Freitag, 1. Juni 2012

எனது பக்கத்தில்...



வாணிவிழா HSK, வண்ணத்துப்பூச்சி இரு தலைப்புகள் உள்ளன.




xxxxxxxxxxxxxxxxxx o xxxxxxxxxxxxxxxxxxx

எனக்கொரு வரம் அருள்வாய்!


எனக்கொரு வரம் அருள்வாய்!
வரதா!

என்னூர் செழித்திட வேண்டும்

எங்கும் பள்ளிகள் சிறந்திட
பிள்ளைகள் படித்து
அறிவுடன் உயர்ந்திட

என்னூர் செழித்திட வேண்டும்!

வரதா! வைகுண்ட வாசா!
பொன்னாலையில் எழுந்தருளி
பேரருள் புரிபவனே

பக்தரின் இன்னல்  
போக்கிடும் நாயகனே!
நாதனே! நரசிம்மரூபனே! நாராயணனே!

எனக்கொரு வரம் அருள்வாய்!
வரதா!

என்னூர் செழித்திட வேண்டும்

நீலக்கடலலைகள் முத்தமிட
நிலவே வந்து தாலாட்ட
ஈஞ்சும் பனையும்; நிறைந்திட்ட
வண்ணச்சோலையின் நடுவினிலே
இருப்பவனே!
அருளொளி விளங்கிட இருப்பவனே!

அரங்கநாதா!
ஆவினம் மேய்த்தவா
ஆலிலையில் பள்ளி கொள்பவனே
அருச்சுனன் நண்பா
கீதையின் நாதா
வணங்குகின்றேன்

எங்கோ தொலைவில் இருக்கின்றேன்
என் நெஞ்சில் நீயே இருக்கின்றாய்
நினைவில் உன்னை நினைக்கின்றேன்
கனவில் உன் நிழலில் வாழ்கின்றேன்



எனக்கொரு வரம் அருள்வாய்!
வரதா!

என்னூர் செழித்திட வேண்டும்

பள்ளிக்கூடம் போகையிலே சின்னக்குளம் 
வரவேற்க
பிள்ளையாரை வணங்கிவிட்டு
பாடம் படித்ததை நினைக்கின்றேன்

பரந்தாமா
பாற்கடல் வண்ணா!
திரௌபதையின் மானம் காத்தவனே
துகிலுரிந்தவர் கதையை முடித்தவனே
திருமகள் நெஞ்சில் உறைபவனே!
திருமாலே!

வண்ணவண்ணப்பூ எடுத்து
மாலைகள்
உனக்கு நான் தொடுப்பேன்
சின்னச்சின்ன மலர் பறித்து
உன் பாதம் வைக்கப் பாய் விரிப்பேன்

காற்றோடு எடுபட்டு கனதூரம் போய்விட்டேன்
கால் போன திசை எல்லாம்
நான் அலைந்து களைத்துவிட்டேன்
உன் கோவில் நினைவுகளே
கண்முன்னே நிற்குதையா
உறவோடு நான் வாழ்ந்த
ஊர் நினைவும் 
நெஞ்சினிலே கனமாக
இடிக்குதையா

நெடுமாலே நீலவண்ணா
பார் அளந்த பெருமாளே
கூர்ம அவதாரம் எடுத்தவனே
ஆமையாய் பொன்னாலையில் உறைந்தவனே
எனக்கொரு வரம் அருள்வாய்!
வரதா!

நிலமதில் மனிதர் நலமாய் வாழ்ந்திட
என்னூர் செழித்திட
எங்கும் பள்ளிகள் சிறந்திட
பிள்ளைகள் படித்திட
அறிவில் உயர்ந்திட
அன்பால் உலகம் மகிழ்ச்சியில் நிலைத்திட
எனக்கொரு வரம் அருள்வாய்!
வரதா!
எனக்கொரு வரம் அருள்வாய்!வரதா!
என்னூர் செழித்திட வேண்டும்.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx  o   xxxxxxxxxxxxxxxxxxxxxxxx


பொன்னாலை வரதராசப் பெருமாள் கோயில் வரலாறு

சூதமுனிவரால் எழுதப்பட்ட தட்சண கைலாய புராணத்தில் பொன்னாலை வரதராசப் பெருமாள் கோயில் வரலாறு சொல்லப்பட்டிருக்கின்றது. 
இலக்குமி பதியாகிய நாராயணர் ஆமையாக அவதாரம் எடுத்தார் என்றும் , ஒருவரும் எடுக்க முடியாது பாதாளத்தில் விழுந்திருந்த, இந்திரனின் தாயின் மோதிரத்தை எடுத்துக் கொடுத்தார் என்றும் இந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. 
வலைஞனாகப் பிறந்த இந்திரன் ஒருநாள் இப்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள கடலில் வலை வீசினான். வலையில் ஒரு ஆமை அகப்பட்டது. அதனை அவனால் தனித்துக்  கரைசேர்க்க முடியவில்லை. தன் இனத்தவரின் உதவியை நாடி அவர்களை அழைத்து வந்தான்;;. வந்தவர்கள் இங்கே ஒரு அதிசயத்தைக் கண்டனர். ஆமை யாராலும் அசைக்க முடியாதவாறு மண்ணில் உறைந்திருந்தது.  சாபம் நீங்கப்பெற்ற இந்திரனுக்கு நாராயணர் காட்சியளித்து அருள் புரிந்தார். திருமாலின் திருவடிச்சுவடு பதிந்த இடம் திருவடிநிலை என்று வழங்கப்பட்டு வருகின்றது.
ஆமையாக உறைந்த நராயணனின் பேரருள் நிறைந்த அந்த இடத்தில் மக்கள் முறைப்படி ஆலயம் அமைத்து வழிபட்டுச் சிறப்புடன் வாழ்கின்றார்கள். 
புராணகாலம் என்று சொல்லப்படுகின்ற மிகப்பழமையான காலத்தில் இவ்வாறு சிறப்புடன் தோன்றிய பொன்னாலை வரதராசப்பெருமாள் கோயில் சீரும்சிறப்புமாய் அருள் பிரவாகிக்கும் மகிமை உடையதாய் விளங்கி இருக்கின்றது.
ஏழு வீதிகளுடன் கோபுரங்கள் அமைக்கும் திருப்பணியைக் குளக்கோட்டன் என்னும் மன்னன் செய்தான் என்பார்.
ஏழாம் வீதியில் முதலில் வணங்க அமைத்த விநாயகர் ஆலயமே இப்போது வரதராசப்பெருமாள் கோவிலுக்குச் சுமார் கால்மைல் முன்பாக அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயமாகும்.


பொன்னாலை

பொன்னாலை கோவில்கள், குளங்கள், நெல்வயல்கள் எல்லாம் கொண்ட அழகிய அன்பான அருள் விளங்கும் கிராமமாகும். அவரவருக்குத் தன்தன் கிராமம் மனதுக்கு இனியது போல் எனக்கும் என் கிராமம் உயிராகும்.பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைதேடி, எம்.பீ.சி.எஸ் இல் சில ஆண்டுகள் வேலை பார்த்து, ரீயூட்டறி நடத்தி வாழ்ந்தபோது தெரியாத அருமை வெளிநாட்டுக்கு வந்தபின்தான் தெரிந்தது. நினைத்தவுடன் போகமுடியாத சூழ்நிலைகள், வசதியின்மைகள் கூடக்கூட, ஊரின் அருமையும் பெருமையும்; பெரிதாக வளர்ந்து நிற்கின்றன. 

பொன்னாலையில் .... 

பிரசித்திபெற்ற வரதராசப்பெருமாள் ஆலயம் இருக்கின்றது. இங்கு மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் வீற்றிருந்து பேரருள் புரிந்து காத்து வருகின்றார். 
பிள்ளையார்; கோவிலில பிள்ளையாரும் முருகப்பெருமானும் எழுந்தருள் புரிகின்றார்கள்.ஆலயத்தின் பின் வீதியிலிருந்து சிறிது தூரத்தில் பெரியவர்கோவில் இருக்கின்றது.ஊரின் பல இடங்களில் வைரவர் கோவில்கள் இருக்கின்றன.
ஊரை வளம்படுத்தச் சின்னக்குளம், பெரியகுளம் ஆகியனவும் கடலும் இருக்கின்றது.பொன்னாலை காரைநகருடன் பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளது.
தெய்வ வழிபாடுகள் பொன்னாலையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.நெல்லியான், மூளாய், தொல்புரம், சுழிபுரம் ஆகியன அயற்கிராமங்களாகும்.பொன்னாலை பற்றி இன்னும் எழுத நிறைய இருக்கின்றது. இதில் மிகச் சுருக்கமாக எழுதியுள்ளேன். 



xxxxxxxxxxxxxxxxxx o xxxxxxxxxxxxxxxxx

Keine Kommentare: