!' என்று ஆத்திரம் கொட்டக் கூறியவன், யசோவைக் காட்டி,
'எவ்வளவோ கஸ்டப்பட்டு எடுத்த றெயினிங்கைக்கூடக் கெடுத்துப் போட்டான்.'

'ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறான்... சீ!' என்று முகத்தில் வெறுப்புக் குவிய, பரதன் மேலும் சொன்னான்.
'வந்த புதிசிலை அப்ப 'ராம்... நான் எல்லாம் எவ்வளவு உதவி செய்திருப்பம். சாமான் வேண்டாமல், சமைக்காமல் இருப்பான். பாவம் என்று எத்தனைநாள் சாப்பாடு குடுத்திருப்பம். நன்றி மறந்து போய், ஏதோ பெரிய அறிஞன் என்று தலைக்கனத்தில் திரியிறது போதாதெண்டு, சும்மா இருக்கிற ஆக்களோடை ஏன் தனகிறான்? என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினான்.


'அக்காவோடை இருக்கிற கோபத்திலை, யசோவின்ரை வேலைக்கு உலை வைச்சிருக்கிறான் எண்டால், இவனை ஒரு மனிசன் எண்டு எப்பிடிச் சொல்லுறது...!' என்றான் கோகுலன்.

'என்ரை வேலை போனால் பறவாயில்லை. ஜானகியக்காவை யெல்லே நிம்மதியா இருக்கவிடாராம். அவரவர் செய்யிறது அவரவருக்கு... கடவுள் பாத்துக்கொள்வார், விட்டிட்டு எங்கடை அலுவலைப் பாப்பம்.' என்று கவலையுடன் பகர்ந்தாள் யசோ. இதனைப் பெரிசுபடுத்தினால் அடிதடிவரை போயிடும் என்று பயந்தாள் அவள்.

கோகுலன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு,
'உங்களுக்கு பாதர் இரக்கப்பட்டு, அங்கை இங்கை கேட்டு, ஒரு படிப்பை ஒழுங்குபண்ணித்தர, அதைத் தன்ரை செல்வாக்கைப் பயன்படுத்தி பாழாக்கிவிட்டிருக்கிறான். இப்பிடிக்கொத்தவனை கடவுள் பாத்துக் கொள்ளட்டும் எண்டு எங்களைக் கைகட்டச் சொல்லுறீங்கள்!' என்று கேட்டான்.

'வேறை என்ன செய்யப்போறீங்கள்...? அவரோடை போய்ச் சண்டை பிடிக்கப் போறீங்களா...? இப்ப இருக்கிற பிரச்சனையளுக்கை இது தேவையா? விடுங்கோ! '

'அவன் ஒரு பயந்தாந்கொள்ளி யசோ. அவனை இவனைத் தெரியுமெண்டிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரியுறான். வழமாச் சந்திக்கட்டும், குடுக்கிறன்!' என்ற பரதன், கோகுலனைப் பார்த்து,

'நீP ஒண்டும் செய்து போடாதை!  கொஞ்சம் பொறுமையாத்தான்  இவன்ரை விசயத்திலை நடக்கவேணும்.' என்று அவனைச் சமாதானப்படுத்தினான்.

                      ----------

புத்தகம் -பக்கம் - 162

வீட்டுக்கதவு மணியடித்தது.

ஜானகி கதவைத் திறந்தாள்.

இராகுலன் விசமச் சிரிப்புடன் நின்றான்.

'என்ன...!' என்றாள் சினத்துடன் ஜானகி.

'யசோ எங்கை...? றெயினிங் முடிஞ்சுதே...? அவளுக்கெல்லாம்  ஏன் நேர்ஸ் வேலை... இப்ப சொல்லு... என்ன செய்யப்போறாய்... அத்தானை நேசிக்கிறியோ...?' என்று நஞ்சாக வார்த்தைகளைக் கொட்டினான் இராகுலன்.

'போடா வெளியே!' என்று கதவைச் சாத்த நினைத்தவள், சற்றுப்  பொறுமையை வரவழைத்துக்கொண்டு, அவனை உள்ளே வரவிட்டு,
'என்னண்டு இப்பிடியொரு அநியாயம் செய்ய உங்களுக்கு மனம் வந்தது? வருத்தக்காரப்பிள்ளை யசோவுக்கு கடவுள் கொடுத்த கஞ்சியைத் தட்டி ஊத்திப் போட்டீங்களே! இந்தப் பழி உங்களைச் சும்மா விடுமா...?'  என்று கேட்டாள்.

'பழி, பாவம் இருக்கட்டும் ஜானகி. அதைப் பிறகு பாக்கலாம். நீ என்ன சொல்லுறாய்? என்ரை பவறைப் பாத்தியா, றெயினிங்கொலிச் என்ன, ஹொஸ்பிற்றல் என்ன, மினிஸ்ரிவரை எனக்குப் பவர் இருக்கு!'

'உங்களுக்குப் பவர் இருக்கெண்டு இப்பிடியே காட்டுறது...! எங்கடை சனங்கள் எவ்வளவு பேர் விசாப்பிரச்சனையாலை கஸ்டப் படுகுதுகள், அதுகளுக்கு ஒரு வழி காட்ட உங்கடை பவரைக்  காட்டியிருந்தா, இல்லாட்டி எங்கடை நாட்டுப்பிரச்சனையை விளங்க வைத்து, தமிழ்மக்களுக்கு சாதகமா ஒரு அரசியல்தீர்வு காண வழி வகுத்திருந்தால் எங்கடை சொந்தக்காரன் இராகுலன் இப்பிடி எல்லாம் செய்யிறாரே எண்டு பெருமைப்படலாம். இப்ப நீங்கள் செய்திருக்கிற நரித்தனத்துக்கு உங்களை எங்கடை சொந்தக்காரன் எண்டு சொல்லவே நாக் கூசுது'

'போடி! போடி! சும்மா கனக்கக் கதைக்காதை! இறங்கி வழிக்கு வா! சமாதானமாகப் போவம். இல்லாட்டி உன்ரை குடும்பத்திலை நிம்மதி கிடைக்காது... இருக்க விடமாட்டான் இராகுலன்.'

'உங்களுக்கு நாங்கள் என்ன செய்தனாங்களெண்டு எங்களோடை இப்பிடி  எதிரிகட்டுறீங்கள்! குடும்பம், பிள்ளை குட்டி எண்டு வசதியா இருக்கிறீங்கள். சமூகத்திலையும்  மதிப்பா இருக்கிறீங்கள்.... நாங்கள் சும்மாவே கடவுளாலை சோதிக்கப்பட்டு, மாறிமாறிப் பிரச்சனையளுக்கை எதிர்நீச்சல் போடுறம்! பிளீஸ் தயவுசெய்து எங்களை விட்டிடுங்கோ!  உங்களைக் கையெடுத்துக் கும்பிடுவன், இனிமேல் எங்கடை பாதையிலை வராதேங்கோ!'

இராகுலன் சிரித்தான்.

'நான் என்ன காதிலை பூவே வைச்சிருக்கிறன்;.... நினைச்சாச் செய்வன். அப்ப நான் நினைக்கேல்லை, 'ராம் முந்திக் கொண்டான். இப்ப அவன் இல்லை, இரண்டாந்தாரமா பப்ளிக்கிலை தாலி கட்டுறன் வா!'

'நீ இராகுலனா...? இராவணனா...? என்னண்டு இப்பிடியெல்லாம் பேச மனம் வருகுது...'

'எப்பிடிவேணுமெண்டாலும் வைச்சுக்கொள்! பதிலைச் சொல்லு! ஓமெண்டா இதோடை முடிஞ்சிடும். இல்லாட்டி தினமும் ஒரு பிரச்சனை உன்ரை வீட்டிலை முளைக்கும். யோசி! நல்லா யோசி! இன்னும் ஒண்டு தெரியுமே... வேணி.. உன்ரை தங்கச்சி, அவளை விஜய் சுத்திக்கொண்டு திரியிறான், பரதன்ரை மனிசியைச் சந்திரன் கௌவிக்கொண்டு போனமாதிரி, அவன் அள்ளிக்கொண்டு போகப்போறான்... இதெப்பிடி..?' என்று அக்கினிக்;குண்டொன்றைத்; தூக்கிப் போட்டான்.

ஜானகி விழி பிதுங்க வாயடைத்துப் போய் நின்றாள்.

'என்ன பேச்சைக்காணம்...! வேணி கமலத்தோடை அந்தமாதிரி ஒட்டு, அவள் தன்ரை வீட்டுச்சமாச்சாரத்தையும், உன்ரை வீட்டுச்சமாச்சாரத்தையும் அப்பிடியே மெல்லச் சொல்லிப் போடுவாள்! அப்பாவிப்பிள்ளை, உன்னை மாதிரிப் பிடிவாதக்காரியில்லை.  கண்ணனும்  வேணியும் எங்கடை வீட்டை அடிக்கடி குடும்பமா வந்து போயினம். விஜயை வீட்டுக்கை அடுக்கி வைச்சிருக்கினம் கவனம்.'

'அது அவையின்ரை பிரச்சினை... எல்லாப்பெடியளும் சந்திரன் மாதிரியும், எல்லாப் பொம்பிளையளும் ஈஸ்வரி மாதிரியும் இருக்க வேணுமெண்டில்லை. எங்கடை வீட்டுப் பிரச்சனையை நாங்கள் பாக்கிறம். நீங்கள் போங்கோ, எனக்குப் பின்னேரம் வேலை, அதுக்குள்ளை கடையளுக்குப் போட்டு வந்து சமைக்க வேணும்.' என்று தன்; அவசரத்தைக் காட்டினாள்.
'நான் என்ன இஞ்சை இருந்து, சாப்பிட்டுப் படுக்கவா போறன்! அதுக்கு உன்ரை சம்மதம் வேணும். இராவணன் மாதிரி எனக்கும் பொறுமை இருக்கு. ஆனால் இராவணனிட்டையிருந்து சீதையை மீட்க இராமன் வந்தான், இங்கை இராகுலனிட்டையிருந்து உன்னை மீட்க 'ராம் வரமாட்டான், அவன் இந்த உலகத்திலை இல்லை.'

ஜானகி அவனை எரித்துவிடுவது போலப் பார்த்தாள்.

'அப்பிடிப் பாக்காதை, பார்த்தால்போலை நான் பயந்து ஓடியிடமாட்டன். இங்கை பார் ஜானகி, நீ தனியத் தானே இருக்கிறாய்... இப்ப ஆரையாவது கலியாணம் செய்து குடும்பமா இருந்தா, நான் ஏன் இப்பிடிக் கூத்தாடப்போறன்....! அப்பிடிக் கெட்டவனில்லை, நீ பாவம்! சொந்த மச்சாள்... ஒரு இரக்கத்திலை கேக்கிறன்!'

'என்னை நீங்கள் பாவம் பாக்க வேண்டாம். நிம்மதியா எங்களை இருக்க விடுங்கோ! உங்கடை அட்டுழியம் தாங்க முடியேல்லை.'

'இதையெல்லாம் அட்டுழியமெண்டே நினைக்கிறாய்...! சீ...சீ.. அன்பு.. ஜானகி... அதோடை இன்னொண்டு தாமோதரனையும், உன்ரை தம்பியையும் கொழுவிவிடப் போறன். இதெப்பிடி....!' என்று நளினமாகச் சிரித்தபடி, அவள் தோளில் தட்டிவிட்டு வெளியே நடந்தான்.

ஜானகிக்குத் தலையே சுற்றியது. அருகே இருந்த கதிரையிலிருந்து முகத்தைப் பொத்திக்கொண்டு வாய்விட்டே அழுதாள். வானொலியில் காலைப்பூந்தென்றல் நிகழ்ச்சியில் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே....' என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஜானகி யின் மனோநிலையில் இப்பாடலைக் கேட்டதும், இன்னும் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.


                   ----------



புத்தகம் -பக்கம் - 164
அன்றொருநாள் கண்ணன் ஜானகியிடம் சொல்லிக் கவலைப்பட்டதை நினைத்துப் பார்த்த யசோ கோகுலனுடன் இதுபற்றிக் கதைத்தாள்.

'கோகுலன் ஒருக்கா பாங்குக்குப் போகவேணும்  வாறீங்களே...?'

'காசு வேணுமெண்டால் கேளுமன், ஏன் பாங்குக்கு...?'

'இல்லை, ஒரு உதவி செய்யவேணும்...!'

'என்ன.... காசு தானே தாறன்!'
'சுந்தரம் மில் வாங்கக் காசு கேக்கேக்கை, வேணி வேண்டாமெண்டு கண்ணனை மறிச்சுப் போட்டா! நான் அந்தக் காசை அனுப்பப் போறன். இது வேணிக்குத் தெரியவந்தால்  நீங்கள் அனுப்பினதாச் சொல்லவேணும்!' என்றாள் யசோ.

குழம்பிப்போய் நின்ற கோகுலன்,
'நீங்கள் ஏன் சுந்தரத்துக்குக் காசு அனுப்பவேணும்?' என்று கேட்டான்.

'தமயனிட்டை மில் வாங்கவேணுமெண்டு சுந்தரம்  கேட்டவன். கண்ணனும் ஓமெண்டு சொல்லிப்போட்டுச் செய்யேல்லை. பாவம்தானே! என்னட்டைச் சேவிங்கிலை கிடக்கு! எடுத்து அனுப்பப்போறன்! இதை ஜானகியக்காவுக்குக்கூடச் சொல்லவேண்டாம்.' என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் யசோ.

'நீங்கள் உங்கடை வீட்டுக்கு அனுப்பவெண்டு சேர்த்து வைச்ச காசை அங்கை அனுப்பிப் போட்டு என்ன செய்யப்போறீங்கள்.?'

'முதல் மில்லை வாங்கட்டும், பிறகு பாப்பம்!'

'நீங்கள் நல்லாயிருப்பீங்கள், ஆரோ செய்ய வேண்டியதை நீங்கள்  செய்யிறீங்கள்... பிறகு உங்களுக்குத் தேவையெண்டால் நான் தாறன்!'

                     ----------
புத்தகம் -பக்கம் - 165


புத்தகம் - பக்கம் – 165                                        09.082012



இருவரும் வங்கிக்குச் சென்றார்கள்.

கோகுலன், ஜானகி வீட்டில் இருக்கும்போது வேணி வந்தாள்.

'கடை எப்பிடியண்ணை...?'

'பறவாயில்லை, போகுது!' என்றான் கோகுலன்.

'நான் சும்மாதானே இருக்கிறன், போய்க்கடையிலை நிக்கட்டே..! ஆருக்காவது குடுக்கிற சம்பளத்தை எனக்குத் தாவன்!'

'சீ.. சீ.. அதொண்டும் வேண்டாம். உறவு உறவா இருக்கட்டும். கடை கடையா நடக்கட்டும்.'

'தாமோதரமண்ணையிட்டை எல்லாத்தையும் விட்டிட்டு, நீ சும்மா திரியிறாய். அதிலை உன்ரை பங்கும் தானே கிடக்கு!'

'! அதுக்கு...!'

'நீயும் போய் இடைக்கிடை நிக்கலாம்தானே!'

'நான் நிற்க, இருக்க நேரமில்லாமல் இருக்கிறன். என்னைப்போய்க் கடையிலை நிக்கச் சொல்லுறாய்.'

'உன்னைப் போகச் சொல்லேல்லை, நான் போய்ச் சாமான் அடுக்கி, விற்கலாம்தானே... ஏன் செய்யமாட்டனே!'

'செய்யமாட்டாயெண்டு சொல்லேல்லை, நிர்வாகம் முழுக்க தாமோதரமண்ணை தான் கவனிக்கிறார். நான் அதுக்கை தலையிடுகிறேல்லை.'

'அது பிரச்சனையில்லைத்தானே, பிஸியான நாளிலை நான் போய்
கெல்ப் பண்ணுறன், சம்பளம் தராட்டாலும் பறவாயில்லை.'

'வேலை செய்தா சம்பளம் தரலாம்தானே, அதிலை பிரச்சனை இல்லை.' யோசித்தான் கோகுலன்.

'இதுக்குப் போய் ஏனண்ணை பெரிசா யோசிக்கிறாய்...?'

'நான் யோசிக்கேல்லை, தாமோதரமண்ணையோடை ஒருக்காக் கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்!'
'ரெலிபோனிலை கேளன்!'

'சீ... நான் ஒருக்காக் கடைக்குப் போகவேணும். நேரை கதைச்சால் நல்லது.'
'சரி! கேட்டுச்சொல், மறந்து போகாதை!'

                            ----------
இராகுலன் வீட்டுக்கு வேணி சென்றாள்.
'வாரும்! வாரும்!' வரவேற்றாள் கமலம்.
'எங்கை கண்ணன்....?'

'வேலைக்குப் போயிட்டார்.'

'என்ன கண்டறியாத வேலை... கடையைக்கிடையைப் போட்டிட்டுக் காலாட்டிக்கொண்டிருக்கிறதை விட்டிட்டு, சும்மா சம்பளத்துக்கு மனிசன் போவானே.....?'

'எல்லாரும் கடை போடேலுமே அண்ணை! அனுபவம் வேணும், ஆட்துணை வேணும், அதோடை காசு வேணுமே!'

'கோகுலனிட்டைத்தானே தேவையான காசு கிடக்கு! தாமோதரனிட்டைத் தொகையாக் குடுத்து வைச்சிருக்கிறான். அந்தக் காசுகளை வாங்கி நீங்கள் முன்னேறப் பாக்கலாம்தானே! பக்றியிலை இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளம் என்னத்தைச் செய்யப் போறீங்கள்?'

'அண்ணையிட்டை காசு எங்காலை? சீட்டு முறிஞ்சு அவர் சரியான கஸ்டத்திலை இருக்கிறார். நீங்கள் தெரியாமல் சொல்லுறீங்கள்.'
சீ... வேணி! கொண்ணை தாமோதரனிட்டைக் குடுத்து வைச்சிருக்கிறான். எழுத்துக்கணக்கு ஒண்டுமில்லை. தாமோதரன் சுத்தினாலும் சுத்திப்போடுவார்.' என்றாள் கமலம்.

'நான் அண்ணையிட்டைக் கேட்டு, இப்ப கடையிலை போய் நிக்கிறனான்.'

'பிறகென்ன...! ஏன் எங்களுக்கு முதலே சொல்லேல்லை...?' என்றாள் கமலம்.

'தாமோதரன் பொல்லாத ஆள். காசு விசயத்திலை பொல்லாத நஞ்சன், பாத்து நட!'

'அது அண்ணையும், அவரும் பட்டபாடு, எனக்கு அண்ணை சம்பளம் தருவார்.'

'! அதுசரி, எண்டாலும் ஏன் வேணி மூண்டாம் ஆளிட்டை காசு போக விடுவான். நீங்கள் அந்தக் கடையை வடிவா நடத்தலாமே!'  மனதுக்;குள் வேணியைக் குழப்பும் எண்ணத்துடன் கேட்டான் இராகுலன்.

'அண்ணையும், அவரும் நல்ல பிறன்ட்ஸ், செய்யினம். நாங்கள் அதுக்கை ஏன் குறுக்கை போவான்!'

'சீ! என்ன இப்பிடிச் சொல்லுறாய்! கோகுலன் ஒரு பேய்வெட்டி, கணக்குவழக்கொண்டும் பாக்க மாட்டான். எல்லாம் தாமோதரனும், மனிசியும்தான் செய்யிறது!' என்றான் போகுலன்.

'அதுக்கு நான் என்ன செய்யிறது...? அண்ணையெல்லோ கவனிக்க வேணும்.'

'கொண்;ணை வெளுத்ததெல்லாம் பால் எண்டு நினைக்கிறவன். அவனுக்கும் பிஸ்னெஸ்க்கும் ஒத்து வராது. நீ இல்லாட்டி கண்ணன் தான் இதுக்குச் சரி, கோகுலனோடை இதைப்பற்றிக் கதைச்சு தாமோதரனிட்டையிருந்து கடையைப் பறிக்கப் பாருங்கோ!'

'ஏனண்ணை நீங்கள் இப்பிடிச் சொல்லுறீங்கள்?'

'உள்ளதைத்தானே அவர் சொல்லுறார். உப்பிடியே விட்டீங்கள் எண்டால் வெறும் கடைதான் மிஞ்சும்.' என்றாள் கமலம்.

'நீங்கள் இப்பிடிச் சொல்லுறீங்கள் அக்கா! அண்ணை, தாமோதரமண்ணையை உயிரா நம்பியிருக்கிறார். எனக்கெண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.'

'உலகத்திலை நடக்கிறது கேள்விப்படேல்லையே! இலட்சக்கணக்கா சுருட்டிக்கொண்டு எத்தினையோ பேர் மாறியிருக்கிறாங்கள்.'

'நீங்கள் சொல்லுறது விளங்குது, ஆனால் அண்ணைக்கு என்னெண்டு இதை நான் சொல்லுறது!' என்று தயங்கினாள் வேணி.

'மெதுமெதுவாத் தான் சொல்லுறது!' என்ற கமலம்,
'இவ்வளவு நாளும் கேப்பாரில்லாமல் கோகுலன் இருந்தவன். கொக்காவுக்கு அக்கறையேயில்லை. இப்ப நீ தங்கச்சி வந்திட்டாய் சொல்லித்திருத்து!' என்றாள்.

                     

                     ----------
புத்தகம் -பக்கம் - 168

ஜானகி வீட்டில் தொலைபேசி மணி ஒலித்தது.
பக்கத்திலிருந்த கோகுலன், எடுத்துக் கதைத்துவிட்டு, றிசீவரைப் பொத்தியபடி,
'பாதர்!' என்று மெதுவாக உச்சரித்தவாறு யசோவிடம் கொடுத்தான்.

யசோ ரெலிபோனை வாங்கிக் கதைத்தாள். அவள் ஜேர்மன்மொழி பயின்று கொண்டிருப்பதால் நன்றாகக் கதைக்குமளவுக்கு முன்னேறி இருந்தாள். ரெலிபோன் உரையாடலை முடித்துவிட்டு,
'கின்டர்காடின் ரீச்சருக்குப் படிக்கிறதுக்கு இடம் இருக்காம், விருப்பமோ என்று பாதர் கேட்டவர்!' என்றாள் யசோ.

அவள் பாதருடன் கதைத்ததையும், ஜா என்று சம்மதம் சொன்னதையும் கேட்டுக்கொண்டிருந்த ஜானகியும், கோகுலனும் சந்தோசத்தால் முகம் மலர, அவளுக்குக் கை கொடுத்து முதல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

'நேர்ஸிங்கை விட இது உனக்கு நல்லது, வேலையும் கஸ்டமில்லை, பிள்ளையளோடை பழகிற ரெக்னிக் உனக்கு நிறையத் தெரியும்தானே!' என்றாள் ஜானகி.

'எல்லாம் நன்மைக்குத்தான், இராகுலனுக்கும் எடுத்துத் தாங்ஸ் பண்ணிவிடும்.' என்று கோகுலன் தமாஸாகச் சொன்னான்.


                    ----------



Keine Kommentare: