Sonntag, 8. Mai 2011

பகுதி-10




                         




ஐானகியும் யசோவின் பக்கத்தில் நின்று, 'ஹொஸ்பிற்றல்லை இருந்து இந்த நேரத்திலை வந்த ரெலிபோன் என்னவாக இருக்கும்என்ற திகிலுடன் உரையாடலை உற்றுக் கேட்டாள்.

யசோவுக்குப் பொருந்தக்கூடிய சிறுநீரகம் ஒன்று கிடைத்திருப்பதாயும், உடனே அவளைக் ஹொஸ்பிற்றலுக்கு வரும்படியும் டாக்டர் அறிவித்திருந்தார். விடயத்தை ஐானகி நித்திரையாயிருந்த கோகுலனை எழுப்பிச் சொன்னாள்.

ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்தபோதும், அடிமனம்வரை மகிழ்ச்சி ஊட்டும் செய்தி என்பதால் சோம்பல் பறந்துபோக, எழுந்து நேரத்தையும் பார்த்துவிட்டு,
'எங்கை யசோ மினக்கெடாமல் வெளிக்கிடும்...' என்று அவளைக் கூட்டிக்கொண்டு போகத் தானும் தயாரானான்.

யசோ வைத்தியசாலைக்குப் போகவும், அங்கே ஒப்பரேசனுக்கு                          எல்லாம் தயார் நிலையில் இருந்தன

வைத்தியர் சில சோதனைகளை மேற்கொண்டபின், திருப்தியுடன் துணைடாக்டர்களைப் பார்த்துப் பேசிவிட்டு, வெற்றியளிக்கும் என்று யசோவைத் தடவி, அவளுக்கும் உற்சாகம் கொடுத்துவிட்டுச் செல்ல, தாதிமார் அவளைக் கட்டிலில் படுக்க வைத்து, தள்ளிக் கொண்டு ஒப்பறேசன் தியேட்டருக்குச் சென்றனர்.

அவளுக்குக் கை கொடுத்து, 'நாராயணன் பக்கத்தில் இருப்பார்.. தைரியமாக இரும். நான் பின்னேரம் வாறன்!' என்றான் கோகுலன்.


'எனக்கு எல்லாம் சுகம் வரும், நீங்கள் தங்கச்சியின்ரை கல்யாணத்தை முழுமனதாக நிறைவேற்றி வையுங்கோ! என்னை வந்து நாளைக்குப் பாக்கலாம்.' என்றாள் யசோ.

'.கே... .கே... அதெல்லாம் நான் பாப்பன். இப்ப சாமியைக் கும்பிடும், நானும் என்னால் இயன்றமட்டும் ராமனை மன்றாடுவேன். யசோ! ''ராமஐயம் வெல்லும்!' என்று கூறிவிட்டு, ஒப்பரேசன் தியேட்டர் வாசல்வரை வந்து விடை கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான் கோகுலன்.

கல்யாணம் கோவிலில் சிறப்பாக நடந்தேறியது. படங்கள், பலகாரங்கள், வீடியோப்படப்பிடிப்பு எல்லாம் வழக்கம்போலக் களை கட்டியிருந்தன.

மணவறையில் மணமக்கள் மகிழ்வுடன் உட்கார்ந்திருக்க, குருக்கள்  முறைப்படி மந்திரங்களை உச்சரித்து ஊர்க்கல்யாணம்போலப் பொலிவுடன் நடத்தி வைத்தார்.

'யசோ ஹொஸ்பிற்றலுக்காம்' என்ற செய்தி கண்ணனின் காதுக்கும் எட்டியது.

மாப்பிள்ளையாக புதுமணமகளுக்குப் பக்கத்தில் இருந்தபோதும், அந்தச்செய்தி அவன் நெஞ்சில் யசோவின் நினைவுகளை  அவிழ்த்துவிட்டது.

அவள் கலியாணவீட்டுக்கு வரக்கூடாது என்று அவன் நினைத்தான்.
அவள் வருவாள், அவள் வர மறுத்தாலும் ஜானகியும், கோகுலனும் அவளை விடப்போவதில்லை, கூட்டி வருவார்கள்.

அவள் வந்தால் தெரிந்தவர்கள் விசாரிக்க, கலியாணவீட்டில் குழப்பம் பிறந்தால்... அவன் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.

இப்போ அவள் வரமாட்டாள். ஆனால் அவன் நெஞ்சில் ஏதோ ஒரு வேதனை.

வேண்டாதவளென்று தள்ளியாச்சு, ஆனால் ஒன்றாயிருந்த சில நாட்கள் அவன் நெஞ்சில் பதித்த சில சுவடுகள் லேசாக அரிப்பது போல ஒரு உணர்வு.

சூத்தையென்று தான் தூக்கியெறிந்த விதை ஒன்று, ஈரம்பட்டுத் தளிர் விடுவதைக் கண்டவன்  போல, 'நல்லாயிருக்கவேணும்' என்று அவன் மனம் வேண்டியது.

யாரோ ஒருத்தி அவள்.

'இல்லை, சிலநாட்கள் மனைவியாக இருந்தவள்.
பலருக்குத் தெரியாது.
சிலருக்குத் தெரியும்.
தெரிந்தவர்கள் பலருக்கு இன்று அவனுக்குக் கல்யாணம் என்று தெரியாது.

தெரிந்த சிலரும் எமக்கேன் வம்பை என்று வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார்கள்.

அவள் நல்லவள்.
குணத்தில் குறைபிடிக்கமுடியாது.
ஆனால் வருத்தக்காரி.

'என் இலட்சியத்துக்கு அவளால் துணை நிற்க முடியாது, என்  இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள். கோகுலன் என் இடத்தில் இருந்திருந்தால்.... தமக்கையின் பிள்ளை களைப் பார்க்க வந்திருந்த அந்தப் பழக்கத்துக்காக இவ்வளவு உதவிகளையும் செய்கிறவன், மனைவியாக வரப்போகிறவளாக இருந்திருந்தால்.... தன்னைப் போலத் தள்ளிவிட்டிருப்பானா?' என்று நினைக்கவே அவன்  நெஞ்சு மறுத்துவிட்டது.

கோகுலனின் மனசு தனக்கில்லை என்பதை அவன் ஏற்றுக் கொண்டான். ஐானகிகூட எவ்வளவு அன்பை யசோ மீது வைத்திருக்கிறாள். ஏனென்று அவனுக்கு விளங்கவில்லை.

வேணிமீது கூட ஐானகி இவ்வளவு அன்பு வைத்திருப்பாள் என்று சொல்லமுடியாது.

ஐயா மணியைக் கிலுக்கி மந்திரங்களைக்கூற, அவன் மனம் மீண்டும் மணவறைக்கு வந்தது.

மேளவாத்தியம் (வானொலியில்) மிக உரமாக ஒலித்தது.
தாலியை வேணியின் கழுத்தில் கட்டினான்.
கமராக்கள் மின்னல் போல ஒளியை எழுப்பி போட்டோக்களைப் பிறப்பித்தன.
வீடியோப்படமும் மிக மும்மரமாகப் பிடிக்கப்பட்டது.

'சிரிச்சுக்கொண்டு நில்லுங்கோ!' என்று வேணி பலமுறைகள் கண்ணனுக்குச் சொல்லிவிட்டாள்.

அவனும் பல தடவைகள் சிரித்துப் பார்த்துவிட்டான், அது நிற்கவில்லை.

கல்யாண ஆரவாரங்கள் எல்லாம் ஒரு கிழமைக்குள் அடங்கி ஓய்ந்துவிட்டன.

கண்ணனுக்கு லீவு போதுமானது இருந்தும், கல்யாணம் முடிந்து இரண்டாவது வாரமே வேலைக்குக் கிளம்பினான்.

'கனிமூன்;...... அது இதெண்டு ஜாலியா ஊர் உலாத்தப் போட்டு வாறதை விட்டிட்டு, வேலைக்குப் போகப்போறன் எண்டுறாய், கிடக்கறலீவை இப்ப எடுக்காமல் என்னடாப்பா நீ...? முதலாளிக்கு உழைக்கிறவனாக் கிடக்கு!' என்று நண்பர்கள் கிண்டலடித்ததை மனதில் வைத்திருந்த வேணி, அவன் வேலைக்கப் புறப்படும்போது,
'லீவு எடுங்கோவன்!' என்றாள்.

'இதென்ன சிலோனே... நினைச்சாப்போலை லீவு எடுக்க?' என்றான்.

'ஏன் நினைச்சாப்போலை எண்டுறியள்? வெடிங்குக்கு லீவு எடுக்கேக்கை அஞ்சாறு நாளைக் கூட எடுத்திருக்கலாம்தானே!'

'இப்ப பிஸியான நேரம் கண்டபடி லீவு எடுக்கேலாது.'

'ஆரோ சொன்னவையோ...?'

'ஆரும் சொல்லேல்லை, பாக்கத் தெரியும்தானே!'

'மரி பண்ணினது.. ஒரு கிழமை லீவு வேணும் எண்டு கேளுங்கோ!'

'கேக்கேலாது.'

'கேட்டுப் பாருங்கோ, கட்டாயம் வேணுமெண்டு கொஞ்சம் இறுக்கிக் கேளுங்கோ!'

கண்ணன் பதில் சொல்லவில்லை.

வேணியின் இடத்தில் யசோவை நினைத்தான்.

அவள் வந்து, அவன் வீட்டில் இருந்த மறுநாள் அவன் லீவு எடுக்க நினைத்தான்.
'ஒரு அவசரம், தேவை வரேக்கை லீவு எடுக்கலாம், நான் வந்திட்டன் எண்டு திடீரென்று நீங்கள் பக்றியிலை லீவு கேக்கிறது அவ்வளவு நல்லாயில்லை.... நான் சமாளிப்பன்.' என்ற சொல்லி, அவனை யசோ வேலைக்குப் போகவைத்தாள். அவள் வருத்தமாக
இருக்கும்போதுகூட, அவனை அவள் வேலைக்குப் போகாமல்விடும் படி தடுக்கவில்லை.

நினைவைச் சுருக்கிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.
'கேட்டதுக்குப் பதில் சொல்லத் தெரியாதே?'

'விடியகாத்தாலை எழும்பி நிண்டுகொண்டு ஏனப்பா அறுக்கிறீர்? ஜேர்மனியிலை வேலை எவ்வளவு முக்கியமெண்டு உமக்குத் தெரியாது, பேசாமற் போய் சமையலறைக்கை இரும்!'

'ஏன் நான் சமையலறைக்கை போயிருக்கவேணும்? ஹோலுக்கை இருப்பன், பெட்றூமுக்கை படுப்பன், வெளியிலை நிப்பன்.' என்றாள்.

'சரியான வாய்காரியாக்கிடக்கு!' எரிச்சலுடன் வாய்க்குள் முணுமுணுத்தான்.

'கேக்கேல்லை, சொல்லுறதை வாயைத்திறந்து சொல்லுங்கோ! பல்லுக்கை வைச்சுக் கடிக்காதேங்கோ!'

'என்ரை அலுவலை எனக்குப் பாக்கத் தெரியும், உன்ரை அலுவலை நீ பாத்தாச் சரி!'

'அதுக்குள்ளை என்ரை, உன்ரை எண்டு ஏன் பிரிக்கிறீங்கள்? நான் ஒண்டும் சும்மா வரேல்லை, சுளைசுளையாச் சீதனத்தை வாங்கிக் கொண்டு வந்தனான்.'

'இப்ப ஆர் இல்லையெண்டது? ஏன் இந்தத் தேவையில்லாத கதை எல்லாம்...?'

'எது தேவையில்லாத கதை.?'

'எல்லாந்தானப்பா!'

'கண்ணன்அப்பா எண்டெல்லாம் என்னைப் பாத்துச் சொல்லத்தேவையில்லை. அப்பா, அம்மா ஆசையோடை வைச்ச பெயர் இருக்கு, வேணி எண்டு அதைச் சொல்லுங்கோ! அதை உச்சரிக்க உங்களுக்குக் கஸ்டமெண்டால், பல்டொக்டரிட்டைப் போய்ச் சரிப்பண்ணிக் கொண்டு வாங்கோ!'

'என்னடி கதைக்கிறாய்... ஆரிட்டை, எங்கை நிண்டு பேசிறாய் எண்டு தெரிஞ்சுகொண்டுதான் பேசிறியோ...?'

'! தெரிஞ்சுகொண்டுதான் கதைக்கிறன்.!'
'என்னடி தெரிஞ்சு கொண்டு கதைக்கிறாய்...?'      
'உந்த டீ... மட்டும் வேண்டாம், பிறகு நான் டா.... போட வேண்டி வரும்.'
'சரியான வாய்க்கொழுப்பு...!'

'ஏன் இருக்கக்கூடாதா?'

'இருக்கலாம், இருக்கலாம்... ஆனால் அதைப் புருசனிட்டைக் காட்டக்கூடாது, தெரிஞ்சுகொள்!'

'எந்தப் புருசனிட்டைக் காட்டக்கூடாது?'

'அப்ப...!'

'அப்பவுமில்லை, இப்பவுமில்லை! எப்பவும் நான் நினைச்சது படிச்ச ஒருத்தன்தான் எனக்குப் புருசனாக வருவானெண்டு... அண்ணை ஏமாத்திப்போட்டான்.!'

'நான் படிக்கேல்லையெண்டு ஆர் சொன்னது...?'

'பாக்கத் தெரியுதே..'

'என்ன தெரியுது?'

'எல்லாந்தான், செய்யிற வேலையிலிருந்து இருக்கிற வீடு வரைக்கும் நீங்கள் எப்பிடி எண்டதைச் சொல்லுது.'

'வேணி! எனக்கும் கதைக்கத் தெரியும், நான் உன்னைக்  கலியாணம் செய்தது எனக்கு ஒரு மனிசி வேணுமெண்டொழிய, ஒரு மாப்பிள்ளை வேணுமெண்டில்லை.'

'எனக்கும் கதைக்கத் தெரியும்.'

'என்ன திருப்பித் திருப்பிக் கதைச்சுக் கொண்டிருக்கிறாய்? கலியாணம் கட்டி இரண்டாம் கிழமை இப்பிடி மனிசிக்காரி புரிசனோடை கட்சிகட்டிக்கொண்டு நிக்கிறது ஜேர்மனியிலை என்ரை வீட்டிலையாத்தான் இருக்கும்.'

'ஏன் நீங்கள் எல்லா வீட்டிலையும் போய்ப் பாத்துக்கொண்டே வந்தனீங்கள்?'

'கடிநாயை வீட்டுக்கை வைச்சிருக்கலாம், இப்பிடி ஒரு குரைக்கிற நாயை வீட்டுக்கை வைச்சிருந்தா வீடு அதிர்ந்தே வெடிச்சுப்போம்!'
'என்னைப் பார்த்து நாய் எண்டு சொல்லுறியோ.? உன்னைப் பார்த்து நான் குரங்கெண்டால் எப்பிடி?'

'நான் உன்னை நாய் எண்டு சொல்லேல்லை, நான்தான் நாய். ஏன் தெரியுமே...? பைத்தியம் ஒண்டைப் பெண்சாதி எண்டு கட்டிக்  கொண்டு வந்திருக்கிறேனே! என்னை நாய் எண்டும் சொல்லலாம், குரங்கெண்டும் சொல்லலாம்.'

'நான் பைத்தியமோ...? அண்ணை அறிஞ்சா உன்னை அடிச்சே கொண்டிடுவான்.'

'ஐயோ! எந்தச் சனியனிலை முழிச்சனானோ தெரியேல்லை.'

'என்னிலை முழிச்சனி, அப்ப நான் சனியனோ...?'

'ஈஸ்வரா...ஈஸ்வரா.... ஒண்டும் வேண்டாம்' என்று நேரத்தைப்  பார்த்துவிட்டு, வேலைக்குப் போட்ட ஜக்கற்றைக் கழற்றிப் போட்டு, 'நான் என்ன செய்யிறது?' என்று கேட்டான்.

'என்னண்டாலும் செய்யுங்கோவன்! எனக்கென்ன?' என்றாள்.

'லீவு எடுக்கச் சொன்னீரப்பா!'

'அப்பா எண்டு சொல்லவேண்டாம், எனக்குப் பிடிக்காது.'

'சரி, சொல்லேல்லை, ஒரு கிழமை லீவு எடுக்கிறன்.. என்ன?'

'நீங்கள் லீவு எடுத்தாலென்ன? வேலைக்குப் போனாலென்ன? உங்களோடை கத்தித் தொண்டை வறண்டு போச்சு, ரீ போட்டாத் தான் சரி, வேணுமெண்டா நீங்களும் குடிச்சிட்டுப்போங்கோ! ஒரு அறிவு கெட்ட சனமாக் கிடக்கு, படிப்பறிவில்லாத தாய், தகப்பனுக்குப் பிறந்ததுகள் இப்பிடித்தானே இருக்கும், கலியாணம் செய்தால் வந்து போன சனங்கள் வீட்டை போய்வரவேணும,  நாலு பேர் வந்து போக வீட்டை வசதியா வைச்சிருக்க வேணும், இதெல்லாம் நான் சொல்லித்தெரிய வேணும்... பத்து வருசம் யூரோப்பிலை எண்டு பட்டை குத்திக்கொண்டு திரியினமேயொழிய, புத்தியெண்டது மண்டைக்கை ஒரு மண்ணளவுகூட இல்லை.'

'சரி, தேத்தண்ணியைப் போடு! குடிச்சிட்டுப் போய் லீவு எழுதியிட்டு வாறன், போக வேண்டிய இடத்துக்குப் போவம்!' என்றான்.

'விளங்கினால் சரி!' என்று வேணி சமையலறைக்குச்  சென்றாள்.

என்ன செய்வதென்று தெரியாதவனாய், தலையைப் பொத்திக் கொண்டு, ஹோலுக்குள் அங்குமிங்கும் நடந்தான் கண்ணன்.

பரதன் கோகுலனின் நண்பன். ஜானகி வீட்டுக்குகு கோகுலனுடன் வருவான். கைவேலைகள் செய்யும் ஆற்றல் கொண்டவன். ஜானகி வீட்டில் வெப்பமூட்டி, தண்ணீர்க்குழாய், மின்னிணைப்பு போன்ற வற்றில் ஏற்படும் சிறிய திருத்தவேலைகளைச் செய்வான். அண்மையில் சற்றலைற் கோப்பை பூட்டி, தமிழ் றேடியோ கேட்பதற்கும் ஆவன செய்திருந்தான்.

சில மாதங்களாக அவன் தானாக ஜானகிவீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.
வா! என்று அழைத்தால்  வருவான்.
வேணியின் திருமணம் சம்பந்தப்பட்ட வேலைகளில் கோகுலனுக்குப் பெரிதும் உதவியாக இருந்தவன்.

அன்று ஒருநாள் தன் மனதில் அரும்பிய எண்ணத்தைக் கோகுலனுக்குத் தெரிவித்தான்.

'அக்காவோடை நேரை கதையுங்கோ!' என்று கோகுலன்  சொன்னான்.

'வேண்டாம்! எதுக்கும் சில வழிமுறையள்  இருக்கு! அக்காவோடை நீ கதை! அவ சம்மதிச்சால்  பிறகு நேரை கதைக்கலாம்;' என்று பரதன் தெரிவித்ததையடுத்து, ஜானகிக்கு, அவன் சொன்னதைப்  பக்குவமாக கோகுலன் எடுத்துக் கூறினான்.

'இப்படியான எண்ணத்தில் யாரும் என்ரை வீட்டுக்கை வரக்கூடாது' என்று அடித்துச் சொன்னாள் ஜானகி.

'நல்ல மனிசன், ஒருவிதத்தில்  பாவம்!'

'நான் யாரையும் எடைபோட்டுப் பார்க்கவோ, இரக்கப்பட்டுத் தூக்கக்கூடிய நிலையிலோ இல்லை.'

'கோவிக்காதையக்கா! நீ சந்தோசமாயிருந்தால்   நானும் சந்தோசப்  படுவன். அப்பா, அம்மாவும் உன்னை நினைச்சு எவ்வளவு கவலைப்படுகிறார்கள்... கொஞ்சம் யோசிச்சுப்பார்!'

'என்னை உனக்கு நல்லாத்தெரியும், தெரிஞ்சுகொண்டும் கேக்கிறியே கோகுலன், நான் நிம்மதியா இருக்கிறன், இதுக்கு மேலை நான் ஒண்டையும் எதிர்பாக்கேல்லை.'

'அப்பிடிச் சொல்லாதை அக்கா! வெளிநாட்டிலை எவ்வளவு பேர் எப்பிடியெல்லாம்  வாழுறாங்கள்! உனக்கு இப்பிடியொரு சந்தர்ப்பம், கடவுளின் அருள் என்றுகூடச் சொல்லலாம்.'

'கடவுளை இழுக்காதை! கடவுளுக்கு நாங்கள் சந்தோசமா இருந்தது பிடிக்கேல்லைத்தானே! வேண்டாம், என்னைக் கவலைப் படுத்தாதே!'

'பிள்ளையளின்ரை எதிர்காலத்தையாவது யோசியன், உனக்காக வேண்டாம், அதுகளுக்கு ஒரு துணையெல்லோ!'

'அவங்களுக்கு இருக்கிற துணையள் போதும்! ஆரோ ஒருத்தனைப் பார்த்து, அப்பா! எண்டு அவங்கள் கூப்பிட வேண்டாம். என்னாலை தாங்கிக்கொள்ள முடியாது.'

'விளங்குது அக்கா! உன்னுடைய நிலை எனக்கு நல்லா விளங்குது!
அத்தான்ரை இடத்தைக் கடவுளாலை கூட நிரப்ப முடியாது. ஆனால் பரதன்.... அவரும் பாவம், மனிசிக்காரி விட்டிட்டுப் போன பிறகும் இவ்வளவுகாலமும் தனியாத்தானே இருக்கிறார். நல்ல பிறன்ஸாக இருக்கலாம் இல்லையோ...?'

'நல்ல பிறன்ஸாக இருக்கலாம், நான் இல்லையெண்டு சொல்லேல்லையே!'

'அக்கா! விளங்காமல் கதைக்காதை!'

புத்தகம் – பக்கம் : 92

'என்ன விளங்காமல் கதைக்கிறன்! எனக்கு இன்னொரு கலியாணம், இன்னொரு வாழ்க்கை வேண்டாம்.'

'தடி முறிக்கிறமாதிரி பதில் சொல்;லாதேங்கோ! ஒரு முடிவிலை இன்னொரு ஆரம்பம்.... இது இயற்கையின் விதி.'


'ஓ! இல்லையெண்டு நான் சொல்லேல்லை, அவர் இருக்கும் போது நான் ஒண்டுக்கும் யோசிக்காமல் இருந்தன். எஞ்சினிலை கொழுவின பெட்டிபோல, வாழ்க்கைப் பாதையில் ஓடிக்கொண்டிருந்தேன். பொறுப்பெல்லாம் அவர் தலையிலை. நல்லா சிந்தித்தார், திட்டமிட்டு நடந்தார், நல்ல வாழ்க்கை தந்தார். மரணம் இப்பிடி இடையில் வருமெண்டு ஆர் நினைச்சது? ஆனாலும் பார்! தனக்;கு ஏதும் நடந்தாலும், நானோ, பிள்ளையளோ தெருவுக்கு வந்திடக்கூடாது... இன்னொருத்தரிட்டைப் போய்க் கையேந்தக்கூடாது எண்டு மனிசன், எல்லா ஒழுங்கும் செய்திருக்கிறார்! அவரின்ரை பொறுப்பு இப்ப என்ரை தலையிலை எண்டாலும், அதைக் கொண்டு நடத்த எனக்கு மனிசன் வழிகாட்டிப் போட்டுத்தான் போயிருக்கிறார்.'

'சரி! சரி! இனி ஏன் அழுகிறாய்...? அழாதை! கண்ணைத் துடைச்சுப்போட்டு சமைக்கிற அலுவலைப் பார்! பெடியள் வரப்போறாங்கள்!' என்று அவளைச் சமாதானம் செய்தான் கோகுலன்.

இதன்பின் அவசியம் ஏற்படும்போது மட்டும்தான் ஜானகி வீட்டுக்குப் பரதன் வருவது வழக்கம்.

                
                     ----------

யசோ தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
'வா யசோ! கூப்பிட்டா நான் வந்திருப்பன்தானே! கவனம்...' என்று ஜானகி அன்போடு உபசரிக்க, கோகுலனும் அவள் சுகத்தை ஆதரவு தழுவக் கேட்டான்.

'இப்ப எப்பிடியிருக்கு?'

'பறவாயில்லை, முந்தினதைவிட எவ்வளவோ சுகம். இவ்வளவு கெதியா எழும்பி நடப்பன் எண்டு நான் நினைக்கேல்லை.'

'கடவுள் செயல்,. நீங்கள் கும்பிட்ட நாராயணன் திருவருள்தான் எல்லாம்.'

'இனி என்னை முதலாளி வேலைக்கு வரவேண்டாமெண்டு சொல்லுறவரோ தெரியாது.'

'ஏன்? அவருக்கு உம்மிலை நல்ல விருப்பம்தானே, அடிக்கடி விசாரிப்பார். 'யசோ!' என்று நல்ல வடிவா இழுத்துச் சொல்லுவார்.'

அப்போ ஜானகி யசோவைப் பார்த்து,
'வருத்தம் மாற நீர் ஏதாவது படியுமன். றெஸ்றோறன்ற்வேலை உமக்குக் கஸ்டமெல்லே! எழும்பி இருக்கமாட்டாமல் இருக்கிறீர், இப்ப ஏன் வேலைக்கதை? சுகம் வரட்டும், பிறகு பாப்பம்'


                     ----------

யசோ ஹோலுக்குள் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். அப்போ தொலைபேசி அடித்தது. எடுத்து,

'ஹலோ! யசோ கதைக்கிறன்!' எண்டவள்,

'அண்ணை! சுகமாக இருக்கிறன்.... மருந்துகள் எடுக்கிறன்... இரண்டு நாளைக்கொருக்கா வரச்சொல்லி டொக்டரிடம் போனனான், இப்ப ஒரு கிழமைக்கொருக்கா செக் பண்ண வரச் சொல்லியிருக்கினம்.'

'உன்னைத் தனிய விட்டிட்டு வந்தது எவ்வளவு பேய்த்தனம் எண்டு இஞ்சை அண்ணியும் சரியாக் கவலைப்படுகிறா. இரவிலை நித்திரை கொள்ளாமல் உன்னைப்பற்றித்தான் கதைச்சுக்கொண்டிருப்பம். ஒரே யோசினையாக் கிடக்கு!'

'நான் நல்ல சுகமா இருக்கிறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். இஞ்சை ஜானகியக்கா, கோகுலன் எல்லாரும் என்னை நல்லாப் பாக்கினம், அவைக்குத்தான் என்ன கைமாறு செய்யப்போறனோ தெரியாது.'

'அந்தப் போக்கிலியை நம்பி உன்னை அவனிட்டை ஒப்படைச்சது என்ரை மடைத்தனம், நல்லபிள்ளை மாதிரி இருந்தான்.... இப்பிடிச் செய்ய என்னெண்டு மனம் வந்தது?'


'அண்ணை! சும்மா ஏன் நீங்கள் உங்கை இருந்து கொண்டு கவலைப்படுகிறியள்? எனக்கு ஒரு குறையுமில்லை, கண்ணன் கலியாணம் செய்து தன்ரை பாதையிலை போட்டார். அவரின்ரை கதை இனிமேல் எங்களுக்கு வேண்டாமண்ணை!'

'உவங்களையெல்லாம் கடவுள் சும்மா விடமாட்டார்... என்று தன் மனக்கவலைகளைக் கொட்டினான் அண்ணன் வரதராசன். 

'வேறை என்ன அண்ணை? நான் ஏதாவது அவசரம் எண்டா எடுப்பன்தானே! அண்ணி, பிள்ளையளைக் கேட்டதாச் சொல்லுங்கோ!' என்றுவிட்டு ரெலிபோனை வைத்தாள் யசோ.

அப்போ ஜானகி வெளியேயிருந்து வீட்டுக்கு வந்தாள்.

'அண்ணை எடுத்தவர், என்னை நினைச்சு அண்ணியும், அவரும் நல்லாக் கவலைப்படுகினம்.'

'தூர இருக்கேக்கை வருத்தம், துன்பம் எண்டு நினைக்கப் பெரிசாக் கவலைப்படத்தான் தோன்றும். நேருக்கு நேரை பார்க்கக் கதைக்கக் கவலை கொஞ்சம் குறையிறது வழக்கம்தானே! என்ன செய்யிறது...?'

'நீங்களும், கோகுலனும் பக்கத்திலை இருந்து பார்க்கிற தாலை எனக்கு ஒரு குறையுமில்லையெண்டு சொன்னனான். அது அவருக்குக் கொஞ்சம் ஆறுதல்.'

'எல்லாருக்கும் எங்களைப்பற்றி பெரிசா புழுகி விடுவாய். மனிசர் எண்டா ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்யிறது தானே!' என்று சமையலறைக்குட் போனவள், அங்கே சமைத்து வைத்திருப்பதைக் கண்டு, கோபமாக வெளியே வந்து,

'யசோ! என்ன செய்திருக்கிறீர்.. சொன்னா கேக்கமாட்டீர்... டொக்டர் கொஞ்சநாளைக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டா மெண்டு எச்சரிச்செல்லே விட்டவர். நீர் சோறு, கறியெல்லாம் சமைச்சு, இவ்வளவு வேலையும் பாத்திருக்கிறீர்!'

'அக்கா! என்னாலை ஏலக்கூடியதைத்தான் செய்தனான். சும்மா வீட்டுக்;கை இருக்கச் சினமாக்கிடக்கு!'

'றேடியோ கிடக்கு, ரிவி இருக்கு.... எவ்வளவு புத்தகங்கள் இருக்கு... பொழுதா போகாது? வரட்டும் கோகுலன், அவன் சொன்னாத்தான் உமக்கு ஏறும்!'

'அக்கா பிளீஸ்! அவரிட்டைச் சொல்லிப் போடாதேங்கோ! என்ரை அக்காவெல்லே.... மெதுவா மெதுவா ஏதோ செய்தனான். எனக்கு ஒரு கஸ்டமுமில்லை, றைஸ்குக்கருக்கை சோறைப் போட்டிட்டு, இரண்டு கறி சமைச்சிருக்கிறன். இதென்ன ஊரே...? விறகு தேடி, அடுப்பு மூட்டி, வாளி எடுத்துத் தண்ணி அள்ளிச் சிரமப்பட...?


'நீ கதைப்பாய்... என்ரை யசோவெல்லே... கொஞ்ச நாளைக்குக் கவனமாக இரடி! எவ்வளவு பெரிய ஒப்பரேசன், சாகக் கிடந்து, தப்பி எழும்பிருக்கிறாய்.'

'நான் என்ன குழந்தைப்பிள்ளையே? என்னாலை முடிஞ்ச தைத்தானே செய்யிறன். அதோடை டொக்டர் உடம்புக்கு அசைவு வேணும்... லேசான வேலைகள், எக்ஸ்சசைஸ் எல்லாம் செய்யவேணும்; எண்டுதானே சொல்லியிருக்கிறார். அக்கா கோகுலனுக்குச் சொல்லிப் போடாதேங்கோ! அவர் கத்துவார் பிளீஸ்'

'சரி! நான் சொல்லேல்லை, எங்கை இவங்கள்...?'

'சாப்பிட்டு வெளியிலை விளையாடப்போட்டாங்கள்!'

'பள்ளிக்கூட வீட்டுவேலையெல்லாம்  செய்யேல்லையோ...?'

'செய்திட்டுத்தான் போனவை!' என்றாள் யசோ.

                  



                    ----------


புத்தகம் – பக்கம் -96



அன்று சனிக்கிழமை.
கண்ணன் ஹோலுக்குள்ளிருந்த அலுமாரியை ஒதுக்கி, தூசு துடைத்துக்கொண்டிருந்தான்.

'பேத்டேக்குப் போக வேணும், பிறசன்ற் வாங்கவேணும், இப்ப ஏன் உதைக் கிளறிக்கொண்டு நிக்கிறியள்?' என்றாள் வேணி.
'ஆருக்கு பேத்டே...?' கேட்டான் கண்ணன்.

'அண்டைக்கு வந்து சொல்லிப்போட்டு, கார்ட்டும் தந்திட்டுப் போச்சுதுகள்.' என்றவள், எழுந்து போய் அலுமாரிக்குள் இருந்த அழைப்பிதழை எடுத்த வந்து கண்ணனிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்துவிட்டு, ஞாபகம் வர,
'ஆ... இதுக்கெல்லாம் மனிசன் போவனா?' என்று கார்ட்டை மேசையில் விட்டெறிந்தான்.

'வேறையென்ன மாடா பேத்டேக்குப் போகும்?'

'மாடு போனாலென்ன? மனிசன் போனாலென்ன? உதுகள் ஒண்டுக்கும் நான் போறதில்லை!'

'கலியாணவீட்டுக்கு வந்ததுகளெல்லே?'

'ஓ! அதுக்கு...?'

'வந்த சனத்தின்ரை விசேசத்துக்கு நாங்களும் போகத்தானே வேணும்.'

'போகாட்டி என்ன வழக்கே வைக்கப்போகினம்?'

'ஜெயிலுக்கை அடைச்சுப் போடுவினம்.'

'வாய் மட்டும் பெரிசு, பொத்திக்கொண்டு வேலையைப் பார்! இல்லாட்டிப் போர்த்து மூடிக்கொண்டு படு!'

'அதுக்;கு வேறையொரு ஆளைப் பாருங்கோ! நான் பேத்டேக்குப் போகத்தான் போறன்.'

'நீ செய்தாலும் செய்வாய்... அப்பிடிக்கொத்த குடும்பத்திலை இருந்து வந்தனீ...!'

'எப்பிடிப்பட்ட குடும்பத்திலையிருந்து வந்தனான்? எங்கடை குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வேலையும்,  வீடும், சாப்பாடும், படுக்கையும் எண்டு கிணத்துத் தவளை மாதிரி இருக்கிற உங்களுக்கு, என்ரை குடும்பத்தைப் பற்றிக் கதைக்க என்ன யோக்கியதை இருக்கு?' என்று கோபம் குமுற அழத் தொடங்கிவிட்டாள்.

'அதுக்கேன் இடிமுழங்கி, மழை கொட்டுறது மாதிரி அழுது வடியிறாய்?'

'எங்கடை குடும்பத்தைப் பற்றிக் குறை சொன்னால் அழுகை வராமல் வேறென்ன வரும்? வெட்கம், ரோசம் உள்ளவைக்குத்  தான் அது விளங்கும்.'

'உன்னை மாதிரி ஒரு பொம்பிளையை நான் பாக்கேல்லை.'

'அதைத்தான் நானும் சொல்லுறன், உங்களைமாதிரி ஒரு மனிசனை நான் பாக்கேல்லை. ஒரு பேத்டேக்குப் போறதுக்கு அதுவும் எங்கடை கலியாணவீட்டுக்கு வந்து, பிறசன்ற்ரும் தந்து சாப்பிட்டுப் போனதுகள். எங்களை மதிச்சு வீட்டுக்கு வந்து கார்ட் தந்து, வாங்கோ எண்டு சொல்லி, தேத்தண்ணியும் குடிச்சிட்டுப் போன மனிசரை நாங்கள் மதிக்கவேணும். இப்பிடியான நல்லநாள் பெரியநாளுக்கு சனங்கள் கூப்பிட்டால் போய், நாலு பேரோடை கதைச்சுப் பழகினால்தானே, எங்களுக்கும் ஒண்டெண்டால் ஆரும் வருவினம். பிடிச்ச பிள்ளையார்மாதிரி சோபாவைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு இருங்கோ!'

'எனக்கெல்லாம் தெரியும், கனக்கக் கரையாதை காகம் மாதிரி.'

'உங்களுக்கெல்லாம் தெரியுமோ...? என்ன தெரியும்? உந்த றேடியோ வாங்கினனீங்கள், செற் பண்ணத் தெரிஞ்சதே? அதுக்கும் என்ரை அண்ணை வேணும். கலியாணம் கட்டினால் இரண்டு மூண்டு நாளைக்கு வீட்டிலை நிக்கவேணும் எண்டு நீங்களா நினைச்சு லீவு எடுக்கத் தெரியாது. அதுகூட மற்றவை சொல்லித்தான் தெரியுது. பிறகு எனக்கு எல்லாம் தெரியுமெண்டு சும்மா தம்பட்டம் அடிக்கிறீங்கள். நான் காகமோ... நீங்கள்தான் பெரிய அண்டாங்காகம்.'

கண்ணனுக்குக்  கோபம் கொதித்துக்கொண்டு வந்தது. பாய்ந்து எழுந்து தலைமயிரில் கோதிப்பிடித்துக்கொண்டு, பளீர்...பளீரென்று நாலு கன்னத்தில் போட அவன் கைகள் ஏவியபோதும், தன்னை அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.

'என்ன பேசாமல் இருக்கிறீங்கள்? இண்டைக்கு பேத்டேக்குப் போறன். விரும்பினால் நீங்களும் வாங்கோ! வராட்டி ஆரும், 'எங்கை கண்ணன்?' என்று கேட்டால், நீங்கள் கொஞ்சம் முந்தியா என்னைப் பாத்து, 'நீயும் ஒரு பொம்பிளையா?' என்று கேட்ட மாதிரி, நானும், 'அவரும் ஒரு ஆம்பிளை எண்டு கூட்டிக்கொண்டு திரியட்டா.. என்று சொல்லுவன்.' என்றவள் பதிலை எதிர்பார்க்காது சமையலறையை நோக்கிச் சென்றாள்.
வேணி  போவதைப் பார்த்துக்கொண்டு நின்றவன், அவளுடன் மோதி வாதம் செய்வதை விட்டு, அவள் வழியில் சென்று பார்ப்போம் என்று நினைத்தவனாய், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு  போகும் முடிவுடன் எழுந்து தானும் சமையலறைக்குச் சென்றான்.
                      


                     ----------

புத்தகம் – பக்கம் - 99


தாமோதரன் கடைக்கு கோகுலன் வந்தான்.

'கோகுலன்! வாரும்! வாரும்! என்ன கனநாளாக் கடைப்பக்கம் காணேல்லை?'

'எங்கை வருவம் எண்டு உப்பிடித்தான்.... கடையிலை எப்பிடி பிஸ்னெஸ்....?'

'நல்லாயிருக்கு! பலசரக்குச்சாமான்களை விட, புடவையிலை நல்ல லாபம், அதோடை ரெலிபோன்கார்ட் ... வீடியோக்கசற் இப்பிடியெண்டு பிஸ்னெஸ் பறவாயில்லைப் போகுது. நீ எப்பிடி இருக்;கிறாய்?'

'இருக்கிறன், எனக்கென்ன இப்பதானே தங்கச்சியின்ரை கலியாணம் முடிஞ்சது. கடன் கொஞ்சம் கழுத்தை நெரிக்குது. காலுக்குமேலை கால் போட்டுக்கொண்டு இருக்கேலுமே? அதுதான் ஓடுப்பட்டுத் திரியிறன். மாதவனண்ணைக்கு மாதாமாதம் வட்டி குடுக்கிறதே கஸ்டமாக் கிடக்கு!'

தாமோதரன் யோசனையுடன் தலையாட்டிவிட்டுக் கேட்டார்.
'அக்கா, பிள்ளையள் எப்பிடி?'

'சுகமா இருக்கினம் அண்ணை!'

'அதெல்லாம் இருக்க, யசோ என்ன செய்யிறாள்?  அவளுக்கு பாத்து ஒரு இடத்திலை சம்பந்தம் செய்து வைச்சால் நல்லதெல்லே!' பாவம், கெட்டிக்காரப்பிள்ளை, கெட்டகாலம் போட்டு அவளை உலைக்குது!'

'கெட்டகாலம் முடிஞ்சுது அண்ணை! யசோ சுகமா இருக்கிறா. உங்களுக்குத் தெரிஞ்ச இடங்களிலை விசரரிச்சுப்பாருங்கோ! முதல்லை யசோவையும் சம்மதிக்க வைக்கவேணும்.'

'கண்ணன் செய்திட்டான்தானே! இனி ஏன் அவள் யோசிக்க வேணும்?'

'என்னண்ணை...! கண்ணன் செய்தால் யசோவுக்கு என்ன?'
தாமோதரன் தன்னையறியாமலே கோகுலனுக்கு உண்மையைக் கொட்டிவிட்டுத் தன் தவறுக்காக நெற்றியில் அடித்துத் தலை முடியைப் பிடுங்கினார்.

'ஒண்டுமில்லை கோகுலன்... ஆனால், நல்ல இடம் சந்திச்சால் சொல்லுறன்.'

'ஏனண்ணை ஒழிக்கிறீங்கள்...? சொல்லுங்கோ!'

'ஒருத்தருக்கும்; சொல்லவேண்டாமெண்டு யசோ சத்தியம் வேண்டியிருக்கிறாள். இதாலை ஒரு பிரச்சனை வரக்கூடாது. அவன் இப்ப உன்ரை மச்சான்.'

'லவ் பண்ணி ஏமாத்திப்போட்டு, இப்ப நல்லபிள்ளைமாதிரி நடிச்சு, தங்கச்சியைக் கட்டியிட்டார், அப்பிடித்தானே..?'

'இல்லை, லவ் பண்ணி ஏமாத்தேல்லை...டேய்! கோகுலன் பிளீஸ்! என்னை ஒண்டும் கேக்காதை! பிறகு யசோவின்ரை கண்ணிலை முழிக்கேலாது.' என்று சொல்ல மறுத்துவிட்டார் தாமோதரன். கோகுலனும் அதற்கு மேல் அவரை வற்புறுத்த வில்லை.

'யசோவிடம் நான் இப்பிடிச் சொன்னதாகச் சொல்லிப் போடாதை!'

'என்னையறியாமலே இப்பிடியொரு பூகம்பம் எங்கடை வீட்டுக்குள்ளை புதைஞ்சு கிடக்குதோ...?'

'பூகம்பம் அடங்கி விட்டுது கோகுலன், அதை நீ மீண்டும்
குமுறச் செய்யாதை!' என்று எச்சரித்தார் தாமோதரன்.




Keine Kommentare: