Samstag, 14. Mai 2011

பகுதி-4



மறுமுனையில் கோகுலனின் குரல் ஒலித்தது.

'வெளிக்கிட்டு நில்லுங்கோ! பத்து நிமிசத்திலை வாறன். அக்கா ரெலிபோன் எடுத்தால் நான் உங்களை; கொஸ்பிறறலுக்குக் கூட்டிக் கொண்டு போறனென்று அவவை வேலையைச் செய்யச் சொல்லுங்கோ.'

காரில் வரும்போது கைத்தொலைபேசி மூலம் கதைத்திருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தொலைபேசிமணியடித்தது. எடுத்து,'ஹலோ யசோ!' என்றாள்.

'நான் அக்கா வெளிக்கிட்டீரே...? கோகுலன் வந்துகொண்டு இருக்கிறான். கவனமாகப் போட்டு வாங்கோ' என்றாள் ஐானகி.

'எனக்கும் எடுத்தவர், நான் ரெடி. சமைக்கேல்லை அக்கா, பிள்ளையள் பசியோடு வரப்போகுதுகள்.'

'அவங்கள் பாண் சாப்பிடுவாங்கள். லவனுக்குப் பள்ளிக்கூடம் முதலே முடிஞ்சிடும், அவன் குசனைக் கூட்டிக்கொண்டு வருவான். நீர் கொஸ்பிற்றலுக்குப் போட்டுவாரும்.'

தொலைபேசியை வைத்துவிட்டு, தேவையானவற்றை எடுத்து கோகுலன் வந்ததும், செல்லக்கூடியதாகத் தயாராக இருந்தாள் யசோ.

கோகுலன் வந்தான்.

'ரீ குடியுங்கோவன்!' உபசாரத்தோடு கேட்டவள் முன்னேற்பாட்டுடன் போட்டு வைத்திருந்;த தேநீரைச் சூடாகவே கொடுத்தாள்.

மறுக்காமல் வாங்கிக் குடித்தான். அவனுக்கும் அப்போ அது தேவையாக இருந்தது. எழுந்ததும் முகத்தைக் கழுவி, வெளிக்கிட்டு வெறுவயிற்றுடன் வந்திருந்தான். வழியில் ஒரே கார்கள், எல்லோரும் வேலைக்குப் போகும் நேரம். சிக்னல்லைற்றுக்களும் அடிக்கடி சிவப்பு எரிய நின்று நின்று வந்திருந்தான்.

இருவரும் வெளியே வந்து காரை நோக்கி நடந்தார்கள்.

 

'ஹொஸ்பிற்றலிலை அஞ்சு மணித்தியபலங்களுக்கு மேலை செல்லும். நீங்கள் என்னை அங்கை இறக்கிவிட்டு, வீட்டை போங்கோ! நான் பஸ்ஸிலை வாறன்.' என்றாள் யசோ அவன் பின்னால் நடந்தபடி.

'அஞ்சு மணித்தியாலம் எடுக்குமோ...?' நின்று ஆச்சரியம் தொனிக்கக் கேட்டான் அவன்.

                       

'ம்!' என்று ஆம் போட்டவள், 'அதுக்கு மேலை எடுத்தாலும் எடுக்கும்.' என்றாள்.

'அக்கா இதுபற்றி ஒண்டும் சொல்லேல்லை.....!'     

'பிஸியிலை மறந்திருப்பா எண்டு  நினைக்கிறன்.'

'சொறி... உங்கடை நிலைமை தெரியாமல் நேற்று நான் அக்காட்டை ஏன் இங்கை கூட்டிக்கொண்டு வந்தனீங்கள் எண்டு கேட்டிட்டன்.... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.' என்றான்.

வைத்தியசாலை நெருங்கிவிட்டதால் உரையாடல் பாதியிலே நிற்க, முன்னாலிருந்த பெரிய கார்த்தரிப்பு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, யசோவும், கோகுலனும் உள்ளே நடந்தார்கள்.

'கனநேரம் எடுக்கும், நீங்கள் வீட்டை போங்கொ! நான் பஸ்ஸிலை வாறன். பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வர நீங்களும் சேர்ந்து எதாவது சாப்பிடுங்கோ!' என்று அவனை அங்கு தாமதிக்கவைக்க மனமில்லாதவளாய்க் கூறினாள்.

'நேரம் கிடக்குத்தானே, கொஞ்சநேரம் நிண்டிட்டுப் போறன். நான் கூடவாறது உங்களுக்குக் கஸ்டமென்றால் சொல்லுங்கோ, நான் போறன்......'

'எனக்கு ஒரு கஸ்டமுமில்லை, உங்கடை நேரம்தான் வீணாப்போகும்  எண்டு நினைச்சன்.'

இருவரும் படியேறி இரண்டாம் மாடியில் அமைந்திருந்த யசோவின் சிகிட்சைப்பிரிவுக்குரிய வார்ட்டையடைந்தார்கள்.

யசோ அடிக்கடி அங்கு போய்வர வேண்டியிருந்ததால் அங்கே வேலை செய்யும் தாதிமார்களுக்கு அவள் பழக்கமாகிவிட்டாள்.  வைத்தியரும் அவளுடன் அன்பாக நடந்து கொண்டார்.

யசோ இவ்வளவுநாளும் சிகிட்சைக்குத் தனியாகவே வந்து போவாள். ஜெர்மனிக்கு வந்து சிலமாதங்கள்தான் ஆகியிருந்ததால் ஜெர்மன் மொழியைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. அவள் பள்ளியில் படித்த ஆங்கிலம் ஓரளவுக்குக் கை கொடுத்தது.

ஆரம்பத்தில் கண்ணன் அவளுடன் ஓரிரு தடவைகள் கூட வந்திருந்தான். பிறகு அவன் வருவதில்லை.

வழமையான சோதனைகளைத் தொடர்ந்து, அவளைச் சிறிதுநேரம் இருக்கும்படி கூறிய தாதி ஏதோ வேலையாகப் போய்விட்டாள்.

கோகுலனுக்கு யசோவின் வருத்தம் என்ன என்பது இப்போதான் தெரிந்தது. இந்த வயதிலை இப்படி ஒரு நோயா என்று அவன் மனம் கலங்கிப் போனான்.

'உங்கடை அக்காவைச் சந்திச்சது எனக்குக் கடவுளைச் சந்தித்தது போலக் கிடக்கு. நேற்றுவரை நான் ஒரு அனாதையாக இருந்தேன்.' என்றாள் யசோ.

'நாங்கள் இருக்கிறம்;' என்று சொன்ன கோகுலனின் கை அவள் கண்ணீரைத் துடைக்க, அவள் பொங்கிவந்த அழுகையைச் சிரமப் பட்டு அடக்கி;க்கொண்டாள்.

'அம்மா, அப்பா எல்லாம் எங்கை ஊரிலையா...?'

'ஓ! தம்பி, தங்கச்சி இரண்டு பேரும் அவையோடை இருக்கினம். அண்ணை கனடாவிலை.'

'நீங்கள் இங்கை...'

'நான் தனிய..... என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.'

'நீங்கள் தனிய எண்டு ஆர் சொன்னது..?'

யசோ அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

'இப்ப சொன்னமாதிரி இனிமேல் சொல்லாதேங்கோ! எங்களைப் பாக்க மனிசர் மாதிரித் தெரியேல்லையோ...?'

'கோவிக்காதேங்கோ, சொந்தக்காரர் ஆருமில்லை எண்டதைச் சொன்னனான்.'

'சரி, நீங்கள் ஜெர்மனிக்கு தனியவோ வந்தனீங்கள்?'



'அண்ணை இங்கை இருந்தவர், கலியாணம் பேசிக் கூப்பிட்டவர்.....' என்று ஆரம்பித்து, நடந்த விபரங்களைச் சுருக்கமாகக் கூறினாள்.

கண்ணனின் பெயரைக் கூறவில்லை.

'இப்பிடியான ஆக்களுக்குச் செவிட்டாவடி கிழிய ஒண்டு குடுத்தாத்தான் வழிக்கு வருவினம்.' என்றான் கோகுலன்.

'வேண்டாம்... நடந்ததை நான் ஒரு கெட்ட கனவெண்டு எண்ணி மறக்க நினைக்கிறன்.'

அப்போ யசோவை அழைக்க தாதி வந்தாள். கோகுலன் நேரத்தைப் பார்த்துவிட்டு,

'நான் இங்கை இருக்கிறன், நீங்கள் றீற்மன்ரை முடிச்சிட்டு வாங்கோ!'

'இல்லை கோகுலன் பிளீஸ்! கனநேரம் செல்லும், நீங்கள் போங்கோ' என்று சொல்லிவிட்டு தாதியுடன் நடந்தாள்.

கோகுலன் சிறிதுநேரம் நின்று பார்த்துவிட்டு,

'அவள் சொன்னதும் சரிதான்.... நான்கைந்து மணிநேரங்கள் காத்துக் கொண்டு சும்மா நிற்பதைவிட வீட்டுக்குப் போட்டு பிறகு வரலாம்;' என்ற முடிவுடன் அவள் போவதைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

தாதியுடன் சென்ற யசோ, சிறிதுதூரம் நடந்தபின் திரும்பிப் பார்த்தாள். அங்கே தன்னைப் பார்த்தபடி கோகுலன் நின்று கொண்டிருக்க, அவனுக்குக் கை காட்டி விட்டுத் தொடர்ந்து சென்றாள். பதிலுக்குக் கை காட்டிவிட்டுக் கோகுலன்  வைத்தியசாலையை விட்டு வெளியே நடந்தான்.

                     

நேற்று முதற்பார்வையில், தான் எடை போட்ட கோகுலனுக்கும், இன்று காணும் கோகுலனுக்கும் நிறைய வித்தியாசம் என்று உணர்ந்தாள் யசோ.

வருத்தம் என்று கேட்டதும் அவன் மனம் பதறி நின்ற காட்சியை அவள் மீட்டுப்பார்த்தாள். இளகிய மனம் அவனுக்கு.... மனம்விட்டுக் கதைக்கக்கூடிய ஒருவன். யாரோ ஒருத்தன்... ஐானகிக்கு ஒன்றுவிட்ட தம்பி... ஒருவருமில்லை என்று தான் சொன்னபோது அவனுக்கு வந்த கோபத்தை எண்ணிப் பார்த்தாள்.

அவள் தன்னுடைய உண்மை நிலையைத்தானே சொன்னாள்.  அதுக்கு அவன், 'இப்ப சொன்னதுமாதிரி இன்னொரு தடவை  சொல்ல வேண்டாம்.' என்று கண்டிப்புடன் சொன்னது இன்னும் அவள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

நேற்றுவரை கண்ணன் போன்ற சுயநலக்காரர்களும், தன் வருத்தமும், அந்தச்சோசல்வீடும்தான் உலகம் என்று நினைத்தவளுக்கு, அந்த நினைப்புத் தவறு என்று இன்று புரிந்தது.

'வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு சக்தியுண்டு. சில மனதைத்தாக்கி சிதறடித்து மனிதனைத் துடிதுடிக்க வைத்துவிடும். சிலவார்த்தைகள் இதற்கு மாறாக மனதை மகிழ வைத்துத் துள்ளிக் குதிக்க வைக்க வல்லன.' என்று நினைத்தாள்.

குருதிச்சுத்திகரிப்பு முடிந்து யசோ, அடுத்ததுக்கும்; மற்றொருநாள் நேரத்தைப் பதிந்துவிட்டு வெளியே வரவும், அங்கே ஐானகி காத்துக் கொண்டிருந்தாள். யசோ மகிழ்ச்சியில் சொக்கிப்போனாள். மறுபக்கம் அவர்களுக்குத் தான் சுமையாகிவிட்டேனோ என்று ஒரு கணம் எண்ணத் தோன்றியது.

'நான் பஸ்ஸிலை வருவன் எல்லே அக்கா! வேலையாலை வந்தனீங்கள், பிள்ளையளோடை கொஞ்சம் றெஸ்ற்ரா இருக்கிறதை விட்டிட்டு என்னக்கா நீங்கள்.....?'

'கோகுலன் வீட்டிலை நிக்கிறான், அவன் பிள்ளையளைப் பாப்பான். நீ அதைப்பற்றி  ஒண்டும் யோசிக்காதை...!'

'தனக்கு உன்ரை வருத்தத்ததைப்பற்றிச் சொல்லேல்லையெண்டு கோகுலனுக்குக் கோபம்..... பாவம் நீ எண்டு இரக்கப்படுகிறான். இப்பிடி ஒருநாளும் அவன் சோகம்பட இருந்ததில்லை.' என்று ஐானகி சொல்ல, யசோவுக்கு மனதில் இனம்புரியாத உணர்வலைகள் ஐனனித்து அவள் எண்ணச்சுமைகளை  ஓரமாகத் தூக்கி எறிந்து விட்டாற்போன்று உணர்ந்தாள்.

இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டினுள் நடப்பவளுக்கு ஒளியும், ஆட்துணையும் கிடைத்ததுபோலத் தைரியம் பிறக்க, தன் பக்கத்தில் வந்து நின்ற ஐானகியை கைகளால் அணைத்து, கடவுளுக்கு தன் நன்றியையும் சொல்லிக்கொண்டாள். அவள் கண்களில் பிறர் அறியாமல் ஒருதுளி ஆனந்தக்கண்ணீர்;; முளைத்து எட்டிப்பார்த்தது.

இருவரும் காரிலேறினார்கள். வழியில் வந்த சுப்பமார்க்கெட்டிற்குச் சென்று அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.

'டொக்டர் என்னவாம்....?' கேட்டாள் ஐானகி.

'எல்லாம் நோர்மலாம், கிட்னி கிடைக்குமட்டும் ஹொஸ்பிற்றலில் இந்த றீற்மன் தொடர்ந்து  எடுக்கவேணும்.'

'எப்ப கிட்னி கிடைக்குமெண்டு சொல்லேல்லையே...?'

'ம்...ம்... சிலபேர் வருசக்கணக்காக் காத்துக்கொண்டிருக்கினம், பொருந்தக்கூடியது கிடைச்சால்தானே.

'நல்ல மனிசரைத்தான் கடவுள் சோதிக்கிறார்.'

'அக்கா! உங்களைச் சந்திக்குமட்டும் எனக்குக் கவலையாகத்தான் இருந்தது. கடவுள் இல்லையோ எண்டுகூட நினைச்சன், நேற்று உங்களைச் சந்தித்த பிறகு என்ரை வருத்தத்ததைக்கூட நான் மறந்திட்டன்.'

'எண்டாலும் இந்த வயசிலை உனக்கு இப்பிடி ஒரு வருத்தத்தைக் கடவுள் தந்திருக்கக்கூடாது. வாழ்க்கையெண்டால் இதுதான் எண்டு எங்களை உணரச்செய்யக் கடவுள் செய்யும் ஏற்பாடு எண்டு நினைச்சு மனதைச் சமாதானப்படுத்த வேண்டியது.'

'உங்களுக்கெல்லாம் வாழ்க்கையைத் தந்து, சந்தோசத்தைக்காட்டி... இடையிலை பறித்து சூனியமாக்கிவிட்டார். நினைச்சால் மண்டையைச் சுவரிலை மோதி அடிக்கவேணும் போல வேதனையாயிருக்கும்.'

'ஒவ்வொருவரும் சொந்தக்காலிலை நிற்கவேணும்  எண்டது கடவுளின் விருப்பம்போலை. புருசனை நம்பி மனிசியோ, மனிசியை நம்பி புருசனோ, அப்பாவை நம்பி பிள்ளையோ, பிள்ளையை நம்பி அப்பாவோ எண்டில்லாமல்;, அவரவர் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவேணும் எண்டது கடவுளின் நியதி.

எந்தச் சந்தோசமும் நிலையானதில்லை, இண்டைக்கு இருக்கிறது நாளைக்கு இல்லாமலும் போய்விடலாம்.

வாழ்க்கை நிலையானதெண்டு பொய்க்கணக்கு போட்டுக்கொண்டு அலையிறம்.' என்ற ஐhனகியின் கண்களில் கண்ணீர் தெரிந்தது.

சிறிது மௌனமும் தொடர்ந்தது. பிறகு, மனதை வேறுதிசையில் திருப்ப நினைத்த ஐானகி,

'கோகுலனுக்கு கலியாணம் சரிவரும் போல இருக்கு.... படம் அனுப்பி இருக்கினம்.....' என்றாள்.

'நல்லதுதானே அக்கா! உங்களுக்கும் உதவியா இருக்கும்.'

'நல்லபிள்ளையா வந்து வாய்க்கவேணும், காசு நிறைய வைச்சிருக்கிறான். பிரயாசை கொண்டவன், கூட்டாளிகள், குடி எண்டு செலவும்கூட.'

'பெடியளா இருக்கேக்கை.... இப்பிடித்தான்.... பிறகு கலியாணம் கட்டினாப் பொறுப்புக்கள் வரும்தானே.

'பொறுப்பில்லாதவன் எண்டு சொல்லமுடியாது யசோ! தங்;சச்சிக்கு எண்டு காசு சேர்த்து வைச்சிருக்கிறான். மாப்பிள்ளைகூடத் தேடிக் கொண்டு இருக்கிறான்.'

'கேட்கவே சந்தோசமாக இருக்கு...' என்றாள், யசோ.

காரை கராச்சுக்குள் நிறுத்திவிட்டு, இருவரும் இறங்கிச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்தார்கள்.

Keine Kommentare: