Sonntag, 1. Mai 2011

பகுதி-17







                       ----------

பரதன் கடையில் சாமான் வாங்கிக்கொண்டிருக்கையில், 'அப்பா!' என்று கையை யாரோ பிடிக்கத் திடுக்கிட்டுத் திரும்பினான்.

சாந்... கையைப் பிடித்தபடி நின்றான். சற்றுத் தள்ளி ஈஸ்வரியுடன் சுகந்தியும், இன்னொரு பிள்ளையும் நின்றனர்.

பரதன் எதிர்பாராத சந்திப்பால் தடுமாறிப் போனான்.
மகன் வந்து கையைப் பிடிக்கிறான். அவனைக் கட்டிக் கொஞ்சாமல் அவனால் இருக்க முடியவில்லை. சுகந்தியும் வந்து அவன் கைக்குள் புகுந்துவிட்டாள். தாங்கள் நிற்பது கடை என்பதுகூட அந்தக்கணம் அவர்களுக்கு மறந்து போனது.

கண்ணீர் சொட்ட நின்ற ஈஸ்வரி,
'சுகமா இருக்கிறீங்களா...?' என்று கேட்டாள்.
'பறவாயில்லை, ஏதோ இருக்கிறன். நீ எப்பிடி இருக்கிறாய்? ஏன் இங்கை....! கடை பார்க்க வந்தனீங்களா?' என்றவன் அக்கம் பக்கம் கண்களை சுழட்டி அவள் கணவனைத் தேடினாள்.

'ஆரைத் தேடுறீங்கள்..!'

'தனியவே வந்தனீங்கள்..!' 


'அவர் வேலைக்குப் போட்டார். ஞாயிறு இரவு வேலைக்குப் போனால் வெள்ளிக்கிழமை பின்னேரம்;தான் வீட்டுக்கு வருவார்.'

'இப்ப எங்கை இருக்கிறீங்கள்?'

'இங்கைதான், இவற்றை அம்மாவோடை.'

'பழையவீடு வித்தாச்சு! இங்கை மாமாவீடு பெரிசு.... இவற்றை பேரிலைதான் எழுதிக்கிடக்கு. அதிலை வந்திருக்கிறம். ஆனால்;....' வார்த்ததையை முடிக்காமல் விழுங்கிவிட்ட ஈஸ்வரியைப் பரதன் பார்த்தான்.

ஈஸ்வரி நிறைய மாறிப் போயிருந்தாள். களையாக இருந்த அவள் முகத்தில் கவலைக் கோடுகள் தெரிந்தன.

'வாங்கோ!' என்று இரண்டு கடைகள் தள்ளியிருந்த மக்டோனல்ஸிற்கு அவர்களை அழைத்துச் சென்று, பிள்ளைகளுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, தாங்களும் சாப்பிட்டனர். அப்போ பரதன் கேட்டான். 'மாமா, மாமி வீடு சரியில்லையே?'

'பறவாயில்லை!' எண்டவள், நீங்கள் சுகமா இருக்கிறீங்களா? அந்த நேரம் ஏன் நான் உங்களை விட்டிட்டுப் போனனோ தெரியாது... என்ரை மதியைச் சனியன் மறைச்சுப் போட்டுது! இப்ப நினைச்சு நினைச்;சு நெஞ்சுக்குள்ளை அழுகிறன்.'
அவள் வார்த்;தைகள்; அவன் நெஞ்சை இடித்தன.
'ஏன் அவர் உன்னோடை நல்ல அன்பாய்த்தானே இருந்தவர்;!'

'அவர் இப்பவும் நல்லாத்தான் இருக்கிறார். நாங்கள் பழையவீட்டில்  இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது! இப்ப மாமிதான் வீPட்டிலை முதலாளி! தினமும் என்;னை வைச்செடுக்கிறதே அவவுக்கு வேலையாப் போச்சு... அதோடை பிள்ளையளையும் அடிமையள் மாதிரி நடத்திறா. பிள்ளையளுக்கை பேதம் பாராட்டுறா... எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.'

'அவருக்குச் சொல்லாதையன்.'

'அவருக்குச் சொல்லுற நேரம் ஆடு மாடுகளுக்குச் சொல்லலாம்.'

'என் அப்பிடிச் சொல்லுறாய்!'

'அவருக்கு அம்மா எண்டாக் காணும்! அவ என்ன சொன்னாலும் ஓணான் தலையாட்டுறமாதிரி ஆட்டுவார். என்னைக் கண்டும் காணாத மாதிரி இருக்கட்டாம் எண்டுறார். கிழமையிலை மனிசன் இரண்டு நாள்தான் வீட்டிலை இருப்பர். மிச்சம் ஐந்துநாளும் அவருக்கு வீட்டிலை என்ன நடக்குதெண்டே தெரியாது.'

அவள் அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வராமல் தடுமாறினான் பரதன்.

கண்ணீரைத் துடைத்தபடி,
'ஏன்; நீங்கள் இன்னும் கலியாணம் செய்யேல்லை...?'

'எனக்கு என்ரை பிள்ளையளின்ரை எண்ணம்தான்!'

'ஜானகி தனியாத்தானே இருக்கிறாள்! பாவம்... உங்களுக்கும், அவளுக்கும் நல்ல பொருத்தம்... கேட்டுச் செய்யுங்கோவன்!'

அவன் பதில் பேசாமலிருந்தான். ஜானகியைக் கலியாணம் செய்ய தான் கேட்டு, அவள் மறுத்ததைச் சொல்லவா என்று நினைத்தவன்... சொல்லாமலே விட்டுவிட்டான்.

'கலியாணம் ஒன்றைச் செய்திட்டு, பிள்ளையள் இரண்டையும் கூட்டிக் கொண்டு போய் வைச்சிருங்கோ! உங்கடை விருப்பப்படி அவங்களை வளர்த்து ஆளாக்குங்கோ!'

'என்ன திடீரென்று இப்பிடிச் சொல்லுறாய்?' ஆச்சரியமும், குழப்பமும் நிறைந்த முகத்தடன் ஈஸ்வரியைப் பார்த்தான் அவன்.

'நான் செய்த பிழைக்கு பிள்ளையள் தண்டனை அனுபவிக்க வேணுமெண்டில்லை.'

'பிள்ளையளுக்கு என்ன பிரச்சனை...?' கேட்டான் பரதன் துடிப்புடன்.

ஈஸ்வரி மீண்டும் விக்கிவிக்கி அழுதாள்.

பிள்ளைகள் வெளியே சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

'அங்கை அதுகள் அடிமைக்கும் அடிமையா வாழுதுகள்! பாத்துக்; கொண்;டிருக்க வயிறெரியுது!'

'என்ன செய்யலாம் சொல்லு!' என்றான் பரதன் யோசனையுடன்.

'உங்கடை விருப்பப்;படி செய்யுங்கோ! உங்கடை வீட்டிலை கூட்டிக்கொண்டு போய் வைச்சிருங்கோ! நான் நேரம் கிடக்கேக்கை வந்து பாக்கிறன்.'

ஈஸ்வரி தானா இப்பிடிச் சொல்லுறாள் என்று நம்பமுடியாமல் நின்றான் பரதன். பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னது நெஞ்சைப் பெரும் சந்தோசத்தில் ஆழ்த்திவிட, சிறிதுநேரம் அந்த மகிழ்வில் தடுமாறிப் போய்விட்டான்.

எனினும் பிள்ளைகளைப் பிரிந்து அவள் கவலைப்படுவாளே என்று தயங்கினான்.

'பிள்ளைகளை என்னட்டை விட்டிட்டு நீ யோசிச்சுக் கொண்டெல்லே இருப்பாய்!'

'நான் கவலைப்படுகிறது ஒருபக்கம் இருக்கட்டும்... ஆனால் இந்தக் கிழவியிட்டை எங்கடை பிள்ளையளை அடிமைப்படவிட வேண்டாம். பிளீPஸ் பரது..!' என்று ஈஸ்வரி மாமியாரின் கொடுமைகளை எடுத்துக் கூறினாள். அவளின் மாற்றம் பரதனுக்கு அதிசயமாக இருந்தது.

'நீங்கள் அண்டைக்கு பிள்ளையளின் வாழ்க்கைக்காக நாங்கள் ஒண்டா இருப்பம் எண்டு திருப்பித் திருப்பி என்னிடம் கேட்டும் நான் மாட்டன் எண்டு மறுத்திட்டன்.

எனக்கு அப்ப அது விளங்கேல்லை, மற்றப் பொம்பிளையள் மாதிரிப் பொறுமையா இருந்து ஒழுங்காகக் குடும்பம் நடத்தாமல், குரங்கு மாதிரி மனம்போன போக்கில் அலைந்து, உங்கடை வாழ்க்கையையும்; கெடுத்து சீர்குலைந்து போய் நிக்கிறன்.'

அவள் பழைய சம்பவங்களைச் சொல்லித் தன் தவறுகளை எடுத்துரைத்து அழ, பரதன் மனமிளகி என்ன செய்வதென்று அறியாமல், அக்கம்பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டு தமாஸாகக் கதைத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தான்.

மைக்டொனசில்; கூட்டம் நிரம்பியிருந்தது. பிள்ளைகளை அழைத்து வீட்;டுக்குப்  போகலாம் என்று இருவருக்கும் தோன்ற,

'நீ பிள்ளைகளை என்னோடு விடுவதுபற்றி உன்னுடைய கணவனோடும், மாமியாரோடும் கதைத்துவிட்டுச் சொல்லு! அதற்குள் நான் ஒரு வசதியான வீடு பார்த்து மாறிப் போட்டுப் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போறன்!' என்றான் பரதன்.

சாந்தும், சுகந்தியும் வந்து அவனைக் கட்டிக் கொஞ்;சி விடைபெற்றார்கள்.

வீட்டுக்குச் சென்ற பரதனுக்கு, அன்று மாலை நினைவுகள் கண்களை விட்டகலாமல் நெஞ்சிலே மாறிமாறி உருண்டன. நீண்டநேரம் யோசித்தவன், ஜானகியுடன் கதைத்தால் நல்லது போலத் தோன்ற தொலைபேசியை எடுத்;தான்.

ஜானகி கதைத்தாள். ஈஸ்வரியைச் சந்தித்த விபரத்;தையும், அவள் கவலையையும் பரதன் சொல்ல, அவள் அவதானமாகக் கேட்டாள்.

'என்ன செய்யலாம்... ஈஸ்வரி நல்லா மாறிவிட்டாள்... பிள்ளையள் அந்த வீட்டுக்கை கிடந்து இடிபடுவதைப் பார்த்துப் பொறுக்க மாட்டாமல், என்னிடம் கூட்டிக்கொண்டு போங்கோ! என்று கெஞ்சிறாள்.'

ஜானகிக்கும் அது கவலையாக இருந்தது. பெரியவர்கள் இழைத்த குற்றத்துக்குக் குழந்தைகள்  அல்லற்படுவது வேதனையளித்தது. வெளிநாட்டில், அதுவும் ஜேர்மன்காரர் மத்தியில் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாக இருந்தாலும், நம்மவர் மத்தியில் எங்கள் பண்பாடு, கலாச்சாரங்களின் கட்டுப்பாட்டால் மிகவும் குறைவாகவே நிகழ்ந்திருக்கின்றன. இனிவரும் காலங்களில் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் நம்மவரிடையே புகுந்து இத்தகைய அசம்பாவிதங்கள் பரவிவிடக்கூடாது என்று நினைத்தாள். மேலும் பரதனின் நிலைமையை ஒருகணம் மீட்டவள், அவனுக்;;குப் பதில் சொன்னாள்.

'எங்கடை மேல்வீட்டை அறையாக்கித் தாறன்;, அங்கை வந்து இருங்கோ. பிள்ளையளையும் கூட்;டிக்கொண்டு வாங்கோ!' என்றாள். இந்த நினைப்;பு அவளுக்கு நீண்ட நாட்களாக நெஞ்சின் ஒரு மூலையிலில் இருந்தது. ஊர் ஏதாவது சொல்லுமே என்று இன்றுவரை அதை வெளியிடாமல்;  இருந்தாள். இப்போ பிள்ளைகளைப் பரதனுடன் விட ஈஸ்வரி இணங்கியது அறிந்து அடங்கியிருந்த உணர்வுகள் வார்த்;தைகளாக வெளிவந்தன.

'மாட்டன் எண்டு சொல்லாதேங்கோ பரதன்!' என்றாள்;.

'ஈஸ்வரியிடம், பிள்ளைகளை என்னுடன் விடுவதுபற்றி அவள் கணவனுடன் கதைக்கும்படி சொன்னனான். பாப்பம், ஒரு முடிவை அறிஞ்சு செய்வம்!' என்று தயங்கினான்.

'எங்கடை மேல்வீட்டைத் தனிவீடாக வாடகைக்கு விடத்தக்கதாகச் செய்யப் போறன்! நீங்கள் அந்த வீட்டிலை வந்திருக்கவேணும். இது என்ரை விருப்பம்.' என்று அறுத்துறுத்துத் தன் அடிமனத்தின் ஆவலை வெளியிட்டாள்.

'நீங்கள் வீடுதிருத்திறதெண்டால் நான் வந்து கெல்ப் பண்ணுவன்! நல்லாச் செய்யக்கூடிய இரண்டுபேரையும் எனக்குத்தெரியும். அவங்களைப் பிடிச்சு மலிவா முடிக்கலாம்.'




இது பக் - 186

'செய்யுங்கோ! காசு தாறன், பாங்கிலை லோன் எடுக்கலாம்.' என்ற அவள்; வார்த்தைகளில் திருப்தி தெரிந்தது.

ஒரு மாலைநேரம். ஜானகி வீட்டுக்குக் கோகுலன் வந்தான். அவனிடம் பரதன் சொன்னதைக் கூறினாள் ஜானகி.

மேல்வீடு இதுவரை பழைய தளபாடங்கள் வைக்கும் இடமாகக் காலியாக இருந்தது. மூன்று அறைகளும், ஒரு குளியலறையும் அமைக்க முடியும். இடையில் சுவர்கள் எழுப்பி, பூச்சுவேலை, கல்லுப் பதித்தல், தண்ணீர், வெப்பமாக்கி போன்றவற்றிற்குக் குழாய்த் தொடர்புகள், மின்னிணைப்பு போன்ற வேலைகள் செய்தால் ஒரு குடும்பம் இருக்கக்கூடிய வீடு அமையும். இதுபற்றிக் கோகுலனுடன் கலந்து ஆலோசித்தாள் அவள்.

பரதனுக்கு அதைக் கொடுப்பதில் கோகுலன் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. வங்கியில் கடன் எடுக்கலாம், பணத்துக்குப் பிரச்சனையில்லை. அக்காவுக்கு விருப்பம், வசதியும் இருக்கு, செய்வதில் எந்த இழப்புமில்லை. பதிலுக்கு வீட்டின் பெறுமதி அதிகரிக்கும். பிள்ளைகளுக்கும் பிற்காலத்தில் தனித்தனி இருக்க விரும்பினால் அதுக்கும் வசதி என்று  அவனுக்கு மனதிற்பட்டது.

'திருத்திப்போட்டு பரதனண்ணைக்குக் குடுப்பம்!' என்றான்.

'சனங்கள் அப்பிடியும், இப்பிடியும் கதைக்குமெண்டுதான் யோசிச்சனான்.' என்று தன் மனப்பயத்தைக் கூறினாள்.

'வாடைக்கு வேறை ஆரும் இருந்தால்.... அதுக்கும் கதை சொல்ல நினைச்சால் சொல்லலாம் தானே. உங்கை வாடை வீடுகளிலை  இருக்கிற சனங்கள், முன்வீட்டிலை ஆம்பிளையள் இருந்தால் வீட்டைக் காலியே பண்ணமுடியும்!' என்றவன்,

'அக்கா ஏன் கனக்க யோசிக்கிறாய்? உன்ரை மனதுக்கு எது சரியோ அதைச் செய்! பரதனண்ணையைக் கலியாணம் செய்தால் இரண்டு பேருக்குமே நல்லதெண்டது என்ரை நினைப்பு. ஆனால் நீ அத்தானையே நினைச்சுக்கொண்டிருக்கிறாய்! நினைப்புகள் நெஞ்சிலே இருப்பதில் பிழையில்லை. ஆனால் இந்த வெளிநாட்டுச்; சூழலை நினைச்சு, பிள்ளையளின் சந்தோசத்துக்காக நீ கொஞ்சம் மனதைத் தளர்த்தினால் நல்லது.' என்று தன் உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டான் கோகுலன்.

வீட்டுவேலைகள் நடந்தன. பரதன் லீவு எடுத்து முழுநேரமும் அங்கு நின்று வேலைகளைக் கவனித்தான். இரண்டு கிழமைகளில் எல்லா வேலைகளும் முடிந்து அழகான அறைகள் உருவாகிவிட்டன.

ஜானகிக்கு அன்று பின்னேரவேலை. யசோ சிறுவர் பாடசாலைப் பயிற்சிக்கும், லவனும், குசனும் பள்ளிக்கும் சென்றுவிட்டார்கள். இரவு நேரம் செல்லப் படுத்ததாலோ என்னவோ லேசான தலைவலியாக இருக்க, விக்ஸ் கொஞ்சம் எடுத்துத் தடவிவிட்டு, வீட்டுவேலைகளைக் கவனித்தாள்.

வீட்டுமணி அடித்தது.
ஜானகி கதவைத் திறக்க, இராகுலன் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டான்.

'என்ன...! எனக்கு உங்களோடை கதைக்க விருப்பமில்லை, வெளியே போங்கோ!' என்று கோபமாகச் சொன்னாள்.

அவன் எதையும் பொருட்படுத்தாமல் படியேறி உள்ளே சென்றான். ஜானகிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

'இண்டைக்கு இரண்டிலை ஒண்டு தெரியாமற் போகமாட்டன்.'

'என்னை ஏன் அழவைக்கிறீங்கள்? தேவையில்லாத பிரச்சனையளை ஏன் கொண்டு வாறீங்கள்? நான்தானே ஒரே பதில் சொல்லிப்போட்டன்.'

'நீ சும்மா பயப்பிடுகிறாய்!'

'நாங்கள் ஒழுங்கா, தமிழராப் பண்பாடோடை வாழ்ந்து கொண்டிருக்கிறம். பயபக்தி எல்லாம் எங்கடை இரத்தத்தோடை கூடப் பிறந்தது.'

'சும்மா உளறாதை! எல்லாம் இரகசியமா இருக்கும். நீ ஒருத்தருக்கும் பயப்பிடத் தேவையில்லை.'

'என்ன கதைக்கிறீங்கள்! சொந்தக்காரன் எண்டு இவ்வளவு நாளும் பாத்துக்கொண்டிருந்தனான். இண்டைக்குப் பொலிசுக்கு ரெலிபோன் எடுப்பன்... என்னாலை இனியும் பொறுக்க முடியாது.' என்றாள் ஆற்றாமல்.

'பொலிஸ் வந்தால் எனக்கென்ன...! அதோடை உன்னை ரெலிபோன் எடுக்க நான் விடுவனே...!' என்று அவள் கையைப் பிடிக்கப் போனான்.

அப்போ கதவைத் திறந்து கையில் சில சாமான்களுடன் உள்ளே வந்தான் பரதன். ஜானகிக்குக் கடவுள் வந்ததுபோல்  துணிவு பிறந்தது.

அவள் கையைப் பிடித்த இராகுலன், பரதன் வருவதைக் கண்டு உதறிவிட்டு, சினத்துடன்,
'ஓகோ! கள்ளக்காதலன் வாறானா... நல்லது! நல்லது! இதை முதலே சொல்லியிருக்கலாமே!' என்று தன் எண்ணம் தடைப்படக் கேட்டான்.

'இராகுலன்! வார்த்;தையை அடக்கி வாசி! கலை கலாச்சாரம் எண்டு மேடையிலை முழங்கிக்கொண்டு, பதவிக்காக அலைஞ்சு திரியிறதோடை நிறுத்திக்கொள்! போ!' என்று அருகே இருந்த மேசையில் கையிலிருந்த பொருட்களை வைத்துவிட்டு, தேவைப்பட்டால் அவனின் பல்லைப் பெயர்க்கத் தயாராக நின்றான் பரதன்.

'இவள் என் மச்சாள்! நான் வருவன், போவன்... நீ ஏன் இஞ்சை வந்தனீ...? உனக்கு என்ன அலுவல்... எடேய்! நானும் ஆம்பிளையடா, உன்ரை பம்மாத்து எனக்குத் தெரியுமடா!' என்றான் நளினமாக.

'பம்மாத்து எனக்குத் தெரியாது... அது எனக்குத் தேவையுமில்லை. உன்னை மாதிரி  ஊரை ஏமாத்த வேணுமெண்டுமில்லை.'

அப்போ ஜானகி,
'போங்கோ இராகுலன்! எங்களுக்கு வேலை கிடக்கு, அநாவசியமான விவாதம் வேண்டாம். எங்களை நிம்மதியா இருக்க விடுங்கோ!' என்றாள்.

அவளுக்குப் பரதனின் குணம் தெரியும். இராகுலன் இரண்டு சொல்லு கோபமூட்டக்கூடியதாகச் சொன்னால்  அவன் அடிப்பான். இது தேவையா...! என்று தகராறை வளர்க்க விரும்பாதவளாய் அவள் சொன்னாள்.

அதற்கு இராகுலன்,
'நீங்கள் என்னெண்டான்ன செய்யுங்கோ! உங்களை நிம்மதியா இருக்க விடமாட்டன்.' என்று உறுமிவிட்டு வெளியே போனான்.

கதவைச் சாத்தி ஜானகி ஒரு பெருமூச்சு விட்டாள்.

'விசரன் மாதிரி திடீரெண்டு வந்து நிப்பான்... எத்தினை தரம் சொல்லிப் பாத்தாச்சு மனிசிக்காரிக்கு இதைப் பற்றி அக்கறையில்லை. கேட்பாரில்லை, தனியத்தானே இருக்கிறன். என்னெண்டாலும் செய்யலாமெண்ட நினைப்பு...!' முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள் அவள்.
'ஜானகி! பிளீஸ்! இனிமேல் இப்பிடி நடக்காமல்;  நான் பாக்கிறன்!' என்று பரதன் சொல்ல, அவள் அவனை நெருங்கி வந்து அருகில் நின்றாள்.

'கவலைப்படாதேங்கோ! நீங்கள் 'ராமை நினைச்சுக்கொண்டு, பிள்ளையளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறீங்கள். இது தெய்வத்துக்;குத் தெரியும்;... ஊருக்குத் தெரியும். இராகுலன் மாதிரியான ஒரு சிலருக்கு இதை விளங்க வைக்கவேணும் எண்டில்லை.'

அப்போ அவள், அவன் இருகைகளையும் பிடித்தபடி,
'என்னாலை இனித் தனியா இருக்க முடியாது!' என்று அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

இந்த உலகத்திலை ஒரு பெண் தனியாக, ஒழுக்கமாக இருக்க முடியும், உலகமும் ஒழுங்காக இருந்தால். இராகுலன் மாதிரியான காமுகர்களும், கமலம் போன்ற பித்தலாட்டக்காரர்களும் இருக்கும் போது, ஆதரவின்றி பெண்கள் வாழ்வது, கல்லில் நார் உரிப்பது போன்று கடினமானது என்று அவளால் உணர முடிந்தது.

'உன்னைக் கலியாணம் செய்யும்படி அன்றொரு நாள் ஏன் கேட்டேன் தெரியுமா....? இப்பிடியான அயோக்கியர்களிடமிருந்து உன்னைப் பாதுகாக்கலாமெண்டுதான். ஒரு ஆணும், பெண்ணும் பழகுவதற்குக் கட்டில் தான் காரணமெண்டு கணக்குப் போடும் மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள்!

நானும், நீயும் பழகினால்.... நீ தாலியை இழந்தவள்... நான் மனிசியை ஓடவிட்டவன்... சேர்த்து வைத்து  வாயவிய ஆயிரம் கதை கதைப்பார்கள். இந்த வாயளை மூட இதுதான் வழி! எண்டு எனக்குத் தெரிஞ்சது... கேட்டன்! வேறை எண்ணம் எனக்கில்லை... உன்னிலை எனக்கு நிறைய அன்பு இருக்கு, ஆனால் இராகுலன் மாதிரி வெறி அணுவளவுகூட இல்லை. என்னுடன் உயிராகப் பழகிய 'ராமின் மனைவி.... அவள் கலங்கக்கூடாது, இது என் நினைப்பு. இதுக்காக இந்த உயிரையும் குடுப்பன் தெரியுமா...!

நட்பெல்லாம் நட்பாகாது.... ஆனால் நட்புக்குள் சில நட்புக்கள் இருக்கத்தான் செய்யிறது... அந்த நட்புக்கள் உயிர் கொடுக்கும்!' என்ற பரதனின் வார்த்தைகள் அவள் நெஞ்சுக்குப் பெரும் ஆதரவாக இருந்தன. தன்னையும் மறந்து அவனோடு அவள் ஒன்றிப் போனாள்.

'சில மன உறுதிகளைக் காலம் கரைத்து உடைத்து விடுகிறது. நானா இப்பிடி இன்னொரு கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவித்தேன்....! என்று நம்பமுடியவில்லை, ஆனால் குசன் அண்டைக்குப் போய், கிடங்குக்கை விழுந்து... அப்பிடி மண்டையிலை அடிபடுகிறான். சொந்தக்காரன் இவன் என்னைத் தெருவுக்கு இழுக்க அலையிறான்... இதெல்லாத்தையும் நினைச்சா... என் கடமையை நான் செய்ய நீங்கள் துணையாக வந்துதானாக வேணுமெண்டு என்ரை மனம் சொல்லுது!' என்று நிறுத்தினாள்.

பரதன் அவள் கன்னங்களில் தன்னிரு கைகளையும் வைத்து, அவள் கண்களைக் கனிவோடு பார்த்தான்.

வீர்! என்று ஓயாது வீசும் காற்றில் ஆடியலைந்தவிட்ட மலர் போல, அவள் மனம் துவண்டு நின்றதை அந்தக் கண்கள் அறிவித்தன.

'ஒரு நல்ல நாளைப் பாத்திட்டுச் சொல்லுறன், நெருங்கின நண்பர்களை மட்டும் கூப்பிட்டு கோயில்லை தாலியைக் கட்டுவம்!'

'நாங்கள் இந்த முடிவுக்கு வாறது தப்பா பரதன்...!'

'என்ரை மனசுக்கு நூற்றுக்கு நூறு சரியெனப் படுகுது, ஆருக்கும் துரோகம் செய்யேல்லை... எவர் கண்ணிலும் குத்தேல்லை.. வாழ்க்கை எண்ட பாதையைத் தடுத்து நிற்கும் இடர்களைக் கடந்து செல்ல ஒருத்தருக்கொருத்தர் துணை நிற்க இப்பிடியொரு ஒப்பந்தம் செய்து இணைகிறோம். இதில் தடுமாறுவதுக்கு ஒரு காரணமுமில்லை.'

அவன் கூறிய காரணங்கள் அவளுக்கும் ஏற்கனவே நெஞ்சில் பட்டவையாக இருக்க, அவள் மனந்தெளிந்தவளாய்,
'கோகுலன், யசோ இருவரும் தெரிந்தால் சந்தோசப்படுவினம்!' என்றாள்.

'ஈஸ்வரிகூடச் சந்தோசப்படுவாள்!' என்றான் பரதன்.

'அதோடை லவன், குசன், சாந், சுகந்தி... எங்கடை பிள்ளைய ளின்ரை எதிர்காலம் உறுதியாக அமைய வழி வகுக்குமெண்டதாலை என்ரை மனதைச் சாந்திப்படுத்தக்;கூடியதா இருக்கு!' என்றாள் ஜானகி.

கலைந்து கிடந்த கூந்தலைச் சீராகத் தன் கைகளினால் கோதி ஆதரவுடன் தடவிய பரதன், தான் வாங்கி வந்த பொருட்களை மேசையிலிருந்து எடுத்துக்கொண்டு மேல்வீட்டுப் படியேறிச் சென்றான்.


புத்தகம் -பக்கம் - 190


தாமோதரன் தொலைபேசியில் கடைக்கு வரச் சொல்லியிருந்தார். சனி பின்னேரம் வேலை முடிந்து போயிருந்;தான் கோகுலன். கடையைப் பூட்டிவிட்டு, கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார் தாமோதரன். கடை நிறையச் சாமான்களைப் போட்டு, கண்ணைக் கவரும் விதத்தில் ஒழுங்காக அடுக்கி ஜேர்மன்கடைகளைப் போலக் கவர்ச்சியாக வைத்திருந்தார்.

கோகுலன் உள்ளே வர, தாமோதரன் அவனை வரவேற்றார். முகத்தில் வழமையாக வரவேற்கும் சந்தோசம் இல்லாததை அவன் கவனித்தான்.

'வா கோகுலன் வா!' என்றவர்,
'வேணி கடையைப் பற்றி என்ன சொல்லுறாள்!' என்று கேட்டார்.

'ஏனண்ணை கேக்கிறீங்கள்..!'

'உன்ரை தங்கச்சியைக் குறை சொல்ல என்னாலை முடியேல்லை. ஆனால் வியாபாரம் நல்லா நடக்கவேணும்! உனக்குத் தெரியும்தானே...' என்று ஆரம்பித்தார்.

'வேணியாலை ஏதும் பிரச்சனையே...? அவளுக்கு வாய் சும்மா கிடக்காது... எனக்கு அவளை இங்கை விடுகிறது மனமில்லை, ஒரே பிடியா அண்ணை... அண்ணை எண்டு ஆய்க்கினைப்படுத்தினாள். நீங்களும் ஓமெண்டீங்கள்... ஏதும் பிரச்சனையெண்டா அவள் வீட்டிலை நிக்கட்டும் அண்ணை!'

'சீ... அதுக்கு நான் சொல்லேல்லையடா...!'

'அப்ப என்னண்ணை...?'

யோசித்துவிட்டு, கணக்குக்  கொப்பியை மூடிவிட்டு, அவனைப் பார்த்தார்.

'எனக்கு உன்னைப் பற்றித் தெரியும், உன்ரை தங்கச்சி வேறை மாதிரி... விளங்குதே! சொல்லுறன் எண்டு கோவிக்காதை... ஆனா உனக்குச் சொல்லத்தான் வேணும்!'

கோகுலன் அவர் சொல்வதை அவதானித்து கேட்டபடி நின்றான். கை மேசையிலிருந்த வீடியோக் கசற்றுக்களை அரக்குவதும், அடுக்குவதுமாக இருந்தது.

'புடவைக்கடையை நீ எடுத்துக்கொள்! வேணியும் கண்ணனும்  நீயும் மாறிமாறிப் பாருங்கோ!'



'என்னண்ணை கதைக்கிறீங்;கள்....! எப்பாலும் உங்களிட்டை வந்து கடைக்கணக்குக் கேட்டனானே அண்ணை, நீங்கள்தானே என்னையும் பாட்னரா இருக்கச் சொன்னனீங்கள்! எனக்கு பிஸ்னஸ் பற்றி என்ன தெரியும்? நீங்கள் மனதிலை ஏதோ நினைச்சுக் கொண்டு இப்பிடிச் சொல்லுறீங்கள்... தாமோதரமண்ணை! உங்களுக்;கு என்னைத் தெரியும் தானே, எனக்குக் காசு பெரிசில்லை... மனிசர்தான் வேணும்.'

'கோகுலன்! நாங்கள் அன்பா இருப்பம், சொல்லுறதைக் கேள்!'

'அண்ணை! என்ன சொல்லுறீங்கள்...!'

'கடையை எடுத்து நடத்து!'

'என்னாலை முடியாது!'

'வேணிக்கு அதுதான் விருப்பம்!'

'வேணிக்கும், இதுக்கும் என்னண்ணை சம்பந்தம்...!'

'உன்ரை தங்கச்சி...'

'அண்ணை! எங்கடை குடுக்கல் வாங்கல் உங்களுக்கும் எனக்கும் தான். வேணிக்கோ கண்ணனுக்கோ இதுக்கை இடமில்லை.'

'அப்ப என்ன சொல்லுறாய்...? வேணி தினமும் கணக்குக்;கொப்பி எடுக்கிறதும், கூட்டுறதும், கழிக்கிறதும்... இதென்ன கணக்கு, அதென்ன கணக்கு.... எங்கை காசு எண்டு  அடிக்கடி என்னையும், நீலாவையும் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

பத்தாததுக்கு கண்ணன்ரை பிறன்ட் விஜய் வந்து மணித்தியாலக்; கணக்கா வேணியோடை கதைச்சுக்கொண்டிருக்கிறான்.

வியாபாரத்துக்குக் கஸ்டமா இருக்கடா.... நாலு சனம் வாற இடம்.'

கோகுலன் வேணியின் செய்கைகளை அறிந்து சினம் முகத்தில் படர, பொறுமையை இழந்து அங்குமிங்கும் நடந்தான்.

'மற்றது, இராகுலன் வீட்டை கண்ணனையும் வேணியையும் போக வேண்டாமெண்டு சொல்லடாப்பா! அவன் ஒரு குரங்கன்... உனக்குத் தெரியும். கொக்காவை அவன் நிம்மதியா இருக்கவிடாமல் அழவைச்சுக் கொண்டிருக்கிறான். அப்பிடியான போக்கிரி வீட்டை வேணிக்கென்ன அலுவல்....?' கேட்டார் கோபமாக.

புத்தகம் -பக்கம் - 193

'அவள் என்ரை சொல்லுக் கேக்கமாட்டாள், அக்கா சொல்லி அலுத்துப்போனா... கண்ணனுக்கே தாறுமாறா ஏசுறாள் அண்ணை!'

'உது கூடாது, உன்ரை தங்கச்சியெல்லே, கன்னத்திலை நாலு குடுத்து அடக்கமா இருக்கச்சொல்லு!'

'சரி அண்ணை, அவளை நான் பாக்கிறன். கடைக்கு இனிமேல் ஆள்வராது. பாவம் பாக்கப் போனா தோளிலை ஏறிச் செவியைக் கடிக்கிறாள்.... வேண்டாம்!'

'விஜய் அடிக்கடி வீட்டுக்குப் போறவனாம், கண்ணனிட்டைச்சொல்லி வை! காலம் கெட்டுப்போய்;க்கிடக்கு! எந்தப்புற்றுக்கை எந்தப் பாம்பு இருக்குமெண்டு ஆருக்குத் தெரியும்!'

'அவன் இவளோடை படிச்சவன்.... வேறை பழக்கம் இல்லை. இஞ்சை கண்ணன்ரை சிநேகிதத்திலை வந்து போறான்.'

'அதிலை பிழையில்லை.... எதுக்கும் அளவு வேணும்.'
'எல்லாம் ஒரே தலையிடியாக் கிடக்கு!' என்ற கோகுலனின் வார்த்தையில் கோபமும், கவலையும் கலந்து ஒலித்தது.

அப்போ, கோப்பிமெசினிலிருந்து கோப்பி எடுத்து அவனுக்கும் கொடுத்துத் தானும் குடித்தார் தாமோதரன்.

'யசோ என்ன செய்யிறாள்...?'

'இருக்கிறா! கின்டர்காடினில் றெயினிங்... பிரச்சனையில்லை.'

'அவளுக்கு எங்கையேன் மாப்பிளை பாப்பமே? வேறை ஆர் இருக்கினம்! கொக்காவும்;, நீயும்; அவளோடை கதைச்சுப் பாராதேங்கோவன்.'

'அக்கா கதைச்சவ!'

'என்ன சொன்னவளாம்....?' 

'தான் வருத்தக்காரியாம்.'

'அவள் அப்பிடித்தான்சொல்லுவாள், நானும் கதைக்கிறன். ஆரும் ஒரு பெடியன் அவளுக்கெண்டு பிறக்காமலே இருக்கிறானா...?'

'ஏனண்ணை... முதல் எனக்கொரு பொம்பிளை பாருங்கோவன். குடிகாரன் எண்டு ஒருத்தியும் வரமாட்டன் எண்டுறாளவை!'
மனதுக்குள் உள்ளதை நேரடியாகக் கூறாமல் சுற்றி வளைத்தான் கோகுலன்.
தாமோதரன் என்ன சாமானியமானவரா....! எத்தனை பேரைக் கண்டவர்.... எள்ளைக் காட்ட எண்ணெய் கொடுப்பவர், புரிந்து கொண்டார்.

'டேய்! டேய்! என்னடா சொல்லுறாய்...! ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் எப்பவோ கலியாணத்தை முடிச்சு வைச்சிருப்பன்!' என்றார்.

'அக்காவின் விடயமும்; முடியட்டும்.' என்றான் அவன்.

'கொக்கா ஒண்டுக்கும் சம்மதிக்கமாட்டா... நீ பார்த்துச் செய்! நான் கதைக்கிறன்.'

'இல்லை அண்ணை... இராகுலன்ரை பிரச்சனையளுக்குப் பிறகு அக்கா கொஞ்சம் மனம் மாறின மாதிரித் தெரியுது. இல்லாட்டிப் பரதனண்ணைக்கு வீடு குடுத்திருக்கமாட்டா!'

'உண்மையாத்தான் சொல்லுறியே...! டேய், பாவங்களடா இரண்டும்.! சந்தோசமா இருக்கிற வயசிலை எல்லாத்தையும் இழந்துபோட்டு நிக்குதுகள்! சேர்த்து வைத்தால் போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்;!'

'உங்களுக்குத் தெரியும்தானே, அவை இரண்டுபேரும் கொள்கை... பண்பாடு, கலாச்சாரம் எண்டு ஒழுங்கா இருக்கிறவை... அதுதான் எல்லாப்பக்கத்தாலும் யோசிச்சு, ஒண்டும் செய்ய மனமில்லாமல் இருந்தவை! இப்ப பல நெருக்குவாரங்கள் இறுக்க, பிள்ளையளின்ரை எதிர்காலத்தை யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கினம் போலைக் கிடக்கு... இன்னும் சரியாத் தெரியாது.' என்றான் கோகுலன்.

'கோப்பியைக் குடியடா!'

வேணியின் தில்லுமுல்லுகளால் மனம் குழம்பிப்போய் மனமின்றி இருந்தவனை, யசோ பற்றிய உரையாடல்.. நெஞ்சைச் சீர் பண்ணிப் பொறுமையைக் கொடுக்க, மனம் ஆறிக் கொப்பியை எடுத்துக் குடித்தான்.

'வேணிக்கு நான் கதைச்சதெண்டு சொல்லாதை! வழக்கம் போலக் கடைக்கு வரட்டும்... விடு பாப்பம்.'

'வேண்டாமண்ணை, வேறை எங்கையேன் பாக்கட்டும், மக்டொனல்ஸிலை கேட்டு எடுத்துக் குடுக்கிறன்! கடைக்கு வேண்டாம். அவள் எங்கடை நட்புக்கே கொள்ளி வைச்சுப் போடுவள்!' என்று சொல்லிவிட்டு ஜானகி வீட்டுக்குக் கிளம்பினான்.

வழியிலே நண்பன் ஒருவனைச் சந்திக்க, அவன் தன் வீPட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கிருந்து கதைத்துவிட்டுத் திரும்ப நேரம் போய்விட்டது.

ஜானகி அவனுக்காகப் பார்த்துக்கொண்டிருந்து விட்டுப் படுத்து விட்டாள். யசோ அவன் வருவானென்று படுக்காமல் காத்திருந்தாள்.

'அக்காவுக்கு விடிய வேலையே...?' என்று கேட்டுக்கொண்டு உள்ளே வந்தவன்,
'நீங்கள் படுக்கேல்லையோ...?' என்றான்.

'றேடியோ கேட்டுக்கொண்டிருக்கிறன். வாங்கோ!' என்று வரவேற்றாள். அவன் எப்ப வருவானெண்டு ஆவலோடு வழியைவழியைக் காத்துக் கொண்டிருந்த உண்மையை அவள் மறைக்க முனைந்தாலும், கண்கள் காட்டிக் கொடுத்து விட்டன.

'நான் வருவன் தானே, உமக்கு ஏலாது... படுத்திருக்கலாமெல்லே! கடைக்குப் போன இடத்திலை நேரம் போட்டுது... வேணியாலை ஒரே பிரச்சனை!'

யசோ சாப்பாட்டைச் சூடாக்கியபடி, 'என்ன...?' என்று அவனைப் பார்த்தாள்.

கோகுலன் கையைக் கழுவிவிட்டு, மேசைக்கு வந்து சாப்பிட உட்கார்ந்தவாறு,
'தாமோதரமண்ணையிட்;டைக் கணக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை....?'

'இதுக்கு வேணி மட்டும் காரணமில்லை, பின்னாலை இராகுலனும், மனிசியும் எண்டுதான் நினைக்கிறன். அங்கை தினமும் வேணி போய் வாறா.... இராகுலன் அக்காவிலை வைச்சிருக்கிற கறள்ளை இப்பிடிப் பங்குப்பிரச்சினையைக் கிளப்பி, உங்களையும், தாமோதரனண்ணையையும் பிரிக்கலாமெண்டு பாக்கிறான் போலை!' என்று யசோ ஊகத்தடன் சொன்னாள்.

'தன்னுடைய வேலையைக் கெடுத்தவனுக்கு, இதைத் தூண்டி விடுவதற்கு ஒரு நேரமா வேணும்...' என்று அவளுக்குப்பட்டது.

கோகுலனும் யோசனையுடன்,
'இவளோடை பெரிய அரியண்டமாப் போச்சு! அந்த விஜய்யோடை இவளுக்குத் தொடர்பெண்டு சனம் வேறை கதைக்குதாம்...!' என்றான் கவலை தொனிக்க.

'எந்த விஜய்...!'

'கண்ணன்ரை பிறன்ட்... இவளோடை கூடப் படிச்சவன்.'

'சனம் எலும்பில்லாத நாக்காலை எத்தினையைச்சொல்லும்! வேணி அப்பிடிப் போக மாட்டாள். சும்மா வஞ்சகமில்லாமல் கதைக்கிறதைச் சனம் திரிச்சு ஒண்டாக்கிக் கதை கட்டியிருக்கும்!' என்று கோகுலனின் மனதைச் சமாதானப் படுத்தினாள் யசோ.

இட்டலியை கோப்பையில் எடுத்துவைத்து, சூடான சாம்பாற்றை ஊற்றினாள் யசோ.

'நீர் சாப்பிட்டீரே...!'

'அக்காவும், நானும் அப்போதையே சாப்பிட்டம். லேற்றானால் எனக்குச் சமிக்காது. பிறகு நெஞ்செரிக்கும்.' என்று அவனை விட்டுச் சாப்பிட்டதற்கு விளக்கம் கொடுத்தாள்  அவள்.

அவன் சாப்பிடத் தொடங்க, தானும் ஒரு கதிரையில் உட்கார்ந்தாள்.
'எத்தினை பிரச்சனையளுக்குத் தான் இவன் முகம் கொடுக்க வேண்டிக்கிடக்கு!' என்று அவள் மனம் இரங்கியது.

'யசோ!' என்று ஏதோ சொல்ல நினைத்தவனாய், அவளைப் பார்த்தான் கோகுலன்.

'என்ன...!' என்று கேட்ட அவள், 'சாம்பாறு போடட்டா..?' என்றாள்.

'அக்கா பரதனண்ணையைக் கலியாணம் செய்யச் சம்மதிப்பா போலைக் கிடக்கு!'

'ம்...' தனக்கும் தெரியும் என்ற வகையில் தலையாட்டினாள் அவள்.

'அதுக்குப் பிறகு...'

'சொல்லுங்கோவன்...!'
கோகுலன் வார்த்;தைகளைக் கோர்த்தபடி அவளைப் பார்த்தான். அவள் தன்னைத் தவறாக நினைத்தவிடக்கூடாத வகையில் பக்குவமாகச் சொல்வதெப்படி...? என்று தயங்கினான்; அவன்;.

'என்ன...!' என்று அவனைத் தூண்டினாள் யசோ.

'அக்கா சொல்லேல்லையோ...?'

யசோ சிரித்தாள்.... கண்களை இமைத்து, அவனை அன்பொழுகக்  கனிவோடு பார்த்தவள், அவனுக்கு மேலும் இரண்டு இட்டலிகளைப் போட்டுக் கறியும் விட்டபின்,

'நான் உங்களுக்கு எட்டியதூரத்தில் தானே இருக்கிறன், எங்கும் போய்விடவில்லையே!' என்றாள்.

'நேரடியாகச் சொல்லுமன்! மனதுக்குச் சந்தோசமாக இருக்கும்;.' என்றான்.

'இப்ப என்ன அவசரம்... அக்கான்ரை கலியாணம் முடியவிட்டிக்கு யோசிப்பமே.' என்று அவன்; தலையைத் தடவி ஆறுதற்படுத்தினாள்;.

அவன் சாப்பிடுவதை நிறுத்தி, அவளைப் பார்த்து,
'எனக்கு ஒரு பதில் வேணும்!' என்றான்.

'பிரச்சனையள் கொஞ்சம் முடியட்டன்!' என்றாள்.

'ஒரு பிரச்சனையுமில்லை.' என்றான் கோகுலன்.

'சாப்பிடுங்கோ!' என்றாள் யசோ.

'காணும்;!' என்ற எழுந்திருக்க முயன்றான் அவன்.

அவன்  தோளைத் தொட்டு,
'அதுக்குள்ளை கோபம் வந்திட்டுது!' என்று அவனை இருத்தி, மிகுதியையும் சாப்பிட வைத்தவள்,

'நீங்கள் வேறை எங்கையாவது கலியாணம் செய்தால் நிறையச் சீதனம் வாங்கிச் செய்யலாம். உங்கடை பணக்கஸ்டமும் போயிடும்.' என்று சொன்னாள்.

'எனக்கொரு பணக்கஸ்டமும் இல்லை.... ஒரு பெண்ணிட்டைச் சீதனம் வேண்டி என்ரை பணக்கஸ்டத்தைப் போக்குமளவுக்கு நான் ஒண்டும் கையாலாகாதவனும் இல்லை.
'தெரியும்!'











'பிறகேன் அப்பிடிச் சொன்னனீர்....?'

'உங்கடை தங்கச்சி சொல்லுவா, அவ எங்கடை கலியாணத்துக்குச் சம்மதிக்க மாட்டா!'

'நான் உம்மைக் கேட்டது... உமக்கு என்னைச் செய்ய விருப்பமோ எண்டதுதான், மற்றதெல்லாம் நான் பாத்துக்;கொள்ளுவன்!'

'எனக்கு விருப்பமோ இல்லையோ எண்டது உங்களுக்குத் தெரியாதே...? படங்களிலை மாதிரி நேரையே சொல்ல வேணும்!'

கோகுலனின் நெஞ்சம் மகிழ்ச்சியால் நிரம்பியது.

சாப்பிட்டுக் கையைக் கழுவ எழுந்தவனிடமிருந்து கோப்பையை வாங்கிக் கழுவினாள் யசோ.

'அக்கா கலியாணத்துக்குச் சம்மதித்துச் செய்யுமட்டும் இதைப்பற்றி ஒருத்தருக்கும் சொல்லாதேங்கோ!' என்றாள்.

அவன், அவளைக் கைகளால் தன்னோடு அணைத்து, அவள் கண்களை அன்பொழுகப் பார்த்தான். அவளும் அவனை ஒருகணம் பார்த்;துவிட்டு, காற்றில் ஆடியசைந்த கொடி ஒன்று தனக்கென்று துணை வழங்க பக்கத்தில் நிற்கும் ஆதாரத்தில் மகிழ்வோடு பற்றிக்கொள்வதுபோல்  அவன்; தோளில் சாய்ந்தாள்.

அவளின் நம்பிக்கையுடன் கூடிய மூச்சு அவன் கழுத்தை இதமாகத் தழுவியது. அவன் கரங்கள் அவள் முதுகை ஆதரவோடு தடவின.

                     ----------


அன்று பொதுக்கூட்டம் நடந்திருந்தது.

இராகுலன் தலையைத் தொங்கவிட்டபடி வீட்டுக்கு வந்தான். அவனைப் பார்த்துக் கமலம்,
'என்னப்பா கப்பல் கவுண்டது போலை வாறீங்கள்....?' என்று கேட்டாள்.

'ஒண்டுமில்லை, தேத்தண்ணி கொஞ்சம் போடு!'

'போடுறன், என்ன நடந்ததெண்டு சொல்லுங்கோவன்.'
'அதைவிடு! இனிமேல் ஒண்டும் வேண்டாம்.'











'ஏன் ஏதும் பிரச்சனையே...?'

'பிரச்சனை ஒண்டுமில்லை, கொமிற்றியாலை விலத்திப் போட்டாங்கள்.'

கமலம் வியப்புடன் பார்த்தாள். இப்படிச் சோகமாக அவன் இருந்ததை அவள் காணவில்லை.

'உங்களுக்கு நான் எத்தினைதரம்; சொல்லியிருப்பன்;, மற்றச்;சனங்கள் மாதிரி ஒழுங்கா எங்கடையெங்கடை அலுவலைப் பாத்துக்கொண்டிருந்தா இப்பிடிப் பிரச்சினை ஏன் வரப்போகுது? சொன்னாள் கமலம்.

'ஒரு பொம்பிளை சொன்னாள், நான் ஒரு பொறுக்கியாம். அத்தனை பேருக்கு முன்னுக்குச் சொல்லிப்போட்டாள்.' என்ற இராகுலனின் குரலில் ஆத்திரமும்;, இயலாமையும் பின்னியொலித்தது.

'ஆர் அவள் அப்பிடிச் சொன்னவள்? நாக்கைப் பிடிக்கிறமாதிரி நாலு குடுக்கிறது... இஞ்சை வந்து சொல்லிக்கொண்டு நிக்கிறீங்கள்.'

அதற்;;கு இராகுலன் அங்க நடந்ததைச் சுருக்கமாகக் கமலத்துக்குச் சொன்னான்.

அவனது ஒழுக்கமின்னையைப் பலரும் சுட்டிக்;காட்டியதாகவும், பெயருக்கு இப்படியொன்று தேவையில்லை, இன்று தமிழ்மக்களுக்கு தேவையான படைப்புக்களையும், தமிழீழவிடுதலைக்குக் கைகொடுக்கும் வகையில் செயற்பாடுகளையும் தரவேண்டுமென்றும் ஒருமித்த குரல் அந்தக் கூட்டத்தில் ஒலித்திருந்தது.

ஓயாதஅலை மூன்றின் வெற்றிப்பாதையின் உச்சக்கட்டத்தில் யாழ் மண்ணை மீட்க பாரிய போரைத் தமிழீழவிடுதலைப்புலிகளும், மக்களும் முன்னெடுத்துச் செல்லும் வேளையில்... அரட்டையடித்து, வேடிக்கை, கேளிக்கை நடாத்தும் நேரம் இதுவல்ல. தமிழ்ப்பற்றும், விடுதலையுணர்வும் உள்ளவர்கள், தீவிரமாகச் செயற்பட வல்லவர்கள் தான் தலைவர், செயலாளர் என்று இருக்கவேண்டும் என்று பலரும் வாதாடியதாயும் இராகுலன் சொல்ல, கமலம் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள். அதில் நியாயம் இருப்பதை அவள் உணர்ந்தாள்.

'ஆர் எண்டாலென்ன வரட்டும்... நீங்கள் இனி ஒண்டுக்கும் போகாதேங்கோ!' 












'நான் ஒண்டுக்கும் போகேல்லை.... உந்தக்கதையை விடு!' என்று இராகுலன் சொல்;ல, அதற்குக் கமலம் ஜானகியும், பரதனும் திருமணம் செய்யவிருப்பதைத் தெரிவித்து, அவள் வீPட்டுக்குப்; போகவோ, ரெலிபோன் எடுத்துத் தொல்லை கொடுக்கவோ வேண்டாமென்று கண்டித்தாள்.

'பிள்ளையள் வளந்திட்டுதுகளப்பா! சொல்லுறன் எண்டு கோவிக்காதேங்கோ.... இனிமேல் குடிக்கிறதை விடுங்கோ! குடிச்சிட்டு ஆரோடை, என்ன கதைக்கிறதெண்டு தெரியாமல் கதைப்பீங்கள்!' என்று கமலம் சொல்ல,

'என்னைக் கொஞ்சம் சும்மா விடு!' என்று இராகுலன் சலிப்புடன் சோபாவில் சாய்ந்து கண்களை மூடினான்.


                    ----------


ஜானகியும், பரதனும்; நண்பர்கள்; சிலருடன் கோவிலில் திருமணம் புரிந்து கொண்டனர். சிலநாட்கள் கழித்து, ஈஸ்வரி சாந்;தையும், சுகந்தியையும் கூட்டிக்கொண்டு வந்து பரதனுடன் இருக்கவிட்டாள்.

பரதன் மேல் வீட்டிலும், ஜானகி கீழ் வீட்டிலும் தனித்தனி இருப்பது கண்டு ஈஸ்வரி பிரமித்;துப் போனாள்.

'ஏன் இப்பிடி....!' கேட்டாள் அவள்.

'வெளியுலகத்துக்கு நாங்கள் கணவன் மனைவி. வீட்டுக்குள் அவள் ஜானகி, நான் பரதன்.'

ஈஸ்வரிக்கு வார்த்தைகள் வரவில்லை.... உணர்வுகளைக் கட்டுப்படுத்தி இலட்சியவாழ்வு வாழும் பரதனையும்;  ஜானகியையும் காண இவர்கள் மனிதர்களா அல்லது ஞானிகளா என்று நினைக்கத்  தோன்றியது.

'இன்னொரு பிறவி எனக்கு வேணும்!' என்றாள் ஈஸ்வரி.

'ஏன் ஈஸ்வரி?'

'உங்களைக் கலியாணம் செய்து வாழ்நாள் பூராகவும், உங்கடை அன்புக்குப் பாத்திரமான மனையாளாய் வாழவேணும். அதுக்காக அடுத்தபிறவி வேணும்' என்று மனதுக்குள் நினைத்தவள்; சொல்லவில்லை, மௌனமாக அவனைப் பார்த்தாள்.

'பிள்ளையள் சந்தோசமா இருக்;கிறாங்கள்.' என்றான் பரதன்.

'என்னை மன்னிச்சிடுங்கோ... நான் ஏன் அண்டைக்கு உங்களை விட்டிட்டுப் போனன் எண்டு எனக்கே தெரியேல்லை.... சந்திரன்ரை பேச்சைக் கேட்டுத் தலைகீழா நடந்திட்டன்......!'

'அது கிடக்கட்டும், பழசுகளை நினைச்சு நீ ஏன் அழுகிறாய்....? இப்ப சந்திரன் எங்கை...?'

'அவனுக்கென்ன...! லண்டனிலை வேறை ஒருத்தியைக் கட்டியிருக்கிறான். துரோகி...!' என்று கோபத்தைக் கொட்டினாள்.

'இனி என்ன செய்ய முடியும்...? நடந்தது நடந்து போச்சு!' என்று ஆறுதல் சொன்னான் பரதன்.

'கடவுள் எனக்கு நல்ல தண்டனை தந்திட்;டார். அந்தாள் உழைப்பும், செலவும்.... என்னை ஒரு இடமும் கூட்டிக்கொண்டு போகார். தான் மட்டும்தான் எங்கையும் போவார். எல்லாம் இருக்கு, என்னவும் செய்யலாம்;... ஆனால் வீட்டுக்கை மாமி எண்ட பெயரிலை ஒரு இராட்சகி! எப்பிடிக் கடவுள் என்னைத் தண்டிக்கிறார் பாருங்கோ!'
பாவங்களுக்குத் தண்;டனை உண்டு பரதன்;;!' என்றாள்  ஈஸ்வரி தன் தவறைப் புரிந்து கொண்ட உணர்வடன்.

கீழே இறங்கி ஜானகி வீட்டுக்கு இருவரும் போனார்கள்.

லவன், குசன், சாந்தன், சுகந்தி யாவரும் விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் மனம் விட்டுச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஹோலிற்குள் ஜானகி, யசோ, கோகுலன், வேணி, கண்ணன் யாவரும் ஒன்றாக இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே வந்து அமர்ந்தபின்,
'நாங்கள் ஐவரும் சாதாரண வாழ்க்கையிலிருந்து விதி வசத்தால் தடம்பிரண்டவர்கள்!' என்று தங்களுடன் ஜானகியையும்  யசோவையும்; கோகுலனையும்  சேர்த்துச்; சொன்னாள் ஈஸ்வரி.

'ஏனக்கா...!' என்று கேட்டாள்; வேணி.

'ஜானகிக்கு இளம் வயதிலேயே 'ராம் விட்டிட்டுப் போயிட்டார். நான் மதியிழந்து, பண்பாட்டை மறந்து வழி தவறிப் போனன். என்னாலை பரதன் தனிமையிலை வெறுவிலியாய்த் தவிக்க வேண்டி வந்தது. யசோ நம்பி ஏமாந்து போனவள்! கோகுலனுக்குக் கலியாணப்பேச்சுக் குழம்பிப் போய் நின்றிருந்தான்......!' என்று கூறி நிறுத்தினாள்.

அப்போ வேணி சொன்னாள்,
'அக்கா எங்களைப் பற்றிச்;  சொல்லேல்லை!'

'நீங்கள் எல்லாரையும் போலை ஒழுங்காக் கலியாணம் கட்டிச் சந்தோசமா இருக்கிறீங்கள். உங்களைப் பற்றி என்ன சொல்ல...?' என்றாள் ஈஸ்வரி.

'நானும் உங்;களை மாதிரித் திசை மாற... வீட்டுக்கை ஆள் வந்து கூட்டிக்கொண்டு ஓட வரேக்கை,  வந்தவனுக்கு ஒரு அறை குடுத்து, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்... இது
எனக்கு அம்மா ஊட்டி வளர்த்த பாடம் எண்டு சொல்லி அவனை விரட்டிப் போட்டன்!' என்றாள் வேணி.

விஜய் நடந்துகொண்ட முறையை வைத்து இவ்வாறு சொல்ல, அனைவரும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

'எனக்குச் சுதந்திரம் இருக்கு எண்டதுக்காக, அதைப் பறக்கவிட்டு என்னையும் அழித்து, கூடஇருப்பவர்களையும் வருத்தக்கூடாது.!

'நல்லாச் சொன்னாய்!' என்று அவளைப் பாராட்டினாள் ஜானகி.

'எங்கடை கலாச்சாரங்களை நாங்கள்தானே கட்டிக்காக்க வேணும்!' என்றாள் யசோ.

'சில தவறுகளை நாங்கள் விட்டால் திருத்தலாம்.. சிலதுகள் திருத்த முடியாதவை. அதுதான் வாழ்க்கைக்குப் பொறுமை தேவை எண்டிறது!' என்றாள் ஈஸ்வரி.

அப்போ கண்ணன் மெதுவாக ஆரம்பித்தான்.

'நானும் திருத்த முடியாத ஒரு தவறைச்செய்து, என்னையும் குழப்பி....' என்று ஆரம்பிக்க,

யசோ வேண்டாமென்ற பாணியில் தலையையாட்டி, அவன் வாயை மூடப் பார்த்தாள்.

அதற்குள் வேணி குறுக்கிட்டு,
'தெரியும்... நீங்கள் யசோவை ஏமாத்தினனீங்கள், கடவுள் அவவைக் கைவிடேல்லை.' என்றாள்.

கண்ணனின் நெஞ்சு படபடவென அடித்தது.
'இவளுக்கு எப்பிடித் தெரிய வந்தது...?' என்ற வினாவெழ, ஒரு யுத்தம் வெடிக்கப்போகுது என்ற பதட்டத்துடன்; இருந்தான் அவன்.

ஜானகி ஏதும் விளங்காமல் விழித்தாள்.
'யசோவைக் கண்ணன் ஏமாற்றினானா...!' அவளால் நம்பமுடிய வில்லை.

விஜய் இதைத்  தனக்குச் சொல்லி, தன் மனதைக் குழப்ப முனைந்ததையும், தான் முதலில் அதிர்ச்சிக்குள்ளாகி, கண்ணன் மேல் பெருங்கோபம் வந்ததையும் சொன்னவள், யசோவை கோகுலன் கலியாணம் செய்யும் இவ்வேளை, தான் குழப்பத்தை
ஏற்படுத்தக்கூடாது என்று மனதையடக்கிக் கொண்டிருந்ததையும் வெளியிட்டாள்.

கண்ணனின் முகம் வெட்கத்தாலும்  அவமானத்தாலும் சுருங்கிக் கறுத்தது. இதனைக் கவனித்த கோகுலன், வேணியிடம் அமைதியாக இருக்கும்படி சொல்ல,
'ஈஸ்வரியக்கா இப்பிடியொரு கதையைச் சொன்னதாலை தான் நானும் இதைச் சொன்னனான். அவரவர் செய்யிறது அவரவருக்கு!' என்றாள்;.

அப்போ பரதன்,

'நாங்கள் எல்லாரும் விதியினால்; ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருக்கிறம்! இண்டைக்குக் கடவுள் செயலாலை ஒன்றுகூடி இருக்கிறம். இந்த இரண்டாயிரமாமாண்டு எங்களுக்கு மட்டுமில்லை, எங்கடை இனத்துக்கே ஒரு விடியலாக அமைய வேணும்!' என்றான்.




                     சுபம்.          

Keine Kommentare: